எழுந்து வந்த வெங்கட்ராமன், “ என்னடா இது விளையாட்டுன்னு முதல்ல நினைச்சேன். ஸ்ரீநிதி தன்னோட கலகலப்பான பேச்சால உங்க எல்லாரையும் மகிழ்ச்சியாக்கவும், அதுதான் நோக்கம்னு நினைச்சேன். ஆனா, நிச்சயமா இந்த விளையாட்டுக்குள்ள இப்படி ஒரு பாடம் கத்துக்கலாம்னு நினைக்கவேயில்லை. அடிப்படை விதிகள்தான், ஆனா நாம அடிக்கடி நினைவு படுத்திக்க வேண்டிய விஷயங்கள் இது. “, என்று மெச்சுதலாய் அவளைப் பார்த்து புன்னகைத்தவர், தொடர்ந்து பேச, இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.

அன்று மாலை சித்தார்த் அழைக்கவும், மீண்டும் விஷன் பற்றி கேட்கப்போகிறானோ என்று நினைத்துக் கொண்டே சென்றவளை,

“சூப்பர் ஷோ ஸ்ரீ. அப்பாக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உன்னை செலக்ட் பண்ணினதுக்கும், இப்படி ஒரு முயற்சி ஆரம்பிச்சதுக்கும் என்னையும் பாராட்டினார். அவரோட மத்த கம்பனிக்கும் இந்த மாதிரி ப்ரோக்ராம் செய்யணும்னு கேட்டுகிட்டார். கலக்கிட்ட போ…”, மகிழ்ச்சியாக சித்தார்த்  சொல்லவும் பூரித்துப் போனாள் ஸ்ரீ.

மாலை முழுதுமே பாராட்டு மழையில் நனைந்தவளுக்கு இது முத்தாய்ப்பாய் இருந்தது. இந்த அங்கீகாரம் வேண்டித்தானே இத்தனை போராட்டம். சின்னப் பெண் என்று நினைத்திருந்த அவளது துறை சார்ந்தவர்களின் பார்வையில் இன்று மெச்சுதலும் சற்று மரியாதையும் கூடியிருந்தது. இராமலிங்கம் கூட,

“என்னவோ விளையாட்டுன்னு நினைச்சேன், பரவாயில்லை பெரியவரே பாராட்டற மாதிரி நடந்திக் காட்டிட்ட மா. அவர் அப்படியெல்லாம் லேசுல பாராட்டிட மாட்டார். நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்கு நல்ல பேரை வாங்கி குடுத்திருக்க.”, என்று நின்று அவர் பங்குக்கு சொல்லிவிட்டு சென்றார்.

வீட்டிற்கு வந்தவள் தன் பிரதாபங்களை இன்னும் சற்று மெருகேற்றி பெருமை அடித்துக் கொண்டிருந்தாள் ரோஜாவிடமும் , ராகுலிடமும்.

“டேய்…. முடியலைடா… இதான் உஷாரா உங்க அங்கிள் வர லேட்டாகும்ன்னு தப்பிச்சிட்டார். நாம இப்படி சிக்கிட்டமேடா…”, என்று ஒரு கட்டத்தில் வனரோஜா ராகுலிடம் புலம்பினார்.

“பாவம் ஆன்ட்டி… அவளோட பெரிய மொமென்ட்… சொல்லிட்டு போகட்டும்…”, என்று சிரிக்க,

“டேய்..  இங்க நான் சொல்லிகிட்டு இருக்கேன்… அங்க என்னடா அம்மாகிட்ட பேச்சு ?”, ஸ்ரீ கடிந்தாள்.

“இல்லடி… பிள்ளை காபி கேட்டுச்சு. உங்க பெரிய பாஸ் சொன்னதை ஏற்கனவே மூணு வாட்டி கேட்டுடமேடா… அதான் நீ அதை முடிக்கறதுக்குள்ள கேட்டான். நீ சொல்லுமா… நான் போய் போட்டு எடுத்துட்டு வரேன்.”, வனரோஜா நழுவப் பார்த்தார்.

“இல்ல… நீயும் வா… அப்ப சொல்றேன்…”

“ஹ.. அதான் உங்கப்பா வந்தப்பறம் ஒரு இரண்டு வாட்டி சொல்லுவியே கண்ணு… அப்ப கேட்டுகறேன். உன் ஃப்ளோ கெட்டுடும்…நீ சொல்லு…”, என்று ரோஜா அவசரமாய் செல்ல, வசமாய் சிக்கிய ஆடு ராகுல் பாவமாய் அவளைப் பார்த்தான்.

