அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 9

சம்யுக்தா முதலில் சென்று குளித்துவிட்டு, அப்படியே அவள் உடைகளைத் துவைத்து விட்டு வந்து பார்க்க… அண்ணனும் தம்பியும் வந்ததும், அப்படியே ஹாலில் தரையில் படுத்து உறங்கி விட்டார்கள் போல… இரவில் இருவரும் உறங்கவே இல்லை. அதோடு அவர்கள் இருவரும் தானே முழுக்க இங்கேயும் அங்கேயும் அலைந்தது.

இப்போது உடனே எழுப்ப மனமில்லாமல்… சம்யுக்தா சோபாவில் சென்று உட்கார்ந்தவள், பிறகு அவளுமே தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

மூன்று மணி போல எழுந்த ஆரியன் அவினாஷை எழுப்பிக் குளித்துவிட்டு சென்று உணவு வாங்கி வர சொன்னான். அண்ணன் தம்பி இருவரும் குளித்துத் தயாராகி, உணவும் வாங்கி வந்த பின்தான் சம்யுக்தாவை எழுப்பினர். மூவரும் உண்டதும் மருத்துவமனைக்குச் செல்ல… மருத்துவமனை வாயிலிலேயே அவ்வளவு பேர் இருந்தனர். சக்ரவர்த்தி மருத்துவமனையில் இருப்பது தெரிந்து தான் அத்தனை பேர் பார்க்க வந்திருந்தனர்.

சக்ரவர்த்தியை பார்த்து விட்டு இந்துஜா இருந்த அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்று விசாரித்தால்… அவரின் உடல் நிலையும் சீராக இருந்தது. அந்த அறையின் முன்பே வரும் உட்கார்ந்து கொண்டனர். இவர்கள் வந்திருப்பது பார்த்து ஸ்ரீகாந்தும் வந்து இவர்களோடு உட்கார்ந்து கொண்டான்.

மாலை வந்த மருத்துவர், இரண்டு மூன்று இடங்களில் காலில் எலும்பு முறிவு இருப்பதால்…. அத்தனைக்கும் அறுவை சிகிச்சை செய்தால்… இந்த நிலையில் இந்துஜா தாங்குவது கடினம் என்று, கால் எலும்பு முறிவுக்கு மாவு கட்டே போடலாம் என்றவர், கணுக்களில் இருக்கும் எலும்பு முறிவுக்கு மட்டும், அறுவை சிகிச்சையே நல்லது என்றார்.

அன்று இரவு சக்ரவர்த்தியை வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி விட்டனர். இந்துஜாவையும் மறுநாள் அறைக்கு மாற்றுவதாக இருந்தது.

ஆரியன் சம்யுக்தாவை அவள் அப்பாவுடன் வீட்டுக்கு செல்ல சொன்னான். அம்மா இல்லாத வீட்டுக்கு செல்ல சம்யுக்தாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால் சொன்னால் ஆரியன் திட்டுவான் என அமைதியாக இருந்தாள்.

அதை உணர்ந்தவன் போல, “நீ இல்லாம உங்க அப்பாவை மட்டும் எப்படி வீட்டுக்கு அனுப்ப முடியும். நீ தான உங்க அப்பாவை பார்த்துக்கணும். நான் இங்க உங்க அம்மாவோட இருக்கேன்.” என்றதும், சம்யுக்தா சரி என்றாள்.

அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் சக்ரவர்த்தியிடம் விசாரிக்க வந்திருந்தார். அவினாஷை சம்யுக்தாவையும் அங்கே இருக்கச் சொல்லி விட்டு ஆரியன் செல்ல… அவனுடன் ஸ்ரீகாந்தும் சென்றான்.

பொதுவான விசாரணை முடிந்த பிறகு….

பெரிய ரோடு அது. ஹைவேயும் இல்லை வேகமா வண்டி ஓட்டிட்டு வர்ரதுக்கு. எப்படி வந்து பின்னாடி இடிச்சதுன்னே தெரியலை.” என்றார்.

இந்துஜாவை விசாரிக்க முடியுமா என்று காவல் அதிகாரி கேட்க…. “இல்லை இப்போ முடியாது, நாளைக்கு இந்த நேரம் வேணா ரூமுக்கு மாத்தி இருப்பாங்க.” என்றான் ஆரியன்.

