வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் பந்தல் அமைத்து, சமையல் ஆட்கள் கொண்டு விருந்து சமைத்தனர். சக்ரவர்த்தியின் நண்பர் ஜெயகுமார் மற்றும் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர்.
முதலில் புதுமணத் தம்பதிகள் அவர்களோடு ஆரியன், சம்யுக்தா, அவினாஷ், ஸ்ரீகாந்த், மற்றும் சடகோப்பனின் சகோதரியும் அவர் கணவரும் என சிலர் மட்டும் நல்ல நேரத்தில் செல்ல வேண்டும் என முன்னே ஒரு வண்டியில் கிளம்பி வந்து விட…. மற்றவர்களை வேன்னில் அழைத்துக் கொண்டு சடகோப்பன் உணவு நேரத்துக்கு வருவதாக இருந்தது.
இந்துஜா தம்பதிகளை ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துக் கொண்டார். நண்பர்களின் குடும்பங்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்கள் சிலர் இருந்தனர். ஸ்ரீகாந்த் வருவான் என இந்துஜா எதிர்ப்பார்க்கவில்லை. அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
ஸ்ரீகாந்த் அந்த வீட்டை ஆராயும் நோக்கில் பார்க்கவில்லை என்றாலும், ஒரு வீட்டிற்கு நாம் செல்லும் போது அங்கே என்னென்ன இருக்கிறது எனக் கண்ணில் படும் தானே… அவன் பார்த்தவரை தேவையானது தவிர அந்த வீட்டில் ஆடம்பரமாக எதுவும் இல்லை. இந்துஜா நிறையக் கைவேலைகள் செய்து அங்கங்கே வைத்திருந்தார்.
இந்துஜா அவர்களுக்குக் குடிக்க வீட்டிலேயே செய்த பழசாறு கொண்டு வந்து கொடுக்க… எல்லோரும் எடுத்து குடித்தனர். ஆரியனின் அத்தை மாமாவை கீழே இருந்த அறையில் ஓய்வாக உட்கார சொல்லி அனுப்பி வைத்தனர்.
சம்யுக்தாவுக்கு அப்போது தான் சக்ரவர்த்தி வரமாட்டார் என்று தெரியும். “அவளிடம் நீ முன்னாடி போ… அப்பா அப்புறம் வரேன்.” எனச் சொல்லி இருந்தார்.
“அம்மா அப்பா வர மாட்டாராம்மா… அப்பா இல்லாம நல்லாவே இருக்காது. நீங்க அப்பாவை வந்து சாப்பிட்டாவது போகச் சொல்லுங்க.” என்றாள் சம்யுக்தா.
“வர முடிஞ்சா அப்பா வரமாட்டாங்களா… அது என்ன கொஞ்ச தூரமா வந்திட்டு உடனே போக… இந்த நேரத்துல அவர் அங்கதான் இருக்கணும். அவருக்குமே வரமுடியாதது கஷ்ட்டமா தான் இருக்கும். நாம் அதை அதிகப் படுத்துற மாதிரி நடதுக்கக் கூடாது.”
“அப்போ அப்பாவை விட்டுட்டு நாம மட்டும் விருந்து சாப்பிடணுமா? எனக்கும் வேண்டாம்.” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.
“அத்தை சைவமும் பண்றாங்க தானே… சம்யு அதைச் சாப்பிடட்டும்.” என்று ஆரியன் சொல்ல…
இந்துஜா அவர்களைப் பார்த்து சிரித்தவர், “உங்க அத்தைகிட்ட அப்பாவுக்குச் சாப்பாடு கொடுத்து விடலாம்.” என மகளிடம் சொல்லிவிட்டு சென்றார்.
“அத்தை உன்னைக் காப்பாத்திட்டாங்க… இல்லைனா உனக்கு வெறும் தயிர் சோறு தான்.” என ஆரியன் கேலி செய்ய…
சம்யுக்தா ரோஷமாக வேண்டாம் என்று சொல்ல வர… அதற்குள் அவினாஷ், “வேண்டாம் எதுவும் சொல்லிடாத. அவன் உன்னை இன்னைக்குத் தயிர் சோறு சாப்பிட வைக்கதான் பிளான் பண்றான். நமக்குப் பிரியாணி தான் முக்கியம். அவன் என்ன பேசினாலும் கண்டுக்காத…” என அவன் தோழியை எச்சரிக்க… சம்யுக்தாவும் ஆரியனைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொள்ள… ஆரியன் அவளைப் பார்த்து வாய்க்குள் சிரிப்பை அடக்கியவன், ஸ்ரீகாந்திடம் பேச்சுக் கொடுத்தான்.