“என்னடா ?”, என்றாள் ஸ்ரீ.

“அம்… ம்ம்ம்…. நீ நவீன் கிட்ட சொல்லிட்டியா?”, அடுத்து யாரை கோர்த்துவிடுவது என்று யோசித்தவன்,  நவீன் பெயரை இழுத்துவிட்டான்.

 உதட்டை குவித்து யோசித்தபடியே அவனைப் பார்த்தவள், “ம்ம்… அது பத்தி உங்கிட்ட பேசணும்டா… மொட்ட மாடி போலாம் வா…”, என்று எழுந்தாள்.

“நீ போ… நான் ஆன்ட்டிகிட்ட காபியை வாங்கிட்டு வரேன்.”, என்று தப்பிப் பழைத்து கிச்சனுக்கு ஓடினான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் மொட்டை மாடியில் காபியுடன் நின்றனர்.

“சொல்லு நவீன் கூட எதுவும் பிரச்சனையா?”

“சே…அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் ஹாட்ரிக் அடிச்சதுக்கு ட்ரீட் கேட்டிருந்தேன் இல்லையா. அதுக்கான ப்ளான். டின்னர் போகலாமான்னு கேட்டார்.”

அதைக் கேட்டு விழி விரித்தவன், “வாவ்… போட்டு தாக்கு. எங்க? எப்ப?”

“டேய்… வீட்ல விடுவாங்களா, இல்லை உன்னையும் கூட்டிக்கலாமான்னு கேட்டார். “, ஸ்ரீ அவனை தலை சாய்த்துப் பார்க்க,

ஒரு நிமிடம் முழித்தவன், “ஓ… கரெக்ட்தான்… ஆனா, நான் அங்க என்ன பண்ணுவேன்…  நீங்க இரண்டு பேரும் மட்டும் போங்க.”, என்று கூறியவன், அவளைப் பார்த்து வருத்தம் இழையோட லேசாய் ஒரு புன்னகை சிந்தினான்.

அதைப் பார்த்தவள், “என்ன? என்னடா ராக்கி ? நீயும் வரேன்னா வா.”, என்றாள் அவசரமாக.

இல்லை என்பதாக தலையாட்டியவன், “எப்படியும் ஒரு நாள் நம்ம நட்புக்கு இடையில உன் ஆளு, என் ஆளுன்னு வருவாங்கன்னு தெரியும். அது நடக்கும்போது பார்த்துக்கலாம்னு இருந்தேன். இப்ப நடக்கவும்…. “, உதடு கடித்தவன், தலையை உலுக்கி,

“ பழகிரும். விடு.”

அவன் பேசியதில் சோகமானவள், “ டேய்… யார் வந்தாலும் நீதாண்டா என் பெஸ்ட்டி…”, என்றாள் பாவமாக.

அதில் சிரித்தவன், “ம்ம்… ஆனாலும் ஒரு இடைவெளி விழத்தான் செய்யும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  பட்…. அங்கிள், ஆன்ட்டி  நீ மட்டும் தனியா போறதுக்கு ஓகே சொல்லுவாங்களா?”, என்று தற்போதைய பிரச்சனையை சரியாகக் கணித்துக் கேட்டான். அதில் கவனம் கலைந்தவள்,

“இரு… எதாவது சொல்லிட்டு போகலாம்னு முதல்ல யோசிச்சேன்…. ஆனா… அது… நவீன்கிட்ட பேசும்போது அப்படியே டாபிக் மாறுச்சா… அப்போ…”, என்று அவன் பேசியதைக் கூறியவள்,

“யோசனையா இருக்குடா… அவங்க குடும்பமெல்லாம் எனக்கு செட் ஆகுமா?”, என்று தன் கவலையை நண்பனிடம் கொட்டினாள்.

