பெண் பார்க்கும் அன்று இளரோஜா நிற சேலையைச் சம்யுக்தாவுக்குக் கட்டி விட்டவர், காதில் பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் அதற்குப் பொருத்தமான ஆரமும், கைகளில் தங்க வளையகளோடு கண்ணாடி வளையலும் அணிவித்து, இந்துஜா மகளைத் தயார் செய்திருந்தார்.
கூந்தலையும் எப்போதும் போல இல்லாமல்…புது மாதிரியாக வாரி பின்னலிட்டவர், நெருக்கக் கட்டிய மல்லிகையை மகள் கூந்தலில் சரமாக வைத்து விட்டார்.
மகளுக்கு எல்லா வித அலங்காரங்களும் தானே செய்ய வேண்டும் என்ற ஆசையில்… அழகு கலை பயிற்சிக்கும் சென்று இந்துஜா கற்று வைத்திருந்தார். அவருக்கு இந்தக் கைவேலைகள் எல்லாம் நன்றாக வரும்.
“அம்மா போதும்மா என்னை ரெடி பண்ணது. நீங்க ரெடி ஆகுங்க.” என்றாள் சம்யுக்தா.
எளிமையான பட்டுப் புடவை அணிந்து தயாரான இந்துஜா, மகள் உணவு உண்ணும் போது, ஒரு துண்டை எடுத்து வந்து அவள் மீது போட்டு விட்டார்.
“லேசா சிந்தினாலும் கரை ஆகிடும். சிந்துன பிறகு யோசிக்கிறதை விட… அதுக்கு முன்னாடி யோசிக்கணும்.” என்றார்.
இப்படிப் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர், திருமணத்தில் மட்டும் தனக்குக் கெடுதலாக எதுவும் செய்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில், சம்யுக்தா மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வருத்தமாகவும் இல்லை. ஆரியன் மட்டும் வராமல் இருந்தால் போதும் என்று நினைத்தாள்.
சக்ரவர்த்தியின் நண்பர் ஜெயகுமாரும் வந்துவிட…. அவரும் சக்ரவர்த்தியும் உண்டதும் காரில் கோவிலுக்குக் கிளம்பினர்.
கோவிலில் முதலில் இருந்த விநாயகரை கும்பிட்ட சம்யுக்தா, “கடவுளே எதுவா இருந்தாலும் அதை ஏத்துக்கிற மனநிலையை எனக்குக் கொடு.” என வேண்டிக் கொண்டாள். எதிர்ப்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம்.
பெண் எல்லாம் பார்த்து முடித்த பிறகு, கடைசியில் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடலாம் என்று அங்கிருந்த மண்டபத்தில் எடுத்து வந்திருந்த புது ஜமுக்காலத்தை விரித்துவிட்டு இவர்கள் உட்கார்ந்து கொள்ள… இதே போலப் பெண் பார்க்கும் வைபவங்கள் கோவிலில் அங்கங்கே நடந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் சரளாவும் சடகோப்பனும் வர… உடன் அவினாஷும் வந்தான்.
இந்துஜா கணவரைப் பார்க்க…. நான்தான் சரளாவை வர சொன்னேன் என்றார்.
ஓ பெண் பார்க்கும் போது, அவர்களும் இருக்கட்டும் எனக் கணவர் வர சொல்லி இருப்பதாக இந்துஜா நினைத்துக் கொண்டார். அவர் முதல் முதலில் பார்க்கும் நாத்தனரையும், அவரின் கணவரையும் வரவேற்று அவர்கள் விரித்திருந்த ஜமுக்காலத்தில் உட்கார வைக்க… சம்யுக்தாவும் அவர்களைப் பார்த்து வாங்க என்றாள்.
“எங்க வீட்டுக்கு வந்த பெண்ணா இது. வாயில இருந்து சத்தமே வர மாட்டேங்குதே…” என சடகோப்பன் அச்சர்யப்பட….
“பொண்ணு பார்க்க வர்றாங்கலாம்பா… அதுதான் மேடம் அடக்கமா இருக்காங்க.” என அவினாஷ் தோழியைக் கிண்டல் செய்ய…. ஐயோ ஆரியன் வேறு வந்து விடுவானோ என்ற படபடப்பில் சம்யுக்தா இருந்தாள்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க…. “உங்க அண்ணன் வரலையா?” என அவள் மெதுவாக அவினாஷிடம் கேட்டுப் பார்க்க…
“நீ தான் அவனை வர வேண்டாம்னு சொல்லிட்டியாமே, அதனால வரலைன்னு சொல்லிட்டான்.” என்றான்.
ரொம்ப நல்லதா போச்சு என நினைத்துக் கொண்டாள்.
“உங்க அண்ணன் வேற எதுவும் சொல்லலையா?” என்றதற்கு,
“ஏன் வேற என்ன நடந்துச்சு”? என அவினாஷ் கேட்க….
ஒன்னும் இல்லை என்று தலையசைத்தாள்.
