திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த சக்ரவர்த்தியின் தந்தை காலமானார். இரவு தெரிந்தவுடன் சரளாவும் சடகோப்பனும் உடனே அங்கே சென்று விட… மறுநாள் காலை எழுந்ததும், ஆரியனும் அவினாஷும் சம்யுக்தா கொடுத்த டீயை குடித்து விட்டு கிளம்பி சென்றனர்.
சம்யுக்தாவை அழைத்துச் சென்றால்… சந்திரா கண்டிப்பாகப் பிரச்சனை செய்வார் என்று தெரியும், அதனால் தான் சடகோப்பன் அவளை மருத்துவமனையில் இருக்கும் போதே சென்று பார்த்துவிட்டு வர செய்தார். அதனால் இப்போது அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றனர்.
ஆரியன் ஸ்ரீகாந்தோடு சேர்ந்து தேவையானதை பார்த்துக் கொண்டவன், வெளியே பந்தலில் சேரில் உட்கார்ந்து அங்கு வந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.
சந்திரா அப்போது தான் மாடியில் இருந்து வந்தவர், அவனைப் பார்த்ததும், ஸ்ரீகாந்த சொன்னது போலவே சட்டமாக வீட்டில் வந்து உட்கார்ந்து இருக்கிறானே என நினைத்தபடி உள்ளே சென்றார்.
ஹாலில் மற்றவர்களோடு சென்று உட்காரந்ததும், “சில பேர் கல்யாணம் பண்ணி வந்த ராசி…. ரொம்பவே நல்லா இருக்கு.” என இடக்காகப் பேச…
அவர் சம்யுக்தாவைத் தான் சொல்கிறார் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரியாமல் இல்லை.
“அண்ணி எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க. அப்பா ரொம்ப நாள் முடியாம தானே இருந்தார்.” என்றார் சரளா.
“ஆமாம் இப்போ மாமனார் மட்டும் இருந்திட்டா… மருமகள் நீ கவனிச்சிட்டு தான் மறுவேலை பார்க்கப் போற… இருக்கும் போது ஒன்னும் பார்க்கலை. அவரும் படுக்கையில கிடந்து எவ்வளவு கஷ்ட்டப்பட்டார். நல்லா வாழ்ந்த மனுஷன் தான். இனி மேலும் இருந்தா கஷ்ட்டம் தான் பட்டிருப்பார். அதனால நீ இதுக்கு யாரையும் காரணம் எல்லாம் சொல்ல வேண்டாம்.” என்றார் ஞானம் மருமகளைப் பார்த்து.
“உங்களுக்கு அந்த மருமகளும் அவ பெத்த பெண்ணும் தான் முக்கியம்னா… நீங்க அங்க போய் இருந்திருக்க வேண்டியது தான…” என சந்திரா குத்தலாகப் பேச…
“நான் என் புருஷன் வீட்டில இருந்தேன். இனியும் அங்கதான் இருப்பேன்.” என்றார் ஞானம் பட்டென்று.
கடைசி நேரத்தில் தான் சந்திராவின் வீட்டில் இருந்து வந்தனர். அவரது அம்மா, முத்துக்குமார் மற்றும் அவனுடைய குடும்பம் என வந்திருந்தனர். தனசேகரின் குடும்பம் மட்டும் வரவில்லை.
அன்று எல்லாம் முடிந்து, மறுநாள் காரியம் வைத்திருக்க… சக்ரவர்த்தி சந்திராவின் குடும்பத்தை அதற்கு அழைக்கவே இல்லை. ஆனால் முத்துக்குமாரும் அவன் அம்மாவும் முறை செய்ய வர, உடன் தனசேகரின் மனைவியும் வந்திருந்தார்.
“கேத வீட்டுக்கு வந்தவங்களை ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு தான் பேசாம இருந்தேன். ஆனா இந்த முறை செய்யுற வேலை எல்லாம் வேண்டாம். இனிமே உங்க குடும்பத்தோட சங்காத்தமே எங்க மாமாவுக்கு வேண்டாம். நீங்க கிளம்பிட்டே இருங்க.” என்றான் ஆரியன்.
