கோவில் முன்பு பந்தல் அமைத்து இருந்ததால்… காரை முன்பே நிறுத்திய ஆரியன், அவர்கள் இருவரையும் இறங்கி செல்ல சொல்லி விட்டு, அவன் காரை வேறு இடத்தில் சென்று நிறுத்து விட்டு வந்தான்.
திருவிழா என்பதால் கோவில் ஜகஜோதியாக இருக்க… கோவிலின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருந்தது.
சரளா பூ மட்டும் நிறைய வாங்கிக்கொள்ள…. அதற்குள் ஆரியனும் வந்துவிட… மூவரும் கோவில் உள்ளே சென்றனர்.
இவர்கள் இருவரும் பெண்கள் வரிசையில் இருக்க… ஆரியன் ஆண்கள் வரிசையில் இருந்தான். ஆரியன் சம்யுக்தாவை பார்க்கும் போது, அவள் தீவிரமாக வேண்டிக் கொண்டிருந்தாள். அதே போல இவள் அவனைப் பார்க்கும் போது, ஆரியன் தீவிரமான ப்ராத்தனையில் இருந்தான்.
கோவில் உள்ளேயும் வெளியேயும் பலர் சம்யுக்தாவை பார்த்து, யாரு இது எனக் கேட்டு விட்டார்கள். எல்லோருக்கும் என் அண்ணன் மகள் மதுரையில் இருப்பவள் எனச் சரளா சொல்ல… கேட்டவர்களுக்கும் அவள் யாரென்று யூகிக்க முடிந்தது. அதை உறுதிபடுத்திக் கொள்ளவும் தான் சிலர் கேட்டார்கள்.
அப்படிக் கேட்டவர்கள் சிலர் அதைச் சென்று சந்த்ராவிடம் வத்தியும் வைத்தனர். சந்த்ராவுக்குக் கொதித்துக்கொண்டு வர…. உடனே அவர் அண்ணனை அழைத்து விட்டார்.
“ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுஷனை கடிச்ச கதையா…. இப்போ அங்க சுத்தி, இங்க சுத்தி, இந்த ஊருக்கே… அதுவும் சட்டமா அவ அத்தை வீட்டுக்கு வந்திருக்கா… ஊர்ல இருக்கிறவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க. இதை இப்படியே விடலாமா?” என அவர் சொல்ல…
“அப்படியெல்லாம் உன்னை விட்டுட மாட்டோம். நீ அப்பவே வந்திருந்தேனா.. பெரிசா ஒன்னும் தேறி இருக்காது. இப்போ இருக்க மொத்த சொத்தையும் வாங்கிட்டு விட்டுடலாம்.” எனச் சந்த்ராவின் அண்ணன் சொல்ல… எல்லாவற்றிற்கும் சந்த்ரா சரி சரி என்றார். சந்த்ரா அவரின் தம்பிக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு வைத்தார்.
கோவிலுக்கு வெளியே உடல்நலமில்லாமல் இருப்பவர்களுக்கு, வேண்டிக்கொண்டு உண்டியலில் போட, வெள்ளியில் உடலின் பக்கங்கள் தகடு போலச் செய்து வைத்திருப்பார்கள். அதை அப்போது தான் சம்யுக்தா பார்த்தவள், “எங்க அப்பாவுக்குக் கால் தான் அடிக்கடி வலிக்கும். நான் இதுல ஒன்னும் வாங்கிக்கிறேன்.” என்றவள், பிறகு அவரின் முழு ஆரோக்கியத்திற்கும் வேண்டி, இன்னொன்றும் வாங்கி உண்டியலில் போட்டு விட்டு வந்தாள்.
“சாமி உண்டியலில் போட காசு கூடக் கொண்டு வரலையே…” என அவள் நினைக்கும் போதே… அவளிடம் நூற்றி ஒரு ரூபாயை கொடுத்த ஆரியன், உண்டியலில் போடு என்றான்.
“நான் அப்புறமா திரும்ப கொடுத்திடட்டுமா?” என அவள் கேட்ட தினுசில், அவனுக்கு சிரிப்பு வந்து விட… “உன் அப்பா எனக்கு மாமா தான். எல்லாம் நம்ம வீட்டு பணம் தான். அதோட சாமிக்கு தான…. அதனால நான் கொடுத்தா தப்பு இல்லை…” என்றான்.
இப்போ தானே நினைச்சோம், அதற்குள் அவனே கொடுத்து விட்டானே என்று நினைத்தவள், அவள் திரும்ப இந்தக் கோவிலுக்கு வரும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்குமா என்று தெரியாததால்…. மறுக்காமல் வாங்கி உண்டியலில் போட்டாள்.