சம்யுக்தாவுக்குப் பிரியாணி என்றால் பிரியம். சக்ரவர்த்திச் சொல்லி, செய்து முடித்ததும், ஜெயகுமார் இலையில் பிரியாணியை வைத்து சம்யுக்தாவுக்குக் கொண்டு வந்து கொடுக்க… அவள் அவினாஷையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, இருவரும் மாடி அறையில் ஒரே இலையில் இருந்த பிரியாணியை எடுத்து உண்டனர்.
மனைவியைத் தேடி வந்த ஆரியன், அதைப் பார்த்து விட்டு, “அடிப்பாவி பேசின பேச்சு என்ன? இப்போ பண்ற வேலை என்ன?” என,
“சும்மா டேஸ்ட்டு தான் பார்க்கிறோம்.” என்றாள்.
“செஞ்சதுல பாதிப் பிரியாணி இங்கதான் இருக்கும் போல…. இதுதான் டேஸ்ட் பார்க்கிறதா…” என்றான் கேலியாக.
“இந்தாங்க நீங்களும் வேணா வாங்கிகோங்க. எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க.” என சம்யுக்தா கையில் பிரியாணியை எடுத்து அவன் பக்கம் நீட்ட… வேண்டாம் என மறுக்க வந்தவன், மனைவி ஊட்டிவிடுகிறாள் என்ற ஆசையில், அவள் அருகில் உட்கார்ந்து வாயைத் திறந்தான்.
சம்யுக்தா அவனுக்கு ஊட்டி விட… அவினாஷ் “எனக்குப் போதும், நீங்க சாப்பிடுங்க.” என நாகரிகமாக அங்கிருந்து செல்ல…
“நீ ஸ்ரீகாந்தோட இருடா.” என்றான் ஆரியன்.
“நீங்களே சாப்பிடுறீங்களா? என சம்யுக்தா கேட்க…. அவன் அவளை முறைக்க…அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்.
மூன்று நான்கு வாய் வாங்கியவன், “எனக்குப் போதும் நீ சாப்பிடு.” என்றவன், எழுந்து சென்று எதிரே இருந்த கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
இங்கே வந்ததும் இந்துஜா, மகளை வேறு புடவை கட்ட வைத்து அலங்கரித்திருந்தார்.
இளம் பச்சையில் சிவப்பு பார்டர் வைத்த புடவையும், அதற்கு ஏற்றார் போலத் தலையலங்காரம் செய்து, கழுத்து காதில் மட்டும் இல்லாமல், நெற்றி சுட்டி, இடையில் ஒட்டியாணம் என அணிந்து, முகத்திற்கும் ஒப்பனை செய்திருந்தாள்.
மனைவியைப் பார்வையால் அளந்தவன், “என்ன டி இன்னைக்கும் கல்யாணம் பொண்ணு மாதிரி இருக்க?” என,
உண்டு கொண்டிருந்த பிரியாணியில் இருந்த கவனத்தைக் கணவனிடம் திருபியவள், “அம்மா தான் பண்ணி விட்டாங்க.” என்றாள்.
“ம்ம்… கலக்கு கலக்கு.”
சம்யுக்தா உண்டு முடித்து, இலையை எடுத்து சென்று போட்டு விட்டுக் கைகழுவி கொண்டு வந்தவள், ஆரியனின் எதிரே கட்டிலில் உட்கார… அவன் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்தவள், “என்ன யோசிக்கிறீங்க?” என்றாள்.
“நீ ரெண்டாவது வருஷம் கூட இன்னும் முடிக்கலை. அதுக்குள்ள கல்யாணம் பண்ணிகிட்டோம். எனக்கும் வேலை நிறைய இருக்கு. உங்க அப்பா அம்மா விபத்து நடந்ததுல இருந்து இப்போ நம்ம கல்யாணம் முடியுற வரை… சரியா ஆபீஸ் வேலை செய்ய முடியலை.”
“இப்போ நிறைய வேலை இருக்கு. அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”
“வேலையைப் பண்ண வேண்டியது தான…”
“நீ இப்படி அழகா இருந்தா… நான் வேற எதையும் எப்படி யோசிக்கிறது?” என்றதும்,
அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை.
“யாரு நான்னு?” போடி மனுஷன் நிலைமை புரியாம.” என்று சொல்லிவிட்டு, அவன் கட்டிலில் கால் நீட்டி படுத்துக் கொள்ள… அதற்குள் மற்றவர்கள் வந்த சத்தம் கீழே இருந்து கேட்க… இருவரும் கீழே இறங்கி சென்றனர்.
சக்ரவர்த்தியின் நண்பர்கள் எல்லாம் உண்ட பின்னர் தான் ஆரியன் உணவு உண்டான். பெண்ணும் மாப்பிள்ளையும் கடைசிப் பந்தியில் உட்கார்ந்து உண்ண, அவர்களோடு அவினாஷ், ஸ்ரீகாந்தும் உண்டனர்.