அப்போது காவல்துறை அதிகாரி ஒரு விவரம் சொன்னார்.

நீங்க தினமும் போற வழியில இருக்கிற சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில்… இந்த வண்டி உங்களை இதுக்கு முன்னாடியே ஒருதரம் தொடர்ந்து வந்திருக்கு.” என்றார்.

கேட்டதும் எல்லோருக்கும் அதிர்ச்சி. இது விபத்து இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என எல்லோருக்கும் புரிந்தது.

சக்ரவர்த்தி உங்க உடல்நிமை சரியானதும், நீங்க ஸ்டேஷன் வந்திட்டு போகணும்.” எனச் சொல்லிவிட்டு காவல் அதிகாரி சென்றார்.

ஒரு தரம் முயற்சி பண்ணவங்க. அப்படியே விட்டுடுவாங்களா?” எனச் சடகோப்பன் சந்தேகம் எழுப்ப….

ஸ்ரீகாந்த் நீ ஊருக்குக் கிளம்பு. மாமா சரியானதும் வருவார்.” என்றான் ஆரியன். அப்போது ஸ்ரீகாந்த் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வெளியே வந்ததும் ஆரியனிடம் மனதில் நினைத்ததைக் கேட்டே இருந்தான்.

ஏன் அத்தான் என்னைப் போகச் சொல்றீங்க. நான் எங்க அப்பாவை கொல்ல பார்த்ததா நினைக்கிறீங்களா?”

நீ அந்த அளவுக்குப் போக மாட்ட தான். ஆனா உன்னைச் சுத்தி இருக்கிறவங்க அப்படி இல்லை. பணம் தான் எல்லாம். பணம் தான் முக்கியம்னு இருக்கிறவங்க, எந்த அளவுக்கும் போவாங்க.”

உனக்குத் தெரியுமா தெரியாதான்னு தெரியலை… நான் உங்க பக்கம் தான் இருந்தேன். மாமா உங்களுக்கு அப்படிப் பண்ணி இருக்கக் கூடாதுன்னு தோணுச்சு. பாட்டி ஸ்ரீநிதியை கல்யாணம் பண்ணிக்கச் சொன்ன போது கூட, பண்ணிக்கலாமேன்னு தான் தோணுச்சு.”

ஸ்ரீநிதி கிட்ட பேசும் போதுதான் தெரிஞ்சுது. என்னை உன் அம்மாவும் தங்கையும், சாய்ஸ்ல வச்சிருக்காங்கன்னு. வேற நல்ல இடம் அமையலைனா என்னைப் பார்க்கலாம்னு.”

எங்க அப்பா அம்மாவை அவங்களுக்கு நல்லா தெரியும். என்னைப் பத்தியும் தெரியும், என் படிப்பு, வேலை, குணம் எல்லாம் தெரிஞ்சிருந்தும், அதையெல்லாம் விடப் பணமும் வசதியும் தான் பெரிசா தெரிஞ்சிது.”

அதுக்குப் பிறகு தான் எனக்கு நிறைய விஷயம் உங்க வீட்டை பத்தி தெரிய வந்தது. உங்க அப்பா பண்ணது தப்புன்னு நீ நினைச்சின்னா… அந்தத் தப்பை பண்ண வச்சது உங்க அம்மா தான்.”

இந்துஜா அத்தை உங்க குடும்பத்தைப் பிரிக்கலை… ஏற்கனவே உங்க அப்பாவும் அம்மாவும் மனசளவுல பிரிஞ்சிட்டாங்க.”

மாமாவை திட்டம் போட்டு கொல்ற அளவுக்கு வேற யார் கூடவும் அவருக்குப் பகை இல்லை. அவர் இல்லாம போனா யாருக்கு லாபமோ… அவங்க தான இதைப் பண்ணி இருக்கணும்.”

அது யாரா இருக்கும்னு எனக்கு ஒரு யூகம் இருக்கு. ஆனா அவர் மட்டுமா… இல்லைனா கூட்டு சேர்ந்தான்னு தெரியணும். போலீசே கண்டு பிடிக்கட்டும்.” என்றான் ஆரியன்.

இது திட்டமிட்ட கொலை எனத் தெரிந்த பிறகு, அதுவும் இன்னும் குற்றவாளியை பிடிக்காத நிலையில்…. பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்த ஆரியன், “மாமா சம்யுக்தா எங்க வீட்ல இருக்கட்டும்.” என்றான்.