“ஷ்ஷ்… ஸ்ரீ…. எதுக்கு உனக்கு இவ்வளவு யோசனை? லிசன். நீ அந்த விஷன் பார்க்கலைன்னு வை. நவீன் நல்ல ஃப்ரெண்ட். உனக்கு பிடிச்சிருக்கு. லவ்வான்னு கேட்டா உனக்கே தெரியாது. அவரும் என்ன மாதிரி நினைக்கறார்ன்னு இன்னும் நமக்கு தெரியாது. அப்படி எதுவும் உங்கிட்ட கடலை போடலை.  டீசன்ட் பெர்சன். இன்னும் தெரிஞ்சிக்க இந்த டின்னர். அவ்வளவுதான். அவரே சொன்ன மாதிரி இப்ப நீ வரலைன்னு சொன்னா, அவருக்கு தலை குனிவாகிரும். டேக் இட் ஸ்லோ. அவருக்கும் பிடித்தம்னு தெரிஞ்சா, அவரும் யோசிப்பார்தானே ? அந்த ஸ்டேஜ் வரும்போது பேசிக்கலாம்.”, ராகுல் எடுத்துச் சொல்லவும், சற்று நம்பிக்கை பெற்றவளாக,

“ம்ம்… நான் தான் தேவையில்லாம காம்ப்ளிகேட் பண்ணிக்கறேன். சரி விடு… போறபடி போகட்டும், பார்த்துக்கலாம்.”, என்று ஒத்துக் கொண்டாள்.

“ஆன்ட்டியை என்ன சொல்லி சரிகட்டப் போற? “,சிக்கல் புறம் கவனம் செலுத்தினான் ராகுல்.

“அதான் ராக்கி.. நீ வரேன்னா… ஒன்னுமே சொல்ல மாட்டாங்க. பொய் சொல்லிட்டும் போக பிடிக்கலை.”, கால் மாற்றி மாற்றி நின்றவள், மொட்டைமாடியின் கைப்பிடியில் சாய்ந்து நின்றாள்.

‘எதாவது விடை சொல்லேன்?’, என்றது அவளது பார்வை.

தாடையை சொறிந்தவன், “ம்ம்… நீ சொல்ல வேணாம். நான் சொல்லிக்கறேன். நம்ம இரண்டு பேரும் போறதா இப்ப சொல்லுவோம். அன்னிக்கு மதியம் போன் செஞ்சு, டிசன்ட்ரின்னு சொல்லி வரலைன்னு சொல்றேன்.  கடைசீ நேரம், கான்சல் பண்ணா நல்லா இருக்காதுன்னு சதாய்ச்சுட்டு நீ மட்டும் போ. வீக் டே, அங்கிள் ஆஃபீஸ் முடிச்சு வரதுக்குள்ள நீ கிளம்பிடு.”, என்று தோள் கொடுத்தான் தோழன்.

“ம்ம்…இதுவும் கொஞ்சம் பித்தலாட்டம்தான்….”, ஸ்ரீ இழுக்கவும்,

“அப்படியா? இதுக்கு மேல தில்லாலங்கிடி வேலையெல்லாம் பார்த்திருக்கோம்…திடீர்னு என்ன ?”, ராகுல் கேட்டான்.

எல்லாரையும் ஏமாற்றி தான் வேலை வாங்கியதையும் அதில் இருக்கும் சிக்கலையும் சொல்ல முடியாதவள்,

“ஹ்ம்ம்… நானே கொஞ்சமா திருந்தலாம்னு பார்த்தாலும் விடாத…. சரி சரி… நீ சொல்ற ப்ளானே ஓகே. இன்னொரு வாட்டி நவீன் கிட்ட கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்லலாம்.”, என்று பழியை எப்போதும்போல அவன் பேரில் போட்டாள்.

அன்று இரவு, நவீன் அழைக்கவும், உற்சாகமாக பேசினாள். நவீந்தான் சற்று சோகமாக இருந்தான். ஹைத்ராபாத் வென்று, அவர்களது வெளியேற்றம் உறுதியானது குறித்த வருத்தம்.

“நவீன், நீங்க உள்ள வரதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மின்னு தெரியும்தானே… அப்பறம் என்ன ?”

“தெரியும்… இருந்தாலும்…”, என்று இழுத்தவன், “ அது ஒரு நாளைக்கு அப்படி இருக்கும், நாளைக்கு எல்லாரும் கிளம்பறோம். வீட்டுக்கு போன அப்பறம் சரியாகிடும். போகுது…  நீ சொல்லு…. உன் எவென்ட் எப்படிப் போச்சு?”

பாவம், தெரியாமல் கேட்டுவிட்டான். அடுத்த பத்து நிமிடத்திற்கு அவனால் கேட்க மட்டும்தான் முடிந்தது. ஒரு வழியாக மூச்சு விட ஸ்ரீ நிறுத்தவும், சிரிக்க ஆரம்பித்தான்.

“என்ன…. என்ன சிரிக்கறீங்க நவீன்?”

