அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 6

சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார்.

பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டே, “நீ எழுதி கொடுத்தது எல்லாம் மறந்து போச்சா…. அதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். என் பிள்ளைகளுக்காக உன்னை இங்க விட்டிருக்கேன் அவ்வளவு தான்.”

போலீசில்ல புகார் கொடுக்கிறதுன்னா தாராளமா கொடு. இந்த ஊரே எனக்காகச் சாட்சி சொல்ல வரும். நீ எப்படின்னு இந்த ஊருக்கே தெரியும்.”

வீட்டு செலவுக்குன்னு என்கிட்டே வாங்கிற பணத்தை, நீ எந்தச் செலவும் செய்யாம அப்படியே நீ எடுத்துக்கிற. நான் அம்மாகிட்ட கொடுக்கிற பணத்துல தான் அவங்க செலவு பண்றாங்க. இல்லைனா நீ நகையா வாங்கி மாட்டிகிறதுக்கு எல்லாம் எங்க இருந்து பணம் வரும். இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”

ஸ்ரீநிதி, தரகர்கிட்ட நீ கேட்ட மாதிரி மாப்பிள்ளை பார்க்கக் சொல்லி வச்சிருக்கேன். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு இல்லைனா இல்லைன்னு சொல்லு. அதை விட்டு உங்க அம்மா மாதிரி விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு, அவளும் வாழாம மத்தவங்களையும் வாழ விடாம செஞ்ச மாதிரி செய்யாத.” என்றவர், மகனிடம், “உன் அம்மா பேச்சை கேட்டு வீணா போயிடாத. நான் அவ்வளவு தான் சொல்வேன்.” என்றார். பிள்ளைகள் இருவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றனர்.

உன் அண்ணன் தம்பிக்கு என்னையோ என்னைச் சேர்ந்தவங்களையோ பேசுறதுக்கு உரிமை இல்லை. நான் அவங்களுக்குப் பதில் சொல்லனும்னு அவசியமும் இல்லை.”

என் பிள்ளைகள் மூன்னு பேரும் எனக்கு ஒன்னு தான். மூன்னு பேருக்கும் நான் செய்ய வேண்டியதை செய்வேன். அதனால் உன் அண்ணன் தம்பிகள் வந்து இங்க பஞ்சாயத்து பண்ற வேலை எல்லாம் வேணாம். அப்புறம் அவங்களே எல்லாம் பார்த்துகட்டும்னு விட்டுடுவேன்.” எனத் தெளிவாகத் தன் நிலையைச் சக்ரவர்த்திச் சொல்லி விட்டார்.

சந்திரா எதோ சொல்ல வர… “இனி உன் பேச்சை நான் கேட்டுட்டு இருக்க மாட்டேன். ஒழுங்கா இருந்தா பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதை செய்வேன். இல்லைனா அதையும் நீயே பார்த்துக்கோ.” என்றார்.

அம்மா, இனி நான் இந்த வீட்ல சாப்பிட மாட்டேன். நீங்க உங்களுக்கும் அப்பாவுக்கும் மட்டும் பார்த்துக்கோங்க. மத்தவங்களுக்கு எல்லாம் நீங்க சேர்த்துச் செய்ய வேண்டாம். அவங்கவங்க செஞ்சிகட்டும்.”

ஒழுங்கா இருக்கிறதுனா இங்க இருக்கட்டும், இல்லைனா அவங்க பிறந்த வீட்ல சீராட்டதான் தயாரா தான இருக்காங்க. அங்க போய் இருக்கட்டும்.” என்றவர், அதற்கு மேல் அங்கே நிற்காமல் கிளம்பியும் விட்டார்.

சக்ரவர்த்தி அவரின் மொத்த விற்பனை கடைக்குச் சென்று கணக்கை சரி பார்த்துக் கொண்டிருக்க… அப்போது அவரைப் பார்க்க அவரின் ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர்.

அவரிடம் அன்று கோவிலின் முன் நடந்ததைச் சொன்னவர்கள், “உன் தங்கச்சி பையன் போடு போடுன்னு போட்டான்பா… அவங்களைப் பேசவே விடலை…. ரொம்ப நல்ல பையன்.” எனச் சொல்ல…. சக்ரவர்த்திக்கு அப்போதும் சம்யுக்தாவுக்கு ஆரியனை திருமணம் செய்தால்… தான் நிம்மதியாக இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கேட்கத்தான் தயக்கமாக இருந்தது.

சம்யுக்தா இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தாள். அவினாஷிடம் இருந்து கூட விலகி நிற்க… அவன் விடுவதாக இல்லை. பிறகே அவனிடம் எப்போதும் போல இருந்தாள்.

அவினாஷ் ஆரியனிடம் சொன்னதற்கு, “இருக்கட்டும் டா எங்க போயிடப் போறா… இந்தத் தான இருக்கா பார்த்துக்கலாம்.” என்றான்.

அவன் அவனுடைய நிறுவனத்திற்கு மேலும் சில ஆட்களை வேலைக்கு எடுத்து, இன்னும் பெரிதளவில் செய்யத் திட்டமிட்டு இருந்ததால்… அந்த வேலையில் கவனமாக இருந்தான்.

சம்யுகிட்ட உன் மனசையாவது சொல்லேன்.” என்றால்… “அவளும் படிக்கிறா… எனக்கும் இப்போ லவ் பண்ண டைம் இல்லை டா…” என்றவனை என்ன செய்வது என்று அவினாஷுக்கும் தெரியவில்லை.

ஆரியன் அந்த முறை ஊருக்குச் சென்ற போது ஸ்ரீகாந்தை சந்தித்துப் பேசினான்.

