புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 78

‘ருஹானாவை சாவிலிருந்து மீட்டது தானில்லை, ஆர்யன் தான்’ என்று மிஷால் சொன்னதை கேட்டு ருஹானா நம்ப முடியாமல் பிரமித்து அமர்ந்துவிட்டாள்.

“அது எப்படி? நான் மயக்கமாகும்போது நீ தானே என்கூட இருந்தே! நான் உன்னை பார்த்தேனே”

“ஆமா! உன்னை காப்பாத்த தான் நான் அங்க வந்தேன். வீட்டு உள்ளயும் வந்திட்டேன். ஆனா அங்கிருந்து உன்னை என்னால தூக்க முடியல. உன் கால்ல சங்கிலி மாட்டியிருந்தது. அதை கழட்ட முயற்சி செய்தேன். முடியல. அப்புறம் நானும் நிறைய கேஸ் சுவாசிச்சிட்டேன். மயக்கம் வந்து விழப் பார்த்தேன். என்னால தாக்கு பிடிக்க முடியல. வெளிய வந்துட்டேன்”

“அப்புறம் எப்படி என்னை காப்பாத்தினாங்க?”

அதை சொல்ல விரும்பாவிட்டாலும் மிஷால் “அவன்… ஆர்யன்… உன்னை தூக்கிட்டு வெளிய வந்தான். அவன் எப்படி விலங்கை எடுத்தான், கேஸை எப்படி சமாளிச்சான்னு எனக்கு தெரியல. என்னால முடியாம நான் வெளிய வந்தப்போ அவன் ரத்த காயத்தோட உள்ள போனான்” என்று விளக்கி சொன்னான்.

ருஹானாவின் விரிந்த கண்கள், அவன் சொல்ல சொல்ல இன்னும் விரிந்தபடியே இருந்தன.

“உள்ள போன கொஞ்ச நேரம் கழிச்சி அவன் உன்னை தூக்கிட்டு வெளிய வந்துட்டான். உன்னை படுக்க வச்சிட்டு அவனும் மயங்கி விழுந்துட்டான்”

எல்லாவற்றையும் சொன்னவன் ‘எனக்காக திரும்பி விடு! என்னை விட்டு போகாதே!’ என அவளிடம் ஆர்யன் சொன்னதை மட்டும் சொல்லவில்லை.

திக்பிரமையடைந்த ருஹானா மூச்சுகளை வேகமாக விட, மிஷால் “உன்னை சோர்வடைய வைக்க நான் விரும்பல. நீ ஓய்வெடு. நான் வரேன்” என எழவும், திகைப்பிலிருந்து மீளாத ருஹானா “சரி மிஷால், நன்றி!” என்றாள்.

தன் கண் முன்னே துப்பாக்கியால் சுடப்பட்டு மயங்கி சாய்ந்தவன், திரும்ப எழுந்து வந்து அவன் உயிர் போய்விடும் அபாயத்திலும் அவளுடைய உயிரை காத்தது மட்டுமல்லாமல், அதை பற்றி அவளிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே! அவள் மிஷால் தான் அவளை காத்தது என சொன்னபோதும் மறுத்தும் சொல்லவில்லையே!

தெரிந்துக் கொண்ட உண்மை அதிர்ச்சியை தந்தாலும் அவள் மனதில் ஒரு மெல்லிய சந்தோஷ கீற்று பரவுவது எதனால் என அவளுக்கு தெரியவில்லை.

மிஷால் கீழே வர, ஆர்யன் வரவேற்பறையில் இருப்பதை பார்த்து அவனிடம் சென்றவன் “நான் உனக்கு நன்றிக் கடன்பட்டுருக்கேன்” என்றான். “ஏன்?” என்று ஆர்யன் கேட்க “ருஹானாவை என்னோட வாழ்க்கைல திரும்ப சேர்க்க நீ செய்த உதவிக்கு” என மிஷால் சொல்லி சென்றதும், ஆர்யனின் சாந்த முகம் இறுகிப் போனது.

அலுவலக அறைக்கு வந்து வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் ஆர்யனுக்கு மிஷாலின் சொல்லில் இருந்து விடுபட முடியவில்லை. நல்லவேளையாக ரஷீத்தின் தொலைபேசி அழைப்பு அவன் நினைப்பை மாற்றியது.

“சொல்லு ரஷீத்”

“ஆர்யன்! நீங்க மிஸ்டர் ஹக்கீம் கூட திரும்ப பேசினீங்களா?”

“இல்லயே ரஷீத்”

“லஞ்ச் மீட்டிங் வைக்கலாம்னு சொன்னாரே அவர்”

“நான் மறந்திட்டேன். நீ இந்த வார கடைசில ஏற்பாடு செய்திடு”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போது கதவை தட்டிவிட்டு ருஹானா உள்ளே வர “சரி, சரி, அப்புறம் கூப்பிடுறேன்” என பேச்சை வேகமாக முடித்தவன் தடுமாறும் நடையுடன் நடந்து வரும் அவளை கவலையாக பார்த்தான்.