“இல்லை… செம்ம ஹைப்பரா இருக்க… பாவம் ரோஜா ஆன்ட்டியும் ராகுலும். எனக்கே பத்து நிமிஷம் சொல்லியிருக்கன்னா அவங்க எப்படியும் ஒரு அரை மணி நேரம் கேட்டிருப்பாங்க…ஹ ஹா…”, என்று மீண்டும் சிரிக்க,

“ம்ஹ்ம்.. எல்லாம் என்னையே கிண்டல் பண்ணுங்க. என்னடா… பொண்ணு இவ்வளவு பாராட்டு வாங்கியிருக்காளேன்னு கொஞ்சமாச்சம் ப்ரௌடா இருக்கீங்களா… எங்கப்பா மட்டும்தான் அப்படி ஃபீல் பண்ணார்….”, புகார் வாசித்தாள் ஸ்ரீ.

“ஹேய்… கண்டிப்பா பெருமையா , ஹாப்பியா இருக்கு ஸ்ரீ. வேலைக்கு சேர்ந்த ஒரு மாசத்துலயே, உங்க கம்பனி சேர்மன் உன்னை கவனிச்சதோட, பாராட்டவும் மத்த கம்பனிக்கும் எவென்ட் பண்ண சொல்லி கேட்டிருகறது சும்மா விஷயம் இல்லை. இதுக்கும் சேர்த்து உனக்கு நான் ட்ரீட் தரேன் ஓகே ?”, நவீன் பாராட்டவும், வாயெல்லாம் பல்லாக மலர்ந்தாள் ஸ்ரீ.

“ஹ்ம்ம்… என்னிக்கு நவீன் ? உங்க கிட்ட கேட்டுட்டுதான் அம்மாகிட்ட சொல்லணும்.”

“ஹே… கன்ஃப்ர்ம்தான் மா…”, என்று தேதியும் நேரமும் சொன்னவன், “ நானே வந்து உன்னை பிக்-அப் பண்ணிக்கவா ?”, என்று கேட்டான்.

ஒரு நிமிடம் முழித்தவள், “ம்ம்… இல்லை.. நானே வந்துடறேன். ஏழரை மணி தானே …. ஒன்னும் பிரச்சனை இல்லை. ப்ளஸ் ரொம்ப தூரம் இல்லையே எனக்கு.”, என்று மறுத்தாள்.

அதை ஏற்றுக்கொண்டவன், “ ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். சோ வீட்ல ஒரு நைன் தர்ட்டிக்கு இருப்பன்னு சொல்லிடு. இல்ல நான் வரணும்னாலும் ஓகேதான். “

“ஓகே. நீங்க நாளைக்கு கோயம்பத்தூர் போறீங்களா ? “

“ம்ம்… போயிட்டு சண்டே நைட் கிளம்பி சென்னை வரேன். விகடன்ல இன்டெர்வ்யூ கேட்டிருக்காங்க. மண்டே அது முடிச்சிட்டுதான் உன்னோட டின்னர். அந்த வாரம் சென்னைதான். ஃபைனல்ஸ்க்கு நேரே போறேன்.”

“ஹே… விகடன் இன்டெர்வ்யூவா? சூப்பர்யா… “, ஸ்ரீ ஆர்பரித்தாள்.

“ஹ்ம்ம்… அவங்க யூட்யூப் சானலுக்கும் சேர்த்து ஷூட் எடுக்கறாங்க. அதான் நேர்ல. இல்லாட்டி ஜூம்ல முடிச்சிருப்பேன்.”, நவீன் புன்னகையோடு சொல்ல,

“செலிப்ரட்டிதான்… டின்னர் அப்போ சொல்லுங்க எல்லா கதையும்.”

பேச்சு அப்படியே ஓடியது அடுத்த அரை மணிக்கும் மேலாக. என்னவோ இருவருக்குமே பேசிக்கொள்ள எதாவது விஷயம் இருக்கத்தான் செய்தது. சலிக்கவில்லை. நவீன் சில நாட்களாகவே யோசிக்க ஆரம்பித்திருந்தான். ஏன் சலிக்கவில்லை? இது நட்பை மீறிய பிடித்தமா ? அவளுக்கும் அப்படித்தானா ? கடைசி கேள்விதான் அவனைக் குடைந்து கொண்டிருந்தது. ஆனாலும் கேட்க தயக்கம். இந்த விருந்தில் எதுவும் விடை கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்தான்.