பிள்ளைங்க வரை சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா சந்திரா விட மாட்டா போல.” என்றார் கவலையாக.

அவங்க இஷ்ட்டத்துக்கு விடுங்க.” என்ற இந்துஜா, “எனக்குச் சம்யு பத்தி முன்னாடி இருந்த கவலை இப்போ இல்லை. மாப்பிள்ளை அவளை நம்மை விட நல்லா பார்த்துக்கிறார். எனக்கு அதே போதும். உங்க பொண்ணு சொல்ற மாதிரி, சந்திரா அக்கா மனசு சந்தோஷப்படுற மாதிரி… நீங்க அவங்க பிள்ளைங்களுக்கே நிறையச் சொத்துக் கொடுங்க.” என்றார்.

நீ என்ன சொத்தை அள்ளி கொடுத்தா சந்தோஷமா எல்லோரையும் நிம்மதியா இருக்க விட்டுடுவான்னு நினைக்கிறியா? எவ்வளவு செஞ்சாலும் சந்திரா மனசுல போதும்னு எல்லாம் தோணவே தோணாது. அவளும் நிம்மதியா இருக்க மாட்டா… மத்தவங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டா.”

எனக்கு இப்போ சந்திரா முக்கியமும் இல்லை. அவ ஸ்ரீநிதி வாழ்க்கையில குழப்பம் செய்யாம இருந்தாலே போதும்.” என்ற சக்ரவர்த்திப் படுத்துக் கொண்டார்.

திருமணமான மூன்றாம் நாள் உறவினர்கள் எல்லாம் சென்று இருந்தனர். பவித்ரனின் பெற்றோர் மற்றும் தம்பி மட்டுமே இருந்தனர். இந்த வீட்டில் கொஞ்சம் வசதி குறைவு தான். அதனால் ஸ்ரீநிதி கொஞ்சம் விலகியே இருக்க… அதைக் கவனித்த சீதா… அவராகவே அவளை அழைத்து அதை இதைச் செய்ய வைத்தார்.

இதுதான் அவள் வீடு என்ற எண்ணம் அவளுக்கும் வர வேண்டும் அல்லவா….

அம்மா நாங்க நாளைக்குக் காலையில கொடைக்காணல் போயிட்டு மூன்னு நாள் இருந்துட்டு வரோம்.” என பவித்ரன் சொல்ல… சரி என்றார்.

அதே போல மறுநாள் அதிகாலையே கொடைக்காணல் கிளம்பி சென்றனர். மதுரை வரை வாடகை காரில் சென்று, அங்கிருந்து டூரிஸ்ட் வாகனத்தில் சென்றனர்.

ஏன் கார்லயே போயிருக்கலாமே?” என்றாள்.

காரணமாத்தான் இதுவும் நல்லத்தான் இருக்கும் வா.” என்றான்.

மினி வேன்னில் இன்னும் சில சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து சென்றனர். வழியில் அவர்களே முக்கிய இடங்களைச் சுற்றிக் காண்பித்துதான் அழைத்துச் சென்றனர்.

கொடைக்காணல் வந்ததும், அங்கேயும் சுற்றிப் பார்த்து விட்டு அவரவர் தனியே சென்று விட்டனர். “நாமே தனியா வந்தா இப்படி எல்லா இடமும் பார்க்க முடியாது. அதோட செலவும் கம்மி.” என்றவன், அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு லைத்துச் சென்றான். அதன் பிறகு புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் நேரம் இனிமையாகச் சென்றது.

மேலும் இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு, மாலை போல அங்கிருந்து கிளம்பி விட்டனர். கொடைக்கானலில் இருந்து நேராக மதுரைக்கு அதே போல மினி வேன்னிலேயே வந்துவிட்டனர்.

மதுரையில் இறங்கி ஊருக்குச் செல்லாமல்… “இங்க பக்கத்தில தான் ஆரியன் அண்ணா வீடு பார்த்திட்டு போவோம்.” என்றான்.

