“உங்களுக்குக் கீழ வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.”
“அப்படியா அப்போ மாமாகிட்ட சொல்லி மார்கட்டுல மூட்டை தூக்கிற வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.” என அவன் மேலும் அவளைச் சீண்ட…
“என்ன திமிரா? உங்களுக்குப் போட்டியா நானும் அவினாஷும் ஒரு கம்பனி ஆரம்பிப்போம்.”
“என்ன சோப்பு கம்பெனியா?” என்றான் பட்டென்று.
இப்படி எது சொன்னாலும் மூக்கை உடைப்பது போலப் பேசி வைத்தால் அவளும் என்ன செய்வாள்?
“நான் இப்போ எதுவும் சொல்றதா இல்லை… நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.”
“எதைப் பார்த்து தெரிஞ்சிக்க… நீ தெரு தெருவா சோப்பு விற்கிறதையா?”
அதற்கு மேல் முடியாமல் சம்யுக்தா பொங்கி விட்டாள். “யோவ், என்னயா? நானும் பார்க்கிறேன் சும்மா எது சொன்னாலும் லந்து பண்ணிட்டு இருக்க…. இவரு மட்டும் தான் பெரிய இவரு…. நாங்க எல்லாம் இல்லை.”
“அவினாஷை வேற கம்பெனிக்கு வேலைக்குப் போகச் சொன்னீங்களாமே, அவன் போக மாட்டான். அவன் மட்டும் இல்ல… நானும் உங்க கம்பெனியில தான் வேலை பார்ப்பேன். எதாவது சொன்னீங்க அவ்வளவு தான்.” என சம்யுக்தா மிரட்ட….
ஆரியன் சிரிப்பான் என்று நினைத்தால் அவளைப் பார்த்து முறைத்தான்.
“எனக்கும் உனக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் தெரியுமா? இப்படித்தான் பேசுவியா… அத்தை மாமா இப்படித்தான் பேச சொல்லிக் கொடுத்தாங்களா? இதுக்குதான் சின்னப் பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்றது.” என்றதும்,
“இப்போ தான் சொன்னேன் சின்னப் பொண்ணுன்னு. அதே மாதிரி யோசிக்காம பேசுற பார்த்தியா. எதுவும் தெரியாம எதாவது உளறி வச்சேன்னு வச்சுக்கோ அடி வாங்குவ.”
“அப்பா அப்பான்னு உருகிறியே… உங்க அப்பா முதல்ல அவங்களுக்குதான் அப்பா. நீ உன் அப்பாவை யாருக்கும் விட்டுக் கொடுத்திடுவியா என்ன? அவங்க இடத்தில இருந்து யோசிச்சு பாரு.”
“நான் எங்க அப்பாவுக்கு முதல்ல பிறந்திருந்தா…. நான் எங்க அப்பாவை யாருக்கும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன் தான், அதுக்கு இப்போ என்ன?”
“நீயே ஒத்துக்கிற, எனக்கு அவங்களுக்கு நடந்தது அநியாயம்னு தோனுச்சு. அதனால நான் அவங்க பக்கம் நிற்க நினைச்சேன். அதுல என்ன தப்பு?”
“அதோட ஸ்ரீநிதியை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லலை. வீட்ல சொன்னாங்க, யோசிச்சேன் அவ்வளவு தான்.”
“ஸ்ரீநிதி அக்காவை உங்களுக்கு முன்னாடியே பிடிச்சது எனக்குத் தெரியும். ஆனா என்னை முதல் தடவை பார்க்கும் போதே திட்டினீங்க.”
“உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தெரியாம, யோசிக்காம பேசிட்டேன் மா… அதை விடேன் ப்ளீஸ்.” என ஆரியன் இறங்கி வந்தாலும், சம்யுக்தா முறைத்தபடி இருக்க…
“நான் படிக்கிறேன் படிக்கிறேன்னு குடும்பத்துல இருந்து விலகி இருந்துட்டேன். எனக்கு அப்போ நடந்தது எதுவும் தெரியாது. முதல்ல உன்னைப் பார்த்ததும் கோபம் தான் வந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்ச பிறகு உங்க பக்கம் தானே நின்னேன். அது உனக்குப் புரியலையா?”
“யாருக்கு தெரியும்? உங்க மாமாவுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டிங்களோ என்னவோ… ஒருவேளை முன்னாடியே ஸ்ரீநிதி அக்கா சரின்னு சொல்லி இருந்தா, நீங்க அவங்களைத் தான் கல்யாணம் பண்ணி இருப்பீங்க.”
