அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 10

தனசேகரை அடித்து உதைத்துப் போலீஸ் வாக்குமூலம் வாங்கி விட்டது. கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்துக்கு வந்தது. தனசேகர் முதலில் சக்ரவர்த்தித் தங்கைக்குத் துரோகம் செய்தார் என்பதால்… ஆத்திரத்தில் செய்து விட்டதாகச் சொன்னார்.

இது ஒன்றும் இப்போது நடந்தது இல்லையே… கோபம் வருவது என்றால் இருபது வருடங்களுக்கு முன்பல்லவா வர வேண்டும்.

தன் தங்கச்சி பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துச் செய்ததாகச் சொன்னார். சக்ரவர்த்தியின் இளைய மனைவிக்குச் சொத்துக்கள் எல்லாம் கொடுத்து விட்டு, தன் தங்கைக்கும், தங்கையின் பிள்ளைகளுக்கும் எதுவும் கொடுக்காமல் இருந்து விடுவாரோ என்ற அச்சத்தில் செய்ததாகச் சொன்னார்.

அப்படி சக்ரவர்த்தி நினைத்தால்… எதற்காக மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும். அதோடு மனைவி மற்றும் பிள்ளைகளின் பொறுப்பை அவர் தட்டிக் கழிக்கவே இல்லையே… பிறகு அதற்கான அவசியமே இல்லையே….

வேறு யாரெல்லாம் இதற்கு உடந்தை என்னும் போது… “என் தங்கச்சி எதாவது செய்யணும்னு சொல்லுச்சு. எதாவது பண்ணி அவங்களை விரட்டனும்னு சொல்லுச்சு. என் தங்கச்சிக்காகப் பண்ணேன்.” என்றார். ஆனால் சந்திரா தான் கொலை செய்யச் சொல்லவில்லை என்றார்.

வழக்கு விசாரணை இழுத்துக் கொண்டே சென்றது. இதற்கு இடையில் திருமணதிற்கு ஒருமாதம் இருக்கும் போது, ஸ்ரீநிதிக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டினர். “யாருக்கும் பத்திரிகை கொடுக்க வேண்டாம். பையனுக்கு இப்போது வெளிநாட்டில் இருந்து வர முடியாது. திருமணத்தை இப்போது வைக்க வாய்ப்பில்லை.” என்றனர்.

இந்தத் திருமணம் நடக்காது என்று சொல்லாமல்… அவர்கள் நிறுத்தியது போல இல்லாமல்… இவர்களே புரிந்து திருமணத்தை நிறுத்துவதோ அல்லது வேறு மாப்பிள்ளை பார்ப்பதோ… அவர்கள் இஷ்ட்டம் என மாப்பிள்ளை வீட்டினர் நினைத்தனர்.

சந்திரா அது எப்படி அப்படிச் சொல்லலாம் எனச் சக்ரவர்த்தியிடம் குதித்தார். நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க, அதெல்லாம் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்றார்.

நாம அவங்களை வற்புறுத்த முடியாது.” என்ற சக்ரவர்த்தி வேறு இடம்தான் பார்க்க வேண்டும் என்றார். ஆனால் சந்திரா கேட்காமல் அவரே மாப்பிள்ளை வீட்டினரை தொடர்பு கொண்டு பேசினார்.

உங்க அண்ணனே உங்க வீட்டுகாரரை ஆள் வச்சு கொலை செய்யப் பார்த்திருக்கார். இதுல உங்க வீட்ல இருந்து பெண் எடுத்திட்டு நாங்க பயந்திட்டே இருக்க முடியுமா? இப்போ நாட்டில என்ன எல்லாம் நடக்குது. பொண்ணுங்களே புருஷனை வேற ஆள் கூடச் சேர்ந்து கொலை பண்றது எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது.”

