முல்லை மாலை கிளம்பிப் போயிருக்க இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். எண்ணெய் கடாயில் தண்ணீர் பட்டு வெடிப்பது போல வனரோஜா வெடித்துக்கொண்டிருந்தார்.
“வனா… எதா இருந்தாலும் நான் பேசிக்கறேன். நீயும் ஸ்ரீயும் பேச வேணாம். புரியுதா? “, பாண்டியம் நூறாவது முறையாக எச்சரிக்கும் போது வாசலில் மணி அடித்தது. பாண்டியனே சென்று கதவை திறந்தார்.
சித்தார்த்துடன் உள்ளே வந்தவர், என் மனைவி என்று ரோஜாவைக் காட்டினார். சித்தார்த்தின் புன்னகைக்கு ரோஜாவிடம் பிரதிபலிப்பு இல்லை.
“வாங்க சர். உட்காருங்க.”, என்று அவசரமாக வரவேற்பை தன் கையில் எடுத்துக் கொண்டாள் ஸ்ரீ.
வேண்டாம் என்று தலையசைத்தவன், ஸ்ரீயின் பெற்றொரைப் பார்த்து, “உங்களுக்கு கண்டிப்பா என் மேல கோபம் இருக்கும். நான் ஸ்ரீயை வேலையில் சேர்க்கும் போது, விளையாட்டாத்தான் செய்தேன். அவ சொல்றது பலிக்கவும் பேராசை வந்துச்சு. அது, விபரீதமா முடிஞ்சுது. முழுக்க முழுக்க என்னோட தப்புதான்.”, பாண்டியனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவன், சற்று நிறுத்தவும் யாரும் குறுக்கே பேசவில்லை.
“கடத்திட்டு போனவங்களால ஆபத்து வரலாம்னு நீங்க பயப்படறதை இராமலிங்கம் சர் சொன்னார். நான் பேசின அந்த வீடியோவை கிஷோர் போன்லர்ந்தும், கரன் போன்லர்ந்தும் அழிச்சாச்சு. கிஷோரை கைலாஷ் மூலம் மிரட்டி, இதோட சென்னை பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி ஒரு செடில்மென்ட்டை குடுத்து அவன் ஊருக்கு அனுப்பிட்டேன்.”
“கரண் தேறி வரவே இன்னும் ஆறு மாசம் ஆகும். கொஞ்சம் சரியானதும் மும்பைக்கு கூட்டிட்டு போறதா சொல்லியிருக்கான் ஜீத். அவங்க புக்கீஸ்னு போலீஸ்க்கு இங்க ரெக்கார்ட் ஆகிருச்சு, அதனால அவனையும் சன்னியும் இங்கிருந்து மாத்திருவாங்க, அவனோட நெட்வொர்க்ல இருக்கவங்கன்னு ஜீத் சொன்னான். “, நிறுத்தி ரோஜாவின் முகம் பார்க்க, ஒரு மாற்றமும் இல்லை அவரிடம். இன்னும் கடுகடுவென்று இருந்தது.
“இது நூறு பெர்சன்ட் தடுக்கும்னு சொல்ல முடியாது. ஆனா முடிஞ்ச வரை ப்ரொடெக்ட் பண்ணியிருக்கேன். கைலாஷ்கிட்ட பேசினேன். அவங்க திரும்ப ஸ்ரீயை டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு கம்மின்னுதான் சொல்றார்.”, சித்தார்த் சொல்லவும், சற்று தெளிந்தார் பாண்டியன்.
“நன்றி சர்.”, என்று மட்டும் கூறினார். ரோஜா எதுவும் சொல்ல வில்லை.
“ஸ்ரீ… உன் எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், சம்பளம் எல்லாம் இராமலிங்கம் சர் அனுப்பி வைப்பார். குட் லக். நான் மன்னிப்பு கேட்டாலும் உங்களுக்கு இருந்த, இருக்கற வலியை மாத்த முடியாது. இருந்தாலும் டீப்லி சாரி. ஸ்ரீ, உன் திறமையை பத்தி வெளிய சாதாரணமாக் கூட பேசிடாதே. அதோட மதிப்பை நாம இரண்டு பேருமே தெரிஞ்சிக்கலை. இனி கேர்ஃபுல்லா இரு. எனக்கும் இது ஒரு பாடம். இப்படி ஒரு ட்ரூத் சீரம் குடுத்து எல்லா விஷயத்தையும் ஈசியா வாங்கிட முடியும்ங்கறது எனக்கும் அதிர்ச்சிதான். இனி நானும் கவனமா இருப்பேன்.”, என்றவன் அதற்கு மேலும் அவர்களை சோதிக்காமல் கிளம்பி சென்றான்.
