மிஷால் ஓயாத இருமலிலும் ருஹானாவை தட்டி எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் அது பலன் தரவில்லை. அவளிடம் எந்த இயக்கமும் இல்லை. ஆர்யனிடமும் அப்படியே. இருவரும் மயங்கியபடி கிடந்தனர்.
‘ஒய்ங்! ஒய்ங்! ஒய்ங்!’ என உயிர் காக்கும் ஊர்தி அங்கே வர, அதன் முன்னே வந்த காரிலிருந்து தன்வீர் இறங்கி ஓடிவந்தான்.
“தன்வீர்! இவளுக்கு மூச்சு வருது. எதாவது செய்யேன்” என மிஷால் கெஞ்ச, தன்வீரும் அவளை கன்னத்தில் தட்டி எழுப்ப பார்த்தான்.
அதற்குள் மருத்துவக் குழு தரை இறங்க, மற்ற காவல் அதிகாரிகள் சுற்றிலும் ஓடி நிலைமையை ஆராய, வீட்டின் உள்ளே இருவர் சென்றனர்.
“ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கறாங்க, அக்கா? ஏன் இன்னும் ஒரு தகவலும் நமக்கு வரல? அந்த சைக்கோ மாஸ்டரால ஆர்யனுக்கு எதாவது தீங்கு நடந்திருந்தா?” குரல் தழுதழுக்க சல்மா கவலைப்பட்டு பேச, அப்போது ரஷீத்தின் அழைப்பு வந்தது.
“ஹல்லோ ரஷீத்! ஆர்யன் ருஹானா பத்தி எதும் தெரிஞ்சதா?” என கரீமா கேட்க, “ருஹானாவை யாக்கூப் கிட்டே இருந்து காப்பாத்தியாச்சி. ஆனா அவளையும் ஆர்யனையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம்” என ரஷீத் சொல்ல, அவன் பேசுவதை சல்மாவும் கேட்டுக்கொண்டிருக்க, அவள் இடை புகுந்தாள்.
“ஆர்யனுக்கு ஒன்னும் இல்லயே? அவன் நல்லா தானே இருக்கான்?”
“யாக்கூப் ருஹானாவை காஸ் செலுத்தி கொல்ல பார்த்திருக்கான். ஆர்யன் ருஹானாவை காப்பாத்தும்போது அவருக்கும் அது பாதிச்சிருக்கு. இன்னும்…”
சல்மா திகைப்படைந்து நிற்க, “இன்னும் என்ன ரஷீத்?” கரீமா படபடப்பாக கேட்டாள்.
வருத்தமாக பெருமூச்சு விட்ட ரஷீத் “ஆர்யனுக்கு தோள்பட்டைல காயம் ஏற்பட்டு இருக்கு. யாக்கூப் சுட்டுட்டான். குண்டு எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்” என்றான்.
“இதெல்லாம் அந்த கிராமத்துக்காரியால வந்தது” என சல்மா அழவும், “உஷ்!” என அவளை அடக்கிய கரீமா “ரஷீத்! ரெண்டு பேருக்கும் ரொம்ப அதிகமாக விஷ பாதிப்பு இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க?”
“ஹாஸ்பிடல் போனா தான் தெரியும், கரீமா மேம்! நான் அங்க தான் போயிட்டு இருக்கேன்”
“சரி, நாங்களும் வர்றோம். எந்த ஹாஸ்பிடல்?”
——-
சகோதரிகள் பரபரக்க மருத்துவமனை நுழைந்து தேட, மிஷால் கரீமாவின் கண்ணில் பட்டான். தீவிர சிகிச்சை பிரிவில், பிராணவாயு குழாய் மாட்டப்பட்டு மயங்கியிருந்த ருஹானாவை கண்ணாடி வழியே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த மிஷாலை நெருங்கிய கரீமா “எப்படி இருக்கா?” என கேட்டாள்.
“ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல. கடினமான நேரம் இது. இதை கடந்துட்டா நம்பிக்கை வைக்கலாம்னு டாக்டர் சொன்னார். ஆனா..” என பேசிய மிஷாலின் பேச்சை தடுத்த சல்மா “ஆர்யன் எந்த ரூம்ல இருக்கான்?” என கேட்டாள்.
