புதுமணத் தம்பதிகளுக்கு முதலிரவு பெண் வீட்டில் என்பதால்… சக்ரவர்த்தி சரளாவை இருந்து அதற்கான வேலைகளைப் பார்த்துகொள்ளச் சொல்லி இருந்தார். புதுமணத் தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற சமயம், சரளாவும் அவர் வீட்டுக்கு சென்று பட்டுப் புடவையை மாற்றி விட்டு, மீண்டும் அண்ணனின் வீட்டுக்கு கிளம்ப… ஆரியனும் மனைவியை அழைத்துக் கொண்டு மதுரைக்குக் கிளம்பி விட்டான். அவர்களுடன் அவினாஷும் சென்றான்.
ஆரியன் நேராக மாமியார் வீட்டுக்கு தான் சென்றான். அவர்களைப் பார்த்ததும் இந்துஜா சமைக்க செல்ல… “வேண்டாம் அத்தை, இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்.” என அவரையும் அழைத்துக் கொண்டு நால்வரும் ஹோட்டலுக்குச் சென்றனர்.
சக்ரவர்த்தித் திருமண வேலையை முன்னிட்டு அதிகம் ஊரில் தான் இருக்கிறார். அதனால் ஆரியனும் சம்யுக்தாவும் இந்துஜாவுக்குத் துணையாக இங்கே தான் இருக்கிறார்கள்.
இப்போதும் வெளியவே உண்டுவிட்டு ஆகாஷை சென்னை செல்லும் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு இவர்கள் எல்லாம் வீடு திரும்பினர். ஆரியன் ஹாலில் டிவி பார்க்க… சமையல் அறையில் சம்யுக்தா அவள் அம்மாவிடம் ஊரில் நடந்ததைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
இந்துஜா பாலை சூடு செய்தவர், நியாபகம் இல்லாமல்… அந்தப் பெரிய பாத்திரத்தை துணியைப் பிடித்துக் கொண்டு தூக்கி இருந்தார்.
விபத்தில் கை நரம்பும் பாதிக்கபட்டிருக்க… அவரால் எதையும் அழுந்த பற்றித் தூக்க முடியாது. அதனால் கனமான பொருட்களைத் தூக்க மாட்டார். ஆனால் மகளோடு பேசிக் கொண்டு செய்ததில் மறந்து தூக்கி விட்டார். ஆனால் கைகளில் வலு இல்லாமல்… பால் பாத்திரம் நழுவ… சம்யுக்தா கவனித்து அம்மா என்று கத்த.. இந்துஜா பின்னால் நகர… நல்லவேளை சூடான பால் அவர் மீது கொட்டாமல் தரையில் தான் கொட்டியது.
ஆரியன் ஹாலில் இருந்தவன், சத்தம் கேட்டு அவனும் என்னவோ என்று பதறிப் போய் வந்திருந்தான்.
“பாலை கரண்டியில தான் எடுப்பேன். இன்னைக்கு மறந்திட்டேன்.” என இந்துஜா சொல்ல.. சம்யுக்தா அம்மாவின் நிலையை நினைத்து அழுதே விட்டாள்.
“நீங்க தனியா இருக்கும் போது… இப்படியானா என்னமா ஆகும்.” எனச் சொல்லியபடி சம்யுக்தா அந்த இடத்தைச் சுத்தம் செய்ய… “நான் உங்க அப்பா வீட்ல இருக்கும் போதே வேலை எல்லாம் முடிச்சிடுவேன். கனமான பொருள் இருந்தா அப்பா தான் வந்து தூக்கி வைப்பாங்க. இன்னைக்குத் தான் ஞாபகம் இல்லாம பண்ணீட்டேன்.” என்றார்.
“இனி கவனமா இருங்க அத்தை.” என்ற ஆரியன், “சரி நீ வா அவங்களை டென்ஷன் பண்ணாதே…” என்றவன், “அத்தை, வெளியில சாப்பிட்டது வயித்துல இடம் இல்லை. பால் எல்லாம் வேண்டாம். நீங்களும் போய்ப் படுங்க.” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடி அறைக்கு வந்துவிட்டான்.