“அதை எப்படி நீ சொல்லுவா? என் பிறந்த வீட்டு ஆளுங்க, எனக்கு முறை செய்யக் கூடாதுன்னு சொல்ல நீ யாரு?” என சந்திரா வரிந்து கட்டிக் கொண்டு வர…
“எங்க மாமாவை கொல்லப் பார்த்தவங்களோட குடும்பத்துல இருந்து யாரும் இங்க வரக்கூடாது. உங்களுக்கு உங்க குடும்பம் வேணுமா… அப்போ நீங்க அவங்களோட போயிட்டே இருங்க.” என ஆரியனும் திருப்பிக் கொடுக்க…
“இவ்வளவு நடந்த பிறகும் பிள்ளைங்களுக்காகத் தான் நான் உன்னை இங்க விட்டு வச்சிருக்கேன். எனக்கு உன் குடும்பத்தோட எந்த உறவும் வேண்டாம். ஒன்னு அவங்களைக் கிளம்பச் சொல்லு… இல்லைனா நீயும் அவங்களோட போ.” என்றார் சக்ரவர்த்தியும் கோபமாக.
“ஐயையோ இவங்க அக்காவை கூட்டிட்டு போனா… நான் இல்ல தெருவுல நிற்கணும்.” என நினைத்த முத்துக்குமாரின் மனைவி, “வாங்க, அவங்க தான் சொல்றாங்க இல்ல… எதுக்கு இங்க நின்னுகிட்டு.” எனக் கணவனை அழைத்துச் செல்ல…
சந்திரா ஸ்ரீகாந்த்தை பார்த்து, “நீ என்ன டா அப்படியே நிற்கிற, எதாவது சொல்லு.” என,
“அம்மா போதும்மா… இனியும் எதுவும் இழுத்து வைக்காதீங்க. இதோட விட்டுடுங்க.” என்றான்.
அப்போது சந்திராவின் அம்மா, “நாங்க தனசேகரை பெயில்ல எடுக்கப் பார்க்கிறோம். ஆனா உங்க மருமகன் எடுக்க விட முடியாம குறுக்க நிற்கிறான். அதுக்கு மட்டும் தடையா இருக்க வேண்டாம்னு சொல்லுங்க. நாங்க என் பெண்ணோட எந்தத் தொடர்பும் வச்சுக்காம விலகிடுறோம்.” என அவர் ஆரியனை பார்த்தபடி சக்ரவர்த்தியிடம் சொல்லி முடிக்க.
“உங்க பையன் வெளிய வந்து திரும்பி அப்படிப் பண்ண மாட்டாருன்னு என்ன நிச்சயம்?” என ஆரியன் கேட்டான். அவன் அந்தக் காரணத்தைக் கோர்ட்டில் முன் வைத்து தான் தனசேகருக்குப் பெயில் கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.
“அதுக்கு நான் பொறுப்பு. என் புருஷன் இனிமே அப்படிப் பண்ண மாட்டார். நான் சொல்லிடேன், இனிமே அப்படி எதாவது பண்ணா… நானும் உங்க பிள்ளைங்களும் உங்க வீட்ல இருக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டேன்.” என்றார்.
“உங்களை எல்லாம் நம்ப முடியாதுங்க.” என்ற ஆரியன் அவன் தந்தையைக் குறிப்பாகப் பார்க்க…
“வேணா எழுதி கொடுக்கச் சொல்லிடலாம். பதினாறு நாள் காரியம் முடியட்டும் பிறகு பஞ்சாயத்துக் கூட்டி எழுதி கொடுங்க. உங்க குடும்பத்துல எல்லோரும் கையெழுத்து போடணும். அதோட இனி எங்க குடும்பத்தோட எந்தச் சம்பந்தமும் உங்களுக்கு இருக்கக் கூடாது.”
“இது நாங்க காரியத்துக்கு வாங்கினது கொடுக்காம திருப்பிக் கொண்டு போகக் கூடாது.” என எடுத்து வந்த உடைகளை மகளிடம் கொடுத்து விட்டு சந்திராவின் அம்மா சென்று விட… மற்றவர்களும் சென்று விட்டனர்.
சந்திராவைப் பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. அவர்கள் வந்த வேலை நடந்தால் போதும் என்று உறவை முறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
சந்திராவுக்கு அங்கிருந்த ஒருவரையும் பார்க்க முடியவில்லை. பிறந்த வீடு இருக்கிறது என்ற தைரியத்தில் தானே ஆடிக் கொண்டிருந்தார். அமைதியாக உள்ளே சென்று விட்டார்.