“எவன் கேட்டான் இவன் சாரியும், சம்பள பாக்கியையும்… ராஸ்கல். அவன் பேரு கெட்டுடக் கூடாதுன்னு வீடியோவெல்லாம் அழிச்சான். இதுல என்னமோ ஸ்ரீக்காக செஞ்ச மாதிரி பேச்சு வேற. “, ரோஜா நொடித்தார்.
“மா… வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போகணும்னு அவசியமே இல்லை. வந்து சாரி கேட்டார் இல்லை. அதுவே பெரிய விஷயம்.”
“போடி… அவன் மேல இருக்கற கடுப்பை உன் கிட்ட காட்றதுக்குள்ள போயிரு. வந்துட்டா வரிஞ்சி கட்டிகிட்டு.”, என்று ஸ்ரீயை குதறிவிட்டு சமையலறைக்குச் சென்றார் வனரோஜா.
இரவு நவீனிடமிருந்து போன் வந்தது.
“ஹலோ?”
“ஸ்ரீ? … எப்படி இருக்க ஸ்ரீ?”, என்ற நவீனின் குரலோ, அந்த தொனியோ இல்லை அதில் இருந்த அக்கறையோ, ஏதோ ஒன்று அவளை அரவணத்துக் கொண்டது போல் இருந்தது.
“ம்ம்… ஓக்கே நவீன். நீங்க?”, என்றாள் சின்ன குரலில். எப்போதும் இருக்கும் துள்ளல் குறும்பு எதுவும் இல்லை. இருக்கும் சூழ் நிலையில் அவன் எதிர்பார்க்கக் கூடாதுதான், இருந்தாலும் நவீனுக்கு கஷ்டமாக இருந்தது.
“வீட்டுல ரொம்ப திட்றாங்களா ஸ்ரீ? உண்மையை சொல்லு. நான் ராகுல் கிட்ட பேசிட்டுதான் வரேன்.”, என்றான் கண்டிப்பான குரலில்.
“ஓஹ்… அவங்கிட்டதான் கேட்டு தெரிஞ்சிகிட்டீங்களே… அப்பறம் எங்கிட்ட எதுக்கு கேட்கறீங்க?”, முணுக்கென்று ஒரு கோபம் வந்தது.
“ஸ்ரீ… இங்க என் அம்மா, அப்பா வறுத்து எடுக்கறாங்க. எனக்கே இப்படின்னா அங்க உனக்கு இன்னும் மோசமா இருக்கும்னு தெரியும். அதுக்குதான் ராகுல் கிட்ட கேட்டேன். இப்ப உனக்கு போன் பண்ணலாமா இல்லை அதுக்கும் உனக்கு பிரச்சனை ஆகிடுமான்னு பயமா இருந்துச்சும்மா. அதனால ராகுல் கிட்ட பேசினேன்.”, சமாதானக் கொடியை பறக்கவிடவும், ஸ்ரீ அமைதியானாள்.
“அப்படியெல்லாம் இல்லை. நீங்க கேட்டா நானே சொல்லியிருக்கப் போறேன். “, என்றாள்.
“எங்கிட்ட நீ எல்லாமும் ஷேர் பண்ணுவன்னு நினைச்சிருந்தேன். பட் அந்த அளவு நீ க்ளோசா எங்கிட்ட உணரலைன்னு தெரியவும்…”, அவன் சொல்வதில் காயமடைந்தவள்,
‘ஏற்கனவே நொந்துபோயிருக்கா, இதுல நீ வேற ஏண்டா?, நவீன் தலையில் தானே கொட்டிக்கொண்டான்.
“ஹே… சாரி… அப்படி சொல்ல வரலை ஸ்ரீ. அங்க உனக்கு எதுவும் பிரச்சனைன்னாலும் நீ எங்கிட்ட எதுவும் சொல்லாம இருக்கப் போறியோன்னுதான் … ஆன்ட்டி ரொம்ப கோவமா இருக்காங்களாமே?”, என்று பேச்சை மாற்றினான்.
“ம்ம்… ஆமாம். அம்மா திட்டறதுக்காவது பேசறாங்க. அப்பா.. “ கண்ணீர் பொங்கியது ஸ்ரீக்கு. “ அப்பா எங்கிட்ட ஒன்னு இரண்டு வார்த்தைதான் பேசறாங்க, அதுவும் நானே போய் எதாவது கேட்டாத்தான். ரொம்ப கில்டியா இருக்கு நவீன் எனக்கு.”, என்றாள் தழுதழுக்கும் குரலில்.
