புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 81

“என்னை தொட்டவங்க எல்லாம் எரிஞ்சி போய்டுவாங்க, சையத் பாபா! என்னை விட்டு தள்ளி நிற்கறதே அவளுக்கு நல்லது”

“அப்படினா ஆர்யன் அர்ஸ்லான் பயப்படுறானா?” 

ஆர்யன் கோபமாக பார்க்க “ஆமா, அப்படித்தானே நீ சொல்றே!” என சையத் அழுத்தி கேட்டார்.

“நான் பயப்படல. இந்த சுமை என்னால சுமக்க முடியலன்னு சொல்றேன். இது என்னை தவறு செய்ய வைக்குது. தப்பு செய்ற ஆள் இல்ல நான்”

“இப்போ என்ன நடக்கும்? இதுல இருந்து எப்படி நீ வெளியே வருவே?”

“எல்லாரும் அவங்க அவங்க இடத்துல இருந்தா நல்லது. எனக்கு இந்த நெருப்பு சட்டை வேணாம். இது கடும் சோதனை” 

“உன் இதயம் வலிக்கலயா?”

“அதை பத்திலாம் எனக்கு கவலை இல்ல. நான் அந்த பாதையில போகும்போது எனக்கு தெரிஞ்ச சிலதை நான் மறந்துடுறேன். இதுக்கு முன்னாடியும் நான் நெருப்புல நடந்திருக்கேன், சையத் பாபா. இதை விட பெரிய நெருப்பு. அது கூட என்னை சுட்டது இல்ல. ஆனா இப்போ நான் சுமக்கற பனிக்கட்டி என்னை சுடுது. என்னால முடியல. இனி நான் அதை செய்ய மாட்டேன். பழைய ஆர்யன் சாலை தவிர எனக்கு இப்போ வேற சாலை வேணாம்”

“அப்போ நீ இந்த பாதைல இருந்து திரும்பி போக போறே! அப்படித்தானே?”

ஆர்யன் ஒன்றும் பேசாமல் காரை நோக்கி செல்ல, சையத் சத்தமாக சொன்னார்

“ஆனா, இந்த பாதைக்கு முடிவு கிடையாது, மகனே! ஏன்னா நீ ஒருமுறை அதுல நடக்க தொடங்கிட்டீனா, நீ நின்னாலும் அது உன்னை விடாது. உனக்குள்ள தான் இருக்கும். அதை நினைவு வச்சிகிட்டு போ”

———

“சித்தி! நீங்க கப்பல் பயணத்துக்கு தானே போனீங்க, ஏன் திரும்பி வந்திட்டீங்க?”

“கடல் கொந்தளிப்பா இருந்தது, அன்பே! அதனால போகல”

“நீங்க கவலையா இருக்கீங்களா, சித்தி?”

“இல்லயே, கண்ணே!”

“இந்தாங்க! சித்தப்பா வாங்கி கொடுத்த பஞ்சுமிட்டாய் சாப்பிட்டா சந்தோசமாகிடுவீங்க, சாப்பிடுங்க”

இவானை இழுத்து அணைத்துக்கொண்டாள் ருஹானா.

“என்னோட பஞ்சுமிட்டாய் நீதான் தேனே!”

அவன் கழுத்தில் முத்தம் தந்த ருஹானா “என்ன ஒரு இனிய மணம்!” என முகர, இவான் சிரித்தான்.

கரீமா உள்ளே வந்தவள் “எப்படி இருக்கே ருஹானா? இப்போதான் ரஷீத் கிட்டே இருந்து நடந்ததை தெரிஞ்சிக்கிட்டேன். உனக்கு ஒன்னும் இல்லயே?” என்றாள்.

“இவான் செல்லம்! நீ உன் ரூம்க்கு போ. சித்தி அப்புறமா வரேன். நாம விளையாடலாம்”

இவான் தலையாட்டி சென்றதும் “நான் நல்லா இருக்கேன், கரீமா மேம்! நன்றி” என ருஹானா சொல்ல, “அல்லாஹ்க்கு நன்றி! எப்படி அந்த சைக்கோ யாக்கூப் உன்னை தேடி வந்தான்? என்னால நம்பவே முடியல. நல்லவேளை ஆர்யன் உன்கூட இருந்தான்” என கரீமா பயங்காட்ட, ருஹானாவிற்கு சுவாசம் திணறியது.

ஆர்யன் சரமாரியாக யாக்கூப்பை வெளுத்து வாங்கியது அவள் கண்மூடினாலும் அந்த காட்சி மறையவில்லை.