ஏன் டா இப்படி இருக்க? ஒன்னு உங்க அப்பாவோட சேர்ந்து தொழிலைப் பாரு இல்லைனா… தனியா தொழில் பண்ணு. எதுவும் பண்ணாம வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்க….” என்றதற்கு,

தந்தையைத் தான் காரணம் ஆக்கினான்.

ஓ…. உங்க அப்பா மேல அவ்வளவு கோபம் இருந்தா… அவர் சொத்தை வேண்டாம்ன்னு சொல்லிடுவியா?” எனக் கேட்டடதற்கு ஸ்ரீகாந்த் பதில் சொல்லாமல் இருக்க….

ஒன்னு உங்க அப்பா சொத்து வேண்டாம்னு சொல்லி வெளியப் போய்ச் சொந்தக் கால்ல நில்லு…. இல்லைனா சேர்ந்து இருந்தா ஒழுங்கா இருக்கணும். நீ ஊர் சுத்துறதுக்குச் சும்மா எங்க மாமா மேல பழி போடாத.” என்றான்.

உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிற பிரச்சனையை நான் பேச விரும்பலை. அதுக்கும் நீ வெட்டியா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”

நீ ஒழுங்கா இருப்பியா சொல்லு…. இல்லைனா நாங்க வேற யோசிக்கணும்.” என்றதும்,

சொத்துக் கொடுக்காமல் விட்டுவிடப் போகிறார்கள் என்ற பயத்தில் ஸ்ரீகாந்த, “சரி அத்தான், இனிமே ஒழுங்கா கடைக்குப் போறேன்.” என்றான்.

ஆரியன் அதைச் சக்ரவர்த்திக்கும் அழைத்துச் சொன்னான். அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

ஆனா மாமா எல்லாப் பொறுப்பையும் அவன்கிட்ட கொடுத்துடாதீங்க.” என்றான் எச்சரிப்பது போல…. புரிந்து கொண்டு சக்ரவர்த்தியும், “தெரியும் மாப்பிள்ளை.” என்றார்.

சக்ரவர்த்தி அவரது பெரிய கடைக்குள் அவனை விடவில்லை. இப்போது புதிதாக ஆரம்பித்திருந்த இன்னொரு கடையை அவனுக்குக் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்.

சந்திரா அவரது அண்ணன் வீட்டிற்குச் சென்று கணவர் சொன்னதைச் சொல்ல… அவர் தம்பியும் வந்திருந்தான். அண்ணனும் தம்பியும் ஒன்றாக இல்லை. அவர்கள் மனைவிமார்களுக்கு ஒத்துப் போகததால் இருவரும் தனிக் குடித்தனம் தான். சந்திராவின் அம்மா இன்னும் இருந்தார். அவர் பேரில் இருக்கும் சொத்திற்காக மகன்கள் இருவரும் அவரை ஆளுக்குச் சில நாட்கள் வைத்து பார்த்துக் கொண்டனர். அதனால்தான் சந்திராவும் அங்குச் சென்று வெட்டி அதிகாரம் செய்து கொண்டிருந்தார்.

மூன்னு பேருக்கும் சமமா சொத்து கொடுப்பாராமா…. கல்யாணம் பண்ணி வந்தவளும், அப்புறம் சேர்த்துகிட்டவளும் ஒன்னா… அந்தப் பொண்ணுக்கு எப்படிச் சமமா கொடுக்க முடியும்?

அந்த ஆளுகிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தா ஆகாது. நாம எதாவது பண்ணனும்.” எனத் தனசேகர் சொல்ல… அதை முத்துகுமாரும் ஆதரிக்க…

இருங்க பொண்ணுக்கு எதோ பெரிய இடத்தில கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி சொல்லி இருக்கார். ஸ்ரீகாந்துக்கும் தனியா கடை ஒதுக்கி விட்டிருக்கார். ஸ்ரீநிதி கல்யாணம் முடியட்டும். அப்புறம் ஒண்ட வந்த பிடரியை விரட்டுவோம்.” எனச் சந்திரா சொல்ல… அதுதான் சரி என்றனர் சகோதரர்களும்.

இந்த மனுஷன் ஒன்றுக்கும் ஆகாது எனச் சந்திரா பிறந்த வீட்டில் வந்து உட்கார்ந்துகொள்ள… பஞ்சாயத்து கூட்டி பேசி, சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு ரத்துச் செய்து விடலாம் என்றுதான் இருந்தனர்.

தனசேகரின் மனைவி செல்விக்குத் தான் திக்கென்று இருந்தது. இந்தப் பொல்லாத நாத்தனாரை வைத்துக் கொண்டு, அவரால் புகுந்த வீட்டில் நிம்மதியாக இருந்து விட முடியுமா? நல்லவேளை மாமனாரும் தவறி இருந்தார். அதனால் அவர் கணவரை தனியே அழைத்து, “உங்க தங்கச்சி இப்பவே இங்க வந்து உட்கார்ந்திட்டா… அவ பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்க எல்லாம் அந்தச் சொத்து காணுமா… எல்லாம் உங்க தலையில தான் விழும்.” எனக் குழப்பி விட….

அதற்குப் பிறகே சந்திராவிடம், “நீ ஏன் அவளுக்கு விட்டுக் கொடுத்து வரணும். உன்னோட இடம் நீ உரிமையா இரு. அதோட பிள்ளைகளை வளர்க்கிற பொறுப்பு அவருக்கும் இருக்கு தானே…” என அப்படி இப்படி எனப் பேசி… சந்திராவை கணவன் வீட்டிலேயே இருக்க வைத்தனர்.