“ஷப்பா முடியலை டி…. உனக்குத் தெரியுமா, ஸ்ரீநிதி கல்யாணம் நின்னதும், சந்திரா அத்தை எங்க வீட்ல வந்து எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பேசினாங்க தான். அப்படி நான் ஸ்ரீநிதியை லவ் பண்ணி இருந்தா… அவளைத் தானே கல்யாணம் பண்ணி இருப்பேன். உன்னை ஏன் பண்ணப் போறேன்.”
அவன் சொன்னதைக் கேட்டதும், சம்யுக்தா அதிர்ந்தே விட்டாள். அவளுக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரியும்.
“வேற எப்படிச் சொல்லணும்?” என்றவன் எதிரில் இருந்தவளின் கைபிடித்து எழுப்பி, அவளை மெதுவாக அனைத்து இதழில் முத்தமிட்டான்.
வெறும் முத்தத்தோடு மட்டும் நிறுத்த முடியாமல்… அன்று முதல் முறையாக உணர்ந்த அவளின் மென்மையை மேலும் உணர…. இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தவன், “எனக்குத் தெரியாதது, உன்கிட்ட தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கும் போலவே சம்யு.” எனக் கிறக்கமாகச் சொல்ல…
சம்யுக்தாவுக்குப் புரியவில்லை…. “என்ன?” என அவள் அவனிடமே கேட்க….
“ம்ம்… சொல்லி புரிய வைக்கலாமா இல்லைனா நேரா லைவ் டெமோ போகலாமா?” என ஆரியன் அவளிடமே கேட்க…
“புரியுற மாதிரியே பேச மாட்டீங்களா?” என அவள் பதிலுக்குக் கேட்க… அதற்குள் கீழே இருந்து இந்துஜா சம்யுக்தாவை அழைக்க… பிறகுதான் ஆரியனுக்கு அந்தப் பதினாறு நாளே நினைவு வந்தது.
“சரி நீ கீழப் போ, நான் உனக்கு இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன்.” என்றான்.
அவள் கீழே சென்றதும் மூச்சை இழுத்து விட்டவன், “இவகிட்ட கொஞ்ச நாளைக்குப் பேச்சு வார்த்தையே வச்சுகக் கூடாது. நம்மையே குழப்பி விட்டுடுறா.” என முடிவுக்கு வந்தவன், விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தான்.
தாத்தாவின் பதினாறாம் காரியத்துக்கும் ஆரியன் மட்டுமே சென்றான். மறுநாளே சந்திராவின் பிறந்த வீட்டினரை பொதுவான இடத்திற்கு வர சொல்லி… ஊர் ஆட்கள் முன்பு எழுதி வாங்கிக் கொண்டனர். அதே போலத் தனசேகரிடமும், இனி இது போலச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும், அதே போலச் சக்ரவர்த்தியின் குடும்ப விஷயங்களில் தலையிடவது இல்லை என்றும் எழுதி கையெழுத்து வாங்கி வர செய்தனர்.
ஆரியனுக்குத் தெரியும், தனசேகருக்கு அதிக நாள் பெயில் கிடைக்காமல் அவனால் தடுக்க முடியாது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த வேலையை முடித்துக் கொண்டான்.
சந்திரா அவர் குடும்பத்தினர் செய்ததை எல்லாம் மறந்து விட்டார். இப்போது எதோ ஆரியனால் மட்டுமே, அவர் குடும்பத்தினர் அவரை விட்டு விலகியது போல… அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பேசிக் கொண்டே இருந்தார்.
சக்ரவர்த்தியின் தந்தை மறைந்த முப்பதாம் நாள் எல்லோரும் அவர்களின் ஊரில் இருந்த சிவன் கோவிலுக்குச் சென்றனர். அதன் பிறகு தான் மற்ற கோவிலுக்கோ… விசேஷ வீடுகளுக்கோ சென்று வரலாம். அதனால் எல்லோரும் சென்றிருந்தனர்.
கோவிலுக்கு என்பதால் ஆரியன் சம்யுக்தாவையும் அழைத்துக் கொண்டு நேராகக் கோவிலுக்கே சென்றான்.
எல்லோரும் குடும்பமாகக் கோவிலில் தீபம் ஏற்றி வணங்க, அன்றுதான் ஸ்ரீநிதியும் இருவரையும் சேர்த்து பார்க்கிறாள். சம்யுக்தா சுடிதாரில் தான் இருந்தாள்.
சந்திரா தன் மனைவியை எதுவும் பேசி விடக்கூடாது என ஆரியன் சம்யுக்தாவை அவன் அருகிலேயே வைத்திருந்தான்.
