அவினாஷுக்குச் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க… அவன் சென்னையிலேயே தங்கி வேலை பார்த்து வந்தான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் மதுரைக்கு வந்து விடுவான். அப்போது சரளாவும் சடகோப்பனும் இங்கே வந்து விடுவார்கள். இல்லையென்றால் இவர்கள் மூவரும் அங்கே செல்வார்கள்.
வார நாட்களில் சம்யுக்தா கல்லூரி சென்று வந்து அம்மா வீட்டில் தான் இருப்பாள். அவளை இன்னும் ஆரியன் தனியே இருக்க விடுவது இல்லை. அவன் அலுவலகம் முடிந்து செல்லும் போது அழைத்துச் செல்வான். இந்துஜாவே குழம்பு காய் எல்லாம் கொடுத்து விடுவார். வீட்டிற்கு வந்து சம்யுக்தா தோசை ஊற்றுவதோ அல்லது சப்பாத்தி செய்வதோ செய்வாள்.
வீட்டில் ஆரியன் ஒரு வேலையும் பார்க்க மாட்டான். அவனுக்கு நேரமும் இருக்காது. ஆனால் கடைக்குச் செல்வது எல்லாம் அவன் வேலை… சில நேரம் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.
அன்று இரவும் ஆரியன் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க… சம்யுக்தா அவன் அருகில் உட்கார்ந்து அவன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆரியனின் கைபேசியில் அவனது கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகத் தகவல் வர… அதோடு அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற மொத்த விவரமும் வர… கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்துக்கும் மேல் பணம் வைத்திருந்தான்.
“நீங்க தான் இவ்வளவு பணம் வச்சிருக்கீங்களே… இதுல வீடு வாங்க முடியாதா? ஏன் மாமா வேற தரேன்னு சொன்னார்.” என்றாள் கணவனைப் பார்த்து.
வருவது வரை லாபம் என்று நினைக்காமல்… மனைவி வெளிப்படையாகக் கேட்டது பிடிக்க…
“ஏன் உன் மாமனார் பணம் கொடுத்தா குறைஞ்சு போயிடுவாரா? அவர் எங்களுக்குக் கொடுக்காம யாருக்கு கொடுப்பார்.” என்றவன், மடிக்கணியை எடுத்து வைத்து விட்டு, அருகில் இருந்த மனைவியை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.
“அதுக்கில்லை… உங்ககிட்ட தான் பணம் இருக்கேன்னு கேட்டேன்.” என்றவள் கணவனின் மீது சாய்ந்து கொண்டாள்.
“நாம ஒரு வேலை முடிச்சு கொடுத்தா உடனே பணம் வரும்னு சொல்ல முடியாது. ஆனா நான் ஆபீஸ் வாடகை, வேலை செய்றவங்களுக்குச் சம்பளம் இன்னும் மத்த செலவுக்கு எல்லாம் பணம் கொடுக்கணும். அதனால என்கிட்டே பணமா பாங்கல இருந்தா தான், தேவையான நேரம் உடனே எடுக்க முடியும். அதனால தான் பணமா வச்சிருக்கேன்.”
“எல்லாத்தையும் எடுத்து வீடு வாங்கிட்டா…. பிஸ்னஸ் நாளைக்கு எப்படி இருக்கும்னே சொல்ல முடியாது. அதனால தான் அப்பா கொடுக்கிறேன்னு சொன்னதுக்கு நான் ஒன்னும் சொல்லலை. வெளிய வட்டிக்கு வாங்கிறதுக்கு, அவர்கிட்ட இருந்தா வாங்கிக்கலாம். அப்புறம் நம்மகிட்ட பணம் இருக்கும் போது திருப்பிக் கொடுத்திடலாம்.”
“ஓ இதில் இவ்வளவு இருக்கிறதா…” என அப்போது தான் சம்யுக்தாவுக்குப் புரிந்தது. சொந்த தொழில் செய்வது சாதாரண விஷயம் அல்ல….
“முதல்ல இடம் வாங்கிப் போடுவோம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வீடு கட்டலாம். அதுக்குள்ள நாமும் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.” என்றான்.
