“பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு யாருக்காச்சம் போன் பண்ணுங்களேன் சர்?  போய் பார்த்துட்டு விவரம் சொல்லுவாங்கல்ல?”, ஸ்ரீ சொல்லவும்,

உதடு சுழித்தவர், “ம்க்கும்…அப்படியே போய் பார்த்திடுவாங்க… எல்லாம் வேஸ்ட்.”, என்று சொல்லி மறுபடியும் லான்ட் லைனுக்கு அழைத்தார்.

மணி அடித்து அடங்க, “சர்… நாம ஒரு எட்டு வீட்டுக்கே போயிடலாம் சர். எப்பவும் உங்க கிட்ட சொல்லாம போக மாட்டாங்கன்னு சொல்றீங்க. அப்படியே இருந்தாலும், மொபைல்லையாவது பேசியிருக்கணும். சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தாலும், சரி ஒருவேளை சார்ஜ் போயிருக்கும்னு நினைக்கலாம். மணி அடிச்சு ஓயுது. “, ஸ்ரீ ஆறுதல் சொல்லாமல், இன்னும் அவர் கவலையைக் கிளப்பினாள்.

“இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கேம்மா ஆஃபீஸ் முடிய? பார்க்கலாம்.”, என்று யோசனையாகக் கூறினார் இராமலிங்கம்.

‘ஐயோ… உங்கக் கடமையில தீயை வைக்க’, என்று உள்ளுக்குள் சபித்தாலும், “சர்… ஆறரைக்கு நீங்க வழக்கம் போல கிளம்பினா ட்ராபிக்ல மாட்டி வீட்டுக்குப் போக ஒரு மணி நேரமாகும். இப்ப ரோடு ஃப்ரீயா இருக்கும்.என் கூட ஸ்கூட்டில வாங்க சர். இருவது நிமிஷம் போய் பார்த்துட்டு திரும்ப வேணா வந்துடலாம். ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா இருந்து வேலை பார்த்துக்கலாம் சர்.”

அவள் கூற்றில் இருந்த உண்மை புரிய, ‘போவோமா?’, என்று யோசித்தார். “சரி.. நீ எதுக்கு ? நானே என் காரை எடுத்துகிட்டு போறேன்.”, என்று மீண்டும் ஒரு முறை மனைவி கைபேசிக்கு  முயன்றார்.

“அது…. நானும் வரேன் சர். நேராவே கேள்விங்களை கேட்டுக்குவேன். என் ஸ்கூட்டிலயே உங்க கார் பின்னாடி வரேன் சர். அப்பறம் திரும்ப ஆஃபீஸ் வந்துடறேன்.”, என்றவள், இதற்கு மேலே இவரை யோசிக்க விடக்கூடாது என்று, கிளம்ப அவசரப்படுத்தினாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் இராமலிங்கத்தின் கார் முன்னே செல்ல, ஸ்ரீ அவள் ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தாள். ‘அச்சோ லேட்டாகாம இருக்கணுமே. அசம்பாவிதமா எதுவும் நடந்திருக்கக் கூடாதே’, என்று வேண்டிக்கொண்டே சென்றாள்.

கார் ஒரு தனி வீட்டு வாசலில் நின்றது. பழைய மாடல் வீடாக இருந்தாலும் பெரிதாக இருந்தது. இராமலிங்கம் இறங்குவதற்குள், ஸ்ரீ கேட்டை திறந்திருந்தாள்.இராமலிங்கம் பெல் அடிக்க, உள்ளிருந்து ஒரு ஓசையும் கேட்கவில்லை. வாசலில் இருந்த இரும்பு கிரில் கதவைத் தாண்டி தெரிந்த வெராண்டாவில் மனைவி செருப்பு இருப்பதைப் பார்த்தவருக்கு பயம் வந்தது. கையில் இருந்த ஆஃபீஸ் பையில் கையை விட்டு துழாவி சாவியை எடுத்தார்.

கை லேசாக நடுங்க, சாவி துவாரத்தில் நுழைய மறுத்தது.

“இங்க குடுங்க சர். நான் திறக்கறேன்.”, என்ற ஸ்ரீ அவர் கையில் இருந்த சாவியை பறித்து, கதவைத் திறந்தாள்.

