“சில ட்ரக்ஸ் இருக்கு, ட்ரூத் சீரம்னு சொல்லுவாங்க. அது நம்ம மூளையில இருக்க நரம்புகளை மந்தமாக்கும். நமக்கு இயற்கையா இருக்க முன்னெச்சரிக்கை ஃபீலிங்கை குறைக்கும். பொய் சொல்ல முடியாதுன்னு இல்லை. இப்படி நமக்கு ஒரு ட்ரக் குடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சு, கொஞ்சம் மெனக் கெட்டா சொல்லலாம். ஆனா இதைப் பத்தி தெரியாதவங்க அதிகம் உண்மைதான் சொல்லுவாங்க. ஏன்னா பொய் சொல்ல கொஞ்சம் யோசிக்கணும், ஆனா அந்த அளவு மூளை வேலை பண்ணாது, அதே நேரம் கேட்கறவங்களுக்கு பதில் சொல்லமலும் இருக்க முடியாது. “, கைலாஷ் விளக்க, சித்தார்த் முகம் அதிர்வை வெளிப்படையாகக் காட்டியது.
“ம்ம்… ட்ரிங்க்ஸ் யார் உங்களுக்கு குடுத்தா ?”, கைலாஷின் கேள்விக்கு ஒரு நிமிடம் யோசித்தவன்,
“கிஷோர்தான் கையில் இரண்டு க்ளாஸ் வெச்சிருந்தான். ஒன்னை எனக்கு கொடுத்து சீயர்ஸ் சொல்லிட்டு, ரூம்ல காஷ் இருக்கு, வாங்க போலாம்னு கூட்டிட்டு போனான்.”, என்ற சித்தார்த்,
“இந்த மாதிரி ட்ரக் எல்லாம் ஈசியா கிடைக்குமா கைலாஷ் ?”, என்று சந்தேகமாகக் கேட்டான்.
“ஈசி இல்லை ஆனா கஷ்டமும் இல்லை. சில டௌனெர்ஸ் (downers) ஃபார்மசில கிடைக்கும். டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் வேணும். மொத்ததுல விஷயம் தெரிஞ்சவங்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை.”, விளக்கிய கைலாஷ்,
“அவனை எப்படி கான்டாக்ட் பண்ணுவீங்க ?டீடெய்ல்ஸ் வேணும். திரும்ப உங்களை கூப்பிட்டா, எனக்கு தெரியணும். அவனோட போட்டோ இல்லை அந்த பார்ட்டில இருந்த க்ளிப்பிங் வேணும், அந்த ரிசார்ட் டீடெய்ல், பார்ட்டி ஹால், டைம்னு, எல்லாமே எழுதுங்க. “, ஸ்ரீ ஏன் கடத்தப்பட்டாள் என்று ஒரு நூல் கிடைக்கவும், வேகத்தைக் கூட்டினான் கைலாஷ்.
சித்தார்த்தை அங்கேயே விட்டு, வெளியே வர, மாதவன் வாயிலில் இருந்தார். அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்ராஃபிக் காமெராக்களை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு மாதவன் கண்டுபிடித்திருந்த பாதி நம்பர் இருந்த வேனின் பதிவு அனுப்பப் பட்டது.
சோர்ந்து போய் அமர்ந்திருந்த பாண்டியன் ரோஜாவைப் பார்த்தவன், “நீங்க வீட்டுக்கு போங்க சர். உங்க போன் கூட அந்த டிவைஸ் இருக்கட்டும். மத்தபடி அதுல வர கால்ஸ் நீங்க பேசுங்க. கடத்தினவங்க கூப்பிட்டா, என்ன சொல்றாங்களோ கேட்டுக்கங்க. எதிர்த்து எதுவும் பேச வேணாம். ஸ்ரீ கிட்ட பேசணும்னு சொல்லுங்க. எல்லாமே அந்த டிவைஸ் ரெக்கார்ட் பண்ணும், எந்த நம்பர், எந்த டவர்லர்ந்து பேசறாங்கன்னு இன்னொரு பக்கம் கண்டுபிடிப்போம். “, கைலாஷ் சொல்லவும், இருவருமே மறுப்பாக தலையாட்டினர்.