அறைக்கு வந்தும் சம்யுக்தா அழுது கொண்டு தான் இருந்தாள். “எங்க அம்மா எவ்வளவு கைவேலை பார்ப்பாங்க தெரியுமா… அவங்களே ஜாக்கெட் எல்லாம் டிஸைன் பண்ணி தைப்பாங்க. இப்போ ஒன்னும் அவங்களுக்கு முடியலை… தைக்கணும்னு உட்காருவாங்க, ஆனா கொஞ்ச நேரம் தான் தைக்க முடியுது. அப்புறம் எடுத்து வச்சிடுறாங்க.”
“தெரியும், ஆனா இன்னொன்னு யோசி சம்யு. அவங்க அந்த விபத்து நடந்த போது எப்படி இருந்தாங்க, அதுக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை. அவங்க இந்த அளவுக்கு நம்மோட இருக்கிறதே பெரிய விஷயம். நாம அவங்களை நல்லா பார்த்துக்கலாம்.” என்றான் ஆரியன்.
“ச்ச அந்த ஆளை கொல்லணும் போல இருக்கு. அந்த ஆளு பண்ணதுக்கு எங்க அம்மா தான் கஷ்ட்டப்படுறாங்க.”
“அதுக்குதான் ஜெயில்ல உட்கார்ந்து இருக்கான்.”
“ஸ்ரீநிதி அக்காவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, பெரியம்மா இனிமேயாவது அப்பாவை நிம்மதியா இருக்க விடுவாங்களா?” என சம்யுக்தா கேட்க…
“அவங்க திருந்த மாட்டாங்க. அது உனக்கும் தெரியும். ஆனா இனி உங்க அப்பாதான் அவங்ககிட்ட இருந்து எப்படி முழுசா விலகிறதுன்னு யோசிக்கணும்.” என்றான்.
கடைசிச் செமஸ்டர் பரிட்சை வருவதால்…. விடுமுறையில் தான் சம்யுக்தா இருந்தாள். இனி பரிட்சைக்குச் சென்று வந்தால் போதும். அதனால் அவள் அம்மாவுடன் வீட்டில் இருக்க… ஆரியன் மட்டும் அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்.
சக்ரவர்த்திக் கைபேசியில் அழைக்க… அவரிடம் முன்தினம் நடந்ததைச் சொல்லி விட்டாள். அதற்கு மேல் அவருக்கு அங்கே இருக்க மனம் இருக்குமா… “சூடான பால் மேல ஊத்தி இருந்தா என்ன ஆகி இருக்கும், இன்னைக்கு விருந்து முடிஞ்சதும் நான் கிளம்பி வந்திடுறேன். அம்மாவை பார்த்துக்கோ.” என்றார்.
“உங்க அப்பாகிட்ட சொல்லாத சொல்லதன்னு சொன்னேன் சொல்லிட்டியா?” என இந்துஜா கேட்க….
“அதை விடுங்க அம்மா, நாம சொத்து வேண்டாம்னு சொல்லிட்டா… அப்பாவை நமக்கே விட்டுக் கொடுத்திடுவாங்கலாம்மா…” என்று கேட்க….
“எதுக்கு இப்போ இதெல்லாம் பேசுற?” என இந்துஜா சொல்ல…
“என் புருஷன் என்கிட்டே இருந்து சொத்தெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். அதனால் கொடுத்திடலாம்மா… நமக்கு இந்த வீடு போதும். அப்பா நம்மோடவே இருக்கட்டும்.” என்றாள்.
மனைவி பேசுவதெல்லாம் ஆரியன் காதில் விழவே செய்தது.
“என்னங்க நீங்க சொத்து கேட்பீங்களா என்ன? உங்களுக்கு வேண்டாம் தானே… நான் வேணா உங்களுக்குச் சம்பாதிச்சு தரேன்.” என்றாள்.
ஆரியன் மாமியாரைப் பார்த்து சிரித்தவன், “அத்தை உங்க பெண்ணை நீங்களே சமாளியுங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன்.” என்றவன் மனைவியிடம், “உன் முடிவு தான் என் முடிவு.” எனச் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டான்.
பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டினருக்கு சம்பந்தி விருந்து முடிந்ததும், ஸ்ரீநிதியும் புகுந்த வீட்டிற்குக் கிளம்பி சென்றாள். அவளுக்குக் கொடுக்க வேண்டிய சீர் வரிசையைக் கொடுத்து அனுப்பி வைத்தனர். மறுநாள் புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு செல்வதாக இருந்தது.
