இரவு உணவு முடித்ததும் ஆரியன் கீழே இருந்த அறைக்குள் சென்று விட… புது இடத்தில் உறக்கம் வரும் எனச் சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கீழே இருந்த இன்னொரு அறையைக் கொடுத்திருக்க… ஆனால் அவள் ஹாலில் தான் இருந்தாள்.

தூக்கம் வரலையா? என்ற அவினாஷ், “கார்ட்ஸ் விளையாடுவோமா?” என்று கேட்க… அவர்களோடு சடகோப்பனும் சேர்ந்து கொண்டார்.

ஹாலில் தரையில் போர்வை விரித்து ரம்மி விளையாடினர். “நான் அப்பா அம்மா இப்படித்தான் எங்க வீட்லயும் விளையாடுவோம்.” என்றாள் சம்யுக்தா. அவர்களுக்குப் பக்கத்திலேயே சரளாவும் பாய் விரித்துத் தலையணை போட்டு படுத்துக் கொண்டார்.

நள்ளிரவு வரை விளையாடியவர்கள் பிறகு உறங்க தயராக,  சரளா ஏற்கனவே ஹாலில் உறங்கி இருக்க… விளையாடுவதற்காக விரித்திருந்த போர்வையில் சடகோப்பன் படுத்துகொள்ள… உள்ளே இருந்து தலையணை போர்வை எடுத்து வந்து சம்யுக்தாவும் சரளாவின் அருகே படுத்துக் கொண்டாள். அவினாஷ் அவன் அண்ணன் இருந்த அறைக்குச் சென்று விட்டான்.

நள்ளிரவு வரை அவன் கணினியில் வேலைப் பார்த்த ஆரியன், வெளியே வந்து பார்க்க… சம்யுக்தா அவள் பெற்றோருடன் ஹாலில் படுத்திருந்தாள். புது இடம் என்பதால் உறங்காமல் தான் இருந்தாள். அவளும் ஆரியன் வந்ததைக் கவனித்துத் தான் இருந்தாள்.

ஆரியன் சமையல் அறைக்குச் சென்று பாலை சூடு செய்தவன், சம்யுக்தா விழித்திருப்பதைப் பார்த்து அவளுக்கும் ஒரு டம்ளரில் பால் கொண்டு வந்து கொடுத்து, “இந்தா அப்பவே சாப்பிட்ட. இதைக் குடி தூங்கிடுவ.” என்றான்.

நம்மகிட்டையா பேசுறான் என்பது போலப் பார்த்தவள், எழுந்து அவன் கொடுத்த பாலை வாங்கிக் குடித்தாள்.

பயமா இருந்தா கதவை திறந்து வச்சிட்டு கட்டில்ல படு. காலையில சீக்கிரமே வேலை செய்றவங்க வருவாங்க. உன்னால இங்க தூங்க முடியாது.” என்றான்.

அவன் சொன்னபடி கதவை திறந்து வைத்துவிட்டு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆரியனும் அறைக்குள் சென்று விட்டான். அவன் சொன்னது போலச் சிறிது நேரத்தில் உறங்கியும் இருந்தாள்.

காலை குளித்து விட்டுச் சம்யுக்தா கத்திர்ப்புக் கலரில் அனார்கலி சுடிதாரும், ரோஜா வர்ண துப்பட்டாவும் அணிந்து வர…. அவளின் நீளமான கூந்தலில், அப்போது வாங்கிய   மல்லிகை பூவை சரமாக தோளில் இருபுறமும் வழிவது போல சரளா வைத்து விட்டார்.

சாயங்காலம் நல்ல நெருக்கமா தொடுத்துக் கொண்டு வா… இன்னும் ரெண்டு நாளைக்கு முதல்ல இங்க வந்து பூவை கொடுத்திட்டு போ… வாடின பூவை கொண்டு வராத.” எனச் சரளா பூக்காரியிடம் சொல்ல…

யாரு மா இது?” என அவள் சம்யுக்தாவை காட்டி விசாரிக்க

எங்க அண்ணன் பொண்ணு, மதுரையில இருந்து வந்திருக்கா.” என்றதும், அவருக்கும் புரிந்து விட…

ஓ இப்போ எல்லாம் சேர்ந்துட்டீங்களா.” என்றவர், மாலையில் வருவதாகச் சொல்லி சென்றார்.