“ஆர்யன் அதிகமா கோபப்பட்டான்னு ரஷீத் சொன்னான். நான் ஆச்சர்யமே படல. வழக்கமான ஆர்யன் அது தானே!. அவன் எப்படி மாறுவான்?”

குழப்பமாக பார்த்த ருஹானா கேட்டாள். “எனக்கு புரியல. நீங்க என்ன சொல்றீங்க?”

“ருஹானா டியர்! ஆர்யன் சில நாட்களா உன்கிட்டே நல்லபடியா நடந்துக்கிட்டதால அவன் திருந்திட்டான்னு நீ நினைச்சியா? அவன் மாறவே மாட்டான். அவன் மூடு மாறிப் போனா அவனுடைய கடுமையான முகத்தை உன்கிட்டேயும் காட்டுவான். அவனோட வலிமையான கவசத்தை யாராலும் உடைக்க முடியாது. அவன்கிட்டே சில தடுப்பு சுவர்கள் இருக்கு. அதை தாண்டறது முடியாத காரியம். அவன் நினைச்சபடி தான் நடப்பான். யார் முன்னும் மண்டியிட மாட்டான். அவன் திடமானவன். இளகிய மனசு இல்ல அவனுக்கு. மத்தவங்க உணர்வுகளை பற்றி மதிக்க மாட்டான். முக்கியமான ஒன்னு. உனக்கு பிடிக்குதோ இல்லயோ இதை தெரிஞ்சிக்கோ. அவன் கடுமையானவன். அதுல இருந்து எப்படியும் அவனை மாத்தவே முடியாது”

“நீங்க சொல்றது எதையும் நான் ஒத்துக்க மாட்டேன், கரீமா மேம்”

“உனக்கு முன்னாடியே ஆர்யனை எனக்கு நல்லா தெரியும். நம்மோட வாழ்க்கைல எத்தனையோ மாறிடுச்சி. ஆனா மாறாது ஒன்னே ஒன்னு தான். அது ஆர்யனோட குணம். உலகம் கூட மாறும். அவன் குணம் மாறாது”

கையிலிருந்த பஞ்சுமிட்டாயை பார்த்த ருஹானா “நீங்க சொல்றது தப்பு. சில விஷயங்கள் நீங்க சொல்றது சரிதான். என்னை விட அவரை உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா தன் அண்ணன் மகனுக்கு கதை சொல்லி தூங்க வைக்கறார், பஞ்சுமிட்டாய் தேடி வாங்கி கொடுக்கறார், தன் உயிரை மதிக்காம அடுத்தவங்களை காப்பாத்துறார். இன்னைக்கு நடந்ததுக்கு காரணம் அவரோட அடக்க முடியாத கோபம் தான். தன் அண்ணன் பையனை கொல்ல பார்த்தவனை அவரால எப்படி எளிதா விட முடியும்? உங்களுக்கே தெரியும், இவானை அவர் எவ்வளவு நேசிக்கிறார்னு” என மறுத்து சொல்ல, கரீமாவிற்கு உள்ளே கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“நீ சொல்றதுலாம் சரி தான். அவன் அப்படி இருக்கணும்னு தான் நானும் விரும்பறேன். ஆனா இத்தனை வருடங்களாக இருந்த குணம் உடனே மாறிவிடுமா, என்ன? நீ எல்லாத்தையும் நேர்மறையா எடுத்துக்கறே! நல்லது தான். ஆனா உனக்கு இன்னும் ஆர்யனை பற்றி முழுசா தெரியல. கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்குவே. அப்போ நான் சொன்னது சரின்னு உனக்கு புரியும்”

ருஹானாவை நன்றாக குழப்பிவிட்டு “நீ ஓய்வெடு” என சொல்லி கரீமா சென்றாள்.

சுட்டெரிக்கும் சூரியனின்

இயல்பு பொசுக்குவதே!

ஆனாலும் உயிர் வாழ

அதன் வெப்பம் முக்கியமே!

செடி கொடிகள் வளர்ந்திட

வெண்ணிலவு ஒளிர்ந்திட!

கெட்ட கிரகணம் கதிரவனை

மறைத்து பாடம் எடுக்க..

அருணனின் அருமைகளை

அவன் ஒளிபெற்று ஜொலிக்கும்

நிலவுப்பெண் அறிய மாட்டாளா?

——– 

வெண்மை நிற சட்டையை கழட்டி தூக்கி எறிந்த ஆர்யன், முழுதாக கருப்பு உடை உடுத்தி அலுவலகம் சென்றான்.

“தீயில காயம் பட்ட ஸம்பக் எப்படி இருக்கான், ரஷீத்?”