சக்ரவர்த்திக்கும் அதுதான் சரி என்று பட… “நாளைக்கு எப்படியும் உங்க அத்தையை ரூமுக்கு மாத்திடுவாங்க. அதனால இன்னைக்கே அந்த ரூமை கேட்டு வாங்கி, நானும் ஜெயகுமாரும் இங்க இருக்கோம்.” என்றார்.

சரி மாமா…” என்றவன், சடகோப்பனை ஸ்ரீகாந்த்துடன் ஊருக்கு செல்ல சொன்னான்.

ஊரிலேயும் வீடு, வாசல், தோட்டம் துறவு இருக்கிறதே… அதனால் அவரும் சரி என்றார்.

அவர்கள் இருவரும் கிளம்பியதும், “மாப்பிள்ளை சம்யுக்தாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் பயந்திடுவா.” என்றார் சக்ரவர்த்தி. ஆரியனும் சரி என்றான்.

இரவு ஒன்பது மணி போல ஆரியன் அவன் அம்மா தம்பியுடன், சம்யுக்தாவையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

சம்யுக்தாவுக்கு அவள் அம்மாவை விட்டுக் கிளம்ப மனம் இல்லை. அதனால் அவள் மருத்துவமனையிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல…

உனக்குக் காவலுக்கு யார் இருக்கிறது. வா காலையில வரலாம்.” என்றான். சக்ரவர்த்தியும் அவளை அவர்களுடன் செல்ல சொன்னார்.

மதிய உணவை வாணி கொண்டு வருவதாகச் சொல்ல… காலை உணவை சரளா கொண்டு வருவதாகப் பேசி வைத்துக் கொண்டு கிளம்பினர்.

இரவு வீட்டிற்கு வந்தும், ஆரியன் குளித்து விட்டு உணவு உண்டவுடன், அவனது மடிக்கணினியுடன் ஹாலில் வேலைப் பார்க்க உட்கார்ந்து விட்டான். சரளாவும் சம்யுக்தாவும் ஒரு அறையில் இருக்க… அவினாஷ் மற்றொரு அறையில் இருந்தான்.

இவர்கள் எல்லாம் சீக்கிரமே படுத்து விட்டனர். சம்யுக்தாவுக்கு அவள் அம்மாவை பற்றிய கவலையில் அசந்த உறக்கம் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் அசதியில் விழித்திருக்கவும் முடியவில்லை.

நள்ளிரவில் ஒருமுறை விழித்தவள், வெளியே ஹாலில் இன்னும் வெளிச்சம் தெரிவதைப் பார்த்து எழுந்து வந்தாள்.

ஆரியன் தீவிரமாக் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் எங்கே சரியாக உறங்கினான். அவனுக்கும் களைப்பாகத் தானே இருக்கும். அப்படியிருந்தும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்னைக்குத் தூங்கிட்டு நாளைக்குப் பண்ணக் கூடாதா?” எனச் சம்யுக்தா கேட்க… விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “படுத்தா எந்திருக்க மாட்டேன். அதுதான் கொஞ்ச வேலையை முடிச்சு வச்சிட்டு படுக்கலாம்னு. எனக்கு இது பழக்கம் தான். வேலை இருக்கும் நாள்ல தொடர்ந்து மூணு நாள் கூடத் தூங்காம இருந்திருக்கேன்.” என்றான்.

அதோடு வேலையில் மூழ்கிப் போனான். அவளோடு கூட எதுவும் பேசவில்லை.

சம்யுக்தா அரை மணி நேரம் உட்கார்ந்து பார்த்தாள், அவன் எழுந்து கொள்வது போல இல்லை. மீண்டும் உள்ளே சென்று படுத்து விட்டாள்.

அவன் எப்போது சென்று படுத்தானோ தெரியவில்லை. காலையில் சரளா எழுந்துகொள்ளும் போதே சம்யுக்தாவும் எழுந்து கொண்டாள். இருவரும் குளித்துத் துவைக்க வேண்டிய உடைகளை எல்லாம் துவைத்து, வீட்டை சுத்தம் செய்து, சமையல் முடிக்கும் வரை அண்ணனும் தம்பியும் எழுந்து வரவில்லை.