சம்யுக்தா, உன் அளவு ரவிக்கை இருந்தா கொடு…. நாளைக்குக் கோவிலுக்குக் கட்டிட்டு போக உனக்குப் பட்டுப் புடவை வாங்கினேன். இங்க பக்கத்தில கீதாகிட்ட கொடுத்தா மதியமே தச்சு கொடுத்திடுவா.” என்றவர்,

மதியத்துக்கு உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அதையே சமைக்கிறேன்.” எனச் சரளா மருமகளுடன் பிஸியாக இருக்க…

அம்மா, நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது. எனக்கு இன்னும் காபி கூட நீங்க கொடுக்கலை.” என ஆரியன் சொல்ல…

பார்த்தியா ஒரு பொண்ணு வந்ததும் வீடு எப்படிக் கலகலப்பா இருக்குன்னு. இதுக்குதான் பொண்ணு வேணும்னு சொல்றது.” என சடகோப்பன் இன்னும் அவர் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

அப்பா…. உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா…” என ஆரியனும்,

அம்மா கொஞ்சம் எங்களையும் கவனிங்க. சம்யு வந்ததுல இருந்து அவளைத்தான் கவனிக்கிறீங்க.” என அவினாஷும் சொல்ல…

டேய் உங்க அம்மா என்ன டா கவனிக்கிறது, உங்க அண்ணன் நைட் சம்யுக்தாவுக்குப் பால் எல்லாம் கொண்டு வந்து கொடுத்து என்னமா கவனிச்சான் தெரியுமா… சும்மா நம்ம முன்னாடி தான் சீன் போடுறான்.” என்றதும்,

நீங்களும் முழிச்சிட்டு தான் இருந்தீங்களா? சொல்லி இருக்க வேண்டியது தான, உங்களுக்கும் பால் கொண்டு வந்து கொடுத்திருப்பேனே…” என்றான் ஆரியன்.

ஓ… இதெல்லாம் வேற நடந்துச்சா…” என அவினாஷ் ஆச்சர்யப்பட…

புது இடம் தூக்கம் வராம புரண்டுட்டு இருந்தா…. அதனால கொடுத்தேன். உன் ப்ரண்ட் நீதான் அவளைக் கவனிக்கணும். நீ ஆளுக்கு முன்னாடி போய்த் தூங்கிட்ட.” என ஆரியன் தம்பியை குற்றம் சொல்ல…

ப்ரதர், என் பிராண்ட மட்டும் இல்ல… உங்களுக்கும் மாமா பொண்ணு தான். அதனால நீங்களும் கவனிக்கலாம் தப்பில்லை.” என்றான் அவினாஷ்.

இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்த சம்யுக்தா, “எனக்கு அத்தை வீடுதான், நான் ஒன்னும் விருந்தாளி இல்லை. என்னை யாரும் கவனிக்க வேண்டாம்.” என்றவள், “அத்தை வாங்க நாம சேர்ந்து டிபன் பண்ணலாம்.” எனச் சரளாவை அழைக்க…

உனக்குச் சமைக்கக் தெரியுமா?” என அவினாஷ் ஆச்சர்யப்பட…

கொஞ்சம் தெரியும். அம்மாவோட தான் அதிகம் இருப்பேன். அம்மா சமையல் செய்யும் போது அங்க போய் நின்னு பேசிட்டு இருப்பேன். அப்போ சின்னச் சின்ன வேலை செய்வேன்.” என்றாள்.

சம்யுக்தா உதவ, காலை சமையல் முடித்து ஆண்கள் மூவரும் உண்டு, ஆளுக்கொரு வேலையாக வெளியே கிளம்பி சென்றனர்.