“அவனோட அறுவை சிகிச்சை முடிந்தது. குணமாகிட்டு இருக்கான், ஆர்யன்”

“அவனை இனி வேலைக்கு வர வேணாம்னு சொல்லிடு. மாதாமாதம் அவனுக்கு ரெண்டு மடங்கா சம்பளம் அனுப்பி வை”

“சரி! அப்படியே செஞ்சிடுறேன்”

“இதுக்காக நான் காதிர் சகோதரர்களை பழிவாங்குறேன். என் கையால தண்டனை கொடுப்பேன். அந்த ராஸ்கல்ஸ் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடி, ரஷீத்”

“ஆனா போன வாரம் நீங்க வேணாம்னு….”

மேசையில் ஓங்கி தட்டிய ஆர்யன் “அது நான் சொல்லலன்னு நினைச்சிக்கோ. இப்போ என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்” என கத்தினான்.

———

நீரூற்று குளத்திற்கு அருகே ருஹானா கையில் செல்பேசியுடன் நடை போட்டுக் கொண்டிருந்தாள். ‘ஆர்யன் அர்ஸ்லான்’ எனும் பெயரில் அழைக்க கை வைத்தவள், ‘இன்னும் சிறிது நேரம் பார்ப்போம்’ என நடக்க ஆரம்பித்தாள்.

ஜாஃபர் வந்து இரவு உணவு உண்ண அழைக்க “எல்லாரும் வந்துட்டாங்களா?” என கேட்டாள், ஒருவேளை தான் கவனிக்காத சமயம் ஆர்யன் மாளிகைக்குள் வந்து இருக்கலாமோ என சந்தேகப்பட்டு.

“ஆர்யன் சார் தவிர எல்லாரும் இருக்காங்க” என ஜாஃபர் சொல்ல, “சரி, நீங்க போங்க. நான் இப்போ வரேன்” என அவள் சொல்ல, ஜாஃபர் உள்ளே சென்றான்.

இப்போது ஆர்யனின் இணைப்பை எடுத்து அழைக்க போனவள் காரின் ஒளி தெரிய, அது உள்ளே வரும் ஒலியும் கேட்க நிம்மதியானாள். ஆர்யன் காரை நிறுத்தி இறங்கும் முன்னே அவனை நாடி சென்றாள்.

“நீங்க ஓகே தானே? நான் உங்களை நினைச்சி கவலைப்பட்டுட்டு இருந்தேன்” என முன்பிருந்த கனிவான ஆர்யன் என்று நினைத்து பேச, அவள் கண்களில் தவிப்பை கண்டபோதும் அவளை கடுமையாக பார்த்தவன் ஒன்றும் பேசாமல் அவளை தாண்டி நடந்தான்.

அப்போதும் புரியாமல் ஓடிவந்து அவனுக்கு முன்னால் நின்றாள் ருஹானா.

“இன்னைக்கு நடந்தது பத்தி…. அது… அதான் இப்படி இருக்கீங்களா? உங்களையும் உங்க கோபமும் எனக்கு புரியுது”

“ஓஹோ! நீ.. என் கோபத்தை புரிஞ்சிக்கிட்டியா? என்னை பத்தி புரிஞ்சிக்கறது தான் உன் வேலையா? உன்னோட வேலை ஒன்னே ஒன்னு தான்….. அது இவானை கவனிச்சிக்கறது. போ… அதை மட்டும் செய்”

“இப்படி பேசாதீங்க”

“நீ யாருன்னு உன்னை நினைச்சிக்கறே… ஹாங்..?  என்னை எதுக்காக நீ புரிஞ்சிக்கணும்? உன்னால என்னை தெரிஞ்சிக்கவே முடியாது”

ருஹானாவிற்கு கண்கள் கலங்கி, தொண்டையடைக்க ஆர்யன்  விருட்டென்று உள்ளே சென்றான். எதிரே “சித்தப்பா!” என அழைத்தபடி இவான் ஓடிவர, ஆர்யன் அவனை கவனிக்கவில்லை. வேகமாக படியேறி மேலே சென்றுவிட்டான்.

ருஹானா வாசல்கதவை மூடி உள்ளே வர, படிக்கட்டை பார்த்தபடி அழுது கொண்டு இருக்கும் இவானை பார்த்து ஓடி வந்தாள். “இவான் செல்லம்! ஏன் அழறே?” பதறிப் போய் அவள் கேட்க, இவான் “சித்தப்பா உங்க மேல கோபப்பட்டாரா?” என கேட்க, ஆர்யனின் பாராமுகம் இவானை வருத்தி இருக்கிறது என புரிந்து கொண்டவள் “இல்லயே அன்பே! அவர் சோர்வா இருக்கார். நாளைக்கு சரியாகிடுவார். வா ரூம்க்கு போகலாம்” என மேலே அழைத்து சென்றாள்.

