சந்திராவின் முகம் கலவரம் அடையவே செய்தது. வேறு யார் செய்திருந்தாலும் முதல் சந்தேகம் இவர்கள் மேல் தானே வரும். அதுவரை ஆச்சா போச்சா எனக் கத்திக் கொண்டிருந்தவர், அமைதியாகிப் போனார்.

மதுரைக்குப் போகலை…” என ஸ்ரீகாந்த் வேண்டுமென்றே கேட்க…

அதுதான் உங்க அப்பாவுக்குச் சரி ஆகிடுச்சுன்னு சொன்னியே…. இனிமே போய் என்ன செய்ய?” எனச் சொல்லிவிட்டு சென்றார்.

ஸ்ரீகாந்த் அங்கிருந்த ஸ்ரீநிதியை பார்த்தவன், “ஏன் ஆரியன் அத்தான்கிட்ட அப்படிப் பேசின…” எனக் கேட்க….

அம்மா தான் சொன்னாங்க.” என்றாள்.

சும்மா அம்மாவை எல்லாம் காரணம்னு சொல்லாத…”

நான் அவர்கிட்ட கேட்கத்தான் செய்தேன். சென்னை பெங்களுர் போலன்னா கூடச் சரின்னு தான் நினைச்சேன். அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தா, அவரும் தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாமே. ஏன் இங்க இருந்து பண்ற வேலையை அங்க இருந்து பண்ண முடியாதா?”

என்னவோ போ… நம்மைச் சுத்தி என்னென்னவோ நடந்திட்டு இருக்கு. இதுல நாமே நம்ம தலையில மண்ணை வாரி போட்ட மாதிரி தோணுது.”

ஏன் என்ன ஆச்சு?”

அப்பாவை யாரோ வேணும்னே வண்டியை விட்டு இடிச்ச மாதிரி போலீஸ்காரங்க சந்தேகப்படுறாங்க.” என்றதும்,

யாரு பண்ணி இருப்பா?” என்றாள்.

யாரு பண்ணி இருந்தாலும் முதல் சந்தேகம் நம்ம மேலதான் வரும்.”

அதைக் கேட்டு ஸ்ரீநிதி கொஞ்சம் பயந்துதான் போனாள்.

ஆரியன் மருத்துவமனை செல்லும் வழியில், “தெரியாவங்க யார் வந்து உன்னோட பேசினாலும் பேசாத… எதுனாலும் உங்க அப்பாவை கேட்க சொல்லு… இல்லைனா எனக்குப் போன் பண்ணு. ஹாஸ்பிடல் உள்ளதான் நீ இருக்கணும். வெளிய வரக் கூடாது.”

ஏன்?”

எல்லாத்துக்கும் உனக்குக் காரணம் சொல்ல முடியாது. சொன்னதைச் செய்.” என ஆரியன் சொல்ல… சம்யுக்தா சரி என்றாள். அம்மா உங்களுக்கும் தான் என்றான்.

அவினாஷ் சம்யுக்தாவை பார்த்து சிரிக்க… அவள் என்ன என்றாள். “இல்லை… காலேஜ்ல நீதான் என்னை மிரட்டிட்டு இருப்ப… இப்ப உன்னையும் ஒருத்தன் மிரட்டுறான் பாரு. அதை நினைச்சு தான் சிரிச்சேன்.” என, சம்யுக்தா அவனை முறைத்தாள்.

வாயிலிலேயே அவர்களை இறக்கி விட்டு, அவர்கள் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு, அண்ணனும் தம்பியும் சென்றனர்.

இந்துஜாவை ஆம்புலன்சில் வெளியே அழைத்துச் சென்றுதான் மாவு கட்டு போட்டுவிட்டு வந்தனர். அவரை ஆம்புலன்சில் இருந்து இறக்காமல், வண்டியில் வைத்தே வலது காலில் கட்டு போட்டுக் கொண்டு வந்தனர். அறுவை சிகிச்சை இன்னும் இரண்டு நாட்கள் சென்று செய்வதாக இருந்தது.

சரளா மதியம் அவினாஷுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டார். சம்யுக்தா அவள் அம்மாவுடன் அறையில் இருக்க… வெளியே காத்திருப்போர் இருக்கையில் சக்ரவர்த்தியும் ஜெயகுமாரும் இருந்தனர். சரளா இருக்கும் போதே இருவரும் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வந்திருந்தனர்.

மாலை அவினாஷ் சென்று அண்ணனை அலுவலகத்தில் இருந்து அழைத்து வந்தான். அவினாஷை துணைக்கு வைத்துவிட்டு காவல் நிலையம் சென்று வந்தனர்.

வண்டியையும் வண்டி ஓட்டுனரையும் பிடித்து விட்டால் யார் என்று தெரிந்து விடும் என்றனர்.

தனசேகர் மேல தான் சதேகமா இருக்கு. அவர் ஆளும் எங்கப் போனாருன்னு தெரியலை. அவர் போன்னும் போக மாட்டேங்குது.” என்றார் காவல் அதிகாரி.

