“அப்படியா? ஆனா அத்தான் முன்னாடி ரொம்ப அமைதியா தான் இருக்கா.” என்றான் ஸ்ரீகாந்த்.
“அண்ணா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? நானும் அம்மா போலக் கல்யாணம் பண்ணிட்டு பிறகு பிடிக்காம வாழ்க் கூடாதுன்னு தான், எனக்குப் பிடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். ஆனா இது மாதிரி ஆகும்னு நினைக்கலை.” என ஸ்ரீநிதி கண்கலங்க…
“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.” என ஸ்ரீகாந்த தங்கையைத் தேற்றினான்.
அப்போது அவரின் அறையில் இருந்து வந்த சக்ரவர்த்தி, “வந்திட்டியா ஸ்ரீகாந்த், நீ வர்றவரை ஸ்ரீநிதியோட இருக்கணும்னு தான் இருந்தேன். நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.
“அப்பா அத்தை உங்களை அங்க வீட்டுக்கு வர சொன்னாங்க.” என்றதும், “சரி, நான் ஹாஸ்பிடல் போயிட்டு போயிக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.
சந்திரா எங்கோ வெளியே சென்றிருந்தவர், அப்போது தான் வீட்டுக்கு வந்தார்.
“ஏன் டா நீ எனக்குத்தான் பிறந்தியா? உனக்குக் கொஞ்சம் கூடச் சூடு, சொரணை கிடையாதா? அங்க போய்ச் சாப்பிட்டிட்டு வந்திருக்க… உனக்கு அறிவு இல்லை.” என வாய்க்கு வந்தபடி கேட்க…
“அம்மா, ஆரியன் யாரு நம்ம சரளா அத்தை பையன் இல்லையா? நான் எப்படிப் போகாம இருக்கிறது. அதுதான் போனேன்.” என்றான்.
“பெரிய அத்தை மகன்? அவன் ஒரு ஆளுன்னு நீ போயிருக்க.”
“அம்மா அவர் இப்போ அப்பாவுக்கு மாப்பிள்ளையும் கூட…. இங்கேயே வந்து சட்டமா உட்கார்ந்தாலும் உட்கார்ந்துப்பார். அவர் அப்படிபட்டவர் தான்.”
“வருவானா அவன், வரட்டும் அப்புறம் நான் யாருன்னு தெரியும்?”
ஸ்ரீகாந்த பேச்சை ஆரியனின் பக்கம் திருப்பிவிட்டான். அப்போதுதான் அவன் தப்பிக்க முடியும்.
“அங்க வீடெல்லாம் பார்த்தியா எப்படி இருக்கு?” என்றதும்,
“நம்ம வீட்ல பாதிக் கூட இல்லை. இருக்கச் சாமானும் அப்படித்தான். ஆனா வீட்டை நல்லா வச்சிருக்காங்க.” என்றான்.
இரவு உணவு நேரம் வரை ஆரியன் எழுந்து வரவில்லை. சம்யுக்தாவும் கணவனின் வரவை ஆவலாக எதிர்பார்த்து ஹாலில் உட்கார்ந்திருந்தாள். அவன் மட்டும் இருக்கும் அறைக்குச் செல்ல அவளுக்குத் தயக்கமாக இருக்க… கீழேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
இரவு உணவு நேரம் வரையும், அவள் வரவில்லை என்றதும், இந்துஜா மகளைச் சென்று அழைத்து வர சொல்ல… அதற்காகக் காத்திருந்த சம்யுக்தாவும் ஆவலாகவே சென்றாள்.
அவள் சென்று அவனை எழுப்ப….. “நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பான் போல… அவள் எழுப்பியதும் அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.”
“அம்மா உங்களைச் சாப்பிட வர சொன்னாங்க.” என்றாள்.
இவ்வளவு நேரமா உறங்கினோம் என நினைத்தவன், எழுந்து முகம் கழுவி, தலையை வாரிக்கொண்டு வர… இருவரும் கீழே சென்றனர்.