சக்ரவர்த்தியும் மாலை வரை இருந்து வேலைகளை முடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பி விட்டார். சரளாவும் அவர் அம்மா ஞானத்தைத் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். சந்திராவும் ஸ்ரீகாந்தும் தான் வீட்டில் இருந்தனர்.
“உங்க அப்பா எப்போ கிளம்புறதுன்னே இருந்தார் போல… அங்க ஓடிட்டார். அவர் காலை உடைச்சு தான் இருக்க வைக்கணும்.” என்றதும்,
“அப்பா கால் உடைஞ்சு படுக்கையில இருந்தா… நீங்க பொண்டாட்டியா அவர் பக்கத்தில இருந்து பார்த்துப்பீங்க?” என ஸ்ரீகாந்த் கேட்க…
“நான் ஏன் அந்த ஆளுக்குப் பார்க்கணும். அவர் என்ன எனக்கு மட்டுமா புருஷனா இருந்தார். நான் அவருக்குச் சேவை செய்ய…” என்றார் சதிரா காட்டமாக…
“அப்புறம் ஏன் அப்படிப் பேசுறீங்க? என்னவோ அப்பா புதுசா அங்க போற மாதிரி. அவர் அங்கதான் அதிகம் இருக்கார்.”
“நீங்க ஆரம்பத்திலேயே ஒழுங்கா இருந்திருந்தா, ஏன் இப்படி ஆகி இருக்கப் போகுது? வீட்ல இருக்கும் போதெல்லாம் நீங்க சண்டை போட்டுட்டே இருந்தா… அதுதான் அவர் வீட்ல இருக்காம போயிட்டார். இனி அதைப் பத்தி பேசி என்ன?”
“ஆமாம் நான்தான் விட்டுட்டேன். உங்க அப்பா இன்னொரு கல்யாணம் எல்லாம் பண்ணுவாருன்னு நான் நினைக்கலை…. சும்மா மிரட்ட சொல்றாருன்னு நினைச்சேன். அப்புறம் பண்ணிடே வந்திட்டார். நான் அப்பவே போலீஸ்ல புகார் கொடுத்திருக்கணும். நான் எங்க வீட்டு ஆளுங்களை நம்பி ஏமாந்து போனேன்.”
“என் பிறந்த வீட்டு ஆளுங்க அது மட்டுமா செஞ்சாங்க. இப்பவும் எதையோ பண்ணத் தெரியாம பண்ணி வச்சு… உங்க அத்தை குடும்பமும் இப்போ உங்க அப்பாவோட அந்தக் குடும்பத்துப் பக்கம். அதுவும் என்ன திமிர் இருந்தா….. உங்க அத்தை அங்க இருந்தே பெண் எடுப்பா. அவளும் அண்ணன் பொண்டாட்டி தானேன்னு நினைச்சிட்டா போல…”
“அதுவும் அந்த ஆரியன் பொண்டாட்டியை தலையில தூக்கி வச்சுக்காத குறையா ஆடுறான்.”
“அவர் பொண்டாட்டி அவர் என்னவும் பண்றார் நமக்கு என்ன?”
“இவ அம்மா வந்து என் வாழ்க்கையைக் கெடுப்பா… ஆனா அவ மகள் மட்டும் சந்தோஷமா இருக்கணுமா? நான் அதுக்கு விட மாட்டேன்.”
“அம்மா அப்படி எல்லாம் பேசாதீங்க. உங்களுக்கும் அப்பாவுக்கும் நடுவுல என்ன இருந்தாலும், அவர் உங்களையோ எங்களையோ விடலை. அவர் நினைச்சிருந்தா விட்டிருக்கலாம்.”
“இதுக்கு சம்யுக்தாவை காரணம் ஆக்காதீங்க. அவளை எதுவும் நீங்க பேசினீங்கன்னா…. அது உங்களுக்குத்தான் திரும்பும்.”
“அதையும் நான் பார்க்கிறேன்.” என வீம்பாகச் சொல்லிவிட்டு சந்திரா செல்ல…
இவரைத் திருத்தவே முடியாதோ… அடுத்து என்ன இழுத்து வைப்பாரோ என்று ஸ்ரீகாந்துக்குக் கவலையாக இருந்தது.