நாம சாயங்காலம் கோவிலுக்குப் போவோம்.” எனச் சரளா சம்யுக்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க… மகள் வீட்டுக்கு வரும் சாக்கில் பேத்தியை பார்க்க ஞானம் வந்துவிட்டார்.

மகனின் ஜாடையில் அவரைப் போலவே உயரமும், நிறமும் கொண்ட பேத்தியை பார்க்க ஞானத்திற்குக் கண்கள் இரண்டு போதவில்லை.

உன்னைத் தூக்கி சீராட்ட எல்லாம் எனக்குக் கொடுத்து வைக்கலை… இதுவே உன்னைப் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லாம தான் வந்தேன்.” என்றவர், பேத்தியிடம் அவள் அம்மாவை பற்றியும் விசாரித்தார்.

உங்க அம்மா நினைச்சிருந்தா உங்க அப்பாவை பிரிச்சி கூடிட்டு போய் இருந்திருக்கலாம், ஏனோ அதை அவ செய்யலை…. இங்கேயும் ஒரு குடும்பம் உடையலைன்னு எங்களுக்கு நிம்மதி.” என்றவர், மகளிடம் திருநீறு குங்குமம் எடுத்து வர செய்து பேத்திக்கு வைத்து விட்டவர், “உன்னை இனி எப்போ பார்ப்பேனோ.” என அவர் கொண்டு வந்திருந்த பெரிய கல் பதித்த நெக்லசையும் பேத்தியின் கழுத்தில் போட்டு விட்டார்.

சுற்றிலும் சின்னச் சின்னத் தாமரை மலர்களும், நடுவில் பெரிய தாமரையுமாகக் கற்கள் பதித்த கழுத்தாரம், அவள் கழுத்து நிறைய இருக்க… பார்க்கவே அழகாக இருந்தது.

வேண்டாம் பாட்டி அம்மா திட்டுவாங்க.” என்றதை அவர் காதிலேயே வாங்கவில்லை.’

இது என் பிறந்த வீட்ல எனக்குப் போட்டது. நான் என் பேத்திக்குக் கொடுக்கிறேன். யாரும் கேட்க முடியாது.” என்றார்.

அம்மாவும் மகளும் பேசிக்கொண்டு சமைக்க… தன் அம்மாவிடம் பேசுவதற்காக அறைக்குள் வந்தவள், இந்துஜாவிடம் பேசிவிட்டு அப்படியே கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள்.

சடகோப்பனுக்கு நிறையச் சொந்த கட்டடங்கள் இருக்க… அதில் வாடகை வருமானமே அதிகம். அதோடு இருந்த விவசாய நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தார். வீட்டு தேவைக்குக் காய்கறி அரிசி எல்லாம் அவர்கள் தோட்டத்தில் இருந்து வந்து விடும். பெரிதாக அலைந்து திரிந்து பார்க்கும் வேலை இல்லை அவருக்கு.

காலை உணவு உண்டதும், அவர்கள் தோட்டத்திற்குச் சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் அவர் வந்ததும், சரளா அவருக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அப்போது அவினாஷும் வந்துவிட்டான்.

ஞானம் மீண்டும் ஆரியன் ஸ்ரீநிதியின் திருமணப் பேச்சை எடுக்க…

பாட்டி, ஸ்ரீநிதியை கல்யாணம் பண்ணிகிட்டா மாமா நிலைமை தான் எங்க அண்ணனுக்கும் வரும். தயவு செய்து எங்க அண்ணனை விட்டுடுங்க.” என்றான் அவினாஷ் நேரடியாகவே.

ஸ்ரீநிதி அவங்க அம்மா போல இல்லை. அதுவும் கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு வந்திட்டா…” என ஞானம் இழுக்க…

அத்தை கல்யாணம் பண்ணி வந்து மாறிட்டாங்களா? அத்தைக்கு எவ்வளவு இருந்தாலும் மனசுல நிறைவே வராதுன்னு நீங்கதான் சொல்வீங்க. அதனால தான் மாமாவால அவங்களோட சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியலை… கடைசியில மாமா நிம்மதியை தேடி வேற கல்யாணம் பண்ணார். எங்க அண்ணனுக்கும் அந்த நிலைமை வேண்டாம்.”