இந்துஜாவும் உடன் வாணியும் மட்டும் இருந்தனர். இரவு உணவை உண்டவன், “மாமா போன் பண்ணாங்களா அத்தை? தாத்தா எப்படி இருக்காராம்?” எனக் கேட்க…
ஆரியன் உட்கார்ந்து டிவி பார்க்க… வாணியும் அவர் வீட்டுக்கு சென்று விட…இந்துஜாவும் உண்டு முடித்துவிட்டு, வந்து இவர்களோடு உட்கார்ந்து டிவி பார்த்தார்.
ஆரியன் மாடிக்கு செல்ல… சிறிது நேரம் சென்று சம்யுக்தா பாலை எடுத்துக் கொண்டு சென்றாள்.
ஆரியன் அவனது மடிக்கணியை எடுத்துக் கொண்டு சென்று வெளி மெத்தில் சேரில் உட்கார்ந்து இருந்தான். இவளைப் பார்த்ததும், “கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் வேற தூங்கிட்டேனா… இப்போ தூக்கம் வராது. நீயும் எதாவது படிக்கிறதுக்கு இருந்தா படி.” என்றதும்,
அடப்பாவி, நினைச்சது போலவே படிக்கச் சொல்கிறானே என நினைத்தவள், எனக்குப் பரிட்ச்சைக்கு பத்து நாள் இருக்கும் போது படிச்சா தான், படிச்சது மண்டையில நிற்கும். இப்போவே படிச்சா மறந்து போயிடும். எனக்கு இப்போ தூக்கம் வருது. நான் தூங்க போறேன்.” எனச் சொல்லி சென்று விட்டாள்.
சம்யுக்தா பகலில் உறங்கி இருக்கவில்லை. அவள் படுத்ததும் உறங்கி விட்டவள், மீண்டும் காலையில் தான் எழுந்தாள். அவள் பார்த்த போதும் இன்றும் ஆரியன் தரையில் தான் படுத்திருந்தான்.
அவனின் அருகே சென்று படுக்கும் ஆசை அதிகம் இருந்தும், அவனுக்கே இல்லை எனக்கு மட்டும் என்ன என நினைத்தவள், எழுந்து குளிக்கச் சென்றாள்.
தாமதமாக எழுந்து குளித்து விட்டு கீழே வந்த ஆரியன். அன்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட பின்னர், அவளை அவனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிறகு வெளியேவே மதிய உணவை உண்டு விட்டு, மதியம் படத்துக்குப் போய் விட்டு, மாலை தான் வீடு திரும்பி வந்தனர்.
அன்றும் வந்ததும் வேலைப் பார்க்க உட்கார்ந்து விட்டான். இரவு உணவையே சம்யுக்தா மாடிக்கு எடுத்துச் சென்றுதான் கொடுத்தாள்.
அன்றும் அவன் எப்போது உறங்கினான் என்று அவளுக்குத் தெரியாது.
அடுத்த நாள் மதியம் உணவு உண்டதும், அவர்களின் ஊருக்குச் செல்வதாக இருந்தது. அதனால் இருவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“அம்மா, அப்பாவும் வரமாட்டாங்க போல…. நீங்க மட்டும் எப்படித் தனியா இருப்பீங்க?” என சம்யுக்தா கவலைப்பட
“நீங்களும் எங்களோட வாங்களேன் அத்தை. நம்ம வீடு தானே…” என ஆரியனும் அழைக்க…
“இல்லை மாப்பிள்ளை… நான் எங்கையும் வெளியே போக மாட்டேன். சாமான் எல்லாம் வீட்டுக்கே வர்ற மாதிரி அவங்க அப்பா ஏற்பாடு பண்ணி இருக்காங்க.” என்றார்.
அப்போது வந்த வாணியும், “நான் என் பெண்ணை இங்க நைட் தூங்க அனுப்புறேன். நீ கவலைப்படாம போ.” என்றார்.
