அத்தியாயம் – 11

காலை அலாரம் அடித்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தவளை ரோஜாதான் எழுப்பினார். அடித்து பிடித்து கிளம்பி வந்தாள். ‘ராம்ஸ்கிட்ட கண்டிப்பா பாட்டு வாங்கப் போறேன்.’, என்று புலம்பிக்கொண்டே மூச்சு வாங்க வந்தவளைப் பார்த்து சிரித்த ரேகா, “ இன்னிக்கு உலக அதிசயமா பெரிசு லீவ் போட்டிருக்கு. ஃப்ரீயா விடு.”, என்றாள்.

ஆனால் அதைக் கேட்ட ஸ்ரீக்கு பதட்டம்தான் வந்தது. “அப்ப ஆன்ட்டிக்கு சரியாகலையா?”, என்றவள் மொபைலில் குருவின் நம்பரைத் தேட, ரேகா,

“எந்த ஆன்ட்டி டீ? நேத்து ராம்ஸ் வைஃப் கிட்ட இன்டெர்வ்யூன்னு சொல்லிட்டு போன… அதுக்குள்ள அவங்க ஆன்ட்டியா?”, என்று ஆச்சரியப்பட்டாள்.

அதைக் காதில் வாங்காதவளோ, கைபேசியில் கவனமாக இருந்தாள். குருவிடம் பேசி, “ஆன்ட்டி நல்லா இருக்காங்களாம். சார் அவங்களை பார்த்துக்கத்தான் லீவ் போட்டிருக்கார். சாயந்திரம் டிஸ்சார்ஜ் ஆகிருவாங்க.”, என்று விவரம் சொல்லி மேலும் குழப்பினாள்.

அதற்குள் மற்றவர்களும் சேர்ந்துவிட, சுருக்கமாக அவள் சென்றபின் நடந்ததைக் கூறி முடித்தாள். ‘பாவம்பா அந்தம்மா…’, என்று பலவிதமாக இராமலிங்கத்தின் மனைவிக்காக பரிதாபப்பட்ட படியே கலைந்து சென்றார்கள்.

ஸ்ரீ அமர்ந்து கணினியை உயிர்பிக்க, சில நிமிடங்களிலேயே சித்தார்த்திடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“ஊஃப்..”, என்று ஒரு பெருமூச்சில் சலிப்பை வெளியேற்றியவள், அவனை சந்திக்கச் சென்றாள்.

உள்ளே வந்தவளை ஆர்பாட்டமாக வரவேற்றான் சித்தார்த்.

“ஸ்ரீ…. மை லக்கி சார்ம்…. வா வா… உட்காரு. செம்ம ஹாப்பியா இருக்கேன்… தாங்க்ஸ் டு யூ.”,என்றான் பெரிய புன்னகையுடன்.

ஒரு அரைப்புன்னகையுடன் அமர்ந்தாள் ஸ்ரீ. ‘லக்கி சார்மா… அடியே…உஷாரு…ஜக்கி கொஞ்ச நேரம் சும்மா இரு ஆத்தா…’, என்று தனக்குள் எச்சரிக்கை செய்தபடியே அவனைப் பார்த்தாள்.

“ஸ்ரீ…. நீ சொன்னது வெச்சு நான் போட்ட பணத்தை விட அஞ்சாறு மடங்கு லாபம் பார்த்தேன். ஆனா அது பெரிசில்லை. இன்னிக்கு காலையில, எங்க அப்பா எங்கிட்ட ஷேர் மார்க்கெட் டிப்ஸ் கேட்டார். எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா? தைரியமா மார்க்கெட் எதிர்த்து பெட் பண்ணி ஜெய்ச்சு காட்டிருக்கடா. வெரி குட்னு தோள தட்டினார். என் ஷாலினி கூட, இன்னிக்கு அவ்ளோ பாசமா இருந்தா. ஹாலிடே போக ப்ளான் பண்ணிட்டு இருக்கா.”, அவன் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தான்.

“ஓ… நல்லது சர். ஷாலினி..?”