மூன்றாம் நாள் காரியம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், “பதினாராம் நாள் காரியம் முடியும் வரை, எதுவும் வேண்டாம்னு சம்யுக்தாகிட்ட சொல்லிடுங்க அண்ணி. ரெண்டு பேருக்கும் தாத்தா இல்லையா?” என சரளா இந்துஜாவிடம் சொல்லி இருக்க… அதை இந்துஜா மகளிடம் சொல்ல…
“ஐயோ இல்லைனா மட்டும் இங்க தினமும் ரொமான்ஸ் தான் நடக்குதா என்ன? இவ்வளவு நாள் காரணம் கிடைக்காம இருந்தார். இப்போ காரணம் வேற கிடைச்சிடுச்சு. இனிமே நிம்மதியா இருப்பார்.” என சம்யுக்தா நினைத்துக்கொள்ள… உண்மையில் ஆரியன் அப்படித்தான் இருந்தான்.
சம்யுக்தாவோடு அவள் வீட்டுக்கு வந்ததும், மாடி அறையை அவன் அறையாக மட்டும் உபயோகித்துக் கொண்டு, அலுவலகம் சென்று வருவதும், பிறகு இரவு உணவை மனைவியுடன் உண்பவன், மாடி அறையில் நள்ளிரவு வரை வேலைப் பார்த்துவிட்டு உறங்குவான்.
அவினாஷ் சென்னை சென்று விட்டான். மறுவாரத்தில் இருந்து சம்யுக்தாவும் கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள். அவளுக்கும் பரிட்சை நெருங்கிக் கொண்டு இருந்தது.
ஆரியன் வேலையில் உட்கார்ந்து விட்டால் அதிகம் பேச கூட மாட்டான். சம்யுக்தா உறங்கும் வரை பேசிக் கொண்டிருக்கலாம் என மாடிக்கு சென்றால்… மடிகணினியில் இருந்து தலை நிமிரவே மாட்டான். இவள் எது கேட்டாலும், உடனே பதில் வராது.
நாம சொன்னது கேட்டுச்சா இல்லையா என சம்யுக்தாவுக்கே சந்தேகம் வந்துவிடும். அப்போது பதில் சொல்லுவான். கேட்டு தான் இருக்கிறது என்று புரிந்ததும் கோபமாக வரும், அப்படியே அந்த லேப்டாப்பை எடுத்து கீழே போட்டு உடைத்து விடலாமா என்று கூட தோன்றும்.
அன்றும் அது போலக் கடுப்புடன் தான் நின்று கொண்டிருந்தாள். ஆரியன் வேலையின் நடுவே அவளை நிமிர்ந்து பார்த்திருந்தான்.
“உட்காரு ஏன் நின்னுட்டே இருக்க.” என்றவன், “இந்த வேலை அடுத்த வாரத்துக்குள்ள முடிச்சு கொடுக்கணும். அப்போ தான் அடுத்த ப்ரோஜக்ட் நம்ம கம்பெனிக்கே கொடுப்பாங்க. வீட்டுக்கு போனா வேலை செய்ய முடியாதுன்னு எல்லாம் ஆபீஸ்ல தான் இருக்காங்க. நான் உனக்காகத்தான் வீட்டுக்கே வரேன். இல்லைனா நானும் ஆபீஸ்ல தான் இருப்பேன்.” என்றான் அவளின் மனதை படித்ததைப் போல….
தனக்காகத் தான் வருகிறான் என்றதும் சம்யுக்தாவுக்கு உச்சி குளித்து விட்டது. வீட்டுக்காவது வருகிறானே என மனதை தேற்றிக் கொண்டவள், அவன் எதிரே உட்கார்ந்தாள்.
கணினியை மூடி எடுத்து வைத்தவன், “அப்புறம் சொல்லு காலேஜ் எப்படிப் போகுது?” என,
“காலேஜ் எங்கையும் போகாது. நான்தான் காலேஜ் போகணும்.” என அவள் இருந்த கடுப்பில் கடித்து வைக்க… அவன் அவள் தலையில் தட்டினான்.
“அதை விடு, இந்த வருஷம் பரிட்சையில தேறிடுவியா இல்லையா?”
“அதெல்லாம் ஃபரஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிடுவேன்.”
“அறுபது பெர்சென்ட் வச்சு எல்லாம் இந்தக் காலத்தில ஒன்னும் பண்ண முடியாது. என்பதுக்குக் குறையாம எடுக்கணும்.”
“நான் என்ன வெளியவா வேலைக்குப் போகப் போறேன். அப்படியே போனாலும், உங்க கம்பனி தான் இருக்கே… அதுக்கு இந்த மார்க் போதாது.”
“ம்ம் போதும் போதும், கூட்டி பெருக்கி சுத்தம் பண்ண போதும்.” என அவன் கூட்டி பெருக்குவதைப் பெரிய வேலை போலச் சொல்ல… சம்யுக்தா அவனைப் பார்த்து முறைத்து வைக்க…