பாண்டியனுக்கு விஷயம் சொல்லப்பட, அவரால் அதை கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை. சத்தியமாக இதை அவர் எதிர்பார்க்கவில்லை. கடத்தல் என்பதெல்லாம் சினிமாக்களில், செய்திகளில் வரும் விஷயம். அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு நடப்பதில்லை.
கைலாஷ் சற்று பொறுமையாக, அவரது கைபேசி எண்ணை வாங்கி, அவன் எடுத்து வந்த ஒரு கருவியோடு இணைத்தான். பின் யாருக்கோ தொடர்பு கொண்டு, “ரெடி கர்ணன். நீங்க இந்த நம்பருக்கு வர கால்ஸ் ட்ரேஸ் பண்ணலாம்.”, என்று பாண்டியனின் தொலைபேசியைக் கூறினான்.
அடுத்த பத்து நிமிடங்களுக்குள் வனரோஜாவும், ராகுலும் வந்துவிட, அவர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது. வனரோஜாவால் நம்ப முடியாது கணவனை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவரது கைபேசியும் பாண்டியனுடையது போலவே ஒரு கருவியுடன் இணைக்கப்பட்டு, ட்ரேஸ் செய்ய ஏதுவாக்கப்பட்டது.
அவர்களை சற்று ஆசுவாசப்படுத்தி தன் விசாரணையை ஆரம்பித்தான் கைலாஷ். இராமலிங்கத்திடம் விசாரணை முடிந்திருந்ததால், அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள். எதுவாகினும் தொடர்பு கொள்ள பல முறை சொல்லிவிட்டு அரை மனசாக வீட்டில் மனைவி தனித்திருப்பாள் என்று கிளம்பியிருந்தார்.
ஸ்ரீயின் குடும்பமும், சித்தார்த்தும் மட்டும் இருந்தனர் அறையில்.
சில பொதுப் படையான கேள்விகளுக்குப் பின் ஸ்ரீ கடத்தப்பட எதாவது காரணம் தெரியுமா என்று கேட்க, அவளின் பெற்றோரால் எதுவும் சொல்லமுடியவில்லை.
“ஹ? அப்படின்னு யாரு சொன்னா? அந்த பிள்ளை உறவெல்லாம் கிடையாது. ஃப்ரெண்டுதான்.”, வனரோஜா சொல்லவும்,
கைலாஷ் சித்தார்த்தைப் பார்த்தான்.
“அன்னிக்கு பெங்களூரு மாட்ச்ல அஷ்வின் அத்தை பொண்ணுன்னுதானே சொன்னார் ? உறவு இல்லையா?”, சித்தார்த் ராகுலைக் கேட்டான்.
“அது… நவீன் எங்களுக்கு டீம் ப்ராக்டீஸ் பண்றதைப் பார்க்க பாஸ் அரேஞ்ச் பண்ணியிருந்தார். அப்ப உறவுன்னு சொன்னா ஈசின்னு கசின்னு சொல்லியிருந்தார். அதை சும்மா விளையாட்டா அத்தை பொண்ணுன்னு ஸ்ரீ சொல்லவும் அஷ்வின் அப்படித்தான்னு நினைச்சிட்டார்.”, ராகுல் விளக்கம் சொல்ல, பாண்டியன், வனரோஜா இருவரும் முழித்தனர்.
கைலாஷ் இன்னும் சற்று நோண்ட, அந்த போட்டியின் போதுதான் ஸ்ரீயின் அறிமுகம் சித்தார்த்திற்கு கிடைத்ததாகவும் தெரிந்துகொண்டான். நவீன் ஸ்ரீயின் நண்பனாக கதையும் ரோஜா மூலம் வெளிவந்தது.
“சர்…அதெல்லாம் இருக்கட்டும் சர். என் பொண்ணு இப்ப எங்கிருக்கா சர் ? அவளை தேட என்ன வழி ?”, பாண்டியன் படபடத்தார்.
“அந்த வண்டியை ட்ரேஸ் பண்ண வேலை நடந்துகிட்டு இருக்கு பாண்டியன் சர். பணத்துக்காக கிட்னாப்னா, உங்களுக்கு போன் வரணும். அதுக்கும் ரெடியா இருக்கோம். “, கைலாஷ் பொறுமையாக பதில் கூறினான்.
“மிஸ்டர் சித்தார்த், உங்களை டார்கெட் பண்ண இந்தக் கடத்தல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கா?”, கைலாஷ் நேரடியாகவே கேட்டான். என்னவோ ஸ்ரீயின் பெற்றோர், இராமலிங்கத்திற்கு இருந்த பதட்ட அளவு சித்தார்த்திடம் இல்லை என்பது போல பட்டது.
“அது… அதுதான் உங்ககிட்ட சொல்லணும் கைலாஷ்… கொஞ்சம் ஆஃப் தெ ரெகார்டா. நான் ஐ.பி.ல் ல பெட் கட்டுவேன். ஸ்ரீ எனக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தா, அது அத்தனையும் கரெக்டா இருந்துச்சு.”, சித்தார்த் சொல்லவும், கைலாஷ் புரியாமல் பார்க்க,
ரோஜா, ராகுல், பாண்டியன் திகைத்துப் போய் பார்த்தார்கள்.