அண்ணன் வருவதால் சரளா நேரத்துடன் வீட்டுக்கு திரும்பி விட்டார். அவினாஷும் வீடு திரும்பி இருக்க… எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அவினாஷை சம்யுக்தா எதற்கோ போடா என்று சொல்ல… “என்ன உன்னை விடப் பெரியவனை அவன் இவன்னு சொல்ற…” எனச் சரளா சொல்ல…
“அத்தை அவன் என்னோட பாய் பெஸ்டி அத்தை. அதனால அப்படித்தான் சொல்லுவேன்.” என்றாள் சம்யுக்தா.
“அப்படினா?” எனச் சரளா சந்தேகம் கேட்க…
“ப்ரண்டுக்கு ஒரு படி மேல… லவ்வருக்கு ஒரு படி கீழ மா…” எனப் பதில் சொன்னது ஆரியன்.
“எனக்கு ஒன்னும் புரியலை…” என்றார் சரளா.
“எதுனாலும் நான் அவகிட்ட ஷேர் பண்ணிப்பேன் மா…” என அவினாஷ் சொன்னதும்.
“ஆமாம் இவன் எத்தனை பொண்ணுங்களைப் பார்த்துச் சைட் அடிச்சு ஓகேவான்னு கேட்டிருக்கான் தெரியுமா… நான்தான் நல்லாவே இல்லைன்னு சொல்லி கலைச்சு விட்டுருவேன்.” என சம்யுக்தா இல்லாத காலரை தூக்கி விட…
“நீதான் பெஸ்டியோட வேலையைக் கரக்டா பார்க்கிற….” என்ற ஆரியன், “அம்மா கவலைப்படாதீங்க உங்க பையன் யாரையும் லவ் பண்ணாம சம்யுக்தா பார்த்துப்பா.” என்றதும், சரளா அப்படியா என ஆர்வமாக…
“நீ செட்டில் ஆகிட்டா… எனக்குப் போர் அடிக்கும் இல்ல டா…” எனச் சம்யுக்தா பாவமாகச் சொல்ல… அவினாஷை தவிர எல்லோரும் சிரித்தனர்.
அவினாஷ் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க… “சாரி டா… நிஜமாவே யாரும் நல்லா இல்லை. அதனால தான் சொன்னேன்.” எனச் சம்யுக்தா நண்பனை சமாதானம் செய்ய…
“எனக்கும் யாரையும் அப்படி ஒன்னும் பிடிக்கலை… நானும் விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.” என்றான் அவினாஷ்.
“இனிமேயும் இவன் யாரையும் லவ் பண்ணாம பார்த்துக்கோ.” என சரளா சொன்னதற்கு எல்லோரும் சிரிக்க… அப்போதுதான் சக்ரவர்த்தி உள்ளே நுழைந்தார்.
மகளை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பார்ப்பதற்கே சந்தோஷமாக இருந்தது. அதுவும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்க்கும் போது, இன்னும் நிறைவாக இருந்தது.
அப்பாவை பார்த்ததும் சம்யுக்தா, அப்பா என எழுந்து தந்தையிடம் சென்றவள், அவரைத் தோளோடு கட்டிக் கொண்டாள்.
“ரொம்பச் சந்தோஷமா இருக்காளே…. என்னோட பொண்ணு.” என்ற சக்ரவர்த்தி, உடன் வந்த ஆளிடம் கண்ணைக் காட்ட… அவர் கையில் இருந்த மாம்பழக் கூடையை வைத்துவிட்டு வெளியே சென்று… இன்னும் மற்ற பழ வகைகளையும் எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றார்.
வீட்டிற்கு வந்த மச்சானை சடகோப்பன் வரவேற்க… தங்கையின் கணவரை நலம் விசாரித்தார் சக்ரவர்த்தி.
“பொண்ணுக்கு இங்க சரியா சாப்பாடு போட மாட்டோம்னு கவலையில… உங்க அப்பா எவ்வளவு வாங்கிட்டு வந்திருக்கார் பாரு.” என சடகோப்பன் சம்யுக்தாவை வம்பிழுக்க….
“அதுக்காக இல்லை…. அப்பா உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்திருக்கார்.” என்றாள். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.
சக்ரவர்த்திக்கு ஆரியனை பார்க்கவே சங்கடமாக இருந்தது. அவன் அவரிடம் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தான்.
சரளா அண்ணனுக்கு இரவு உணவை தயார் செய்ய…. சம்யுக்தா சென்று உதவினாள்.
சரளாவும் சம்யுக்தாவும் பரிமாற ஆண்கள் எல்லோரும் சேர்ந்து உண்டனர்.
சந்த்ரா பேசியதே சக்ரவர்த்தியின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு சுயநலம். தங்கையை ஏமாற்ற சக்ரவர்த்திக்கு மனம் இல்லை.