“ரூம் நம்பர் 19“ என மிஷால் சொல்லவும் சல்மா அங்கிருந்து வேகமாக செல்ல, “நாங்க ஆர்யனை பார்த்துட்டு வரோம். அவன் எப்படி இருக்கான்னு தெரியல” என கரீமா சொல்ல, “அவருக்காவும் நான் வருத்தப்படுறேன்” என மிஷால் சொல்ல, கரீமா தலையாட்டிவிட்டு சல்மா சென்ற திசையில் சென்றாள்.
ஆர்யனுக்கும் மூக்கில் பிராணவாயு மற்றும் நிறைய குழாய்கள் பொருத்தப்பட்டிருக்க, அவனும் மயங்கி தான் படுத்திருந்தான்.
மருந்து குழாயை சரிசெய்துக் கொண்டிருந்த செவிலிப்பெண்ணிடம் “இவர் எப்படி இருக்கார்?” என சல்மா கேட்க, “நல்லா இருக்கார். கவலைப்படாதீங்க. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இப்போ அவர் ஓய்வு எடுக்கணும். நீங்க போயிட்டு அவர் முழிச்சதும் வாங்க” என பதில் கிடைத்தது.
சரியென தலையாட்டி கதவை மூடி வெளியே வந்த சல்மா, எதிரே வந்த தமக்கையிடம் ஆனந்த கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். “நல்லா இருக்கான், அக்கா. தூங்கிட்டு இருக்கான். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிருக்கு”
அவளின் துடிப்பை கவனித்த கரீமா சற்றுமுற்றும் பார்த்துவிட்டு “சல்மா டியர்! நீ அதிகமா உணர்ச்சிவசப்படறே! உங்க ரெண்டுபேருக்கும் இடையில் நெருக்கம் ஒன்னும் இல்ல. ஆனா பார்க்கறவங்க தப்பா நினைச்சா?” என்றாள் முகம் சுருக்கி.
கரீமாவை கோபமாக பார்த்த சல்மா “நான் எப்படி நினைக்கிறனோ அப்படித்தான் நடப்பேன். அப்பவும் நீ தான் யாக்கூப்பை பத்தி என்னை சொல்லவிடல. அப்பவே நான் சொல்லியிருந்தா ஆர்யனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. சரியான நேரத்துக்கு ஆர்யனை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்திருக்கலனா, இந்நேரம் அவன் செத்துப் போயிருப்பான்” என கண்ணீருடன் பொரிந்து தள்ளினாள்.
தங்கையின் ஆவேசத்தை கண்டு தன்னை அடக்கிக்கொண்ட கரீமா “சரி, சரி… நீ அமைதியா இரு. எல்லாமே நல்லாகிடும்” என சமாதானமாக பேசும்போது, ரஷீத் அங்கே வந்தான்.
“ரஷீத்! டாக்டர் என்ன சொல்றார்?”
“சீஃப் டாக்டர்ட்ட பேசிட்டேன். இப்போதைக்கு எல்லாம் சரியா தான் போகுது. ரெண்டுபேரும் கண் விழிச்சா தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்றார்”
“இன்ஷா அல்லாஹ்!” என்று ரஷீத்தும் கடவுளிடம் கோரிக்கை வைத்தான்.
——-
ருஹானாவின் தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே நின்றிருந்த மிஷால், கண்ணாடி வழியே தெரிந்த ருஹானாவிடம் பேசிக்கொண்டிருந்தான். “திரும்ப வந்துடு. என்னை விட்டு போகாதே! ப்ளீஸ்! உன்னை நான் அதிகமா நேசிக்கிறேன், நீ நினைக்கிறதை விட அதிகமா… என் காதலை நான் மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருக்கேன்” என அழுதான்.
அவனுக்கு குடிக்க பானம் வாங்கி வந்த தன்வீர் “இந்தா மிஷால் இதை குடி! நீயும் மணிக்கணக்கா இங்கயே நின்னுட்டு இருக்கே! வா, அப்படி போகலாம்” என அழைத்தான்.
அங்கிருந்து நகர்ந்து வந்தாலும் மிஷால், மிகுந்த மனவருத்தத்தில் இருந்தான். ருஹானா கண்விழிக்கவில்லையே என வருத்தத்தில் அவனுக்கு கண்ணீர் வந்தது. அங்கே இருந்த தூணில் முஷ்டியை மடக்கி குத்தினான்.