“என் வைஃப். அவளுக்கு நான் எங்க அப்பாவைவிட பெரிய பிஸ்னஸ்மேனா இருக்கணும்னு ஆசை. தனியா தொழில் செய்னு சண்டை போடுவா. பட் இன்னிக்கு எங்க அப்பா இப்படி சொல்லவும் மேடம் ஃப்ளாட்.”, சித்தார்த் விவரித்தான்.

‘இப்படியே போச்சுன்னா அடுத்து என்ன கேட்ப்பான்னு தெரியும்தான. பேச்சை மாத்து.’, என்று அறிவு எச்சரிக்க,

“நாளைக்கு ஸ்பாகெட்டி சாலன்ஞ் இவென்ட்க்கு எல்லாம் ரெடி சர். லஞ்ச் அப்பாயிண்ட்மென்ட் எதுவும் வெச்சுக்காதீங்க ப்ளீஸ். நீங்களும் கூட இருந்து எல்லாரையும் என்கரேஜ் செய்யணும்.”, என்று கோரிக்கை விடுத்தாள்.

“அஹ்… உன் இவென்ட்… யா… யா… இருக்கேன். அப்பறம் ஸ்ரீ….”

“கிளம்பறேன் சர். எதுவும் விஷன் வரலை சர். வந்தா கண்டிப்பா சொல்றேன். “, அவசரமாக விடை பெற்றாள்.

“தினமும் லன்ச்ல கான்டீன்ல ஸ்டாக் மார்க்கெட் சானல் போட சொல்லியிருக்கேன் ஸ்ரீ.  அவசியம் பாரு. உனக்கு எது தெரிஞ்சாலும் உடனே எங்கிட்ட சொல்லு. இது யூஸ் ஆகுமா, ஆகாதான்னு நீ யோசிக்க வேணாம். புரியுதா?”, சித்தார்த் சொல்லவும், தான் பயந்தது போலத்தான் நடக்கப் போகிறது என்று பட்டவர்தனமாகத் தெரிந்தது ஸ்ரீக்கு.

‘வேறு வழியில்லை. மாட்டியாகிவிட்டது. எதுவும் தோன்றவில்லை என்றே சதாய்க்க வேண்டியதுதான். சிக்க வெச்சிட்டியே ஜக்கி.’, புலம்பிக் கொண்டே வேலையைப் பார்க்கச் சென்றாள்.

மறு நாள் அவள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நாள். யார் என்ன சொன்னாலும், தான் முன்னெடுத்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உத்வேகமே அவளை உற்சாகமாக வைத்துக் கொண்டது. அலுவலகத்திலும் இதைப் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இளைஞர்கள் ஆர்வத்துடனும், மத்திம வயதுடையோர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் இராமலிங்கம் போன்ற சில பெரியவர்கள் இது என்ன சின்ன புள்ளைத்தனமா என்ற இளக்காரத்துடனும் மதியம் கான்டீனுக்கு வந்தனர்.

ஐந்து தடுப்புகள் வைக்கப்பட்டு , போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு துறையின் பெயர் தாங்கி இருந்தது. போட்டியிடுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முடியாது. ஆனால் பார்வையாளர்கள் அனைத்து பக்கமும் சுற்றி வந்து எல்லா துறையினரையும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு தடுப்புக்குள்ளும் ஒரு பெரிய மேசை அதை சுற்றி போட்டியாளர் அமர நாற்காலிகள் மட்டும் இருந்தது. போட்டியாளர்கள் வந்து அமர்ந்திருந்தனர்.

தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அனைவரையும் வரவேற்று அவரவர் துறைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் உற்சாகமளிக்கும்படி கேட்டுக் கொண்ட ஸ்ரீ, போட்டியை அறிமுகப் படுத்தினாள்.