ஆரியன் அவன் சொன்னதைக் கேட்டபடி வந்தவன், அவனும் அவர்களுடனே உட்கார்ந்து கொள்ள…

நான் ஸ்ரீநிதியை மூணு வருஷம் காலேஜ்ல பார்த்திருக்கேன். அதனால தான் சொல்றேன். வேண்டாம் இதோட விட்டுடுங்க.”

இவன் என்ன பெரிய மனுஷன் மாதிரி பேசுறான்.” என ஞானம் பேரனின் பேச்சை தட்டி கழிக்கவே பார்க்க…

சின்னவனா இருந்தாலும் சரியாத்தானே பேசுறான். எனக்கும் இதுல அவ்வளவு இஷ்ட்டம் இல்லை.” என்றார் சடகோப்பன்.

தான் வேறு வாயை விட்டு விட்டோம், இனி மருமகள் அவரை அவ்வளவு சுலபமாக விட்டு விடுவாரா என்ற கவலை ஞானத்திற்கு. இதுதான் திருமண விஷயத்தில் அவசரப்படக் கூடாது என்பது.

அதை உணர்ந்தது போல ஆரியன். “தெரியாத இடத்தில் சம்பந்தம் பண்றதுக்கு, இது நம்ம மாமா வீடு தான. அதோட மாமாவுக்கு அத்தையைச் சமாளிக்கத் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா எனக்கு ஸ்ரீ மேல நம்பிக்கை இருக்கு. நான் எதுக்கும் அவகிட்ட பேசி பார்த்திட்டு சொல்றேன்.” என்றான்.

மாமா தெரியாம விழுந்தார், நீ தெரிஞ்சே விழுற போல….” என்றான் அவினாஷ். 

வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்குப் பெரிய முடிவை, அவ்வளவு எளிதாகவா சக்ரவர்த்தி எடுத்திருப்பார். அதை ஆரியன் யோசிக்க மறந்தான்.

இவன் பரிதாபப்படும் நிலையில் எல்லாம் ஸ்ரீமதி இல்லேவே இல்லை. அதை அவன் உணரும் காலமும் வரும்.

அவர்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கும் போதே, சம்யுக்தா உறங்கி எழுந்தவள் வெளியே வர… அவளை அழைத்து சடகோப்பன் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.

“டேய் அவினாசி, நீ பண்ணதுலேயே உருப்படியான விஷயம் என் பேத்தியை இங்க கூட்டிட்டு வந்தது தான்.” என ஞானம் சொன்னதும், 

அவினாசியா என்பது போல சம்யு பார்க்க…. அதற்குள் அவினாஷும், “பாட்டி என் பேரு அவினாஷ். அவினாசின்னு கர்நாடகமா கூப்பிடாதீங்க.” என்றான். 

“உனக்கு வச்ச பேரு அவனாசி லிங்கம் தான டா…” என்றார் ஞானம்.

“அப்படியா சொல்லவே இல்லை…. இனிமே நானும் அவினாசின்னு தான் கூப்பிடுவேன்.” என்ற சம்யு….. 

“அவனாசிசிசி…” என்று வேண்டுமென்றே இழுத்து அவினாஷை வம்புக்கு இழுக்க… அவனும் அவளை அடிக்கத் துரத்த…. இருவரும் வீட்டை சுற்றி ஓட ஆரம்பித்தனர்.

படியில் கால் இடறி சம்யுக்தா கீழே விழ, ஆனால் அவளுக்கு பெரிய அடியேதும் இல்லை. 

“நினைச்சேன் இன்னைக்கு யாரோ ஒருத்தர் சில்லறை வாருவாங்கன்னு…. போதுமாப்பா இந்த கலகலப்பு.” என ஆரியன் தந்தையை பார்த்து கேட்க…. அவர் சத்தமாக சிரிக்க… சம்யுக்தா ஆரியனை முறைத்தாள்.