எட்டு மணி போலச் சரளா குரல் கொடுக்கப் பிறகே இருவரும் எழுந்து வந்தனர்.

நானும் சம்யுக்தாவும் வேலை எல்லாம் முடிச்சிட்டோம். மதியத்துக்கும் சமையல் செஞ்சாச்சு. சாப்டிட்டு ஹாஸ்பிடல் கிளம்பட்டுமா?” எனச் சரளா கேட்க…

தனியா போக வேண்டாம்மா. நான் வந்து விடுறேன். மதியம் அவினாஷ் கூட நீங்க வந்திடுங்க. சம்யுக்தா மட்டும் இருக்கட்டும். நான் நைட் வரும் போது அவளைக் கூட்டிட்டு வரேன்.” என்றவன், தம்பியிடம், “இன்னைக்கு உன்னோட ப்ளான் என்ன டா?” என்றதற்கு.

ப்ராஜக்ட் விஷயமா காலேஜ் போகணும். அங்க போயிட்டு அப்படியே மதியம் ஹாஸ்பிடல் போய் அம்மாவை கூட்டிட்டு வந்திடுறேன்.” என்றான்.

சரி என்ற ஆரியன் எழுந்து குளிக்கச் சென்றான்.

ஸ்ரீகாந்த் நள்ளிரவுக்கு மேல் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான். காலை அவன் அம்மாவின் காட்டுக் கத்தலில் தான் எழுந்தான். போன்னில் முத்துகுமாரிடம் கத்திக் கொண்டிருந்தார்.

இவர் சொன்னா நான் உடனே கிளம்பிடணுமா? நான் என்ன இவரு வச்ச வேலைக்காரியா? அடிபட்டு கிடக்கிறவ அப்படியே போய்ச் சேர்ந்திடணும். அப்பத்தான் இனிமே இந்த ஆளு ஒழுங்கா இருக்கும்.”

அவருக்கு நாம யாருன்னு காட்ட வேண்டாம். நீ அண்ணன் எல்லாம் கிளம்பி வாங்க. நாம ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கு போய் இவரை இழுத்திட்டு வந்திடலாம்.” எனச் சொல்லிக் கொண்டிருக்க…

அண்ணன் எங்க போனாருன்னே தெரியலை… அவர் போன்னும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது.” என்றான் முத்துக்குமார்.

அவர் பொண்டாட்டிகிட்ட கேளு.”

அவங்களுக்கும் தெரியலை….” என்ற முத்துக்குமார் எதோ சொல்ல வந்து விட்டது போலச் சந்திராவுக்கு இருக்க, அதற்குள் ஸ்ரீகாந்தை பார்த்ததும், “நான் திரும்ப உன்னைக் கூப்பிடுறேன்.” என வைத்து விட்டார்.

என்ன டா உங்க அப்பா உன்னையும் துரத்தி விட்டுட்டாரா?”

அவரை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அதுக்கு மேல நான் அங்க இருந்து என்ன செய்யுறது?”

அவளை…”

அவங்களுக்கு ரொம்ப அடி. அதனால இப்போதைக்கு வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க.”

எல்லாம் செஞ்ச பாவம் அப்படி, கிடக்கட்டும்.” என்றார் சந்திரா காட்டமாக.

அம்மா அவங்க வந்துதான் அப்பா உங்ககிட்ட இருந்து பிரிஞ்சு போனாரா… நீங்க இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.” என்றதற்கு சந்திரா மெளனமாக இருக்க… உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கப் பிரச்சனையில தேவையில்லாம யாரையும் இழுக்காதீங்க.

இதெல்லாம் உனக்கு யாரு சொல்லித் தந்தது. உன் அத்தை மகன் தானே… அந்த மகளுக்கு எதுவும் உங்க அப்பா சொத்து அதிகம் தர்றதா சொல்லி இருக்காரோ….. இவன் அவங்களோடவே சேர்ந்து சுத்திட்டு இருக்கான். உன் அத்தைகாரியும் ஒருமாதிரி தான் இருக்கா.”

அம்மா இப்போ அதெல்லாம் விடுங்க. போலீஸ் வந்தது விசாரிக்க… யாரோ வேணும்னே செஞ்சதுன்னு சந்தேகப்படுறாங்க.” என்றவன், அவன் அம்மாவின் முகத்தை ஆராய்ந்தான்.