சக்ரவர்த்தி வந்து விட்டதால் ஆரியனும் சம்யுக்தாவும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப… சம்யுக்தா சக்ரவர்த்தியிடம் அவள் யோசித்து வைத்ததைச் சொல்ல…
“விடுடா பார்த்துக்கலாம்.” என மகளைச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்த பிறகு ஆரியன், “பவித்ரன் வெளிநாடு போயிடலாம்னு பார்க்கிறான். நாமும் போவோமா?” எனக் கேட்க….
“உங்களுக்கு ஆபீஸ் இங்க இருக்கு. நாம எப்படிப் போக முடியும்?” என்றாள்.
“நான் யார்கிட்டயும் வேலை செய்யலை மேடம். இங்க இருந்து நடத்துற கம்பனியை வெளியூர்ல இருந்தும் பார்த்துக்கலாம். வேணா அவினாஷை இங்க பார்த்துக்கச் சொல்லலாம், அது ஒன்னும் பிரச்சனை இல்லை.”
கணவன் சொன்னதைக் கேட்டு சம்யுக்தா சந்தோசம் கொள்ளவில்லை. மாறாக, “நான் எதோ எங்க அம்மாகிட்ட கொஞ்ச நாள், அத்தைகிட்ட கொஞ்ச நாள் எடுபிடி வேலை செஞ்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். என்னை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய், என்னையே எல்லா வேலையும் செய்ய வைக்கப் பார்க்கிறீங்களா? ஏன் நான் ஓசி சாப்பாடு சாப்பிடுறது உங்களுக்குப் பொறுக்கலையா?” என அவள் கணவனைப் பார்த்து கேட்டு வைக்க…
“நல்ல விளக்கம் டி.. உன்னைப் போல விவரம் இல்லாம… சில மருமகள்கள் எல்லாம் மாமியார்கிட்ட மல்லுக்கு நிற்குதுங்க. உன்கிட்ட இருந்து கத்துக்கணும்.” எனக் கணவன் சொல்ல… சம்யுக்தாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீங்க இதை அத்தைகிட்ட சொல்லுங்க, அவங்க நம்ப மாட்டாங்க.” என்றாள் அவனை மிதப்பாகப் பார்த்தபடி.
ஆரியன் அப்போதே அவன் அம்மாவுக்கு அழைத்து, “அம்மா இவ உங்களை நல்லா ஏமாத்துறா…இன்னைக்கு என்ன சொன்னா தெரியுமா?” என சம்யுக்தா சொன்னதைச் சொல்ல…
“அவ உண்மையிலேயே கூட நின்னு வேலை பார்ப்பா டா… நீ வெளிநாட்டுக்கு கூப்பிட்டதுனால அப்படிச் சொல்றா… நீ ஏன் என் மருமகளை எங்ககிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கிற… அதுதான் அப்படிச் சொல்லி இருக்கா.” என்றார்.
“எனக்குத் தேவை தான்.” என்றவன், “சரி சாப்பிட்டு படுங்க.” என வைத்து விட்டான். அடுத்து அவன் உடனே வேறு யாருக்கோ அழைக்க… சம்யுக்தா யாருக்கு என யோசிக்க….
“அத்தை உங்க பொண்ணு ரொம்ப உண்மை எல்லாம் பேசுறா….” என்றவனை மேலே சொல்ல விடாமல்… சம்யுக்தா அவன் மீது விழிந்து வாயை பொத்த….
“என்னை விடு டி.” என்றான்.
“சொல்லாதீங்க சொல்லாதீங்க, எங்க அம்மா இப்பவே விளக்காமாரை எடுத்திட்டு வருவாங்க.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி…
“அந்தப் பயம் இருக்கட்டும்.” என்றவன்,
“ஒன்னும் இல்லை அத்தை சும்மா தான் பண்ணேன்.” என வைத்து விட்டான்.
சக்ரவர்த்தி என்ன என்று கேட்க…. “உங்க பொண்ணு தான் எதோ கலாட்டா பண்ணி இருக்கா… மாப்பிள்ளை சும்மா விளையட்டுக்கு தான் போன் பண்ணி இருக்கார்.” என்றார்.