“ஸ்ரீ… நான் அப்படி பந்தை வீசி, அது இப்படி வைரலானதும் ஒரு காரணம். அப்பாவும் அதைத்தான் சொல்றார். நீ சும்மா இருந்திருந்தா அந்த வீடியோ பிரபலமாகியிருக்காது. உன்னாலதான் ஸ்ரீ வீடியோ இந்தியா பூரா பரவுச்சுன்னு என்னை திட்டிகிட்டே இருக்கார்.”, நவீன் வருத்தப்பட,
“நவீன்… நீங்க என்னை காப்பாத்தினதுல எனக்கு சந்தோஷம். அதுல உங்களுக்கு குற்ற உணர்ச்சியே வேணாம். இல்லைன்னா இன்னும் எத்தனை மணி நேரம் அவன் கிட்ட நான் மாட்டியிருக்கணுமோ ?”, ஸ்ரீயின் உடல் அருக்களிப்பில் ஒரு முறை தூக்கிப் போட்டது.
ஸ்ரீ வேலையை விட்டது, சித்தார்த் வந்து சென்றது, அக்கம்பக்கத்தினர் விசாரிப்பு என்ற பேரில் அவலை மென்றது என்று பேச்சு சுற்றி சுற்றி வந்தது.
“எனக்கும் தெரியுது நவீன். இது எதுவும் நான் வேணும்னு செய்யலை. இவ்வளவு தூரம் ஆகும்னு நினைக்கலை. சித்தார்த்தை ஹாண்டில் பண்ணிக்கலாம்னு இருந்தேன். இப்படி அவன் சொதப்புவான்னு எதிர்பார்க்கலை. அதை சொன்னா அம்மா இன்னும் கோவம்தான் படறாங்க. உன்னை கல்யாணம் பண்ணி அனுப்பிட்டுதான் மறுவேலைன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. “,தன் பக்கத்தை கேட்கவாவது ஒரு ஆள் இருக்கிறானே என்று தன் ஆதங்கத்தைக் கூறினாள் ஸ்ரீ.
“ஹொ… நிஜமா அந்த எண்ணத்துலதான் இருக்காங்களா ஸ்ரீ? இல்லை சும்மா உன்னை மிரட்டறாங்களா?”, நவீன் அவள் கல்யாணம் என்றதும் அலர்ட் ஆனான்.
“முல்லை பெரியம்மா வந்து, என்னடி உங்கம்மா வெளினாட்டு மாப்பிள்ளையா பாருங்கறா? உனக்கு ஓக்கேவா? எந்த ஊருன்னலும் ஓக்கேவா இல்லை அமெரிக்கா மட்டும்தானான்னு கேட்டாங்க. அப்பதான் எனக்கே தெரிஞ்சுது அம்மா சீரியசாதான் சொல்றாங்கன்னு. அப்பா அம்மாவை விட்டுட்டு வெளி நாடெல்லாம் போகமாட்டேன் பெரியம்மா… இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லியிருக்கேன். தெரியலை நவீன்.”, என்றாள் வருத்தமாக.
“ஸ்ரீ…வந்து…உனக்கு…”, நவீன் மென்று முழுங்க, அதற்குள் ஸ்ரீ, “நவீன் அம்மா கூப்பிடறாங்க… நாளைக்கு பேசலாம்.”, என்று அவன் பதிலுக்குக் கூட காத்திடாமல் வைத்துவிட்டாள்.
ஸ்ரீ சொன்னதை சொல்லி, மீண்டும் தன் கேள்வியை முன் வைத்தான் நவீன்.
“ப்ரோ… அப்படித்தான் சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆனா முல்லை பெரியம்மாகிட்ட சொல்லியிருக்காங்கன்னா, ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல. நான் மதியமே வீட்டுக்கு வந்துட்டேன். இங்க எனக்கும் அம்மாகிட்டருந்து சரியான திட்டு இரண்டு நாளா.”, என்று ராகுல் அவன் நிலையை சொன்னான்.
“ம்ம்.. உன்னை ஏன் திட்டறாங்கடா?”
“என்ன சாப்பிட்டன்னு கத்திகிட்டு முன்னாடி வந்தேனே அதுக்கு. லூசு மாதிரி எதுக்குடா பேசின, அவன் கன்னை உன் பக்கம் காட்டினதோட நிறுத்தாம சுட்டிருந்தா என்னாவாயிருக்கும், அறிவிருக்கா அதுயிருக்கா, இதுயிருக்கான்னு நினைச்சு நினைச்சு திட்றாங்க. துபாய்லர்ந்து அப்பா வேற கூப்பிட்டு ஒரே அட்வைஸ். அதான் ரொம்ப நேரம் ஸ்ரீ வீட்ல இருக்க முடியலை. “, ராகுல் புலம்பினான்.