பிறகே சம்யுக்தா நிம்மதியாகக் கிளம்பினாள்.
மாலை இங்கே ஊருக்கு வந்து விட்டனர். ஆரியனை ஒருவருமே கண்டுகொள்ளவில்லை எல்லோரும் சம்யுக்தாவைத் தான் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“அங்க ஒரே போர் தெரியுமா? இவங்க எப்ப பாரு லேப்டாப் வச்சிட்டு உட்கர்ந்துகிறாங்க. எப்போ தூங்கிறாங்கன்னே தெரியாது. நாம இன்னைக்குச் சீட்டு விளையாடலாம்.” எனச் சம்யுக்தா, அவளையும் அறியாமல் கணவனை போட்டுக் கொடுத்து விட்டாள்.
பெற்றோர் ஆரியனைப் பார்க்க… அவினாஷுக்குச் சிரிப்பு வந்துவிடும் போல இருந்தது.
“பரிட்சை வருது படின்னு சொன்னா படிக்கலை… இங்க வந்து புகார் சொல்லிட்டு இருக்கா…” என மறைமுகமாக அவளது படிப்பை காரணம் கட்டிவிட்டு எழுந்து சென்றான்.
சரி அவர்கள் வாழ்க்கை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனப் பெற்றோரும் மேலும் எதுவும் கேட்கவில்லை.
மாலை மகளைப் பார்க்க சக்ரவர்த்தி வந்திருந்தார். நாளை மதுரைக்குச் சென்று அங்கிருக்கும் வேலைகளைப் பார்த்துவிட்டு, அப்படியே அவள் அம்மாவையும் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு சென்றார்.
இரவு உணவு முடிந்ததும், ஒன்பது மணிக்கே, “உன்கிட்ட பேசணும் வா…” என ஆரியன் மனைவியிடம் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.
என்ன என்று கேட்க சென்றவள், அவன் கதவை சாற்றித் தாழிடுவதைப் பார்தததும், “எனக்குத் தூக்கம் வரலை…. நாங்க சீட்டு விளையாடப் போறோம்.” என்றாள்.
“நான் நைட்டெல்லாம் வேலை பார்க்கிறேன்னு நீ சொல்லலை.” என்றதும்,
“நீங்க அதுதான பண்றீங்க.” என்றாள் அப்பாவியாக.
“நீயே சொல்லு நான் வேற என்ன பண்ணனும்?” என்றான் அவளிடமே….
“என்னோட பேசிட்டு இருங்க. என்னோட பேச மாட்டேங்கிறீங்க. எனக்கு உங்களைப் பத்தி மத்தவங்க சொல்லித்தான் தெரியும். நீங்களே சொல்லுங்க.” என்றாள்.
அவள் சொல்வதும் நியாயம் தானே… “சரி நாம பேசிட்டு இருக்கலாம். இனிமே நம்மைப் பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லக் கூடாது.” என்றதும், சரி என்றாள்.
இருவரும் கட்டிலில் சென்று உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். பேச்சு எங்கெங்கோ செல்ல… இருவரும் நெருக்கமாகி இருந்தனர். சம்யுக்தா ஆரியனின் தோளில் சாய்ந்து உட்கார்ந்திருக்க… அவனும் அவளின் இடையில் கைப்போட்டு அனைத்திருந்தான்.
“சம்யுக்தா, உனக்கு நாம ஏன் இப்போ கல்யாணம் பண்ணிகிட்டோம்ன்னு தெரியும் தான….” என்றதும்,
“ம்ம்… தெரியும்.” என்றாள்.
“நமக்கு லவ் பண்ணிட்டுக் கல்யாணம் பண்ண டைம் இல்லை…. அதனால இப்போ லவ் பண்ணலாமா?” என்றதும், சம்யுக்தாவுக்கும் சுவாரசியமாக இருக்க, சரி என்றாள்.
“இப்போ லவ் மட்டும் பண்ணுவோம்.”
