மறு முனையில் நிற்கும் வேளை, பைக் ஆசாமி ஒருவனை மஃப்டியில் இருந்த போலீஸ் ஒருவர் நிறுத்தி கேள்வி கேட்பது தெரிந்தது. பைக் ஆசாமியின் விறைப்பான உடல் மொழியில் காரை அவர்கள் புறம் செலுத்த, பைக் ஆசாமி போலீசை தள்ளி விட்டு பைக்கை சீற விடவும் சரியாக இருந்தது.
நொடியில் காரை சீறவிட்ட கைலாஷ் பைக்கை லேசாக இடிக்க, அந்த ஆசாமி எகிறி விழுந்தான். அதே வேகத்தில் ஓட முயற்சிக்க, கைலாஷ் இறங்கி ஓடினான். நவீனும் இறங்கி ஓட, நூறடி கூட பைக் ஆசாமியை ஓட விடவில்லை. இருவரிடமும் சிக்கிக் கொண்டான்.
அவனை கீழே தள்ளிய வேகத்தில் கைலாஷ் சரமாரியாக அடிக்கத் துவங்க, “ஹெல்ப்… ஹெல்ப்”, என்று சுருண்டான்.
“யார்.. யார் நீ.. எதுக்கு ஓடற.”, என்று ஆங்கிலத்தில் கேட்டபடியே, சுருண்டிருந்தவன் கையை இழுத்து நிற்க வைக்க, தள்ளாடியவனை நவீன் பிடித்துக் கொண்டான்.
ஹெல்மெட்டை கைலாஷ் கழட்ட, பார்த்தவுடன் வட நாட்டுக் காரன் என்று தெரிந்தது. அதற்குள் உதவிக்கு இன்னும் இரு போலீசார் வர, ஒருவர் அவன் கைகளை பிடித்து விலங்கிட்டார். பொறி கலங்கிப் போய் தனிச்சையாக கண்ணிலும் மூக்கிலும் நீர் வடிய, முகத்தை தோள் பட்டையில் துடைக்க முயன்றான் பைக் ஆசாமி.
அவன் பாண்ட் பாக்கெட்டை தட்டி பர்ஸை எடுத்த கைலாஷ், விளக்கொளியில் அதைப் பார்க்க, உள்ளே இருந்த கிரெடிட் கார்ட், அவனை ஜீத்தேந்திரா எல் என்று அடையாளம் காட்டியது.
“எங்க ஜீத் இந்த நேரத்துல போற ?”, என்று கைலாஷ் விசாரித்தபடியே ஜீத்தின் போனை மற்றொரு பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.
அது திறக்க பாஸ்வோர்ட் கேட்க, அவனிடம் காட்டி, “நம்பர் சொல்லு ஜீத்.”, என்றான்.
அவன் சொன்ன நம்பரை போட்டதும் திறந்தது. கால் லிஸ்ட்டில் சென்று பார்த்தால் பழக்கப்பட்ட நம்பர்கள் எதுவும் இல்லை. ஒரு உந்துதலில், கிஷோர் கொடுத்த நம்பரை அழுத்த, அது சன்னி என்ற பேரில் இருந்தது.
“யார் ஜீத் சன்னி ?”, என்று அடுத்து கைலாஷ் கேட்க அதற்கும் பதிலில்லை.
ப்ளார் என்ற அறை அந்த இடத்தின் அமைதியை கிழிக்கவும்தான் கைலாஷ் அறைந்ததே மற்றவர்களுக்கு தெரிந்தது. கீழே விழப்போனவனை நவீன் பிடித்து நிறுத்தினான்.
“யார் ஜீத் சன்னி? “, என்று மீண்டும் ஒரு புன்னகையுடன் கேட்டான் கைலாஷ்…
“அசிஸ்டென்ட்… என் மாமாக்கு.”, உதட்டோரம் ரத்தம் வழிய இந்த முறை பயத்தோடு முனகினான்.
“யார் உன் மாமா?”, பேச்சு இந்தியில் சென்று கொண்டிருந்தது.
“கரண்.”
“எங்க இருக்கார் ? அவரைப் பார்க்கத்தான் வந்தியா ஜீத் ?”, நீதாண்டா என் நண்பன் என்ற ரீதியில் கைலாஷ் கேட்க, வாங்கிய அடிகளால் நிற்க முடியாமல் ஆடியவனின் மொத்த பாரமும் நவீன் கையில் இருந்தது. உதவிக்கு ராகுல்.