வரவேற்பறையில் வழக்கம்போல மறைந்திருந்து நடந்தது அனைத்தையும் பார்த்திருந்த சகோதரிகளுக்கு மகிழ்ச்சி பொங்கியது “பழைய ஆர்யனுக்கு நல்வரவு!” எகத்தாளமாக சொன்னாள் கரீமா.

———

“என்ன மிஷால்! எதிர்ல தான் நான் நடந்து வரேன். என்னை கவனிக்காம போறீயே?”

“ஓஹ்! தன்வீர் நீயா? நான் உன்னை பார்க்கவே இல்ல”

“வாகனங்கள் வர்ற சாலையில இப்படி நடக்கலாமா? எங்க இருக்கு உன் கவனம்?” 

“எனக்கு மனசு சரியில்ல தன்வீர். ருஹானாவை என்னால காப்பாத்த முடியலயே. அவள அங்க சாக விட்டுட்டு வந்திட்டேன். அந்த ஆர்யன் காப்பாத்திட்டானேன்னு அங்கயே என் சிந்தனை சுத்தி வருது”

“என்ன மிஷால் நீ? முட்டாள்தனமா யோசிக்கறே?”

“இல்ல தன்வீர். அவளும் என் போன் எடுக்க மாட்றா. அவ என்னை விட்டு தொலைவா போய்ட்டாளோ, நான் அவளை இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு”

“ருஹானா உடம்பு இன்னும் சரியாகல, மிஷால். அவ ஓய்வா இருக்கலாம். உன் மனசுல இருக்கறதை அவ கிட்டே சொல்ல நீ முயற்சி செய். தளர்ந்து போகாதே!” 

————-

ஆர்யனின் நடவடிக்கைகளின் காரணம் புரியாமல் ருஹானாவின் மனம் அமைதியாக இல்லை. அவளது அறையில் நடந்துக் கொண்டிருந்தவள் ஆர்யனிடம் இதற்கு விளக்கம் பெற்றே ஆகவேண்டும் என அவன் அறைக்கு செல்ல, அவள் செல்பேசியில் மிஷால் அழைத்துக்கொண்டே இருந்தான்.

ஆர்யன் அம்பை சரிப்பார்த்துக் கொண்டிருக்க, ருஹானா கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள். அவளை பார்த்ததும் முகத்தை இன்னும் கடுமையாக்கியவன் “என்ன வேணும் உனக்கு?” என கேட்டான்.

“நீங்க ஏன் இப்படி என்கிட்டே நடந்துக்கறீங்க? அது எனக்கு தெரியணும்” உறுதியாக அவள் கேட்டாலும் அவன் சட்டை செய்யவில்லை. விற்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 

“உங்களுக்கு என்மேல கோபமா? யாக்கூப் பத்தி நீங்க எச்சரிக்கை செய்தும் நான் அதை கேட்கலன்னு..”

அவள் அங்கே இருப்பதையே கவனிக்காதவன் போல வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு நடந்தான். 

“தயவுசெய்து என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” கேட்டுக்கொண்டே அவன் பின்னால் வந்தாள். 

“ஏன் பதில் சொல்ல மாட்றீங்க? ப்ளீஸ் பேசுங்க” இருவரும் படிக்கட்டின் அருகே வந்திருந்தார்கள்.

‘என்னோட சேர்ந்தா அவளுக்கும் கஷ்டம். என்னை விட்டு அவள் தள்ளியே இருக்கட்டும்’ என சையத்திடம் சொன்னவன் அதை செயல்படுத்த முடிவெடுத்தான்.

அவள் கைப்பிடித்து சுவரோடு அழுத்தியவன் “என்னை தனியா விடு… புரியுதா? என்னை விட்டு போ” என கத்திவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டான். ருஹானா ஒன்றும் புரியாமல் கண்கலங்க நின்றாள்.

முன்பு அன்பு என்பதையே உணராமல் கடுமையாக இருந்தான். இப்போது மனம் நிறைந்த அன்பை மறைத்து வெறுப்பாக நடந்து கொள்கிறான்.

தோட்டத்தில் அம்புகள் பறந்து கொண்டே இருந்தன. அவன் மனமோ கடற்கரை காபி கடையில் இருந்தது. இப்போது அவளிடம் கடுமையாக இரைந்துவிட்டு வந்ததை எண்ணி இறுதி அம்பை வானம் நோக்கி கத்திக்கொண்டே செலுத்தினான்.