அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 13

மறுநாள் மதியத்திற்கு மேல் கிளம்பி ஆரியனின் குடும்பம் மொத்தமும் மதுரைக்கு வந்துவிட்டனர். ஆரியன் தனது மாமா வீட்டிற்கு வெகு அருகில் இல்லாமல், ஆனால் அதே சமயம் கொஞ்சம் பக்கத்திலேயே வேறு வீடு பார்த்திருந்தான். மறுநாள் அந்த வீட்டில் சென்று பால் காய்ச்சுவதாக இருந்தது.

ஆரியன் அவினாஷ் மட்டும் தானே இத்தனை நாள் இருந்தனர். அதனால் அவ்வளவு சாமான்கள் இல்லை. ஆரியனும் அவினாஷுமே எல்லாவற்றையும் கட்டி வைத்தனர்.

இந்துஜா புது வீட்டில் பால் காய்ச்ச தேவையானது எல்லாம் தான் எடுத்து வந்து விடுவதாகச் சொல்லி இருக்க…. இரவு உண்டுவிட்டு நேரமே படுத்துக் கொண்டனர்.

கட்டிலை கழட்டி வைத்து விட்டதால்… சம்யுக்தாவும் ஆரியனும் அருகருகே தரையில் படுக்கும்படி ஆனது. திருமணமாகி இத்தனை நாட்களில் இன்று தான் கணவனின் அருகில் படுக்கிறாள். அவளுக்குக் குதுகுலமாக இருக்க… பக்கத்தில் பார்த்தால் ஆரியன் கண் மூடி படுத்திருந்தான்.

என்னங்க தூங்கிடீங்களா?” என மெதுவாகக் கேட்டுப்பார்க்க…

தூங்கப் போறேன்.” என்றான்.

எனக்குத் தூக்கமே வரலை. நாம பேசிட்டு இருக்கலாமா?”

இவ்வளவு நேரம் வேலைப் பார்த்தது நான்னு. நாளைக்கும் இந்தச் சாமான்களை அங்க கொண்டு போய்த் திரும்ப எல்லாத்தையும் மாட்டணும். காலையில வேற சீக்கிரம் எழுந்துக்கணும். இன்னைக்குத் தூங்கு நாளைக்குப் பேசலாம்.” என்றவன், திரும்பி படுத்து உறங்கிப் போனான்.

கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தா என்னவாம். இதே வேலைப் பார்க்க சொல்லு நைட் எல்லாம் முழிச்சு வேலை பார்ப்பார். இதுல லவ் பண்ணலாம்னு வேற சொன்னாங்க. லவ் பண்ற ஆளைப் பாரு.” என சம்யுக்தா மனதிற்குள் புலம்பியபடி படுத்திருந்தாள். எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியாது.

விடியற்காலை அலாரம் அடித்ததும், ஆரியன் எழுந்து கொண்டவன் சம்யுக்தாவை எழுப்ப… அவளுக்குக் கண்ணே திறக்க முடியவில்லை.

ஆரியன் குளித்து விட்டு வந்து பார்க்கும் போதும் அவள் உறங்கிக் கொண்டே இருக்க… பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பை எடுத்து, அதை அப்படியே அவள் முகத்தில் ஊற்ற…. சம்யுக்தா பதறிப் போய் எழுந்து உட்கார்ந்தாள்.

உனக்கு முகம் கழுவுற வேலை மிச்சம். போய்க் குளிச்சிட்டு வா.” என்றவனை என்ன செய்யலாம் என்பது போலப் பார்த்தாள்.

நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, முகத்தில் தண்ணீர் ஊற்றினால் எப்படி இருக்கும். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் எதாவது செய்ய வேண்டும் என அப்படியொரு கோபம். சுற்றும் முற்றும் பார்த்தவள், குனிந்து நின்று கொண்டிருந்தவனின் இடையில் கட்டி இருந்த துண்டை பிடித்து இழுக்க…

எனக்கு ஒன்னும் இல்லை. நானே அவுத்து தரட்டுமா?” என்றான்.

தலையில் அடித்துக் கொண்டவள், எழுந்து குளிக்கச் சென்றாள். அதன் பிறகு கிளம்பிச் செல்லத்தான் நேரம் இருந்தது.

இந்துஜா வீட்டை சுத்தம் செய்து பால் காய்ச்ச தேவையானது எல்லாம் முன் தினமே கொண்டு வந்து வைத்திருந்தார். நல்ல நேரத்தில் பால் காய்ச்சி பூஜை செய்து முடித்ததும், காலை உணவை வெளியே இருந்து வரவழைத்து உண்டனர்.

சக்ரவர்த்தி மகன் மருமகளுக்குத் தனிக் குடித்தனத்திற்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் கொண்டு வந்து இறக்க… ஆரியனும் அவினாஷும் சென்று பழைய வீட்டில் இருந்த சாமான்களைக் கொண்டு வந்து அதை ஒரு அறையில் அடுக்கி வைத்தனர்.

நான் உன்னை விலைக்கு வாங்கத்தான் வீடு பார்க்க சொன்னேன். சீக்கிரம் சொந்தமா வீடு வாங்கப் பாரு. நான் பாதிப் பணம் கொடுக்கிறேன்.” என சடகோப்பன் மகனிடம் சொல்ல…

சரிப்பா, இப்போ அவசரமா பார்த்தா… நல்லா பார்த்து வாங்க முடியாது. நான் சீக்கிரமே பார்க்கிறேன்.” என்றான்.