“கீழ போட்ருங்க அவனை. எதுக்கு முட்டு குடுத்துட்டு இருக்கீங்க ?”, என்று தள்ளிவிட, பொத் என்று பிடிமானமில்லாமல் கீழே விழுந்த ஜீத் உரத்த குரலில் கத்தத் துவங்கினான்.
பட்டென்று அவன் முகத்தில் கைலாஷ் எட்டி உதைக்க ஜீத்தின் அலறல் நின்றது.
அதற்குள் ஜீத்தின் போன் அடித்தது, “கரன் காலிங்”, என்றது திரை.
“பாருடா… உன்னை உன் மாமா கூப்பிடறார். “, நக்கலாக சொன்னவன், “ஹலோ மட்டும் சொல்லணும்…இல்லை அடுத்த நிமிஷம் மரண வலி தெரியும்.”, என்று உறுமினான் கைலாஷ்.
ஸ்பீக்கரில் போட்டதும், “ஹலோ..”, என்றான் ஜீத்.
“எங்கடா இருக்க ? நீ எப்ப வந்து எப்ப கிளம்பறது ? விடியறதுக்குள்ள சென்னை லிமிட் தாண்டணும் ஜீத்.”, என்றான் கரண் கடுப்பாக.
கைலாஷ் சைகை செய்ய, “இப்ப..இப்ப வரேன்.”, என்று ஜீத் கரகரத்த குரலில் சொல்ல, அடுத்த நொடி இணைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட்டது.
ஜீத்தின் சட்டையை கொத்தாகப் பற்றியவன், “ எந்த வீடு. கரெக்டா சொல்லலைன்னா அடுத்து எதாவது ஃப்ராக்சர் ஆகும்.”, என்று எச்சரித்தான்.
அதற்கு மேல் அடி வாங்கத் தெம்பில்லாதவன், வீட்டு நம்பரை சொல்ல, அது கர்ணன் அவர்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்த வீடுதான்.
ஒரு பெரு மூச்சுடன், காரின் பின்பக்கம் அவனை இழுத்து வந்து போட்டான் கைலாஷ். ஒரு போலீசை காவலுக்கு வைத்துவிட்டு மற்றவரிடம், “ஹாஸ்டேஜ் சிச்சுவேஷன்னு சொல்லி இன்னும் இருவது பேர் துப்பாக்கியோட வேணும்னு கேளுங்க. அர்ஜன்ட். அரை மணிக்குள்ள இருக்கணும்.”, என்று உத்தரவிட்டான்.
“சர்… நீங்களே உள்ள போய் அவனையும் இப்படி அடிச்சு தூக்க முடியாதா சர் ?”, ராகுல் அவனது அடி தடி அவதாரத்தில் மயங்கிப் போய் கேட்க,
“ஹா ஹா… நான் சினிமா ஹீரோ இல்லை ராகுல். உள்ள எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாது. என்ன வெப்பன்ஸ் வெச்சிருக்காங்கன்னும் தெரியாது. சுட்டா செத்துடுவேன்.”, என்றான் கைலாஷ் சிரிப்புடனே.
“ஐயோ…. அப்படி சொல்லலை சர்…”, என்று ராகுல் மறுக்க,
“ஸ்ரீ இருக்கும் இடம் தெரிஞ்சிருச்சு. ஆனா இப்ப கரண் முழிச்சிகிட்டு இருக்கான். நம்ம கிட்ட என்னோட சேர்த்து நாலு போலீஸ், இரண்டு கன் இருக்கு. இப்ப போறது ரிஸ்க். சுத்தி வளைச்சதுக்கப்பறம் பார்த்துக்கலாம். எங்கேயும் போயிட மாட்டான்.”, என்று ராகுலுக்கும் நவீனுக்கும் ஆறுதல் அளித்தவன், மீண்டும் ஜீத்திடம் சென்றான்.
“உன் மாமா கூட எத்தனை பேர் இருக்காங்க ? எங்க போறதுக்கு கிளம்பி நிக்கறான் ?”, என்று விசாரித்த்தான்.
முதலிலேயே இதில் இஷ்டமில்லாத ஜீத், அவன் மாமன் சொன்னதால் தான் இந்த கடத்தலுக்குள்ளேயே வந்தான். இப்போது கந்தலாய் கிடப்பதும் அவனே. அந்த ஆத்திரம், மாமனை மொத்தமாக போட்டுக் கொடுக்கத் தயாரானான்.
“சன்னி எப்பவும் அவர் கூட இருப்பான். அப்பறம் வேற யாரும் இருக்காங்களா தெரியாது. “, என்று தலையை நிமிர்த்தாமல் பதில் சொன்னான்.