“அதோ மாப்பிள்ளை வந்தாச்சே… “எனச் சக்ரவர்த்திச் சத்தமாகச் சொல்ல… எல்லோரும் எழுந்து நிற்க…. சம்யுக்தா முகத்தில் அவ்வளவு பதட்டம். அவளையும் அறியாமல் பக்கத்தில் இருந்த அவினாஷின் கைகளை… அவள் அழுத்தி பிடித்த விதத்தில்… அவனுக்கே கை வலித்தது.
தோழியின் முகத்தைப் பார்த்தவன், எதை உணர்ந்தானோ, “அண்ணா போதும் உன் விளையாட்டு. சம்யுக்தா எப்படிப் பயப்படுறா பாரு. இந்தக் காலத்தில போய்ப் பொண்ணு பார்க்கிறேன், அது இதுன்னு மிரட்டிட்டு இருக்க.”
மாப்பிள்ளை ஆரியன் தான் என்ற உண்மையை, அவினாஷ் நொடியில் உடைத்தே விட…. சம்யுக்தாவுக்கு ஒரு நொடி தான் எப்படி உணர்ந்தோம் என்றே புரியவில்லை.
இந்துஜாவுக்கும் அதே எண்ணம் தான். “யாரு எவருன்னு தெரியாம ஒரே டென்ஷன். நீங்கதான் மாப்பிள்ளை வீடுன்னு உங்க அண்ணன் சொல்லவே இல்லை அண்ணி.” என்றார் படபடப்பாக.
“அது ஆரியன் பண்ண வேலை. அவன்தான் சொல்லாதீங்க சொன்னது.” என்ற சரளா சம்யுக்தாவைப் பார்க்க, அவள் கண்கள் மூடி நின்றிருந்தாள். சரளா மகனைப் பார்க்க, ஆரியனும் சம்யுக்தாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவினாஷ் சம்யுக்தாவை அங்கருந்து நகர்த்திக் கொண்டு போக…. அவர்கள் பின்னே ஆரியனும் செல்ல…. “அவங்க எண்ணமும் பண்றாங்க. நாம பேசி முடிவு செய்வோம்.” என்றார் சடகோப்பன். எல்லோரும் மீண்டும் உட்கார்ந்து கொள்ள… எடுத்து வந்த பூ, பழங்களை இந்துஜாவும் சரளாவும் தாங்கள் கொண்டு வந்த தாம்பாளத்தில் அடுக்கி வைக்க… திருமணப் பேச்சு வார்த்தை துவங்கியது.
“உங்க அண்ணனை போகச் சொல்லு…. நான் கண்டிப்பா அடிச்சிடுவேன்.” என்றாள் சம்யுக்தா கோபத்தை அடக்கியபடி… சிரிப்புடன் நின்றிருந்த ஆரியனைப் பார்த்து அவினாஷ், “டேய் அண்ணா போ டா….” என…
“நீ போ டா… அவளுக்குக் குடிக்க எதாவது கொண்டு வா…” எனத் தம்பியை அங்கிருந்து கிளப்பியவன்,
“ஹே ரொம்ப டென்ஷன் ஆகிட்டியா?” என்றதும்,
“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் சொல்ல போறேன்.” எனச் சம்யுக்தா சொல்ல வர… அதை யூகித்தது போல…. அவள் வாயை தன் கைக்கொண்டு மூடியவன்,
“ப்ளீஸ் சம்யு, கோவில்ல வச்சு எதுவும் தப்பா சொல்லிடாத…. நீ வீட்ல போய், என்னை நாலு அடி கூட அடிச்சுக்கோ.” என்றதும், சம்யுக்தாவும் அமைதியாகி விட்டாள்.
“நான் உன்னை ஆச்சர்யப்படுத்த தான் நினைச்சேன். ஆனா நீ இப்படி டென்ஷன் ஆவேன்னு நினைக்கலை….. சாரி.” என்றான்.
“நீங்க பேசாதீங்க.”
“ஓகே கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா பேசிக்கலாம்.” என்றவன், தம்பி எடுத்து வந்த குளிர்பானத்தை வாங்கி சம்யுக்தாவின் கையில் கொடுக்க… அவள் குடித்து முடித்ததும் பெற்றவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.
சம்யுக்தா அவள் பெற்றோரின் அருகே உட்கார்ந்து கொள்ள, ஆரியன் எதிரில் உட்கார்ந்தான். எப்போது திருமணம் என்று எல்லாம் பேசி முடித்து, நிச்சயத்தைத் திருமணதிற்கு முன்தினம் வைத்துக் கொள்வோம் என முடிவு செய்தனர். இரு குடும்பத்தாரும் தட்டு மாற்றிக்கொள்ள… சரளா மருமகளுக்குத் தலையில் அவர் கொண்டு வந்த பூவை வைத்து விட்டார்.
அப்படியே குடும்பமாகக் கோவிலுக்குள் செல்ல…. சம்யுக்தா அவினாஷோடு தான் இருந்தாள்.