ஸ்ரீநிதிக்கு இல்லையென்றாலும் சம்யுக்தாவுக்கு ஆரியனை செய்ய அவருக்கு நிறையவே ஆசை இருந்தாலும், ஆனால் அவளை மருமகளாக ஏற்க அவர்கள் விரும்புவார்களோ எனத் தெரியாததால்… “சரளா… நீ ஆரியனுக்கு வேற நல்ல இடம் வந்தா யோசிக்காத…. அதையே முடிவு பண்ணிடு.” எனச் சொல்லியே விட்டார்.
எல்லோருமே சம்யுக்தா உட்பட…. அதிர்ந்து தான் போனார்கள். ஆனால் ஆரியனுக்கு மட்டுமே அதிர்ச்சி இல்லை. அவனுக்குதான் ஸ்ரீமதியுடன் பேசும் போதே புரிந்து போய் இருந்ததே… ஆனால் மாமா உண்மையாக இருக்கிறார் என்பதில்… அவனுக்கு இன்னும் சக்ரவர்த்தியின் மீது மரியாதை அதிகமாகியது.
உண்டு முடித்ததும் தங்கையைத் தாம்பூலம் கொண்டு வர சொல்லி, அதில தேங்காய், பழக்கங்கள் அதோடு இரண்டாயிரம் ருபாய் கட்டு பணத்தையும் வைத்துத் தங்கையிடம் கொடுத்தவர், “திருவிழாவுக்கு உங்க எல்லோருக்கும் பிடிச்சதா வாங்கிக்கோ.” என்றார் தங்கையிடம்.
சரளா அண்ணனின் காலில் விழுந்து எழுந்து வாங்கிக் கொண்டார். அப்போதே சக்ரவர்த்தி அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்.
“நீ எப்போ டா கிளம்புற….” எனச் சக்ரவர்த்தி மகளிடம் கேட்க…
“அண்ணா நாளைக்குத் தான பொங்கல். இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும். நம்ம வீடு தானே… நான் நல்லா பார்த்துக்கிறேன்.” எனச் சரளா சொல்ல…. சக்ரவர்த்தியும் சரி என்றார்.
தந்தையோடு சம்யுக்தாவும் கார் வரை சென்றவள், “நான் நாளைக்கே வேணா கிளம்பிடவாப்பா?” என்றதற்கு,
“நான் அம்மா தனியா இருப்பான்னு கேட்டேன். ஆனா நான் இன்னைக்கே மதுரைக்குப் போறேன். நீ உன் அத்தையோட இங்க இருந்திட்டு வா…” என்றதும், கவலை அகன்றவளாக சம்யுக்தாவும் மகிழ்ச்சியுடன் சரி என்றாள்.
“என்ன அண்ணன் இப்படிச் சொல்லிட்டாங்க.” என சரளா சொன்னதற்கு,
“என்னை அவங்க பொண்டாட்டியும் பெண்ணும் சாய்ஸ்ல தான் வச்சிருக்காங்க. அது தெரிஞ்சு தான், மாமா அப்படிச் சொல்லிட்டு போறார்.” என்றான் ஆரியன்.
“உனக்கு இப்போவாவது புரிஞ்சதே…” என அவினாஷ் சொல்ல…
“பார்த்த முதல் பெண்ணையே எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லை. நான் மாமாவுக்காகவும் தான் யோசிச்சேன். அவர் மூலமா அத்தை குடும்பத்துக்கு எதாவது அநியாயம் நடந்திருந்தா… அதைச் சரி செய்யத்தான் பார்த்தேன். ஆனா அது தேவை இல்லைனா சந்தோஷம் தான். எல்லாம் நல்லதுக்குதான்.” என்றான் ஆரியன்.
“எனக்கும் இப்போதான் நிம்மதியா இருக்கு. நானும் உன்னைப் போலத் தான் டா நினைச்சேன். அண்ணனே சொல்லிட்டாங்க, இனிமே கவலை இல்லை.” எனச் சரளாவும் அவர் வேலையைப் பார்க்க சென்றார். எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு அவருக்கு.
ஒரு திருமணதிற்கு அன்பும் அக்கறையும் மட்டும் போதுமானது அல்ல… காதலும் வேண்டும். அன்பும் அக்கறையும் யார் மீது வேண்டுமானாலும் வரக் கூடும். ஆனால் ஈர்ப்பும் காதலும் எல்லோரிடமும் தோன்றி விடாது. ஒருவரை பார்த்ததும் உடனே வர வேண்டும் என்பது இல்லை. சிலருக்கு பார்த்துவுடனும் வரலாம், சிலருக்கு பார்க்க பார்க்கவும் வரலாம்.