“சுந்தரி.. அம்மாடி சுந்தரி..”, இராமலிங்கத்தின் அழைப்பிற்கு பதில் இல்லை.

சர்வ நிச்சயமாக சுந்தரி பாத்ரூமில் இருக்கப் போகிறார் என்று தெரிந்து, “நீங்க பாத்ரூம்ல இருக்காங்களா பாருங்க சர். நான் கிச்சன், பின் பக்கம் பார்க்கறேன்.”, என்று அவரை அனுப்பினாள்.

மனிதர் மாடியேறவும், கடமைக்கு கிச்சன் பக்கம் போனவள், பின் புறம் பார்வையை செலுத்த, அங்கே ஒரு கதவு தெரிந்தது. ‘இதுவும் பாத்ரூமா?’, என்று யோசித்து லேசாய் எட்டிப் பார்க்க, அங்கேதான் விழுந்து கிடந்தார் சுந்தரி.

கீச் என்ற எலியின் சத்தம்தான் வந்தது ஸ்ரீயிடமிருந்து. உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. போய் பார்க்க மூளை உரைத்தாலும், ஒரு எட்டு காலை எடுத்து வைக்க முடியவில்லை அவளால். முகம் வேர்த்துப் போனது.

இஷ்ட தெய்வங்களின் பெயரை உச்சரித்தவள், ஒரு மிடறு விழுங்கி, தைரியத்தை வரவழித்து அருகே சென்றாள். மூக்கில் கை வைக்க, மெல்லிய சுவாசம் தட்டுப்பட்டது. அதுவே ஒரு உந்து சக்தியாக இருந்தது அவளுக்கு.

“சார்..சார்… இங்க இருக்காங்க… வாங்க….”, என்று குரலெடுத்து இராமலிங்கத்தை அழைத்தாள். அப்பறம்தான் பார்த்தாள், பக்கவாட்டில் திரும்பியிருந்த நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

மனது திக்கென்றானது. அவரை திருப்பலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டவளாக, எழுந்து வெளியே வரவும், இராமலிங்கம் இவளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.

“எங்க .. எங்க சுந்தரி..”, என்றார் இவளைப் பார்த்து.

“இங்க பாத்ரூமல் … விழுந்திருக்காங்க.. சர்…. பார்த்து..”, உள்ளே நுழைந்தவரை பிடித்தாள். “ தலையில அடிபட்டிருக்கு…. அசைக்காதீங்க..”, என்றவளை திமிறி விடுவித்து,

“சு..சுந்தரிம்மா….”, என்று உலுக்கப் பார்த்தார்.

“சர்… மூச்சு விடறாங்க.. ப்ளீஸ் …உலுக்கினா எதாவது ஆகிடப் போகுது.”, நான் பக்கத்து வீட்ல ஹெல்ப் கேட்கறேன். ஆம்புலன்ஸ் போன் செய்யணும்.”

சற்று மலங்க முழித்தவர், “அவன் கூட சண்டை… “,என்றார்.

“யார் கூட…?”, ஸ்ரீக்கு புரியவில்லை.

“பக்கத்து வீட்டுக்காரனோட….”, என்றவரை ‘ஷப்பா.ஒருத்தர் பாக்கியில்லை போல…’ என்று நினைத்தவள்,

“நான் பார்த்துக்கறேன். நீங்க இவங்க கூட இருங்க. இப்ப வரேன்…”, என்று வாசலுக்கு ஓடியவள், அவர் மேசை மேல் வைத்திருந்த அவர் கைபேசியைப் பார்த்து, மீண்டும் அதை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, “ நீங்க ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க. நான் உதவிக்கு ஏற்பாடு பண்றேன்”, என்றுவிட்டு பறந்தாள்.

பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்க, அது பூட்டியிருந்தது.   மறுபுறம் இருந்த வீட்டிற்கு ஓடினாள். வாசலில் நாய் குரைத்தது. கேட் மூடியை தட்டி குரல் கொடுத்தாள்.

கல்லூரியில் படிக்கும் வயது இளைஞன் மாடி ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தான்.

“ப்ரோ.. எமெர்ஜென்சி.. ஹெல்ப்.”, என்று அங்கிருந்தே ஸ்ரீ கத்தவும், கை அசைத்து மறைந்தான்.

