வீட்டு வாசலுக்கு வந்ததும், இறங்கியவன், “ இங்கருந்தே ஓலா புக் பண்ணிக்கறேன். உங்களுக்கு எதுக்கு தொந்தரவு ?”, என்று சங்கடமாக நின்றான்.
“கேட் திறங்களேன் ப்ளீஸ்.”, என்றாள் ஸ்ரீ.
“ஓஹ்… சாரி.”, என்றவன் அவள் சொன்னதை செய்ய, வண்டியை உள்ளே விடும் போதே ஹார்னை தெறிக்க விட்டாள்.
நவீன் அந்த சத்தத்தில் முழிக்க, வாசல் கதவு திறந்தது. “எதுக்குடி பிசாசே இப்படி ஹார்ன் அடிக்கற?”, என்று கத்தியவர் ஸ்ரீயின் அம்மா என்று சொல்லாமலேயே புரிந்தது.
“ஷ்.. கூட கெஸ்ட்.”, என்று அம்மாவை முறைத்தாள் ஸ்ரீ, வண்டியை ஸ்டான்ட் போட்ட படியே.
அப்போதுதான் கேட் அருகில் நின்ற நவீனைக் கண்டவர், “ஓ… வாப்பா. ஏன் அங்கயே நின்னுட்ட. உள்ள வா.”, என்று அழைத்தார்.
ஸ்ரீயை அவஸ்தையாகப் பார்த்தான் நவீன்.
“பாஸ்…இவ்வளவு தூரம் வந்துட்டு, வீட்டுக்குள்ள வரதுக்கு என்ன? வெய்யில் பிளக்குது. வந்து கொஞ்சம் தண்ணி குடிங்க. அப்பறம் ஓலா புக் பண்ணுங்க.வாங்க.”, என்று அவள் பங்குக்கும் அழைக்கவும், அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது, ஒரு அரைப் புன்னகையுடன் அவள் பின்னே வீட்டுக்குள் வந்தான்.
உள்ளே மீன் குழம்பின் வாசம் கமகமத்தது. அவனையும் மீறி நாவில் நீர் ஊறியது.
“உக்காருபா. உன் பேர் என்ன?”, என்றார் ரோஜா.
“நவீன் ஆன்ட்டி.”, என்றான் பவ்யமாக.
அதற்குள் ஃப்ரிஜ்ஜில் இருந்த பாட்டிலில் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றொன்றை அவனிடம் நீட்டினாள் ஸ்ரீ.
“டம்பள்ர்ல குடுக்கலாம் இல்ல ?”, என்று ரோஜா சொல்லும்போதே இருந்த தாகத்தில் வாங்கிக் குடித்திருந்தான் நவீன்.
“மா… செம்ம வெய்யில். இதுதான் வசதி.”, என்று சோஃபாவின் மறுபுறம் அமர்ந்தாள்.
“சரி தட்டு எடுத்து வைக்கறேன். இரண்டு பேரும் கை கழுவிட்டு வாங்க சாப்பிட.”, என்று சொல்லி உள்ளே செல்ல, நவீன் முழித்தான்.
“அதெல்லாம் வேணாம். நான் இப்ப கிளம்பறேன்.”, என்று ஸ்ரீயிடம் சொன்னவன் போனை எடுத்து நோண்ட,
“மா… நவீனுக்கு வேணாமாம். கிளம்பறாங்களாம்.”, என்று இருந்த இடத்திலிருந்தே கத்தினாள் ஸ்ரீ.
தட்டை சாப்பாட்டு மேசையில் வைத்த ரோஜா, “ என்னப்பா. மதியம் இரண்டாகப்போது. ஒரு வாய் சாப்பிட்டு அப்பறம் கிளம்பலாம். வா வா… ரெடியா இருக்கு. மீன் குழம்பு சாப்பிடுவல்ல ? “
“ அதுக்குள்ள சாப்பிடலாம். வா. பத்து நிமிஷம் காட்டும் வண்டி வரதுக்கு இருவது நிமிஷமாகும். “, என்று மீண்டும் அழைத்தார். மீன் குழம்பு வாசமும், வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகியிருந்ததும் சேர்த்து அவன் வயறு உறுமியது.
“அட ஏன் இப்படி தயங்கறீங்க. வாங்க. சாப்பிட்டு புக் பண்ணிக்கலாம். இங்கத்து அட்ரெஸ் குடுத்தாதானே நீங்க புக் பண்ண முடியும் ?”, என்று சொல்லி கை கழுவச் சென்றாள் ஸ்ரீ.
‘இதென்னடா வம்பு?’, என்று உள்ளுக்குள் புலம்பினாலும், அவன் வரவை எதிர்பார்த்து நிற்கும் ஸ்ரீயின் அன்னையை புறக்கணிக்க முடியாது, நவீன் கை கழுவி வந்தான்.