மெல்ல அவளது விஷன் பற்றி தான் தெரிந்து கொண்டதும், அதை வைத்து ஸ்ரீக்கு வேலை கொடுத்ததும் கூறினான் சித்தார்த்.
“நான் ஸ்ரீயை எந்த வகையிலும் ஃபோர்ஸ் பண்ணலை. அவளுக்கு வர விஷனை சொல்ல ஒத்துக்கிட்டா அவ விரும்பின வேலை தரேன்னு சொன்னேன். அவ அதுக்கு சம்மதிச்சு வேலைக்கு சேர்ந்தா. அவளுக்கு எப்ப தெரியுதோ, அப்ப எங்கிட்ட வந்து சொல்லுவா. அவ சொன்ன எல்லா விஷனும் கரெக்டா பலிச்சுது”, என்று சித்தார்த் சொல்ல சொல்ல, கைலாஷ் இவன் எதோ கதைவிடுவதாக நினைத்தான்.
“இது உண்மையா? உங்க பொண்ணுக்கு நடக்கப் போறது முன்னாடியே தெரியுமா?”, கைலாஷின் கேள்விக்கு வனரோஜாவால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.
சட்டென்று ராகுலிடம் திரும்பி, “டேய்…. இப்படித்தான் அவளுக்கு வேலை கிடைச்சுதுன்னு உனக்கு தெரியுமாடா ? எப்படிடா விட்ட ?”, என்று பாய்ந்தார்.
“இல்ல ஆன்ட்டி…. எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா அவளை சேர விட்டிருக்க மாட்டேன் ஆன்ட்டி. எங்கிட்ட இப்படின்னு அவ சொல்லவே இல்லை. ப்ராமிஸ்.”, என்று ரோஜாவின் கைபிடித்து சொன்னான் ராகுல்.
அவனுமே திகைப்பிலிருந்து மீளவில்லை. இப்படி ஒரு விஷயத்தை தன்னிடம் மறைத்திருப்பாள் ஸ்ரீ என்று அவனால் நம்பவே முடியவில்லை.
“என்ன டிப்ஸ் குடுத்தாங்க ஸ்ரீ? எத்தனை முறை பெட் கட்டி ஜெயிச்சீங்க ?”, கைலாஷ் அடுத்த சரியான கேள்வியை சித்தார்த்திடம் வைத்தான்.
அந்த பதிலில்தான் அவளது துல்லியமாண கணிப்புகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனான். அவன் ஐ.பி.எல் இறுதியின் முடிவுகளைப் பற்றி சொல்லும்போது,
“நம்மளோடதான் மாட்ச் பார்த்தா. ஒரு வார்த்தை இதை விஷனா பார்த்தேன்னு சொல்லவேயில்லை. ஆன்ட்டி வருத்தப்படுவாங்கன்னு அவங்ககிட்ட சொல்லலைன்னாலும் என் கிட்ட சொல்லாம இருந்ததே இல்லை அங்கிள்.”, ஆதங்கமாய் பாண்டியனைப் பார்த்தான் ராகுல்.
‘மகள் இன்னும் சின்ன குழந்தை, விளையாட்டுப் பிள்ளை’, என்று நினைத்தவருக்கு, இதெல்லாம் ஏற்றுக் கொள்ளும் படியாகவே இல்லை.
“சரி… நம்ப முடியலைன்னாலும், இது உண்மையாவே இருக்கட்டும். இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள உங்களுக்கு போன் எதுவும் வரலைன்னா, இது பணத்துக்காக நடந்தது இல்லை, வேற யாருக்கோ ஸ்ரீயோட இந்த பவர் பத்தி தெரிஞ்சு தூக்கியிருக்காங்கன்னு அர்த்தம்.”, கைலாஷ் தன் கருத்தை சொன்னான். யாரும் எதிர்க்கவில்லை, மறுக்கவும் இல்லை.
கடைகளில் இருந்த காமெராக்களைப் பார்க்க சென்றிருந்த செக்யூரிட்டி ஹெட் மாதவன் கைலாஷை அழைத்தார்.
“ம்ம். சொல்லுங்க மாதவன். எதுவும் தேருச்சா?”
“ஆமாம் சர். நான் என் ஐ.டி காமிச்சு கேட்டதும் இங்க ஒரு கடையில் பார்க்க விட்டாங்க. வண்டி நம்பர் பாதி தெரியுது சர், மிச்சம் சேறு அடிச்சு மறைச்சிருக்காங்க.”
“கண்டிப்பா அந்த வண்டின்னு தெரியுமா?”, கைலாஷ் கேட்கவும்,
“அதே மாடல், நேரமும் ஒத்து போகுது சார். அவங்க கிட்டு கேட்டு காப்பி பண்ணி எடுத்துட்டு வரேன் சர். “, மாதவன் சொல்லவும் கைலாஷ் கைபேசியை அணைத்தான்.
அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் சுருக்கமாக சொல்லிவிட்டு, மீண்டும் விசாரணையை தொடர,
சித்தார்த், “கைலாஷ்… உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். “, என்று கேட்க, இதற்காக காத்திருந்தவன், ‘ஹ்ம்ம்… ஒரு வழியா வாயை திறக்க தைரியம் வந்துச்சா…’ , என்ற நினைப்பில் அறையை விட்டு வெளியேற முனைந்தான்.
“என்ன… எங்களுக்குத் தெரியாம என்ன பேசணும்?”, அவசரமாக எழுந்தபடியே பாண்டியன் கேட்டார்.
“சர்… இது கான்ஃபிடென்ஷியல். ஒரு வேளை ஸ்ரீக்கும் இதுக்கும் தொடர்பு இருக்குமோன்னு ஒரு டவுட்லதான் சொல்லப்போறேன். தேவைப்பட்டா, கைலாஷ் உங்களுக்கு சொல்லட்டும், நான் தடை சொல்லமாட்டேன்.”, சித்தார்த் சற்று தன்மையாகவே எடுத்து சொன்னான்.
பாண்டியன் கைலாஷைப் பார்க்க, “ எல்லாருமே ஸ்ரீக்கு உதவி பண்ணத்தான் இருக்கோம். கவலைப் படாதீங்க. “, என்று சித்தார்த்துடன் வெளியேறினான்.
காஃப்ரென்ஸ் அறையில் இருவர் மட்டுமே இருக்க, சித்தார்த் பேசட்டும் என்று அமைதியாக பார்த்திருந்தான் கைலாஷ்.
கைலாஷ் முகத்தைப் பார்த்த சித்தார்திற்கு அதில் ஒன்றும் படிக்க முடியவில்லை. சீரான பார்வை, அந்த கருமையான விழிகளில் ஒரு பாவனையும் இல்லை. ஆனால் அந்தப் பார்வையினை மீறி பொய் சொல்ல தனி திறமை வேண்டும் போல. கத்தரித்த மீசையும், போலீஸ் க்ராப் முடியுமே என்னோடு மோதாதே என்று சொல்லியது. ஸ்ரீயின் பெற்றோரிடம் பேசும் போது சற்று இளகினார் போன்றிருந்து மாயையோ என்னும்படி இப்போது இறுகியிருந்தது.
“கைலாஷ்… ஐ.பி.எல் ஃபைனல்ஸ்ல நான் கட்டியிருந்த பெட்டுக்கான செட்டில்மென்ட் அன்னிக்கு ரிசார்ட்டுக்கு வந்துச்சு. எப்பவும் கொண்டு வந்து தருவான். அன்னிக்கு நான் எல்லாருக்கும் பார்ட்டி தரவும், அவனும் இருந்து ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டான்.”
“அவன்னா? பேரு ?”
“அது கிஷோர்ன்னு கூப்பிடுவோம். அதுதான் அவன் நிஜ பேரா தெரியாது. ஆனா செட்டில்மென்ட்டுக்கு எப்பவும் அவந்தான் வருவான். நாங்க பணம் கொடுக்க வேணும்னாலும் சரி, இல்லை அவங்க தரணும்னாலும்.”, சித்தார்த் விளக்க, “ம்ம்.. மேல சொல்லுங்க.”, என்று மட்டும் சொன்னான் கைலாஷ்.
“செட்டில்மென்ட் அமவுன்ட் இந்த முறை ஹெவி. அதனால தனி ரூமுக்கு போன்னோம். பணம் செட்டில் பண்ணிட்டு, அப்படியே ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டோம். அதுக்கப்பறம்தான் ….”, சித்தார்த் நிறுத்தவும், கைலாஷ் எதுவும் சொல்லாமல் நிதானமாக பார்த்திருந்தான்.
“எப்பவும் ரொம்ப பேச மாட்டான். அன்னிக்கு விஷ் பண்ணிட்டு எதோ ஜாலியா கேட்டான். என்னவோ என்னை மீறி அவங்கிட்ட பேசின மாதிரி ஒரு ஃபீல். அவன் கேள்வி கேட்க கேட்க, இவன் கிட்ட எதுக்கு சொல்றோம்னு தோணினாலும் சொன்ன மாதிரிதான் இருக்கு. ஸ்ரீ பத்தியும் பேசினேன்னுதான் நினைக்கறேன். எனக்கு சரியா தெரியலை. அன்னிக்கு ரொம்ப ஜாஸ்தியாகிட்ட மாதிரி ஒரு மப்பு. மறு நாள் ஹாங் ஓவரும் இருந்துச்சு. அவனால இது நடந்திருக்குமோன்னு ஒரு டவுட் சர்.”, ஒரு வழியாக தன் சந்தேகத்தை வெளியிட்டான் சித்தார்த்.
“ஹ்ம்ம்… கிஷோர் உங்க பெஸ்ட் ஃப்ரெண்டு மாதிரி இருந்துச்சா ? அவங்கிட்ட பேசும் போது நிறைய சிரிச்சா மாதிரி இருந்துச்சா சித்தார்த் ?”, கைலாஷ் கேட்கவும்,