“மேசைக்கு அடியில் ஒரு பை ஒட்டியிருக்கும் , அதை பிரிச்சு பாருங்க ப்ளீஸ்.”, என்று ஸ்ரீ சொன்னதும், போட்டியாளர்கள் எடுத்து பிரிக்க,

அதிலிருந்து ஸ்பாகெட்டி குச்சிகள் ஒரு கட்டு , ஒரு செல்லோ டேப், ஒரு அடி நீள மெல்லிய நூல் கயறு மற்றும் ஒரு மார்ஷ்மெல்லோ வந்து விழுந்தது. “என்னமா… சமைக்க சொல்லப் போறியா ? “, என்று கேட்டார் அருகிலிருந்த இராமலிங்கம்.

“உங்க வேலை ரொம்ப சிம்பிள். எல்லாருக்கும் சரியா இருவது குச்சிகள் இருக்கும். ஒரு அடி, பன்னெண்டு இன்ச் நீள டேப் இருக்கு. ஒரு அடி நூல் கயறு இருக்கு. இதை வெச்சு எவ்வளவு பெரிசா டவர் கட்ட முடியும் உங்களாலங்கறதுதான் போட்டி. கட்டி முடிச்சு, அந்த மார்ஷ் மெல்லோவை அது மேல அரை நிமிஷமாவது நிக்க வெக்கணும். நிறைய டேப் சீக்கிரம் யூஸ் பண்ணி முடிச்சிட்டீங்கன்னா வேற தர மாட்டேன். அடித்தளம் ஸ்ட்ராங்கா போடறேன்னு குச்சி வேஸ்ட் பண்ணீங்கன்னா, உங்க டவர் ஹைட் கம்மியாக வாய்ப்பு இருக்கு. யோசிங்க. டீம் கூட கலந்து பேசுங்க. பாஸ் ஆரம்பிச்சு வைப்பார் போட்டியை.”, ஸ்ரீ பேசி முடித்து வாயிலைப் பார்க்கவும், சித்தார்த் மட்டுமில்லாமல் கூடவே அவன் சாயலைக் கொண்ட ஒரு பெரியவரும் இருந்தார்.

“பெரியவர் வந்திருக்காரே… வா…வா.’, இராமலிங்கம்  வேகமாக முன்னே சென்று அவருக்கு வணக்கம் வைக்க, ‘ஓஹ்… சித்தார்த் அப்பா வா. ‘, என்று யோசித்தபடியே பின்னால் சென்றாள் ஸ்ரீ.

இராமலிங்கத்துடன் அவர் பேசிக்கொண்டிருக்க, “ஆரம்பிக்கலாமா ஸ்ரீ ?”, என்றான் சித்தார்த்.

“யெஸ் சர். எல்லாம் ரெடி. “, என்றாள் ஸ்ரீ.

மைக்கை அவளிடமிருந்து வாங்கியவன், சில உற்சாக வார்த்தைகள் பேசி போட்டியை ஆரம்பித்து வைத்தான்.

இதுதான் ஸ்ரீக்கு முக்கியமான கட்டம். போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் தன் பேச்சால் கட்டிப் போட வேண்டும். நிகழ்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு கலகலப்பாகப் போகிறதோ, அதில்தான் வெற்றி.  தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடில்லாமல் பார்வையாளர்கள் பேசிக் கொண்டும் உற்சாகப் படுத்திக்கொண்டும் இருந்தால்தான் அவள் குறிக்கோள் நிறைவேறும்.

சுற்றி சுற்றி வந்து போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் சிரிக்க வைக்க கலாய்த்துக் கொண்டிருந்தாள். ஷிப்பிங் துறை வேகமாக முன்னேறியது போல இருக்க, மார்ஷ்மெல்லோவை வைத்துப் பார்க்க, அடிமட்டம் ஆட்டம் கண்டு மொத்தம் விழுந்தது.

வடிவேலைப் போன்ற தொனியில், “ எங்க பில்டிங் ஸ்ட்ராங்கு , பேஸ்மட்டம்தான் வீக்குபா…”, என்று ஸ்ரீ சொல்ல, குபீர் சிரிப்பு. மற்றவர்களும் கலாய்க்க, ஷிப்பிங் துறையை சேர்ந்த மற்ற பார்வையாளர்கள் தங்கள் துறைக்கு வக்கீலானார்கள்.