சாமி கும்பிடும் போது, ஆரியன் அவனாகவே சென்று சம்யுக்தாவின் அருகே நின்று கொண்டான். அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை ஆரியன் சம்யுக்தாவின் நெற்றியில் வைத்து விட… அப்போது இருவரின் பார்வையும் சந்தித்தது. அப்போது தான் சம்யுக்தாவின் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்க்க… அவள் மனம் நெகிழ்ந்திருப்பதை நன்றாகவே ஆரியனால் உணர முடிந்தது.
சந்நிதியில் தம்பதிகளாக விழுந்து வணங்கியாவர்கள், வெளிப்பரகாரத்தில் சென்று உட்கார்ந்தனர்.
“நைட் சாப்பாடு ரெடி பண்ணனும். நாங்க முன்னாடி வீட்டுக்கு போறோம் சரளா, நீங்க கோவில் எல்லாம் சுத்தி பார்த்திட்டு பொறுமையா வாங்க. சம்யுக்தாவும் நீங்க வரும் போது கூட்டிட்டு வாங்க.” எனச் சக்ரவர்த்திச் சொல்ல…
“அத்தை மத்தவங்களுக்கு வேணா வெளிய வாங்குங்க. எனக்கு நீங்க சமைச்சது தான் வேணும்.” என ஆரியன் சொல்ல…. இந்துஜா மருமகனைப் பார்த்து சிநிறைவாக ரித்தவர், மகளிடம் உனக்கு இப்போ சந்தோஷமா என்று கேட்க… சம்யுக்தா ஆமாம் என்று தலையசைக்க… அவள் முகத்தை வருடி விட்டு சென்றார்.
“என்ன இவன் இப்படிப் பறக்காவட்டியா இருக்கான்.” என அவினாஷ் சொல்ல…
“இப்போதான் உனக்குத் தெரியுமா? எங்க அப்பா எனக்கு நிறையச் சொத்துத் தராராம், எங்க வீடு பிடிச்சிருக்காம், அப்புறம் எங்க அம்மா சமையல் நல்லா இருக்காம். அதனால என்னைக் கல்யாணம் பண்ண கேட்டாங்க தெரியுமா?” என்றதும்,
“அப்படியா சொன்னான்?” என்ற அவினாஷுக்கே கொஞ்சம் கடுப்பாக… “கல்யாணம் முடிஞ்சதும் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, நல்லா அடி பின்னிடு. பொண்டாட்டி அடிச்சான்னு வெளிய சொல்லவா முடியும்?” என அவினாஷ் தோழிக்கு யோசனை சொல்ல… அதைக் கற்பனையில் கண்டுவிட்டுச் சம்யுக்தா சிரிக்க… அப்போது ஆரியன் அவர்களிடம் வந்தான்.
“அப்பாவும் அம்மாவும் உன்னைக் கூப்பிடுறாங்க.” எனத் தம்பியிடம் சொன்னவன், சம்யுக்தாவை வேறு பக்கம் அழைத்துச் சென்றான்.
“பின்ன இல்லையா… உன்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளை யாருன்னே தெரியாம இருந்தது ஒரு த்ரிலிங் தானே…”
“இனிமே இது மாதிரி எதாவது பண்ணீங்க அவ்வளவு தான்.”
“சரி இனிமே பண்ணலை…” என்றவன், ஆள் இல்லாத இடத்திற்கு வந்ததும், தன் சட்டை பையில் வைத்திருந்த கற்கள் பதித்த மோதிரத்தை எடுத்து, அவளின் மெல்லிய விரலில் மெதுவாகப் போட்டு விட்டான்.
ஆப்போது பிடித்த அவளின் கையை விடாமல்… கோவிலை விட்டு வெளியே வரையும் வந்தனர்.
“நான் ஒன்னும் உங்களுக்கு கொடுக்க முடியலையே…”
“நாங்க வீட்டுக்கு போறதுக்குள்ள, நீ எதாவது எனக்குக் கொடுத்திடு.” என்றான் குறிப்பாக அவளின் உதடுகளைப் பார்த்து,
“வாங்காம போக மாட்டேன்.” என்றான் அந்த வீம்புக்காரன்.
அவன் நினைப்பதை தான் செய்கிறான் என்பதைச் சம்யுக்தா இத்தனை நாட்களில் உணர்ந்திருந்தாள். இப்போது எப்படித் தன்னிடம் இருந்து முத்தத்தை வாங்குகிறான் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டாள். அவன் எப்படியும் கொடுக்க வைத்து விடுவான் என அவளுக்குத் தெரியும்.
இனிய கனவுகளுடன் அவன் கைபிடித்து நடந்து கொண்டிருந்தாள். அவளைத் தங்கள் காருக்கு அழைத்து வந்திருந்தான். தம்பியை அழைத்து அவர்கள் வர வேண்டிய இடம் சொன்னவன்,
காரை எடுத்துக் கொண்டு சென்று மறுவாயிலில் இருந்த குடும்பத்தாரையும் ஏற்றிக்கொண்டு மாமாவின் வீடு நோக்கி சென்றான்.
சம்யுக்தா அவள் மாமா அத்தையுடன் நன்றாக பேசிக் கொண்டு வந்தாள்.