“ஆபீஸ் கணக்கு வழக்கெல்லாம் இனி நீ பார்த்துக்கோ சம்யு. சம்பளம் கூட நீயே எல்லோருக்கும் போடலாம். எனக்கு நிறைய நேரம் மிச்சம் ஆகும்.”
“அந்த வேலை வேணா பண்றேன். ஆனா எனக்கு நாள் முழுக்க ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை பார்க்க இஷ்ட்டம் இல்லை. அதனால என்னை மேல எல்லாம் படிக்கச் சொல்லாதீங்க.” என்றாள்.
“படிக்கிறது பேபிக்கு கஷ்ட்டமா.” என மனைவியின் கன்னம் கிள்ளியவன், “உன்னை வெளியே ஒரு கோர்ஸ் சேர்த்து விடுறேன். மூன்னு மாசம் தான். நீ நம்ம ஆபீஸ் வந்து எல்லாம் வேலை பார்க்க வேண்டாம். வீட்ல இருந்து வேலை பண்ணு. என்னை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. உனக்குன்னு வருமானம் வர எதாவது தெரிஞ்சு வச்சுக்கோ.” கணவன் சொன்னதும் சரியாகப் படவே சம்யுக்தாவும் மறுப்பாக எதுவும் சொல்லவில்லை.
வார இறுதியில் அதற்கான வகுப்பில் சேர்த்து விட்டான். அதோடு அவனும் சொல்லிக் கொடுத்தான். கல்லூரி பாடத்தோடு அதையும் சேர்த்து படித்தாள்.
ஸ்ரீநிதிக்கு அந்த வரனே முடியும் போல இருந்தது. அவர்களும் எதையும் தோண்டி துருவவில்லை. பெரிதாகச் சொத்து பத்து இல்லை என்பதில் ஸ்ரீநிதிக்கு வருத்தம் தான். ஆனால் மாப்பிள்ளை பார்க்க மிகவும் நன்றாக இருக்க… அந்த வகையில் மனதை தேற்றிக் கொண்டாள்.
சந்திரா முதலில் முடியவே முடியாது வேறு இடம் பார்க்க வேண்டும் என்றார். ஆனால் சக்ரவர்த்தி விசாரித்த வரை பணம் அதிகம் இல்லையே தவிர, மாப்பிள்ளையின் குடும்பம் நல்ல குடும்பம். அதனால், “வந்த நல்ல இடத்தையும் விட்டுட்டு அப்புறம் வேற இடம் எதுவும் வரலைனா…” என அவரும் ஸ்ரீகாந்தும் இந்த வரனுக்கே முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க… ஸ்ரீநிதிக்கு மாப்பிள்ளை பிடித்ததால் சந்திராவும் பிறகு சரி என்றார்.
திருமணமும் அவர்கள் ஊரில் இருக்கும் மண்டபத்தில் தான் நடப்பதாக இருந்தது. சந்திரா அதை சரளாவிடம் சொல்வது போல வீட்டுக்கு வந்தார். அப்போது சம்யுக்தாவும் அங்கிருக்க… வாங்க என்று கேட்டவள், மாமியாரின் அருகேயே உட்கார்ந்து கொண்டாள்.
ஆரியனை வேண்டாம் என்று சொன்னோம். ஆனால் இப்போது அவனை விடக் குறைவான இடத்தில் அல்லவா இப்போது மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம் என்ற வருத்தம் சந்திராவுக்கு உண்டு தான். ஆனால் இங்கே வந்து மாப்பிள்ளை வீட்டினரைப் பற்றி ஹாஹா ஹோஹோ எனக் கதை விட்டுக் கொண்டிருந்தார்.
அவர் சம்யுக்தா வந்திருப்பது தெரிந்து தான் வந்திருந்தார். சரளாவிடம் உன் மருமகள் என்ன கொண்டு வந்தாள் என்பது போலத் தூண்டில் போட்டுப் பார்க்க…
“நாங்களும் அண்ணனை எதுவும் கேட்கலை…. அண்ணனும் எவ்வளவுன்னு சொல்லலை… சம்யுக்தா போட்டுட்டு வந்தது தான். எனக்கு எவ்வளவுன்னு கூடத் தெரியாது.” என்றார்.