“எங்க தலைவர் எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்னு சொன்னார். ஆனா…யோசிச்சிகிட்டே இருந்தா எப்படி சர் ? இருவது நிமிஷம்தான் டைம். தலைவருங்க பேசிகிட்டே இருந்தா எப்படி?”, என்று அடுத்து துறைத் தலைவர்கள் இருந்த பக்கம் கலாய்த்தாள்.

பார்வையாளர்கள் அனைவருமே இந்த முறை ஸ்ரீக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

“இந்த போட்டி நிறைய இடத்துல நடந்துருக்கு. மானேஜர்ஸ் குழு எப்பவும் ஜெயிச்சதா வரலாறே இல்லை. ஏன் தெரியுமா ?”, என்று கேட்டு நிறுத்தினாள்.

பார்வையாளர் கவனம் மட்டுமன்றி துறை தலைவர்களும் அவளைப் பார்க்க, மானேஜர்ஸ் எல்லாருக்கும் நல்லா மேற்பார்வை செய்ய வரும். ஆனா சொன்னதை இறங்கி வேலை செய்ய வராது. அதுதான் பேசி பேசி, போட்டியை முடிக்க மாட்டாங்க. “, என்று சிரித்த படியே சொல்ல, ஆமோதிப்பாய் தலையாட்டியது சித்தார்த்தின் தந்தை வெங்கட்ராமன்.

அடுத்து அக்கவுண்ட்ஸ் பக்கம் சென்றவள், அவர்கள் இரண்டிரண்டு குச்சிகளாய் ஆறு குச்சிகளை முக்கோண வடிவில் நிறைய டேப் ஓட்டி அடிமட்டத்தை நன்றாக நிறுத்தி வைத்திருந்தனர்.

“அக்கவுண்ட்ஸ் ஆளுங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்கப்பா. அவங்க வேலையிலையும் சரி. போட்டியிலையும் சரி. இப்படி பேஸ்மென்ட் போட்டா, எப்ப பில்டிங்க் கட்டறது? நாங்க எப்ப அம்பானி ஆகறது ?”, என்று நக்கலடித்தாள். அவள் கூறுவதை ஆமோதிக்கவும், கவுண்டர் கொடுக்கவும் என்று பல குரல்கள் வந்து கொண்டிருந்தது.

இறுதியாக கம்ப்யூட்டர் துறைக்கு வந்தவள், “ இதுவரைக்கு போட்டி நடந்த இடத்துல எல்லாம் அனேகமா எஞ்சினியர்ஸ் இருக்க டீம்தான் ஜெயிச்சிருக்கு. நீங்க எப்படி? பேரை காப்பாத்திக்கப் போறீங்களா? இல்லை இங்க இருக்கவங்க எல்லாம் ஜெராக்ஸ் எஞ்சினியர்ஸா?”, அவள் கேள்வியில் போட்டியாளர்களும் விஷயம் தெரிந்தவர்களும் சிரிக்க,

“அதென்னமா ஜெராக்ஸ் எஞ்சினியர்?”, என்றார் ஒருவர்.

“நல்லா படிக்கற சீனியர் புண்ணியவான் யாராச்சம் எழுதி வைச்ச நோட்சை ஜெராக்ஸ் எடுத்து, அதை மட்டும் படிச்சி பாஸ் மார்க் வாங்கி அரியர்ஸ் க்ளியர் பண்ணி எஞ்சினியரா வெளிய வரவங்கதான் சர் ஜெராக்ஸ் எஞ்சினியர்.”, ஸ்ரீ சொல்லவும் சிரிப்போடு அதற்கான கவுண்டர்களும் பறந்தன.