அதற்குள் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவரை மடக்கி, “இங்க பக்கத்துல எங்க ஹாஸ்பிடல் இருக்கு ?”, என்று விசாரித்தாள்.

அந்த மனிதர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மாடி இளைஞன் வந்துவிட்டிருந்தான்.

“என்னாச்சு ?”

“சுந்தரி ஆன்ட்டி, பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அடிபட்டிருக்கு, மயக்கமா இருக்காங்க. ரத்தம் வருது. ஆம்புலன்ஸ் சார் கூப்பிடறார். இங்க பக்கத்துல எது ஹாஸ்பிடல்னு…”, ஸ்ரீ ரத்தின சுருக்கமாகக் கூறினாள்.

“போன் பண்ணா ஆம்புலன்ஸ் வர லேட்டாகும், நேரா போனா செகண்ட் ரைட், அப்பறம் ஃபர்ஸ்ட் லெஃப்ட், எம்.ஆர் ஹாஸ்ப்பிடல். போய் கையோட கூட்டிட்டு வாங்க. நான் போய் பார்க்கறேன்.”, என்று அவளுக்கு கட்டளையிட்டுவிட்டு, இராமலிங்கத்தின் வீட்டிற்குள் ஓடினான்.

உடனிருந்த வழிப்போக்கருக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு, அவள் ஸ்கூட்டியில் பறந்தாள்.

அடுத்த கால் மணி நேரத்தில், ஆம்புலன்ஸ் வந்து, அலுங்காமல், குலுங்காமல் சுந்தரியை அள்ளிச் சென்றது.

“நான் முன்னாடி போறேன். நீங்க அவங்களோட மாத்திரை, மெடிக்கல் ரெக்கார்ட் எடுத்துகிட்டு இவங்களோட வாங்க அங்கிள்.”, என்று இராமலிங்கத்திற்கு கட்டளையிட்டுவிட்டு பக்கத்து வீடு இளைஞன் ஓடினான்.

எதுவும் புரிபடாமல் நின்றவரை அவசரப்படுத்தி ஸ்ரீ ஒருவழியாக அவன் சொன்னதை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டி, இராமலிங்கத்தை ஏற்றிக் கொண்டு கிளம்பினாள்.

“சுந்தரி…. சுந்தரிம்மா….”, என்றதைத் தவிர வேறு எதுவும் இராமலிங்கத்தால் பேசமுடியவில்லை.

அவர் அதிர்ச்சியில் இருப்பது புரிந்தாலும், ஒன்றும் செய்ய இயலாதவளாக, ‘சரியாகிருவாங்க சர்… பயப்படாதீங்க.”, என்று மட்டும் சொல்லி மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

மருத்துவமனையில், சுந்தரி நேராக ஐ.சி,யூ விற்கு எடுத்துச் செல்லப்பட, ஒரு டாக்டர் விவரம் கேட்க வந்தார். இவர்களுக்குத்தான் சொல்லத் தெரியவில்லை.

தான் பார்த்தவரை ஸ்ரீ சொல்ல, எதனால் விழுந்தார் என்ற காரணம் தெரியவில்லை. வழுக்கி விழுந்திருக்கலாம் என்று அனுமானித்தனர். எப்போது என்றும் தெரியவில்லை. இவர்கள் சுந்தரியை அழைக்க முயன்ற நேரம் என்பதாக குத்து மதிப்பாய்க் கூறினார்கள்.

“வயசானவங்களை எதுக்கு தனியா விடறீங்க?”, என்று பொதுவாகக் கடிந்த மருத்துவர், அவர்களிடமிருந்து இரத்தக் கொதிப்பிற்காக சுந்தரி எடுக்கும் மாத்திரை, ரிப்போர்ட் எல்லாம் வாங்கிக்கொண்டார்.

இராமலிங்கம் அங்கேயே அமர்ந்திருக்க, குரு என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பக்கத்து வீட்டு இளைஞன், ஸ்ரீயைப் பற்றி விசாரித்துக் கொண்டான்.

அடுத்த அரை மணி நேரம் மிக மிக மெதுவாகக் கழிந்தது.