“என்ன நகைனாவது காமியேன் பார்க்கலாம்.” என்றார். குத்துமதிப்பாகவாவது தெரிந்து கொள்ளலாம் என்று.
சம்யுக்தாவுக்கு அவரின் சூட்சமம் புரியவில்லை. அவள் எடுத்து வந்து காட்டத்தான் நினைத்தாள்… அதற்குள் சரளா “வீட்ல எங்க இருக்கு. எல்லாம் லாக்கர்ல இருக்கு.” என முடித்துக் கொண்டார்.
அதுவரையில் சந்திரா நன்றாகத் தான் பேசிக் கொண்டு இருந்தார். “இவரு பாட்டுக்குப் பெண்ணைத் தள்ளி விட்டா போதும்னு நினைச்சிட்டு இருக்கார். என் பொண்ணு வாடகை வீட்ல இருக்க எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.”
“என் பொண்ணுக்கு எல்லாம் ஒழுங்கா செய்யணும். யாரு யாருக்கோ செய்யுறார், என் மகளுக்கு செஞ்சா என்ன? குறைவா செய்ய நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.” என அவர் பாட்டுக்கு பேச… தந்தையைப் பேசுகிறார் என்பதிலேயே சம்யுக்தாவின் முகம் மாறி விட…
“இப்போ உன் மகனும் இருக்கத் தைரியம் அவருக்கு. உன் மகன் எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறானே புரியலை…. மாமா நிறையச் சொத்து தரேன்னு சொல்லி இருக்காரோ என்னவோ.” என்றதும், இதற்கு மேல் இங்கிருந்தால் எதாவது பேசி விடப் போகிறோமோ என்ற அச்சத்தில், சட்டென்று சம்யுக்தா அங்கிருந்து எழுந்து உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவள் அப்படி எழுந்து சென்றது, சந்திராவுக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்தது.
“நாங்க அண்ணாகிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கலை அண்ணி. அவர் பொண்ணுக்கு விருப்பப்பட்டதைச் செய்யுறார். அதை நாங்க தடுக்க முடியாது. உங்களுக்கு எதாவது கேட்கனும்னா அண்ணனை கேட்டுக்கோங்க.” என சரளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சடகோப்பன் வந்துவிட…. சந்திராவும் எழுந்து கொண்டார்.
உறவில் இங்கே ஒரு திருமணம் அதற்காக ஆரியனும் சம்யுக்தாவும் ஊருக்கு வந்திருந்தனர்.
சந்திரா சென்றதும் சரளா சம்யுக்தாவுக்குக் குரல் கொடுக்க அவள் வெளியே வந்தாள்.
“என்னவாம் உங்க அண்ணிக்கு?” என சடகோப்பன் கேட்க…
“அவங்க சம்யுக்தாவுக்கு அண்ணன் என்ன செஞ்சாருன்னு தெரிஞ்சிட்டு போய், அவரோட சண்டை போடலாம்னு வந்தாங்க. நான் எவ்வளவு என்னன்னு எல்லாம் நாங்க கணக்கு போட்டு பார்க்கலைன்னு சொல்லிட்டேன்.” என்றார்.
அப்போது தான் சம்யுக்தாவுக்கே அவர் வந்ததன் காரணம் புரிந்தது.
“அத்தை, நீங்க அவங்க பேசினதை இவர்கிட்ட சொல்லாதீங்க. வீட்டுக்கே போய்ச் சண்டை பிடிப்பார்.” என்று சம்யுக்தா கேட்டுக்கொள்ள…
“ஆமாம் எதுக்கு அந்தப் பொம்பளை வாயில போய் நின்னுட்டு. நான் சொல்லலை.” என்றார் சரளா.
ஆரியன் நண்பர்களைப் பார்க்க வெளியே சென்றிருந்தவன் மதியம் தான் வந்தான்.