அவன் சொல்ல வருவதன் அர்த்தம் புரியாமல் இல்லை. அவளுக்கு இருபது வயது தான் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் படிப்பை வேறு முடிக்கவில்லை. அவன் அதற்குதான் தயங்குகிறான் என்று புரிந்து தான் இருந்தது. ஆனால் அவன் அவளை விட்டு முழுவதும் விலகி நிற்பது தான் பிடிக்கவில்லை. இப்போது கணவன் சொன்னது ஒத்துக்கொள்ளும்படி இருந்ததால்…. சரி என்றாள்.
மேலும் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தவர்கள், எப்போதும் போல அவள் கட்டிலிலும், அவன் கீழேயுமாகப் படுத்துக் கொண்டனர்.
ஆரியன் வெறும் காதலர்களாக இருக்கலாம் என்று சொல்லிவிட்டான் தான். ஆனால் அவனுக்கே அது வெகு நாட்கள் சாத்தியமில்லை என்று தெரியும். போகும் வரை போகட்டும் என அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.
மறுநாள் காலை ஆரியன் வெளியே சென்றிருக்க, அவனுக்கு வாட்ஸ் அப்பில் எதோ வந்திருக்க, என்ன என்று எடுத்து பார்த்தால்… சம்யுக்தா தான் அனுப்பி இருந்தாள்.
“உயிர் வாழ்கிற வரைக்கும்,
உனக்கே மடி கொடுப்பேன்.
இன்னொரு ஜன்மம் எடுத்தால்,
உனக்கே மறுபடி பிறப்பேன்.
உனது கனவில், நினைவில், உருவில்
நானே என்றும் இருப்பேன்.” என்ற வரிகளோடு, “ஐ லவ் யூ புருஷா…” என அவள் அனுப்பி இருக்க… கடை வீதி என்பதையும் மறந்து ஆரியன் சிரித்து விட்டான்.
நம்மை விட இவளுக்கு நல்லா லவ் பண்ண தெரியுதே என்று நினைத்தவன், அப்போதே வீட்டுக்கு செல்ல… சடகோப்பன் வீட்டின் முன்புறம் இருக்க…. வீட்டில் வேறு யாரும் இல்லை.
சம்யுக்தா சமையல் அறையில் எதோ தீவிரமாக செய்து கொண்டிருந்தாள். அவளை அவன் பின்னால் இருந்து அணைக்க… ஒரு நொடி திடுக்கிட்டவள், பிறகு சமாளித்துக் கொண்டு, “அதுக்குள்ள வந்துட்டீங்க.” என்று சொல்ல…
“நீதானே தூண்டில் போட்டு இழுத்த… என்ன டி எனக்கு அனுப்பின.” என்றதும், சம்யுக்தாவுக்கு வெட்கமாக இருக்க…
“உங்களுக்கு படிக்க தெரியாதா?” என்றாள்.
“படிச்சிட்டு தான் வந்திருக்கேன்.”
“அப்புறம் ஏன் கேட்கிறீங்க?”
“சம்யு, அந்த பாட்டுல அடுத்த வரி என்ன தெரியுமா?” என்றவன், வார்த்தையாக சொல்லாமல், பஞ்சு போன்ற அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
அடுத்து அவனுடைய கன்னத்தை அவளுக்கு காட்ட… அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், பிறகு லேசாக கடித்தும் வைக்க… அடிப்பாவி என்றவன் “ரொம்ப சேட்டை செய்யுற டி நீ.” என்றான் சிரிப்புடன்.
கல்யாணத்திற்கு முன் காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை…. ஆனால் கல்யாணத்திற்கு பின் காதல் மிக முக்கியம். அந்தக் காதலில் பிரிந்து விடுவோமோ என்ற பயமோ… தவறு செய்கிறோமோ என்ற பதட்டமோ இருக்காது.
இங்கே இருவரும் அப்படித்தான் நிம்மதியாக காதலித்துக் கொண்டிருந்தனர்.