உங்க குடும்பத்தோட எங்களுக்கு ஒத்து வராது. எங்களை ஆளை விடுங்க.” என மாப்பிள்ளை வீட்டினர் முடித்து விட்டனர்.

அப்போது தான் சந்திராவுக்கு மண்டையில் ஓங்கி அடித்தது போல உரைத்தது. அதுவரை அண்ணன் செய்ய இருந்த கொலையைக் கூடச் சாதாரணமாக நினைத்திருந்தார்.

உனக்கு இன்னும் உங்க அண்ணன் செய்ய இருந்த காரியம் புரியலை. இன்னைக்கு என்னைக் கொலை செய்யத் துணிஞ்சவர், நாளைக்குச் சொத்துக்காக உன்னையும் பிள்ளைகளையும் கொல்ல மாட்டாருன்னு எந்த நிச்சயமும் இல்லை.”

இப்போ கொலை எல்லாம் சர்வ சாதாரணமா போயிடுச்சு. முன்னாடி போலீஸ் ஸ்டேஷன் உள்ள போய்ட்டு வெளிய வந்தா.. நம்மைத் தப்பா நினைச்சிடுவாங்கலோன்னு பயந்த காலம் எல்லாம் உண்டு.”

இப்போ கொலையையும் சர்வ சாதாரணமா செய்யுறாங்க. எந்தத் தைரியத்துல பண்றாங்கன்னு புரியலை. மாட்டிக்க மாட்டோம்னா… மாட்டிகிட்டாலும் வெளிய வந்திடலாம்னு தைரியமா?”

உன் அண்ணி உன்னைப் பத்தி சொல்றது தப்பே இல்லை. நீ கொலை செய்யலைனாலும், கொலை செய்யுர அளவு தூண்டினது நீதான். பணம் சொத்துன்னு எப்பவும் நீதான் பேசுவ….”

ஆரியன் சொன்னது உண்மைதான். நீங்க அப்பவே சட்டபடி போயிருக்கணும் மாமான்னு சொன்னான். உன்னை அப்பவே நான் விவாகரத்து பண்ணி இருக்கணும். பிள்ளைகளுக்காகப் பார்த்தது, எங்க கொண்டு வந்து நிறுத்திடுச்சு பார்த்தியா?”

ஆனா இன்னொன்னு நான் அப்பவே விவாகரத்து கேட்டிருந்தா… என்னை அப்பவே முடிக்கத்தான் நீங்க பார்த்திருப்பீங்க.”

வீட்ல பார்த்த பொண்ணுன்னு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு, நான் பட்டபாடு, என்ன சொல்றது. பொண்ணுங்களுக்காவது நல்ல வாழ்க்கை அமையும்னு பார்த்தா… இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேண்டாம்னு சொல்றாங்க. இனி நான் எங்க போய் மாப்பிள்ளை பார்ப்பேன்.” எனச் சொல்லிவிட்டு சக்ரவர்த்தி அங்கருந்து சென்றார்.

திருமணம் நின்றது தெரிந்ததும், ஸ்ரீநிதியும் அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு அழைத்தாள்.

உங்க குடும்பத்து மேல இருந்த நல்ல அபிப்ராயம் போயிடுச்சு. சந்தேகத்தோடவே வாழ முடியாது இல்ல… இதை இதோட விட்டுடலாம்.” என்றவன், காரணம் சொல்லி விட்டது என்பது போலக் கைப்பேசியையும் அனைத்து வைத்தான்.

விசாரணை என்ற பெயரில் ஸ்ரீகாந்த ஒருவழியாகி இருந்தான். அதனால் இப்போது வாழ்க்கையைப் பற்றிய பயம் வந்திருந்தது. அதனால் அவன் ஒழுங்காகக் கடையில் இருக்க ஆரம்பித்தான். அப்பா இருப்பதால் தான் தாங்கள் இந்த அளவுக்கு நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்று புரிந்ததால்… சக்ரவர்த்தியிடம் முன்பு போல ஒட்டாத தன்மை இல்லாமல்… வியாபாரத்தில் அவரிடம் கேட்டு, அவர் சொல்படி நடக்க ஆரம்பித்தான். அது ஒன்றுதான் ஆறுதலான விஷயம்.