அம்மாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான் என்று நினைத்தவள், “இப்போவா எனக்குக் களைப்பா இருக்கே.” என்றாள். ஆனால் பவித்ரன் விடவில்லை. “கொஞ்ச நேரம் இருந்திட்டு உன்னைக் கார்லையே கூட்டிட்டு போறேன்.” என்றான்.

இவர்கள் திடிரென்று வந்து நின்றதும், ஆரியனுக்கும் சம்யுக்தாவுக்கும் ஆச்சர்யம் தான். ஆனால் சந்தோஷமாகவே வரவேற்றனர்.

வாங்க வாங்க…” என உள்ளே அழைத்துச் செல்ல… அங்கே அப்போது இந்துஜாவும் இருந்தார்.

ஆரியன் தான், “எப்பவும் நாங்க தான் வரோம், இந்த வாரம் நீங்க வாங்க அத்தை.” என்று அழைத்திருந்தான். மதிய உணவு இங்கேயே உண்டுவிட்டு, சக்ரவர்த்தி மாலையில் தான் மார்க்கெட் சென்றிருந்தார். அதனால் இந்துஜா மட்டும் இருந்தார். அவரை இரவு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தார்.

இந்துஜாவும் அவர்களை வாங்க என்று சொல்ல… “என்னோட அம்மா.” எனப் பவித்ரனுக்குச் சம்யுக்தா அறிமுகம் செய்து வைத்தாள்.

எப்போதும் போல மரியாதை தரும் தோற்றம் இந்துஜாவிடம், பவித்ரன் அவரை நலம் விசாரிக்க… பதில் சொன்னவர், உடனே அங்கே இருந்து கிளம்பி விட்டார். அவருக்குத் தெரியும் ஸ்ரீநிதிக்குச் சங்கடமாக இருக்கும், அதோடு சந்திராவுக்குத் தானும் இங்கே இருந்தது தெரிந்தால்… கோபப்படுவார். இளையவர்கள் சேர்ந்து இருக்கட்டுமே என்று நினைத்தவர், அப்போதே விடைபெற…

சம்யுக்தா “ஏன் மா?” என்று கேட்க….

நாங்க வந்ததுனால போறீங்களா?” என பவித்ரனும் கேட்க…

நான் இங்க பக்கத்தில தான் இருக்கேன். அதனால அடிக்கடி வருவேன். நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க.” என்றவர், “அக்காவையும் அத்தானையும் நல்லா கவனி.” என்று சொல்லிவிட்டு செல்ல… ஆரியனும் புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தான்.

அவர்கள் அறையைத் தவிர இருந்த இன்னொரு அறையைக் காட்டிய ஆரியன், இருவரையும் அந்த அறையில் இருந்த ஓய்வறையை உபயோகிக்கச் சொல்லிவிட்டு, சம்யுக்தா சமையல் அறையில் இருக்க அங்கே சென்றான்.

நைட்டுக்கு வெளிய வாங்கிப்போமா?” என்று அவன் கேட்க…

வேண்டாம் கல்யாணம் ஆகி முதல் தடவை வந்திருக்காங்க. நாம வீட்லயே பண்ணலாம். நீங்க போய்க் கொஞ்சம் சிக்கென், மட்டன் ரெண்டுமே வாங்கிட்டு வாங்க.” என்றாள்.

எவ்வளவு வாங்கணும் என ஆரியன் கேட்க…சம்யுக்தா இந்துஜாவிடம் கேட்டு விட்டு சொன்னாள். புதுசா கல்யாணம் ஆகி வந்திருக்காங்க, ட்ரெஸ்சும் வாங்கிக் கொடுக்கணும் என்றார்.