அவன் முடியை கொத்தாக பற்றி நிமிர்த்திய கைலாஷ், “என் முகத்தை பார்த்து பதில் சொல்லணும் ஜீத். இல்லைன்னா நீ உண்மை சொல்றியா, பொய் சொல்றியான்னு எனக்கு எப்படி தெரியும் ? ம்ம்ம் ? சரி, எத்தனை பேர் காலையில போகறதுக்கு ப்ளான்? எங்க போகறதா இருந்தீங்க?”
“இன்னோவா கார். நான் ஓட்டணும். மாமா, அந்த பொண்ணு. வேற யாரும் சொல்லலை. சன்னி வருவானா தெரியாது.”, என்றான் ஜீத் இம்முறை கைலாஷ் முகம் பார்த்து.
“உன் மாமா கன் வெச்சிருக்காரா ?”
“ஹ்ம்ம்… அவர், அப்பறம் சன்னியும் கூட.”, என்று சொல்லவும், “ம்ப்ச்… என்று சலித்துக் கொண்டு திரும்பினான் கைலாஷ். அருகிலிருந்த போலீசிடம், “என்ன சொன்னாங்க… பாக்-அப் போர்ஸ் எப்ப வரும்?”, என்று கேட்டான்.
“ஏற்பாடு செய்துட்டு போன் பண்றதா சொல்லியிருக்காங்க சர். இருபது கஷ்டம்… ஒரு பத்து பேர் நாம கேட்ட டைம்ல கிடைக்கும்போல தெரியும், அப்பறம் ஒரு பாட்ச் வந்து சேருவாங்க.”, என்று விடையளிக்க, “ம்க்கும்…. இவங்க வந்து பொசிஷன் எடுக்கற வரைக்கும் அங்க கரண் விரல் சூப்பிகிட்டு இருப்பான்.”, வெறுப்பாக கூறிவிட்டு, வேகமாக எதிர் புறம் நடந்தான்.
போலீஸ்  தங்களுக்குள் பேசிக்கொள்ள இருந்த அலைவரிசையை போலீஸ் மட்டுமன்றி சில நேரம் பத்திரிகையாளர்கள், இப்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் யூ டூபர்கள் கூட கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதைப் பற்றிய யோசனை இல்லாததால் கடத்தி வைத்து பேரம் பேசப் போவதும், போலீஸ் சுற்றி வளைக்கப் போவதும்  அந்தப் பின்னிரவுப் பொழுதில் பேசப்பட்டது. தூக்கம் தொலைத்த யூட்யூபர் ஒருவர் கேட்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்தவர் மூலம் எந்த இடம் என்பதையும் கண்டுபிடித்தது யார் கவனத்திற்கும் வரவில்லை.
கைலாஷ் யோசனையாய் தலையை கோதிக்கொண்டிருந்தான். மிஞ்சிப்போனால் ஒரு ஐந்து நிமிடம், மீண்டும் ஜீத்தை அழைப்பான் கரண். அதற்கு மேல் தாமதிக்க மாட்டான். வானம் லேசாக விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
‘சரி… நேரில் செல்ல வேண்டியதுதான். வேறு வழி இல்லை.’, என்ற முடிவுடன், ஜீத்தின் ஹெல்மெட்டை மாட்டி, அவன் பைக்கை எடுத்துக் கொண்டு நிதானமாக அந்த தெருவுக்கு சென்றான் கைலாஷ். அந்த வீட்டின் முன் தடதடத்து நின்றது பைக்.
ஆட்டோமெடிக் லாக் இருக்கும் கேட் , இவன் நிற்கவும் திறந்தது. உள்ளே சென்றான் கைலாஷ். போர்ட்டிகோ லைட் பளீரென்று எரிந்தது. பைக்கை நிறுத்தி கீழே இறங்கினான். ஹெல்மெட்டை கழட்டவில்லை. கை பின் இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியின் அருகே இருந்தது.
வாசல் கதவை திறந்து வந்தவன், “ஜீத்…. சீக்கிரம் வா…”, என்று இந்தியில் சொல்லி இரண்டடி முன்னே வைக்க, சட்டென்று நின்று,
“ஹேய்.. யார்… யார் நீ?”, என்று கேட்டபடியே பின்னோக்கி சென்றான்.
ஓரே பாய்ச்சலில் கைலாஷ் அவனைப் பிடிக்க ஓட, கரண் அதற்குள் உள்ளே சென்று கதவை அடைத்திருந்தான்.
கைலாஷ் மேலும் முன்னேற, பக்கத்து ஜன்னல் திறந்து, துப்பாக்கியால் சுட்டான் கரண்.