செல்பேசியில் பேசிக்கொண்டிருந்த தன்வீர் அதை பார்த்துவிட்டு ஓடிவந்தான். “மிஷால்! என்ன செய்றே நீ? நிதானமா இரு. யார் மேல உனக்கு கோபம்?”
“என் மேலே தான். நான் தான் அவளை விட்டுட்டு வந்தேன். என்னால அவளை வெளிய கூட்டிட்டு வர முடியல. அவளை காப்பாத்த தான் நான் அங்க போனேன். ஆனா என்னால மூச்சு எடுக்க முடியல. அவன் காப்பாத்திட்டான். நான் இல்ல. என்னால என்னை மன்னிக்கவே முடியாது” தன்வீரின் சட்டையை பிடித்துக்கொண்டு அழுதான் மிஷால்.
“மிஷால்! மிஷால்! இங்க பாரு! இதெல்லாம் ஒரு விஷயமா? எது முக்கியம்? ருஹானா உயிரோட இருக்கா.. அதான் முக்கியம். அதை மட்டும் நினை. சரியா?” என தன்வீர் அவனை ஆற்றுப்படுத்த முயன்றான்.
“ஆமா! ருஹானா தான் முக்கியம்” என மிஷாலும் தலையாட்டினான்.
——
ஆர்யன் கட்டில் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த சல்மா “அவ இல்ல.. நான் தான் உனக்கு தகுதியானவ! நான் தான்” என அழுத்தி சொல்ல, ஆர்யன் படாரென கண் விழித்துக்கொண்டான். திடுக்கிட்ட சல்மா “ஆர்யன்!” என அழைத்தாள்.
‘என்னை விட்டு போகாதே!’ என அவன் கெஞ்சின நிமிடத்திற்கு நினைவால் சென்ற ஆர்யன் கண்களை சுழற்றினான். மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து கொண்டவன், பிராணவாயு கவசத்தை எடுத்துவிட்டு எழுந்தான். “ஆர்யன்!” என மீண்டும் சந்தோஷ புன்னகையுடன் சல்மா கூப்பிட, அவளை சட்டை செய்யாமல் கட்டிலில் இருந்து இறங்கினான்.
ருஹானாவிற்கு இழைத்த அனைத்து கொடுமைகளுக்கான பாவங்களிலும் இருந்து ஆர்யன் விடுபட்டு, தனது உயிரையும் பொருட்படுத்தாது அவள் உயிரை காத்து பீனிக்ஸ் பறவை போல அவன் புதிதாய் எழுந்துவிட்டான்.
“என்ன செய்றீங்க ஆர்யன்? இருங்க” என அவன் கையை சல்மா பிடிக்கப் போக, அவளிடமிருந்து ஒதுங்கியவன் “அவ எங்கே?” என கேட்டான். சல்மா பதில் சொல்லாமல் முழிக்க “எங்க இருக்கா? இங்க தானா?” என அவன் பயந்து போய் கேட்டான், ருஹானா உயிரோடு இருக்கிறாளோ, இல்லையோ என்ற அச்சத்துடன்.
சல்மாவிற்கு அதிர்ச்சியில் பதில் சொல்ல வரவில்லை. ஆர்யன் சுயநினைவுக்கு வந்ததும், எதிரே காத்திருந்த தன்னை விட்டுவிட்டு ருஹானாவை கேட்பான் என எதிர்பார்க்காத முட்டாள் சல்மா அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நிற்க, ஆர்யனே கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான்.
தோளில் கட்டுப்போட்டு அதற்கு ஆதரவாக இடது கையை தொட்டில் போல தொங்கவிட்டு இருக்க, இரு உள்ளங்கைகளிலும் கட்டுக்கள் இருக்க, கலைந்த முடியுடன், கலக்கம் நிறைந்த கண்களுடன் ஆர்யன் வர, வெளியே காத்திருந்த கரீமா “ஏன் எழுந்தே ஆர்யன்?” என பதட்டத்துடன் கேட்டாள்.
“நான் அவளை பார்க்கணும்” உறுதியாக வந்தது பதில்.