சக்ரவர்த்தியை மீண்டும் வந்து மருத்துவமனையில் விட்டு ஆரியன் சம்யுக்தாவையும் அவினாஷையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

மறுநாள் தனசேகரை தேடி காவல் துறையினர் வீட்டுக்கே வந்து விட்டனர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. காவல்துறையினர் முத்துக்குமாரையும் ஸ்ரீகாந்தையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.

இதில் முத்துக்குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பேச… அவரைக் காவல் நிலையத்திலேயே உட்கார வைத்து விட்டனர்.

தனசேகரின் மனைவியும் முத்துக்குமாரின் மனைவியும் சந்திராவிடம் வந்து சண்டை போட்டனர்.

நீ ஒழுங்கா புருஷனோட குடும்பம் நடத்தாம… சும்மா என் புருஷனையும் இவ புருஷனையும் தூண்டி விட்டு, இப்போ இவங்களும் என்ன செஞ்சாங்களோ தெரியலை… இப்போ போலீஸ் அவங்களைப் பிடிக்குது. எல்லாம் உன்னால தான். நீ நல்லா இருப்பியா… அது இதுவென்று சாபம் கொடுத்தனர்.

சந்திராவா அசருபவர், “நான் எதுவும் உங்க புருஷன்கிட்டே செய்யச் சொல்லலை… அவங்க செஞ்சதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது.” என்றார்.

பார்த்தியா… இவங்க பொறுப்பு இல்லையாம். அப்போ எதுக்கு என் புருஷன்கிட்டையும் இவ புருஷன்கிட்டையும் இல்லாததையும் பொல்லாததையும் பேசுனீங்க. கடைசியில நாங்க தான் முட்டாள். உங்களை எல்லாம் வீட்டுக்குள்ளையே சேர்த்திருக்கக் கூடாது.” என்றவர்கள் மேலும் நன்றாகத் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் காவல் நிலையத்தில் சென்றும் அதையே சொல்ல… தனக்கு வேறு தண்டனை கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் முத்துக்குமார், “எங்க அண்ணன் தாங்க ஒருமாதிரி பேசிட்டு இருந்தார். எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைங்க. நான் என் பொண்டாட்டி வீட்டு விஷேசத்துக்குப் போனவன், இன்னைக்குக் காலையில தான் வந்தேன். வேணா என் போன் எடுத்து பாருங்க. நான் என் அண்ணான்கிட்ட கூடப் பேசலை.” என்றான்.

இதோ இவனுக்குத் தெரிந்திருகிறது என்று காவல்துறையினர் முத்துக்குமாரை தூண்டித் துருவி விசாரிக்க ஆரம்பித்தனர். சந்திராவையும் காவல் நிலையதிற்கு வர சொல்லி விசாரிக்க…

என் புருஷன் இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்பதைச் சொல்லாமல்… இன்னொரு பொம்பளையைச் சேர்த்திட்டு இருக்கார். அது தெரிஞ்சா பொண்டாட்டிக்குக் கோபம் வருமா இல்லையா… கோபத்தில விரட்டுனும்னு சொன்னேன். ஆனா கொலை எல்லாம் பண்ண சொல்லலை. யாரோ எவரோ பண்ணதுக்கு, நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.” என்றார்.

பெண் காவல் அதிகாரியை விட்டு அவரை மேலும் விசாரித்தனர்.

ஊரை விட்டு எங்கும் போகக் கூடாது என்று சொல்லி, அவரை இரவு நேரம் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

தனசேகர் கிடைக்கும் வரை முத்துக்குமாரை காவலில் வைத்து விட்டனர். ஸ்ரீகாந்தையும் எங்கும் வெளியூர் செல்லக் கூடாது என்று சொல்லி எச்சரித்து அனுப்பினர்.

தனசேகர் என்ன நிலவரம் என்று தெரிந்துகொள்ளக் கைபேசியை உயிர்பித்தவர், அதற்காகவே காத்துகொண்டிருந்த காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டார்.

செல்போன் சிக்னலை வைத்து, தேனியில் அவர் பதுங்கி இருந்த மில்லில் இருந்து அழைத்து வந்தனர். அதோடு லாரியை கொண்டு வந்த ஓட்டுனரும் மாட்டிக்கொள்ள… தகுந்த ஆதாரத்தோடு தனசேகர் அன்று இரவே கைது செய்யப்பட்டார்.

மறுநாள் இந்துஜாவுக்குக் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்துஜா பிழைத்துக் கொண்டார் தான். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் ஆற வெகு நாட்கள் ஆகும்.

தனசேகர் பிடிபட்டதும், ஆரியன் சம்யுக்தாவை கல்லூரி சென்று வர சொன்னான். அவள் அவினாஷோடு கல்லூரிக்கு சென்று விட்டு வந்து, மாலையில் இருந்து இரவு வரை மருத்துவமனையில் இருந்தாள்.

பகல் வேளையில் சரளாவும் வாணியும் ஆளுக்குப் பாதி நேரம் இருந்து பார்த்துக் கொண்டனர். சக்ரவர்த்தியும் அவ்வபோது சென்று வெளி வேலைகளை முடித்துவிட்டு வருவார்.