இந்துஜா ஒரு மாதம் வரை படுக்கையில் இருந்தவர், இப்போது வீட்டுக்குளேயே ஊன்றுகோலை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அதிக நேரம் அவரால் நிற்க முடியாது. அதனால் சமையல் அறையில் நாற்காலியில் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பார். கல்லூரிக்குச் செல்வதற்கு முன் சம்யுக்தா, அவர் சொல்ல சொல்ல சமையலை முடித்து விடுவாள்.

கடந்த ஒரு மாதமாக சக்ரவர்த்தியிடம் வேலைப் பார்க்கும் பையனின் அம்மா வந்து, காலை முதல் மாலை வரை உடன் இருந்து இந்துஜாவை பார்த்துக் கொண்டார். அப்போதும் சமையல் சம்யுக்தா தான் செய்தாள். பக்கத்துக்கு வீட்டு வாணி அவளுக்கு உதவினார்.

இப்போது இந்துஜாவுக்குக் கொஞ்சம் குணமாகி விட்டதால்… இவர்களே பார்த்துக் கொண்டனர்.

இந்துஜாவுக்கு அதிக நேரம் உட்காந்து கூட இருக்க முடியாது. அதிகமாக நின்று விட்டால்…. காலில் வலி அதிகமாகி, உடல் வியர்த்து ஒரு மாதிரி ஆகி விடுவார். அப்படி இருந்தால் வலி மாத்திரை போட்டுக் கொண்டு படுத்து விடுவார். மற்ற நேரங்களில் வலி மாத்திரை எடுப்பது இல்லை.

அதே முஹுர்த்தத்தில் திருமணத்தை வைத்து விடலாம் எனச் சக்ரவர்த்தி ஸ்ரீநிதிக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்.

சந்திராவும் மகள் திருமணத்தை அதே முஹுர்த்தத்தில் முடித்து விடத் தீவிரமாக இருந்தார்.

இந்த மனுஷனுக்குக் கூறே இல்லை. கையில மாப்பிள்ளையை வச்சுகிட்டு வெளியே தேடிட்டு இருக்கார்.” என்றவர், ஆரியனை ஸ்ரீநிதிக்குச் செய்யலாம் என்றார்.

அம்மா அது நடக்க வாய்ப்பே இல்லை. ஆஸ்பத்திரியில இருந்த போது, சம்யுக்தாவை ஆரியன் அத்தான் மட்டும் இல்ல…. அந்தக் குடும்பமே அப்படித் தாங்கினாங்க. அது வெறும் அப்பாவோட பொண்ணுங்கிறதுனால மட்டும் இருக்காது.” என்றான்.

இங்கிதம் தெரிந்தவர்கள், மான ரோஷம் பார்ப்பவர்கள் என்றால்… இதோடு விட்டு விடுவார்கள், சந்திரா விட்டு விடுவாரா… அவர் அன்றே சரளா வீட்டுக்கு மாமியாரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

உங்க அம்மா தான் ஸ்ரீநிதிக்கு ஆரியனை செய்யலாம்னு சொன்னாங்க. நீ இப்போ எனன் சொல்ற? என் பொண்ணுக்கு ஒரு வழியைச் சொல்லு.” என்றார் தடாலடியாக.

அத்தை…. நடுவுல நடந்ததை உங்க வசதிக்கு மறந்திட்டு பேசுறீங்களா? இல்லைனா எங்களை அவ்வளவு முட்டாள்னு நினைச்சீங்களா?” என ஆரியன் வந்து உட்கார… அவன் ஊருக்கு வந்திருப்பது சந்திராவுக்குத் தெரியாது.