“ம்ப்ச்… சும்மாயிருந்த உன்னை அப்படி செய்யச் சொன்னதே நான் தானடா… ரியலி சாரி ராகுல். அவங்க பயமும் நியாயம்தான். என்னவோ ஒரு வேகம், எந்த ப்ளஸ் மைனசும் யோசிக்காம செஞ்சிட்டேன்.”, நவீன் வருத்தமாக பேச,
“நவீன்.. அதுதான் எனக்கு ஒன்னும் ஆகலை, ஸ்ரீ சேஃபா வந்துட்டா. அப்பறம் என்ன? நடந்து முடிஞ்சப்பறம் ஆயிரம் பேசலாம். ஒன்னும் செய்யாம விட்டு, ஸ்ரீக்கு எதாவது ஆகியிருந்தா, அப்பவும் எல்லாரும் கருத்து சொல்லுவாங்க. விடு. கொஞ்ச நாள்ல சரியாகிரும்.”
ராகுலுடன் பேசி முடித்தாலும் அடுத்து என்ன செய்வது என்று நவீன் மனதில் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. எப்படி ஸ்ரீயிடம் காதலை சொல்வது? ராகுல் சொல்வதைப் பார்த்தால் அவளுக்கும் இஷ்டம் போலத்தான் தெரிகிறது.
ஸ்ரீயின் அம்மா போகிற வேகத்தில் ஸ்ரீ சம்மதித்தால் இரு பெற்றோரிடமும் உடனே சொல்ல வேண்டியிருக்கும். அவன் அம்மாவிடம் காதலைப் பற்றி சொல்லவேண்டுமென்றால்…நினைத்தாலே கண்ணைக் கட்டியது நவீனுக்கு.
மற்ற வீட்டில் எப்படியோ? இவன் வீட்டில் மருமகளாக வரப் போகிறவள் இப்படி இருக்கணும், அப்படி இருக்கக் கூடாது என்று பார்க்கும் பெண்களின் நிறை குறை எல்லாம் அலசி அவன் பதின் வயதிலிருந்தே பேச ஆரம்பித்திருந்தார் கோகிலா.
“இப்படியே பேசு… உன் புள்ளைக்கு நீ ஒரு பொண்ணு கூட ஓகே பண்ண போறதில்லை. “, என்று கேலி பேசுவார் சக்கரவர்த்தி. அதுவும் மெட்ராஸ் படம் வந்த போது,
“மகனே… கார்த்திக் மாதிரி நீயா ஒருத்திய கரெக்ட் பண்ணாத்தான் உண்டு.. இல்லைன்னா அந்த அம்மா காரெக்டர் மாதிரிதான் உங்கம்மா. கிரிக்கெட் ஆட ஊர் ஊரா போறதுதான் போற, கூடவே இதுவும் பாருடா. ”, என்று அறிவுரை சொல்ல , பொங்கிவிட்டார் கோகிலா.
அதிலிருந்து, “நானே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து வைக்கறேன்டா ராசா… நீ அப்பா பேச்செல்லாம் கேட்காதே. போனமா மாட்ச் விளாண்டமா வந்தமான்னு இருக்கணும். இந்தியா டீமுக்கு விளையாடற கனவை மறந்துடக்கூடாது. சரியா?”, என்று அடிக்கடி சொல்லுவார் கோகிலா.
லேசாக நெற்றி வியர்த்தது நவீனுக்கு. அப்படியே அவன் அடம்பிடித்தால் கட்டி வைத்துவிடுவார்தான். ஆனால் ஸ்ரீயை குறை சொல்லியே ஒரு வழியாக்கிடுவார். அதுவும் அவனுக்கு நன்றாகத் தெரியும்.
“கல்யாணம்னு யோசிக்கும்போதே கண்ணைக் கட்டுதேடா…. நீ எல்லாம் எதுக்குடா காதலிக்கற ? ஸ்ரீகிட்டயும் சொல்ல வாய் வரலை, வீட்லயும் சொல்ல வாய் வரலை…”, கைகளை முட்டியில் ஊன்றி விரல்களை முடிக் கற்றைக்குள் பதியவிட்டு கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.
அந்தக் கோலத்தில்தான் அவன் அறைக் கதவைத் திறந்த சக்கரவர்த்தி மகனைக் கண்டார்.