அம்மா இப்போ டிரஸ் வாங்க எங்க மா டைம் இருக்கு.” என்றதும், “சரி நான் அப்பாகிட்ட வாங்கிக் கொடுத்து விடுறேன்.” எனச் சொல்லிவிட்டு வைத்தார்.

ஆரியன் கடைக்குச் செல்ல கிளம்பினான். அப்போது அறையில் இருந்து வந்த பவித்ரன் கிளம்புவதாகச் சொல்ல…

நீ அடி வாங்குவ. கல்யாணம் ஆகி முதல் தடவை வந்திருக்கீங்க. சாப்பிடாம போவியா?” என்றவன், “சம்யு சீக்கிரம் சமைச்சிடுவா. சாப்பிட்டு கிளம்புங்க.” என்றான்.

ஆரியன் வருவதற்குள், சம்யுக்தா தேவையானது நறுக்கி, அரைக்கக் வேண்டிய மசாலாவை அரைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீநிதி அறையில் இருக்க… அவளிடம் சென்ற பவித்ரன், “உன் தங்கச்சி மட்டும் வேலைப் பார்க்கிறா, நீயும் போய்ப் பாரு.” என்றான்.

ஸ்ரீநிதி சென்ற போது சம்யுக்தா மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

வா அக்கா…” என்றவள், “கொடைக்காணல் போயிருக்கீங்கன்னு அத்தை சொன்னாங்க. அங்க இருந்து தான் வர்றீங்களா?” என்றாள்.

ஆமாம் இவர் என்கிட்டே சொல்லவே இல்லை. திடிர்ன்னு தான் கூட்டிட்டு வந்தார். இப்போ உனக்கு வேற வேலை.” என்றதும்,

இதெல்லாம் ஒரு வேலையா? எப்படியும் ரெண்டு பேருக்குச் சமைக்கப் போறேன். அதுவே நாலு பேருக்கு செய்யணும் அவ்வளவு தானே.” என்றாள்.

முதலில் நிச்சயமான திருமணதிற்குப் பிறகு தான், ஸ்ரீநிதி  சமைக்கவே கற்றுக் கொண்டாள். அதுவும் எளிதானது தான் செய்யத் தெரியும்.

பேசிக் கொண்டிருந்தாலும் சம்யுக்தாவின் கைபட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தது.

ஆரியன் வாங்கி வந்த கறியை சுத்தம் செய்து, குக்கரில் சிக்கென் குழம்பும், மட்டன் சுக்கா செய்ய மட்டனை இன்னொரு குக்கரில் உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவும் வைத்தாள். கோழி குழம்பு தயாரானதும், அந்த அடுப்பில் இட்லியும் ஊற்றி வைத்தாள்.

அங்கேயே ஒரு பக்கம் நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதி, “இவ என்ன மின்னல் மாதிரி வேலைப் பார்க்கிறா…” என நினைத்துக் கொண்டாள்.

மட்டனை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, மசாலா சேர்த்து நன்றாகச் சுக்கா ஆகும் வரை வதக்கியவள், இட்லி வெந்ததும் தோசைக்கு இரும்புக் கல்லைத் தூக்கி அடுப்பில் வைத்தாள்.

வா…அக்கா சாப்பிடலாம்.” என்றவள், பவித்ரனை உணவு உண்ண அழைக்க… அவன் கைகழுவி கொண்டு வந்தான்.

வாழை இலையில் வீட்டில் இருந்த இனிப்பை முதலில் இருவருக்கும் வைத்தவள், பிறகு இட்லி, மட்டன் சுக்கா, கோழி குழம்பு என வரிசையாகப் பரிமாறிவிட்டு, “தேவையானது பார்த்து வைங்க.” எனக் கணவனிடம் சொல்லி விட்டுத் தோசை ஊற்ற சென்றாள்.