“என் பொண்ணு பத்தி எதுவும் தெரியாம நாங்க எங்கேயும் போக மாட்டோம் சர். இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிருச்சு. இன்னும் ஒரு தகவலும் தெரியலை. சர்… எதாவது செய்ங்க சர். ப்ளீஸ்.”, கண்ணீர் மல்க பாண்டியன் கைகூப்பினார்.
“இனி நான் செய்ய வேண்டியதுக்கு நான் என் ஆஃபீஸ் போகணும். இங்க செய்ய வேண்டியதை முடிச்சாச்சு. நீங்க அங்க வந்தாலும் காத்துகிட்டுதான் இருக்கணும். அதை உங்க வீட்டிலேயே செய்யலாம். உங்க பொண்ணு வீடு வந்து சேர என்னால ஆனது எல்லாம் நான் செய்யறேன்.”, கைலாஷ் பொறுமையாக சொன்னாலும், பாண்டியன் மறுப்பாக தலையை அசைத்தார்.
“அப்பறம் உங்க இஷ்டம்..”, என்று தன் கைப்பேசியுடன் வெளியேறி, அவனை இங்கே அனுப்பி வைத்த அவனது சீனியர் ஆஃபீசர் பிரிட்டோவிற்கு அழைத்தான்.
“சர்… இது கொஞ்சம் சிக்கல் சர். கடத்தல் பணத்துக்காகவோ, ரிவெஞ்சோ இல்லை. கடத்தினவங்க கூப்பிடுவாங்கன்னு தோணலை.”, என்று சுருக்கமாக தான் சேகரித்த விவரங்களைக் கூறினான்.
“எனக்கு இன்னும் கொஞ்சம் ஆளுங்க தேவை. இன்னிக்கு நைட்க்குள்ள கடத்தினது யாரு, எங்க வெச்சிருக்காங்கன்னு தெரியணும். இல்லைன்னா அந்த பொண்ணை காப்பாத்தற சான்ஸ் கம்மியாகிட்டே போயிரும்.
கைலாஷை மேலும் சற்று கேள்விகள் கேட்ட பிரிட்டோ, “சரி கைலாஷ். நீங்க வேணுங்கற ஆளுங்களை ஸ்பெஷல் ட்யூட்டின்னு எடுத்துக்கோங்க. நான் நாளைக்கு ரெகுலரைஸ் பண்ணிக்கறேன். கேஸ் ஃபைல் பண்ண வேண்டியிருந்தா, எங்கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லுங்க.”, என்றதோடு முடித்துக் கொண்டார்.
மீண்டும் சித்தார்த்தின் அறைக்கு வந்தவனை ராகுல், “சர்… அங்கிள், ஆன்ட்டி வீட்டுக்கு போகட்டும். நான் மட்டும் உங்களோடவே இருக்கேன் சர். அப்பப்ப அவங்களுக்கு தகவல் சொல்லிக்கறேன்.”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம்… ஓகே. எனக்கு ப்ராப்ளம் இல்லை. நான் இப்ப கிளம்பறேன். நீ இவங்களை பத்திரமா வீட்டுல விட்டுட்டு எக்மோர் வந்திடு. எங்க ஆஃபீஸ் தெரியுமா?”, கைலாஷ் இடம் சொல்ல, ராகுல் கேட்டுக் கொண்டான்.
சித்தார்த் அதற்குள் கைலாஷ் கேட்டிருந்த தகவல்களை ஒரு தாளில் எழுதிக் கொண்டு வந்திருந்தான். அதை ஒரு பார்வை பார்த்தவன், தன் கைபேசியில் படம் பிடித்துக்கொண்டான்.