சல்மா முகம் கடுக்க, கரீமா “நீ இப்படி போக முடியாது ஆர்யன். அவ நல்லா இருக்கா. கவலைப்படாதே. நீ உள்ளே போ” என சொல்லிப் பார்த்தாள்.
அவளையும் இலட்சியம் செய்யாமல் ருஹானாவை ஒவ்வொரு இடமாக தேடிவந்தவன், கண்ணாடி தடுப்பின் வழியே ருஹானாவை பார்த்துவிட்டான். அருகே நெருங்கியவன் அவள் அசையாமல் படுத்திருப்பதை கண்டு அவள் முகத்தை கூர்ந்து கவனித்தான்.
அப்படியே நின்று அவன் ருஹானாவை பார்த்துக்கொண்டே இருக்க, அவனை பின்தொடர்ந்து வந்த சல்மாவும், அவளுக்கு பின் நின்ற மிஷாலும் ஆர்யன் பார்ப்பதையே வெறுப்புடன் பார்த்து நின்றனர்.
கரீமா செவிலிப்பெண்ணை கூட்டிவர, அவளும் “மிஸ்டர் ஆர்யன்! நீங்க படுக்கையை விட்டு எழுந்துக்க கூடாது. உங்க ரூம்க்கு வாங்க” என்று கையை பிடித்து அழைத்தாள்.
“விடு!” என ஆர்யன் கையை உதற, அவள் “ப்ளீஸ்!” என மீண்டும் அழைத்தாள். ஆர்யன் நகராமல் நிற்க, அவள் கரீமாவை பார்த்தாள். கரீமா அவளை செல்லும்படி ஜாடை செய்தாள். அவளுக்கும் அதிர்ச்சி தான். ஆர்யன் இப்படி வெளிப்படையாக ருஹானா மேல் ஈடுபாடு காட்டுவது பெருத்த அதிர்ச்சி தான். சல்மா புலம்பிக்கொண்டே இருந்தது உண்மை தானோ என சந்தேகம் எழுந்தது கரீமாவுக்கு.
நேரம் கடந்ததே தவிர ஆர்யன் ருஹானா மேல் வைத்த கண்ணை எடுக்கவேயில்லை. யார் தன்னை சுற்றி நிற்கிறார்கள் என்று கவனிக்கவும் இல்லை. அவர்கள் என்ன நினைத்தாலும் அவனுக்கு அதை பற்றிய கவலை இல்லை. தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைக்கவும் இல்லை. அவளுடைய அஞ்சன விழிகளில் அசைவு தெரியாதா என பார்த்துக்கொண்டே இருந்தான்.
செவிலி சென்று மருத்துவரை அழைத்து வர, அவரும் ஆர்யனை படுக்கையை விட்டு எழுந்து நிற்க கூடாது என அறிவுறுத்தினார். ஆனால் அவனோ அவரையே கேள்வி கேட்டான். “எப்போ எழுந்திருப்பா? ஏன் இன்னும் முழிக்கல?”
“நாளைக்கு காலைல தான் எதுவும் சொல்ல முடியும். அவங்களுக்கு உங்களை விட அதிகமா எரிவாயு உள்ளே போயிருக்கு. மோசமான நிலைல தான் இருக்காங்க. எழுந்து உயிரோட வரணும்னு அவங்களும் முயற்சி செய்யணும்” என்று மருத்துவர் சொல்ல, ஆர்யன் ருஹானாவை பார்த்துகொண்டே திரும்பி மெல்ல நடந்தான்.
சல்மாவும், கரீமாவும் அவன் பின்னால் செல்ல, மிஷால் கண்ணாடித் தடுப்பின் அருகே சென்று ருஹானாவை பார்த்தபடி நின்று கொண்டான்.
ஆர்யன் 19 ஆம் எண் அறையின் உள்ளே செல்ல, சல்மா பின்னே செல்ல முயல, அவள் முகத்தை கூட பார்க்காமல் “நான் தனியா இருக்க விரும்பறேன்” என்று கதவை அடைத்துக்கொண்டான்.
ஆத்திரம் அடைந்த சல்மா “பார்த்தியா அக்கா, எப்படி அவளை பார்த்து உருகுறான்? அவளால தான் இவனுக்கு இந்த நிலைமை. ஆனாலும் அவளை பத்தி தான் கவலைப்படறான்” என பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.