“அப்பவே சாப்பிடுன்னா கேட்கலை…. சம்யுக்தாவுக்குப் பசிச்சிருக்கும்.” என சரளா மருமகளுக்காகச் சொல்ல….
“ரூம்ல சாப்பிட்டது எல்லாம் கணக்குல வராதா சம்யு.” என ஆரியன் குனிந்து மனைவியிடம் கேட்க…. பேசின அவ்வளவு தான் என்பது போல… அவனின் காலின் மீது தன் காலை வைத்து அழுத்தியவள், “பரவாயில்லை அத்தை, எனக்கும் பசிக்களை.” எனச் சமாளிக்க… ஆரியன் சிரிப்பை அடக்கியபடி உண்ணுவதைத் தொடர்ந்தான்.
மாலை நான்கு மணி போலப் புதுமணத் தம்பதிகளை இங்கேயே விட்டு, மற்றவர்கள் மட்டும் கிளம்பினர். ஸ்ரீகாந்தும் அவர்களுடனே கிளம்பினான்.
அவனிடம் ஒரு பெரிய பையைக் கொண்டு வந்து கொடுத்த இந்துஜா, “கல்யாணத்துக்கு உனக்கும் தங்கச்சிக்கும் துணி எடுத்தோம். ஸ்ரீநிதி கல்யாணமும் முடிஞ்சிருந்தா… நான் முன்னாடியே கொடுத்து விட்டிருப்பேன். ஸ்ரீநிதிக்கு புடவையோட, மீனாட்சி திருக்கல்யாணத்துல கொடுத்த வளையல், மஞ்சள், குங்குமம் எல்லாம் வச்சிருக்கேன்.” என்றார்.
ஆரியன் ஸ்ரீகாந்தை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு சென்றவன், “மாப்பிள்ளை தப்பா நினைக்காத. எங்க கல்யாணத்தைத் தள்ளி வைக்கலாம்னு தான் அத்தை சொன்னாங்க. உங்க அப்பா முன்னாடியே அவரை எதுவும் செய்வாங்கன்னு எதிர்பார்த்துதான், ரெண்டு பொண்ணுங்களுக்கும் அடுத்தடுத்துக் கல்யாணம் வச்சார். எங்க அப்பாவும் கல்யாணம் தள்ளி போறதை விரும்பலை…. அதோட எனக்குமே உங்க மாமாங்க அடுத்து என்ன செய்வாங்கன்னு தெரியாது. சம்யுக்தாவை கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்துக்குள்ள கொண்டு வந்திடனும்னு நினைச்சேன்.” என்றதும்,
“எனக்குப் புரியுது அத்தான்.” என்றான் ஸ்ரீகாந்த்.
அவன் சாம்யுக்தாவிடமும் சொல்லி கொண்டு செல்ல… சம்யுக்தா சரி என்பதாகத் தலையசைத்தாள்.
இப்போது விபத்து நடந்த பிறகு, சம்யுக்தாவுக்குத் தந்தையின் அந்தக் குடும்பத்தினர் மீது பயம் வந்திருந்தது. அவளுக்கு அவர்கள் யாரையும் நம்ப முடியவில்லை. அதனால் ஸ்ரீகாந்திடமும் அவளால் சகஜமாகப் பேச முடியவில்லை.
அவர்கள் எல்லாம் கிளம்பி செல்லவே நான்கு மணி ஆகி இருக்க… ஆரியன் சென்று மாடியில் இருந்த அறையில் படுத்துக் கொண்டான்.
ஸ்ரீகாந்த் இந்துஜா கொடுத்த பையை அவர்கள் கடையிலேயே வைத்து விட்டான். ஏற்கனவே அவன் சென்றதற்கு அவன் அம்மா எவ்வளவு பேச்சு பேசுவார் என்று தெரியாது. இப்போது இதை வேறு எடுத்து சென்றால்… பெரிய கலவரமே உண்டாகும் எனத் தெரியும்.
அவன் வீட்டிற்குச் சென்ற போது சக்ரவர்த்தி வீட்டில் தான் இருந்தார். உணவு மேஜையில் வெளியே இருந்து வாங்கி வந்திருந்த பிரியாணி, உண்டது போக மிச்சம் இருந்தது.
தந்தை தான் தங்கைக்கு வாங்கி வந்து அவளை உண்ண வைத்திருக்கிறார் என்று புரிந்தது. அந்த மகளின் விஷே நாளிலும், இந்த மகளை மறக்காமல், அவளையும் விட்டுக் கொடுக்காமல் தானே தந்தை நடந்து கொண்டார் என்பதில் ஸ்ரீகாந்துக்கு மகிழ்ச்சியே….