“ஓகே சித்தார்த். நான் கிளிப்பிங்க்ஸ் எடுத்த அப்பறம் நீங்க பார்த்து யாருன்னு அடையாளம் காட்ட வேண்டியிருக்கும். நான் கான்டாக்ட் பண்றேன், அதுக்குள்ள அவகிட்டருந்து போன் வந்தா, ரெகார்ட் பண்ணுங்க. எனக்கு உடனே தெரியணும். இப்ப நீங்களும் கிளம்பலாம்.”, என்று அனுமதி கொடுத்தான்.2
ஸ்ரீக்கு லேசாய் முழிப்பு தட்டியது. வியர்த்து கச கசவென்றிருந்தது. ‘கரன்ட் போயிருச்சா?’, என்ற யோசனையில் படுக்கையில் திரும்பப் போனவளுக்கு சட்டென்று நடந்தது நினைவுக்கு வந்தது. வண்டி ஓன்று தன்னை ஓரம் கட்டியதும், திடீரென்று இரு வலுவான கைகள் ஸ்கூட்டியிலிருந்து அவளை அந்த வண்டிக்குள் இழுத்ததும் ஞாபகம் வர, டக்கென்று எழுந்து அமரப் பார்த்தாள்.
அப்போதுதான் வலது கை பிணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கும்மிருட்டில் கண்கள் தெரியவில்லை. இடது கை கொண்டு தடவிப் பார்த்தாள் . கட்டில் தலை மாட்டில் இருந்த கம்பியோடு வலது கை ஒரு சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.. மணிக்கட்டில் கைவிலங்கு போன்று இருந்தது.
ஸ்ரீக்கு வியர்த்திருந்த உடம்பு சில்லிட்டது. மூளை ஸ்தம்பித்தது. என்ன ஏது என்று யோசிக்க முடியாத அளவு பயம் கவ்வியது.அப்போதுதான் அந்த அறையின் அமைதி அவளை சென்றடைந்தது. அறையில் ஒளியும் இல்லை, ஒலியும் இல்லை. குறைந்த பட்சம் ஒரு கடிகாரம் ஓடும் சத்தம், தொலைவில் ஓடும் வண்டி சத்தம் என்று எதுவும் கேட்கவில்லை.
இடது கை கொண்டு தன்னை தடவிப் பார்த்தாள், அலுவலகத்திற்கு அவள் போட்டுச் சென்ற சல்வார்தான், ஆனால் துப்பட்டாவை காணவில்லை. காலை ஒன்றோடு ஒன்று தேய்க்க, காலில் செருப்பும் இல்லை. கட்டில் பக்கம் இடது கையை தடவ, சிறிய ஒற்றை கட்டில் என்பது தெரிந்தது.
என்னதான் நம்ப முடியவில்லை என்றாலும், ஸ்ரீயால் ஒருவாரு அனுமானிக்க முடிந்தது. தான் கடத்தப்பட்டிருக்கிறோம். உடனே தன்னை மயங்கச் செய்திருக்கிறார்கள். முரட்டுக் கைகள் தன்னை இழுக்கவும், ஸ்ரீ திமிறினாள். ஆனால் அதற்குள் அவள் தலையில் ஒரு உறையை மாட்டி கழுத்து வரை இழுத்தனர். அதுதான் அவள் ஞாபகத்தில் கடைசியாக இருந்தது.
இடது கை இப்போது அவள் முகத்தை தடவியது. உறையைக் காணவில்லை. மயக்கம் தெளிய வேண்டி யாரும் கழட்டினார்களா தெரியவில்லை.
‘அம்மா வரலைன்னு பயப்படுவாங்களே… அப்பா எங்கேன்னு போய் என்னை தேடுவார் ? இவனுங்க எதுக்கு என்னை பிடிச்சு வெச்சிருக்காங்க. கடவுளே…’ , என்று அவளது எண்ணம் அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடவுளிடம் வந்து நின்றது.
எத்தனை நேரமாக இங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை. தொண்டை வறண்டு போயிருந்தது. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைத்தால் தேவலாம் என்று நினைத்தாள்.
தான் முழித்துக் கொண்டோம் என்று இப்போது சொல்ல வேண்டுமா? அப்போதுதான் யாரேனும் வருவார்களோ? ஆனால் அது நல்லதிற்கா என்றும் தெரியவில்லை.
பயத்தில் உடல் நடுங்க ஸ்ரீக்கு ஒரு முறை தூக்கிப்போட்டது. கண்ணில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பிக்க, அவளையும் மீறி விசும்பல் ஒன்று வெளிப்பட்டது. உடனே கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
ஸ்ரீயின் வீட்டில் அப்போதுதான் பாண்டியனும் வனரோஜாவும் வந்து இறங்கினர். அவர்கள் பின்னோடு ராகுல் பைக்கில் வந்து சேர்ந்தான்.