பக்கம் வந்த ருஹானா “ஏன் நீங்க என்கிட்டே சொல்லல?” என கேட்க, புரியாமல் விழித்த ஆர்யன், தவறேதும் செய்துவிட்டோமோ என பயந்துப் போய் “என்ன?” என வினவினான்.

“என்னை காப்பாத்தினது நீங்க தான்” அவள் சொன்னதை கேட்டு பார்வையை தழைத்துக்கொண்டவன் மனம் நிம்மதியானது. “நீ உயிரோட இருக்கறது தான் முக்கியம். இதோ நீ நல்லா இருக்கே. அவ்வளவு தான்”

“நீங்களும் மயங்கி விழுந்திருக்கீங்க. மிஷால் சொன்னான். நீங்க செஞ்சதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன செய்யப்போறேன்?” கண்கள் கலங்க கேட்டாள்.

அதை பார்க்க சகியாத ஆர்யன் “என்ன செய்யணுமோ அதைத்தான் நான் செய்தேன். நீயா இருந்தாலும் அதான் செய்திருப்பே” என சாதாரண நிகழ்வைப் பற்றி சொல்வதை போல முடித்தான், முழுமனதோடு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நிபந்தனையற்ற அன்பு கொண்ட அவன்.

“இப்போ உன் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு. பார்க்க அதிக சோர்வா இருக்கே”

“இல்லயே! நான் நல்லா தான் இருக்கேன்” என திரும்பி நடந்தவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர, மேசை நுனியை பிடித்துக்கொண்டாள், கண்களை மூடிக்கொண்டு.

பாய்ந்து எழுந்து வந்த ஆர்யன் “என்னாச்சு? என்ன செய்யுது?” என அவள் கையை பிடித்தான். “வா, இங்க உட்கார்” என எதிரே இருந்த சோபாவை காட்டினான்.

“வேணா… இப்போ சரியாகிடுச்சி. படுக்கையில் இருந்து வேகமா எழுந்ததால இருக்கலாம்” என நடக்க ஆரம்பித்தவள், சில அடிகளுக்குள்ளாக நடை தடுமாறினாள்.

அவளது ஒவ்வொரு நகர்வையும் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் ஓடிவந்து அவளை தாங்கிக்கொண்டான். “நான் பிடிச்சிக்கிட்டேன். பயப்படாதே!” என்றவன் “வா! நான் உன்னை விடறேன்” என கைத்தாங்கலாக அவளை வெளியே அழைத்து சென்றான்.

காதல் கருணை காட்டும்

காதல் சத்தியம் உரைக்கும்

காதல் நம்பிக்கை அளிக்கும்

காதல் பொறுமையை கைப்பிடிக்கும்

காதல் இணையை நம்பும்

காதல் விடாமுயற்சி உடையது

காதல் பொறாமை கொள்ளாது

காதல் தற்பெருமை பேசாது

காதல் செருக்கு அடையாது

காதல் பிறரை அவமதிக்காது

காதல் தன்னலன் கருதாது

காதல் எளிதில் சினங்கொள்ளாது

காதல் தவறுகளை கணக்கெடுக்காது

காதல் தீமையில் மகிழாது

மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த சகோதரிகளில் சல்மா அவர்கள் நெருக்கத்தை கண்டு முகம் சுளிக்க, கரீமா அவர்களை நோக்கி வேகநடை போட்டு வந்தாள்.

“ருஹானா டியர்! என்ன ஆச்சு உனக்கு?”

“லேசா தலை சுத்திடுச்சி, கரீமா மேம்! வேற ஒன்னும் இல்ல”

“அச்சோ! ஆர்யன் நான் இவளை கூட்டிட்டு போறேன். நீ பிசியா இருப்பே! போய் வேலைய பாரு” என்று ஆர்யன் கைகளிலிருந்து அவளை வாங்கிக் கொண்டாள்.

“நேரா ரூம்க்கு தான் போகணும்” என ருஹானாவை பார்த்து ஆர்யன் சொல்ல, “எல்லாத்துக்கும் நன்றி!’ என்றாள் அவள். அவன் தலையை ஆட்ட, பார்த்துக்கொண்டிருந்த சல்மாவுக்கு எரிச்சல் எல்லை மீறியது.

“மெதுவா நட! பார்த்து வா!” என்று கரீமா ருஹானாவை கைப்பிடித்து கூட்டி சென்றாள்.

அவளது அறைக்கு சென்றதும் அவளை கட்டிலில் அமர வைத்தவள் “உண்மையை சொல்லணும்னா ஆர்யன் இப்படிலாம் உன்னை பார்த்துக்கறது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவன் அப்படிப்பட்ட ஆளே இல்ல. உன்னோட மயக்கத்தை பார்த்து பயந்திட்டான் போல” அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும் கொண்ட கரீமா சொல்ல, ருஹானா வெறுமனே அவளை பார்த்தாள்.