ஆரியன் அவன் அம்மாவை மருத்துவமனையில் விட வந்தவன், அப்படியே இந்துஜாவை பார்த்து விட்டு செல்ல வந்தான். இந்துஜா பார்க்கவே ரொம்ப அசந்து போய்த் தெரிந்தார்.

அப்போது மருத்துவர் பரிசோதனைக்கு வர… “அத்தை இப்போ உங்க பொண்ணு இல்லை. உங்களுக்கு என்ன பண்ணுதுன்னு சொல்லுங்க. அப்போதான் எங்களுக்கும் தெரியும்.” என்றான்.

மாத்திரை பவர் போயிட்டா கால் ரொம்ப வலிக்குது. வலி தாங்க முடியலை. இதுக்குப் பேசாம செத்தே போயிருக்கலாம்னு இருக்கு.” என்றார்.

வலி நிவாரணி மாத்திரைகளை ஓரளவுக்கு மேல் எடுத்துகொள்ளக் கூடாது என்ற மருத்துவர், அப்படிக் கண்டிப்பாகத் தேவைப்படும் போது கூட ஒருநேரம் எடுக்கச் சொன்னார்.

சக்ரவர்த்தி, சரளா, ஆரியன் என எல்லோருக்கும் கஷ்ட்டமாக இருந்தது. வலியை அவரவர் தானே அனுபவிக்க முடியும். வேறு யாரும் வாங்கிக்கொள்ள முடியாதே…

அத்தை மூணு வேலைக்குப் பதில் சாயந்திரம் ஒரு தடவை மாத்திரை போடுங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்ல காயம் ஆறிட்டா வலி குறையும். அப்போ குறைச்சுக்கலாம். அதுக்காக வலியில இருக்க முடியாது. வலியில இருந்தா வேற எதையும் யோசிக்கவும் முடியாது. நைட் தூங்கிற நேரம் மாத்திரை போடுங்க. அப்போதான் உங்களால தூங்க முடியும்.” என்றான்.

அம்மா அத்தைக்குச் சாயந்திரம் ஒரு தடவை வலி மாத்திரை கொடுங்க.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

வலியிலேயே இருந்தார் இந்துஜா… ஆரியன் சொன்னது போலச் செய்ததும், இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மாலை மகள் வந்த போது, சற்று தெளிவாகவே இருந்தார்.

தனசேகரை காவல் துறையினர் விசாரித்துக் கொண்டிருந்தனர். இந்துஜாவின் உடல்நிலையைப் பற்றிய கவலையில், இவர்கள் யாரும் இன்னும் அதைப் பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்யும் தானே….

ஒருவாரம் சென்றதும் வாக்கர் வைத்து நடக்க மருத்துவமனையில் பயிற்சி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர். சம்யுக்தா அவளது விருப்பபடி அவள் அம்மாவுடன் தான் அவர்கள் வீட்டுக்கு சென்றாள்.

முதல் நாள் மருத்துவமனையில் இருந்து சென்றார்கள் என்றால்… அடுத்த நாள் சடகோபப்னும் ஊரில் இருந்து வந்திருக்க… குடும்பமாக இந்துஜாவை பார்க்க கிளம்பி சென்றனர்.

அப்போது தான் இந்துஜாவுக்கும், சம்யுக்தாவுக்கும் இது கொலை முயற்சி என்று தெரியும்.

சம்யுக்தா தெரிந்ததில் இருந்து பதட்டமாகவே இருந்தவள், “அவங்களுக்கு என்ன வேணுமாம்? சொத்து வேணுமா? அவங்களையே வச்சுக்கச் சொல்லுங்க.” என்றாள்.

அவள் அம்மாவிடம், “அம்மா நாம ரெண்டு பேரும் எங்காவது போயிடலாமா… அப்போவாவது அப்பாவை எதாவது பண்ணாம இருப்பாங்களா?” என்றவள்,

அப்பா நீங்க மட்டும் அவங்க உங்க சொந்தக்காரங்கன்னு அவங்களை எதுவும் பண்ணாம விட்டீங்க. நானும் அம்மாவும் உங்களை விட்டு போயிடுவோம்ப்பா.” என்றாள் மிரட்டுவது போல…

பெற்றவர்கள் சொல்ல வந்ததை அவள் காதிலேயே வாங்கவில்லை.

மூச்சு வாங்க பேசிவிட்டு, முகம் சிவந்து, கண்கள் கலங்கி போய் நின்றவளை பார்த்த ஆரியன், “பேசிட்டியா… போய்த் தண்ணி குடிச்சிட்டு, எங்களுக்கும் கொண்டு வா…” என, சம்யுக்தா அவனை முறைத்துப் பார்க்க…

அவங்களை விடப் போறதா யாரு சொன்னா? எங்களுக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு.” என்றவன், 

அத்தை சீக்கிரம் உடம்பை தேத்துங்க. குறிச்ச தேதியில் கல்யாணம் பண்ணனும்.” என்றான்.