உங்க பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூட நிச்சயம் ஆச்சு நியாபகம் இருக்கா… என்னவோ நாங்க உங்களை ஏமாத்தின மாதிரி பேசுறீங்க.”

அதுதான் இல்லைன்னு ஆகிடுச்சு இல்ல… உன் அம்மாவுக்கு அண்ணன் பொண்ணு தானே… உங்க அம்மாவுக்கு உண்மையிலேயே அண்ணன் மேல பாசம் இருந்தா… கல்யாணம் நின்னது தெரிஞ்சதும், அவ வந்து  உனக்குப் பேசி இருக்கணும்.” எனச் சந்திரா பேசிக் கொண்டே செல்ல… சரளா வாயடைத்து போய் நின்றார். இப்படித் தங்கள் மீதே திருப்ப முடியமா என்று?

ஓ… நீங்க வரணும்னா நாங்க வரணும், இல்லைனா போகணுமா. அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை அத்தை. நீங்க ஏன் அம்மாவை எல்லாம் இழுக்குறீங்க. எனக்கு முதல்ல ஸ்ரீநிதியை கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லை.”

ஏன் வேற யாரும் பொண்ணு ரெடியா இருக்கா?”

அதைப் பத்தி உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை. கல்யாணம் முடிவு பண்ணா எல்லோருக்கும் போல உங்களுக்கும் சொல்லுவோம்.”

நானும் பார்க்கிறேன் அப்படி எந்த உலக அழகியை நீ கல்யாணம் பண்றேன்னு.” எனச் சந்திரா காட்டமாகச் சொல்ல…

அத்தை இன்னும் உங்களுக்குப் புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? ஸ்ரீநிதி கல்யாணம் நின்னதுக்குக் காரணம் நீங்களும், உங்க குடும்பமும்.”

நீங்க இன்னும் திருந்தலைனா… எங்களுக்கு ஒன்னும் இல்லை… உங்களுக்குத் தான் நஷ்ட்டம்.”

இவனிடம் பேச முடியாது என்பதை உணர்ந்த சந்திரா அடுத்த அஸ்த்திரத்தை சரளாவை நோக்கி எய்தார்.

ஒரு இடத்தில இருந்து பொண்ணு எடுக்கிறோம்னா… அந்தக் குடும்பத்தோட கெளரவமே அதுல தான் இருக்கு. சேர்த்துகிட்டவ பெண்ணை எல்லாம் எடுத்தா… நாளைக்கு ஊரு உங்களைத்தான் காரி துப்பும். அவினாஷுக்கு யாரு பொண்ணு கொடுப்பா.” என்றார்.

யாரு இதைச் சொல்றதுன்னு பாருங்கப்பா.” எனக் கேலியாகக் கேட்ட அவினாஷ், “என் மேல என்ன திடிர் அக்கறை?” எனக் கேட்டான்.

அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியும், தெரிஞ்சும் சம்பந்தம் பேச வந்திருக்கீங்க.”

எங்க மாமா அவங்களைக் கல்யாணம் தான் பண்ணி இருக்கார். அதோட கொலைக்கார குடும்பத்துக்கு…. இது எவ்வளவோ பரவாயில்லை.” என ஆரியன் சொல்ல… சந்திரா விருட்டென்று அங்கருந்து கிளம்பி சென்றார்.

என்ன டா இவங்க இன்னும் இப்படி இருக்காங்க.” என சரளா கவலைகொள்ள…

அம்மா திருந்திறவங்களா இருந்தா… மாமா இன்னொரு கல்யாணம் பண்றேன்னு சொன்ன போதே திருந்தி இருக்க மாட்டாங்களா… அதுக்குப் பிறகும் அவங்க நினைச்சிருந்தா நல்லபடியா மாறி இருக்கலாமே… சில பேரோட அடிப்படை குணம் எல்லாம் மாறவே மாறாது.” என்றான் ஆரியன்.