குண்டு மேலே படவில்லை என்றாலும், டக்கென்று மறுபுறம் உருண்டு இருட்டுடன் கலந்தான் கைலாஷ்.
“ஓடிப் போயிரு… இல்லை அந்த பொண்ணை கொலை பண்ணிடுவேன்.”, உள்ளிருந்து கரண் ஆங்கிலத்தில் கத்தினான்.
துப்பாக்கியோடு இருந்தவரையும், துணைக்கு ஒருவரையும் என்று வீட்டின் பின்புறம் அனுப்பியிருந்தவர்களை போனில் அலர்ட் செய்தான். கரண் வெளியில் வந்தால் அருகில் சுட்டு பயம் காட்டி வீட்டுக்குள் ஓட வைக்கச் சொன்னான்.
கையோடு கொண்டுவந்த ஜீத்தின் கைபேசி மூலம் கரணை அழைத்தான். போன் எடுக்கப்பட்ட உடனே,
“கரண், க்ரைம் ப்ரான்ச் ஸ்பெஷல் ஆஃபிசர் கைலாஷ் பேசறேன். உன் வீட்டை சுத்தி வளைச்சிருக்கோம்.  ஸ்ரீயை பத்திரமா குடுத்துட்டு சரண்டராகிரு. “, என்றான் கராறாக.
“நோ… கிட்ட வந்தீங்க, அவளை சாகடிச்சிட்டுதான் மறு வேலை.  அவ உயிரோட வேணும்னா… என்னை போக விடுங்க.  ஜீத் உங்ககிட்டதான் இருக்கான். அவனை அனுப்புங்க. என் கார்ல நாங்க கிளம்பறோம். மும்பைல அந்த பொண்ணை விடறேன். அது வரைக்கும் அவ எங்ககூடத்தான்.”, கரண் மறுமுனையில் கத்தினான்.
“முதல்ல ஸ்ரீ நல்லா இருக்காளான்னு ப்ரூஃப் அனுப்பு. அப்பறம் டீல் பேசலாம்.”, என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், திகைத்த பார்வையோடு ஸ்ரீ கட்டிலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஜீத்தின் வாட்சப்பிற்கு வந்தது. ராகுல், நவீனை அழைத்துக் காட்டி அது ஸ்ரீதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டான்.
போட்டோவைப் பார்த்த மாத்திரத்தில் ராகுல் கண்களில் நீர் கோர்த்தது. கலைந்த தலையும், மருண்ட பார்வையும் , லேசாக திறந்திருந்த வாயும் என்று ஸ்ரீயைப் பார்த்த நவீனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. ‘ஐயோ, எவ்வளவு பயந்திருக்காளோ, வந்துட்டோம் கண்ணம்மா… இன்னும் கொஞ்ச  நேரம்டா…’, என்று மானசீகமாக பேசினான் அவளுடன்.
ஜீத் போனிலிருந்து ராகுல் தன் போனில் போட்டோ எடுத்து ரோஜாவின் மொபைலுக்கு அனுப்பி அவர்களை அழைத்தான். பேசிவிட்டு இரண்டு நிமிடத்தில் வந்தவன், “ஆமா… அவ போடிருக்க ட்ரெஸ் இன்னிக்கு ஆஃபீஸ் போட்டுகிட்டு போனதுன்னு ஆன்ட்டி பார்த்துட்டு சொன்னாங்க சர்.”, என்றான்.
கரண் ஜீத்தின் போனிற்கு அழைத்தான். “ ஜீத் கிட்ட பேசணும். அவன் நல்லா இருக்கான்னு எனக்கு தெரியணும்.”, என்றான்.
“சரி…”, என்ற கைலாஷ் ஸ்பீக்கரில் போட்டு, ஒரு எச்சரிக்கை பார்வை விடுத்த வாறே… “பேசு ஜீத்… “, என்றான்.
“மாமா….”, என்றான் ஜீத்.
“எப்படிடா அவங்ககிட்ட மாட்டின? உன்னை ஒன்னும் செய்யலை இல்ல?”, என்றான் கரண்.
“வீட்டு கிட்ட வரும்போது…”, என்று ஜீத் சொல்ல, அதோடு போனை எடுத்துக் கொண்டு எட்ட நடந்த கைலாஷ், “ நீ அனுப்புன போட்டோ எப்ப எடுத்ததுன்னு தெரியலையே கரண்.  போனை அப்படியே ஸ்ரீகிட்ட தா பார்க்கலாம். நான் ஜீத் கிட்ட கொடுத்த மாதிரி ? “, என்றான் கைலாஷ். மறு முனையில் கெட்ட வார்த்தைகள் கொட்டியது. பின் தொடர்பு அறுபட்டது.