அவர்கள் உண்டு கொண்டிருக்கும் போதே சக்ரவர்த்தி இருவருக்கும் உடைகள் எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவரை எல்லோரும் வரவேற்க…

அப்பா வாங்க, நீங்களும் அவங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்க.” என சம்யுக்தா அழைக்க… ஆரியனும் அவரை உட்கார சொன்னான். சக்ரவர்த்தியும் கைகழுவி கொண்டு வந்து உட்கார்ந்தார்.

எப்ப வந்தீங்க?” என அவர் பெரிய மகளிடம் கேட்க… அவள் பதில் சொல்ல… சம்யுக்தா வந்து அவருக்குப் பரிமாறியவள், “அப்பா, நைட் நேரம் உங்களுக்கு மட்டன் வைக்கக் கூடாதுன்னு அம்மா ஆர்டர்ப்பா….” என்றவள், இட்லி வைத்து கோழி குழம்பு ஊற்ற….

சரி டா… உன்னையும் அக்காவையும் ஒண்ணா பார்த்ததே எனக்குச் சந்தோஷம்.” என்றபடி உண்ணத் தொடங்கினார்.

உங்க அம்மாவுக்கு வேற வேலை இல்லை என்று சொல்லி அவர் பாட்டுக்கு உண்டிருக்கலாம். ஆனால் மனைவியின் வார்த்தைக்கு அவர் இல்லையென்றாலும் மதிப்பளித்தது ஸ்ரீநிதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

உண்டு முடிக்கவே எட்டரை மணி ஆகி இருக்க… அவர்கள் கிளம்புவதாகச் சொல்ல… இருந்திட்டு காலையில போகலாமே என்றான் ஆரியன்.

இல்லைணா… இப்போ போனா நைட் பதினோரு மணிக்குள்ள வீட்டுக்கு போயிடுவோம். போய் ரெஸ்ட் எடுக்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல சென்னைக்கு வேற கிளம்பணும்.” என்றான்.

சக்ரவர்த்தி அவர்கள் செல்வதற்கு வாடகை காரை அழைத்தார்.

அவர்களுக்கு என எடுத்து வந்திருந்த உடைகளை ஆரியன் கொடுக்க… “சொல்லாம வந்ததுக்கே இவ்வளவா… சூப்பர் சாப்பாடு, அதோட டிரஸ்.. கலக்குறீங்க போங்க.” என்றான் பவித்ரன்.

புதுசா கல்யாணம் ஆகி இருக்கு இல்ல… அதுவும் எடுத்துத் தர்றது முறை தான்.” சம்யுக்தா சொல்ல…

அப்படியா… பெரிய மனுஷி சொன்னா சரியாத்தான் இருக்கும்.” என பவித்ரன் தன் மச்சினிச்சியைக் கேலி செய்ய…

சம்யுக்தா ஆரியனைப் பார்க்க…. “ரொம்பப் பேசாத வயசனவங்கன்னு சொல்லிடுவாங்கன்னு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன். பாட்டி மாதிரி பேசினா அப்படித்தான்.” என அவனும் கேலி செய்ய… எல்லோரும் சிரித்தனர்.

கார் வந்ததும் கீழே வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

காரில் ஸ்ரீநிதி அமைதியாக வர… “என்ன ஒரு மாதிரி இருக்க?” என்றான்.

சம்யுக்தா மாதிரி என்னால எல்லாத்தையும் ஏத்துகிட்டு போக முடியலை.” என்றாள்.

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ஸ்ரீநிதி. ஆனா நாம ஏத்திட்டுப் போய்த் தான் ஆகணும். இன்னும் எத்தனை நாள் அப்படி ஆகிடுச்சுன்னே நினைச்சிட்டு இருக்க முடியும்?”

உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆரம்பத்திலேயே ஒத்து வரலை. ஒன்னு அப்பவே பிரிஞ்சிருக்கணும், இல்லைனா அதுக்கப்புறம் நடந்ததை ஏத்துகிட்டாவது வாழணும். ரெண்டும் இல்லாம… உங்களையும் உங்க அப்பாவோட ஒட்டுதல் இல்லாம பண்ணிட்டாங்க. ஆனா சம்யுக்தா அம்மா வெறுப்பை மகளுக்குச் சொல்லிக் கொடுக்கலை… அதனால அவ உங்ககிட்ட ஒட்டுதலா இருக்கா… அதுதான் வேற ஒன்னும் இல்லை.”

இதுல யாரை குத்தம் சொல்லியும் ஒன்னும் ஆகப்போறது இல்லை. விடு இனிமேயாவது ஏத்துக்கப்பாரு.” என்றான்.

மறுநாள் மாலை வரை பவித்ரனின் வீட்டில் இருந்து விட்டு, அவள் சென்னை செல்ல எடுத்து வைக்க வேண்டும் என்றதால்… ஸ்ரீநிதியின் வீட்டுக்கு வந்தனர்.

சந்திரா மகளிடம் எங்கே சென்றார்கள்? என்ன பார்த்தார்கள்? என எல்லாம் கேட்டார். ஸ்ரீநிதி ஆரியன் வீட்டுக்கு சென்றதை சொல்லவில்லை. 

மணமக்கள் சென்னை கிளம்பும் அன்று சக்ரவர்த்தியும் வந்து விட்டார். தனிக்குடித்தனம் வைக்க சந்திராவையும் ஸ்ரீகாந்தையும் தான் உடன் செல்ல சொன்னார். ஸ்ரீகாந்திடம் பணம் கொடுத்தவர், சென்னையிலேயே ஸ்ரீநிதிக்கு பிடித்தமாதிரி வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

ஏன் மாமா நீங்களும் வரலாமே?” என பவித்ரன் அழைக்க…

நான் இன்னொரு முறை வரேன் மாப்பிள்ளை. இங்க யாராவது இருக்கணும். அதோட எனக்குச் சென்னையில அலைஞ்சு திரிஞ்சு வாங்கவும் முடியாது.” என்றார்.

பவித்ரன் இல்லாத போது சந்திரா, “என்னத்தை அங்க போய் வாங்கிறது. இந்த மகளுக்குன்னா மட்டும் எல்லாத்தையும் எங்க தலையில கட்டுறது.” என்றார்.

இங்க விடச் சென்னையில இன்னும் நிறைய மாடல் இருக்கும். ஸ்ரீநிதிக்கு பிடிச்சது வாங்கிக்கட்டுமேன்னு நினைச்சேன். சம்யுக்தா கொடுக்கிறதை வாங்கிப்பா… ஆனா ஸ்ரீநிதிக்கு அவளுக்குப் பிடிக்கணும். நீதான் அப்படி வளர்த்து வச்சிருக்க. அதுதான் உங்களையே வாங்கிக்கச் சொன்னேன்.” என்றார் சக்ரவர்த்தியும் சூடாக.

சந்திர மேலும் எதோ பேச வர… “நாங்களே பார்த்து வாங்கிக்றோமப்பா.” என ஸ்ரீநிதி சொல்ல… சக்ரவர்த்தியும் அவர்களைப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

அவர் சென்றதும், “அம்மா, நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா… அப்பா மொத்தமா அங்க போயிடுவார்.” என ஸ்ரீநிதி சொல்ல… ஸ்ரீகாந்தும் அதை ஆமோதித்தான்.

தந்தையை இழந்து விடக் கூடாதே என்ற கவலை பிள்ளைகளுக்கு இருக்க… சந்திராவுக்கு அவர்களின் பயம் புரியவில்லை.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு கணவர் போய் விடுவாரா என்று நினைத்தார். ஆனால் சொத்தெல்லாம் நீயே வச்சுக்கோ… எங்க அப்பாவை விட்டு விடு என சம்யுக்தா கேட்பாள் என்று அவர் நினைக்கவே இல்லை. அவள் அப்படித்தான் கேட்டாள்.