அதற்குள் இவான் ருஹானாவிற்கு பழசாறு கொண்டுவந்து “சித்தி! இதை நீங்க குடிச்சீங்கனா உடனே உங்களுக்கு தெம்பு வரும்” என நீட்டினான்.  ருஹானா அவன் தலையை பாசமாக தடவி “நீ கொண்டு வந்ததாலயே இப்பவே எனக்கு சக்தி வந்துடும்” என சொல்லி சிரிக்க, இவான் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனை கூட்டிவந்த நஸ்ரியா புன்னகையோடு பார்க்க, ஆர்யனோடு சேர்ந்து இவானும் ருஹானாவை தாங்குவது கண்டு கரீமா பொருமலாக பார்த்தாள்.

இவான் அவள் கன்னத்தை வருடியபடி “நீங்க இல்லாதபோது நான் உங்களயே நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எனக்கு தெரியும், சித்தி! சித்தப்பா உங்களை கூட்டி வந்துடுவார்னு. ஏன்னா என் சித்தப்பா சூப்பர் ஹீரோ!” என சொல்ல, ருஹானாவின் முகம் மலர “ஆமா தேனே! உன் சித்தப்பா சூப்பர் ஹீரோ தான்” என ஏற்றுக்கொண்டாள்.

அதற்கு மேல் பொறுக்கமுடியாத கரீமா இவானின் தோளை தட்டியவள் “சரி! உன் சித்தியோட உன்னை விட்டுட்டு நான் போறேன். ருஹானா டியர்! நான் அம்ஜத்தை கவனிக்கணும். உனக்கு ஏதாவது தேவைன்னா என்னை கூப்பிடு” என சொல்லி சென்றாள்.

“சித்தி! எல்லாத்தையும் குடிங்க” என இவான் கோப்பையை அவள் வாயில் வைக்க, அவளும் குடித்து முடித்தாள். “பார் மானே! எனக்கு வலிமை வந்துடுச்சி” என ருஹானா சிரிக்க, இருவரும் பாசமாக கட்டிக்கொண்டனர்.

——-

“என்னக்கா, வந்துட்டே? இன்னும் ஆர்யன் அவ கூட தான் இருக்கானா?”

“நீ வீணா எதும் கற்பனை செய்யாதே, சல்மா. அவன் அவளுக்கு உதவி செய்றான், அவ்வளவு தான்”

“அக்கா நீ முட்டாளாக போறே! நிஜமாவே உன் கண்ணுக்கு தெரியலயா? அவ கிட்டே ஆர்யன் மயங்கி நிற்கிறான். அவ பக்கத்துல வேற ஆளா மாறிடறான். நீயோ நானா மயங்கி விழுந்தா அவன் நம்மை வந்து இப்படி பிடிப்பானா?” சல்மா கோபத்தில் எகிறினாள்.

கரீமா தங்கை சொல்வதில் உண்மை இருக்குமோ என யோசிக்க, புலம்பிய சல்மாவிற்கும் சட்டென்று வழி புலப்பட “நான் ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன், அவங்களை தூரமா வைக்க” என சொல்ல, “மறுபடியும் மடத்தனமா எதும் செஞ்சிடாதே, சல்மா!” என கரீமா எச்சரித்தாள்.

“அந்த பாம்பை கொஞ்ச நேரமாவது ஆர்யன்ட்ட இருந்து பிரிக்க போறேன்” என நாகத்தின் படம் போல சல்மா ஆடினாள்.

——-

மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஆர்வமாக கதவை நோக்கினான். சல்மா உள்ளே வர ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டவன் “உள்ளே வா!” என்றான்.

“ஆர்யன்! அன்னைக்கு நாம ரத்து செஞ்ச மீட்டிங்கை இன்னைக்கு நான் பெருமுயற்சி செய்து ஏற்பாடு செய்திருக்கேன். உங்களுக்கு இன்னைக்கு வேற வேலை இல்ல தானே!”

“என்னை கேட்டுட்டு நீ ஏற்பாடு செஞ்சிருக்கலாம். நான் இன்னைக்கு பிஸி”

“மன்னிச்சிடுங்க ஆர்யன்! நான் நாட்களை பார்த்துட்டே இருந்தேன். எல்லாருக்கும் வசதியான நாளா இன்னைக்கு இருந்தது. அதான் உடனே ஏற்பாடு செஞ்சிட்டேன்”

ஆர்யன் முகத்தில் யோசனையை பார்த்தவள் “திரும்பவும் ரத்து செய்தா நல்லா இருக்காது. நாம அவங்களை தவிர்க்கறதா தப்பா எடுத்துப்பாங்க” என்றாள்.

“சரி, நீ இத்தனை செய்திருக்கறதால சந்திப்பு நடக்கட்டும்” என்று சொல்லி குனிந்து எழுத ஆரம்பித்தான். அவனை பார்த்து அழகாக புன்னகைத்தவள் அவன் அவளை பார்க்காதது கண்டு முகம் சுருங்கி வெளியே சென்றாள்.

———