சோர்ந்து போயிருந்தனர் அனைவரும். வீட்டிற்குள் போனதும், ரோஜா பூஜை அறைக்கு ஓடினார். பாண்டியன் இரு கைபேசிகளையும் மேசை மேல் வைத்து, சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தார்.
போன் அடிக்காதா… கடத்தின கடங்காரன் பேசிவிட மாட்டானா என்று மனம் அடித்துக்கொண்டது பாண்டியனுக்கு.
அமைதியாக சென்று ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து அவருக்குக் கொடுத்தான் ராகுல்.
“ஆன்ட்டிக்கு குடுடா… அழுது அழுது அவதான் தண்ணி வத்தி போயிருக்கா.”, என்று மறுத்தவரை வற்புறுத்தி குடிக்க வைத்தான்.
அடுத்து பூஜை அறைக்கு செல்ல, ரோஜாவின் புலம்பல்கள் விசும்பலோடு வந்தது. ஒரு நிமிடம் கடவுளைக் கெஞ்சுவதும், அடுத்து நிந்திப்பதுமாக இருந்தவர்,
“ஐயோ பவானி அத்தை… நீதான் அல்ப ஆயுசல போன. போனவ எதுக்கு என் பொண்ணுக்கு அந்த வரத்தை குடுத்த ? உன்னாட்டமே, இப்ப அவளுக்கு அது ஆபத்தைத் தானே குடுத்திருக்கு. ஐயோ உன்னாட்டமே அவளும் அல்பாயுசுல போயிருவாளா? இதுக்குத்தானே நான் பயந்தேன். பாவி மக எல்லாம் எனக்கு தெரியும் தெரியும்னு தெனாவட்டா சுத்தினாளே… முருகா… எங்க இருக்காளோ… “, புலம்பியபடியே ராகுலையும் அவன் அமைதியாக நீட்டிய தண்ணீர் டம்பளரையும் பார்த்தவர்,
“டேய்… பசி தாங்க மாட்டாளேடா உன் ஜக்கி…. தனியா இப்படி மாட்டியிருக்கோம்னு தெரிஞ்சா பயந்துருப்பாளே…எந்த படுபாவியும் அவளை எதுவும் பண்ணாம இருக்கணுமே…. “, என்றவர் முகத்தில் அறைந்து கொண்டு அழ,
கண்ணில் பெருக்கெடுக்கும் கண்ணீரை துடைக்கக் கூட முயலாமல் மடங்கி அமர்ந்து அவரை அணைத்துக் கொண்ட ராகுல், “ஆன்ட்டி, ப்ளீஸ்… நெகடிவ்வா எதுவும் யோசிக்காதீங்க ஆன்ட்டி…. சீக்கிரம் நல்லபடியே வந்துடுவா நம்மகிட்ட. அதை மட்டும் யோசிங்க. சாமிகிட்ட வேண்டிக்கங்க. தண்ணிய குடிங்க ஆன்ட்டி. நீங்க இங்க பத்திரமா இருந்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை வராம உங்களை விட்டுட்டு போலீஸ் கிட்ட நான் எப்படி போறது?”
ராகுல் அதட்டியது வேலை செய்தது. “ஆமாம்டா…. இரு இரண்டு தோசை ஊத்தி தரேன்.. சீக்கிரம் சாப்பிட்டுட்டு நீ போடா ராஜா. உங்க அம்மாகிட்ட லேட்டாகும்னு சொல்லிட்டியா ? ஸ்ரீ பத்தி சொல்லாதடா. இன்னிக்கு இங்க தங்க போறங்கற மாதிரி எதாவது சொல்லி சமாளி.”
அத்தனை கவலையிலும் அவன் வயிற்றையும் , அவன் அன்னை பற்றியும் யோசிக்கும் தாயுள்ளம் பார்த்து இன்னும் கண்ணீர் பெருக்கெடுத்தது ராகுலுக்கு. சம்மதமாய் தலை அசைத்து, அவரை தோளணைத்து வெளியில் கூட்டி வந்தான்.