போட்டி சூடு பிடித்திருந்தது. இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கியிருந்தது. ஸ்ரீ  சுற்றி சுற்றி வந்து உற்சாகப்படுத்தியும் கிண்டலடித்தும் கலகலப்பாக வைத்திருந்தாள், “ பொதுவா ஒன்னு சொல்லிக்கறேன். இதே போட்டி யூ.கே.ஜி பசங்களுக்கு வெச்சாங்க. அவங்க டவரோட ஹைட் இருவத்தியஞ்சு இன்ச். நீங்க எவ்வளவு கட்டறீங்கன்னு பார்த்துக்கோங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”, என்றதும், “ சான்சே இல்லை… பொய்..”, என்றது எஞ்சினியர் கூட்டம்.

“விடியோ இருக்கு, லிங்க் தரேன். டைம் ஆகப்போது… கவனம் கவனம்.”, என்று துரிதப்படுத்தினாள்.

கடைசி நேர உத்தரவுகள் பார்வையாளர்களிடமிருந்து நாலா பக்கமும் பறக்க, ஒவ்வொரு  டீமாக மார்ஷ்மெல்லோவை அவர்கள் டவர் மீது நிறுத்தி வைக்க ஆரம்பித்தார்கள். லேசான எடையாக இருந்தாலும், அதை வைத்ததுமே, மானேஜர்கள் கட்டியது பாதி சரிந்து மடங்க, போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள்.

அக்கவுண்ட்ஸ் ஆட்கள் டேப் போதாமல் பன்னிரண்டு இன்ச் மட்டுமே கட்ட முடிந்தது. ஷிப்பிங்கிலிருந்த எஞ்சினியர்களுக்கும் கணினித்துறை எஞ்சினியர்களுக்கும்தான் போட்டியாக இருந்தது.

மார்ஷ்மெல்லோ வைத்த பின் டவர் தனிச்சையாக முப்பது நொடிகள் நின்றால்தான் அதன் உயரம் கணக்கில் எடுக்கப்படும். இருவருமே சமமாக இருபத்தி எட்டு இன்ச் கட்டி வைத்திருந்தனர். ஷிப்பிங்கிலிருந்தவர்கள் மார்ஷ் மெல்லோவை வைக்க, சற்று ஆடினாலும் நின்றது. கணினித்துறையினர் வைத்ததும் மேலிருந்தது வளைய மார்ஷ்மெல்லோவோடு  சில குச்சிகள் விழுந்தது. முடிவில் கப்பல் துறையே வெற்றி பெற்றதாக அறிவித்தாள் ஸ்ரீ.

ஆரவாரம் சற்று அடங்கியதும், “ யூ.கே.ஜி பசங்க இருவத்தி அஞ்சு இன்ச் கிட்ட கட்டினாங்க. ஏன்னா அடிக்கடி செஞ்சதை, நிக்குதான்னு மார்ஷ்மெல்லோவை வெச்சு ட்ரையல் பார்த்தாங்க. விழுந்துச்சுன்னா ஏன் விழுந்துச்சுன்னு பார்த்து சரி செஞ்சாங்க. அங்க ஈகோ இல்லை.  இங்கேயும் ஷிப்பிங், முதல்ல பன்னென்டு இன்ச் கட்டும் போது வெச்சு பார்த்தாங்க. அப்ப க்ராவிட்டில (புவி ஈர்ப்பு), டவர் சாஞ்சுது. தேவையான இடத்துல இன்னும் கொஞ்சம் டேப் போட்டாங்க. அடுத்த இரண்டு முறை இடையில ட்ரையல் பார்த்தாங்க. தேவைப்பட்ட இடத்துல சரி செஞ்சாங்க. அதுதான் வெற்றி குடுத்துச்சு. இந்த கேமோட நோக்கம், இந்த அடிப்படை விதியை ஞாபகப் படுத்தறதுதான்.  பேப்பர்ல ஆயிரம் ஐடியா சூப்பரா தெரியும். எதையும் ப்ளான் பண்ணுங்க. அப்பப்ப ட்ரையல் பார்த்து தப்பை சரி பண்ணுங்க. டீமா விளையாடுங்க. முக்கியமா செய்யற வேலையை எஞ்சாய் பண்ணி செய்ங்க. “, என்று முடிக்கவும் கரகோஷம் அவளை வரவேற்றது.