சரளாவும் இந்துஜாவுமே சேர்ந்து மதிய விருந்து சமைத்தனர். ஜெயகுமாரின் குடும்பமும் வாணியின் குடும்பமும் மதியம் வந்து உண்டுவிட்டு சென்றனர். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு தான். ஹாலோடு சேர்த்தே உணவு அருந்தும் அறையும் அதற்கு அடுத்து பால்கனியும் இருந்ததால்… ஹால் பெரிதாகத் தெரிந்தது.

எல்லோரும் மதியம் உண்டு முடித்து ஆளுக்கொரு பக்கம் படுத்து உறங்கினர். சம்யுக்தா பட்டுப் புடவையிலேயே இருக்க… அவளை வேறு புடவை உடுத்தச் செய்து, இந்துஜா மகளுக்குத் தலை வாரி, பூ வைத்து விட்டவர், அவளைப் பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார்.

மாலை சக்ரவர்த்தியும் இந்துஜாவும் கிளம்ப… அப்போதே சடகோப்பனும் சரளாவும் கிளம்பினர். உடன் அவினாஷும்.

என்ன எல்லோரும் போறீங்க.” என சம்யுக்தா கலவரமாக.

சீட்டு விளையாட ஆள் இல்லைன்னு அவளுக்குக் கவலை.” என ஆரியன் கேலி செய்ய… அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.

நாங்க போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு வரோம்.” என்றார் சரளா.

நீ ஏன் டா போற?” என சம்யுக்தா அவினாஷிடம் கேட்க…

நான் ரெண்டு நாள் ஊர்ல இருந்திட்டு, அப்புறம் சென்னை போயிடுவேன்.” என்றான்.

நீங்க பஸ்ல எல்லாம் அலைய வேண்டாம், கார் எடுத்திட்டு போங்க. அவினாஷ், நீ சென்னைக்குப் போகும்போது காரை இங்க வந்து விட்டுட்டுப் போ.” என்ற ஆரியன் அறைக்குள் செல்ல… உடன் சென்ற சம்யுக்தா, “அவங்களை இருக்கச் சொல்லுங்க.” எனக் கேட்க,

அவங்க நான் சொன்னாலும் இருக்க மாட்டாங்க.” என்றான்.

நீங்களா எப்படிச் சொல்றீங்க?” என்றதும், அவளைப் பார்த்தவன், “உனக்குப் புரியாது விடு.” என்றான்.

அப்போ நான் அவங்களோட போகட்டுமா? எனக்கு லீவ் தானே.” என்றாள்.

இதைப் போய் வெளிய சொல்லி வைக்காத டி. என்னைத் தான் கேவலமா பார்ப்பாங்க.” என்றவன், “உனக்கு என்ன பொழுது போகணும் அவ்வளவு தானே…. நான் பார்த்துக்கிறேன் வா.” என வெளியே அழைத்துச் சென்றான்.

ஆரியனின் பெற்றோர் கிளம்பியதும், இந்துஜா மகளிடம், “மாவு இருக்கு, தேவையான காய்கறி மளிகை சாமான் எல்லாம் இருக்கு. நைட்டுக்கு உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு இருக்கு. நீ நாளைக்கு சமைச்சா போதும்.” எனச் சொல்லிவிட்டு கிளம்ப…

அம்மா நீங்களாவது எங்களோட இருக்கலாம் இல்லம்மா…” என்றாள். 

கல்யாணம் ஆகி இத்தனை நாள் எங்களோட தான இருந்த…. அதுதான் மாப்பிள்ளை இருக்காரே, அப்புறம் என்ன உனக்கு?” எனச் சொல்லிவிட்டு இந்துஜா கணவருடன் சென்று விட்டார்.

அவர்கள் எல்லாம் சென்றதும் வீடே அமைதியாக இருக்க… சம்யுக்தாவுக்குப் பிடிக்கவே இல்லை. ஆரியன் வரண்டாவில் இருந்த கிரில் கதவை பூட்டிவிட்டு, உள்ளே வந்து மரக்கதவையும் சாற்றித் தாழிட்டான்.

இவன் லேப்டாப் எடுத்து வச்சிட்டு உட்கார்ந்துப்பான். நான் என்ன பண்றது?” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் உட்கார்ந்து இருந்தாள்.

ஆரியன் இன்னும் எடுத்து வைக்க வேண்டிய சாமான்கள் சிலது இருக்க.. அதையெல்லாம் எடுத்து வைக்க… சம்யுக்தாவுக்கு வேலை ஒன்றும் இல்லை. அவள் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். எட்டு மணி ஆனதும், “சாப்பிடலாமா?” என்று கணவன் கேட்க… சம்யுக்தா எல்லாவற்றையும் சூடு செய்து கொண்டு வந்து உணவு மேஜையில் வைக்க…. டிவி பார்த்தபடி உண்டான்.

உண்டு முடித்து விட்டு ஹாலில் சென்று தரையில் கால் நீட்டி உட்கார்ந்தவன், சிறிது நேரம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவன் சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிக்க மாட்டான்.

காலையில் முகத்தில் தண்ணீர் ஊற்றிய கடுப்பு… இப்போது எல்லோரும் விட்டு சென்ற கவலை…. அதோட ஆரியன் அவர்களை இருங்கள் என்று சொல்லாத கோபம் எல்லாம் சேர்ந்து, கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், செம்பில் தண்ணீரை எடுத்து வந்தவள், அதை மொத்தமாக அவன் தலையில் கவிழ்த்து விட்டாள்.

என்னைக் காலையில இருந்து டென்ஷன் பண்ணீங்க இல்ல… இந்தாங்க வாங்கிக்கோங்க.” எனச் சொல்லிக் கொண்டே ஊற்றி விட்டாள்.

ஆரியன் சுத்தமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அவன் கோபப்படவும் இல்லை.