அப்போதும் சந்திரா சம்யுக்தாவைப் பார்த்ததும், “கண்டவங்க எல்லாம் வந்திருக்கிறது தெரிஞ்சா, நான் வந்திருக்க மாட்டேன்.” என, ஆரியனுக்குக் கோபம் வந்து விட்டது.
“அத்தை, இது கோவில் இங்க யாரு வேணா வரலாம். கோவில்ல வச்சு எதுவும் பேச வேண்டாம்னு பார்க்கிறேன். என் பொண்டாட்டி எங்க வரணும் வரக் கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்க. இது ஒன்னும் உங்க வீடு இல்லை.” என்றான் பட்டென்று.
“அவங்க சொன்னா சொல்லிட்டு போறாங்க, நீங்க பேசாதீங்க.” என சம்யுக்தா கணவனிடம் கிசுகிசுக்க…
“அப்படி எல்லாம் விட முடியாது.” என்றவன், “எங்களுக்கு மட்டும் என்ன நீங்க இருக்கிற இடத்துக்கு வர இஷ்ட்டமா… நாங்க ஒன்னும் உங்க வீட்டுக்கு வரலை கோவிலுக்குத் தான் வந்தோம். வந்த வேலையைப் பாருங்க.” என்றான்.
சந்திரா மேலும் எதோ சொல்லி இருப்பார்… அதற்குள் அர்ச்சகர் பூஜைக்கு வர… பூஜை முடிந்ததும் சம்யுக்தா கணவனை அழைத்துக் கொண்டு முதல் ஆளாக வெளியே வந்து விட்டாள்.
சடகோப்பன், சரளா, அவினாஷ் என எல்லோரும் அவர்கள் பின்னே வர… காரில் ஏறி வீட்டிற்கும் வந்து விட்டனர்.
ஆரியன் ஹாலில் உட்கார்ந்து இருக்க… சம்யுக்தா அவனிடம் மடிக்கணினியைக் கொண்டு வந்து கொடுத்தவள், “இந்தாங்க எதாவது வேலை இருந்தா பாருங்க. நீங்க அப்போ தான் பேச மாட்டீங்க.” என, ஆரியன் சம்யுக்தாவை முறைக்க… மற்ற எல்லோரும் சிரித்தனர்.
“நீ சொல்றது ரொம்பச் சரி.” என மாமனார் மருமகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க….
“அவங்க வேற எதுவும் பேசி நான் பேசினா கேளு, அவங்க என் பொண்டாட்டியை இல்ல பேசினாங்க. அப்பவும் நான் பார்த்திட்டு இருக்கணுமா?”
“விடு ஆரியன், நம்ம பக்கம் என்ன செய்யணுமோ அதை உங்க மாமவுக்குச் செஞ்சாச்சு. இனி நாம அவங்க வீட்டு விஷயத்துல தலையிட வேண்டாம்.” என சடகோப்பனும்,
“ஆமாம் டா… ஏற்கனவே அவங்க வீட்டு ஆளுங்ககிட்ட எழுதி வாங்கின கோபத்துல இருக்காங்க. அவங்களோட எதுக்கு மல்லுக்கு நின்னுகிட்டு.” என சரளாவும் சொல்ல…
“யப்பா என்னை ஆள விடுங்க…. இனி நான் அவங்களைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை…. முப்பது நாள் கழிச்சு எங்களைத் தனிக்குடித்தனம் வைக்க வரேன்னு சொன்னீங்க. அதுக்கு எப்போ வரீங்க சொல்லுங்க.” என்றான் ஆரியன்.
“நாளைக்கு நல்ல நாளா இருக்கு டா… நாளைக்கே மதுரைக்குப் போகலாம்.” என்றார் சரளா.
“அத்தை எனக்குப் பரிட்சை முடிஞ்சு காலேஜ் லீவு தான். எனக்கு லீவ் முடியுற வரை நீங்க எங்களோடவே இருங்க.” என்ற சம்யுக்தா, “நீங்களும் இருங்க மாமா.” என மாமனாரிடமும் சொல்ல…
“நாம ஒன்னு பிளான் பண்ணா… இவ ஒன்னு பிளான் பண்றா பாரு.” என நினைத்த ஆரியன் சம்யுக்தாவை ஒரு மாதிரி பார்த்து வைக்க….
“என்ன?” என்றாள் சம்யுக்தா அவனிடம்.
“ஒன்னும் இல்லை.” என்றவன், “ஏன் உன் பிரண்டை மட்டும் விட்ட… அவனையும் இருக்கச் சொல்லு.” என்றதும், சம்யுக்தா சந்தோஷமாகச் சரி என்றாள்.
சம்யுக்தாவுக்குத்தான் அவனின் பார்வை புரியவில்லை. ஆனால் அவனின் பெற்றோருக்கு புரிந்தது.