“ரோசா.. நவீன் ஸ்போர்ட்ஸ் மேன். உன் ஆசை தீர சாப்பிடுவாரு. என்னைமாதிரி பூச்சி புடிக்க மாட்டாரு.”, என்று ஸ்ரீ சொல்லவும்,
“அப்படியா ?”, என்ற ரோஜா, இன்னும் ஒரு கரண்டி சாதம் வைக்க, “இல்லை இல்லை… நீங்க உங்க வரைக்கும் செய்திருப்பீங்க ஆன்ட்டி. கொஞ்சம் போறும். ப்ளீஸ்.”, என்று நவீன் சொல்ல,
“அதெல்லாம் இல்லை நவீன். இவ எப்ப வேணா யாரவது ஃப்ரெண்டை கூட்டிட்டு வருவான்னு, எப்பவும் எக்ஸ்ட்ரா சமைப்பேன். நீ தாராளாமா சாப்பிடுபா.”, என்று குழம்பை ஊற்றினார். கூடவே, முட்டை பொரியலும், மீன் துண்டுகளும் வைக்க அதற்கு மேல் மறுக்க வில்லை நவீன். அல்லது காய்ந்துகிடந்த அவனது வயறு மறுக்க விடவில்லை.
ஸ்ரீயின் தாயார் மிகப் பிரமாதமாக சமைப்பார் என்று ஒரு வாய் உண்டதுமே தெரிந்தது. ரசித்து உண்டவன், “ ரொம்ப சூப்பர் ஆன்ட்டி. ஒரு மாசமா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு காஞ்சிப்போயிருந்தேன்.”, என்று பாராட்டி அடுத்த கவளம் உண்டான்.
புரியாமல் பார்த்தவரிடம், “ நவீன் கிரிக்கெட் ப்ளேயர்மா. ஐ.பி.ல் ல ஆடறாரு. மால்ல அவரை பொண்ணுங்க சூழ்ந்துகிட்டாங்க. நான்தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன்.”, அன்னையிடம் பெருமையடித்தாள் ஸ்ரீ.
“குள்ள கத்திரிக்கா நீ, ஆறடி வளர்ந்திருக்க பிள்ளையை காப்பாத்தி கூட்டிட்டு வந்தியா? புதுசா வேற கதை சொல்லுடி.”, என்று வாரினார் ரோஜா.
அதைக் கேட்டு புன்னகைத்த நவீனைப் பார்த்தவள், “நிஜமா.. ஒரு புடவையை சுத்திவிட்டு, என்னமா ப்ளான் பண்ணி தப்ப வெச்சிருக்கேன் தெரியுமா?”, என்று அவன் புன்னகையை உறைய வைத்தாள். வேண்டாம் என்ற அவன் தலையாட்டலை புறக்கணித்தவள், விலாவாரியாக நடந்ததை கூறவும், நம்ப முடியாமல் நவீனைப் பார்த்தார் ரோஜா.
“இவ சொல்றது நிஜமா நவீன் ? இந்த பொண்ணுதான் புடவையை கட்டிவிட்டா ? நீ ஏன்பா ஒத்துகிட்ட ? அந்தபொண்ணுங்களைத்தான் ரேணு திசை திருப்பிட்டாளே, அப்பறம் எதுக்கு புடவை?”, என்று ரோஜா கேட்கவும் அப்போதுதான் உறைத்தது நவீனுக்கும்.
ஸ்ரீயை முறைத்தான். “ அதை அப்ப கேட்டிருக்கணும். கட்டிவிட்டா கட்டிகிட்டீங்கதான ? எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான். அந்த கும்பல்ல எவளாச்சம் சந்தேகப்பட்டு திரும்ப வந்தா என்ன செய்யறது? ரேணுவையும் கும்மிடுவாளுங்க, அதான். “, என்று ஸ்ரீ சொல்லவும்,
“என்னை யோசிக்கவே விடலை ஆன்ட்டி. அது எப்படி அங்க சர்வீஸ் லிஃப்ட் இருக்குன்னு தெரியும் உனக்கு ?”, என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்டான்.
“அந்த மால் மொத்தம் அத்துப்படி. காலேஜ் முடிஞ்சா அங்கதான் சுத்திட்டு இருப்போம். ஆல்சோ, இந்த மாதிரி ப்ளான் எல்லாம் அடிக்கடி செய்யறதுதான், காலேஜ் கட் அடிச்சு வெளிய போறதுக்கும், திரும்ப உள்ள வரதுக்கும் இப்படி எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளான் போட்டு பழக்கம்.”, அன்னையின் முன்னால் கட் அடிப்பதும், மாலில் இருப்பதும் சாதாரணமாக பேசுபவள் அவனுக்கு வியப்பாக இருந்தாள்.
நவீன் கல்லூரிக்கு சென்றதே அரிதுதான். அதிலேயும் சில நாட்கள்தான் வகுப்பில் உட்கார முடியும் என்பதால் கட்டெல்லாம் அடித்ததேயில்லை.
“உங்க முகத்தைப் பார்த்தா க்ளாஸ் கட்டெல்லாம் பண்ணதில்லை போல ?”, என்று சற்று ஏளனமாகக் கேட்டாள் ஸ்ரீ.
“உன்னாட்டமா? அது படிக்கற புள்ளையா இருக்கும்.”, என்றார் ரோஜா.
“மா… சுமாரா படிச்சாலே போறும். ஸ்போர்ட்ஸ் கோட்டால சீட் கிடைச்சிரும்.”, என்று ஸ்ரீ அவள் ஆதங்கத்தைக் கூற,
“அதுக்கும் நாங்க ஸ்போர்ட்ஸ்ல நல்லா பண்ணணும். சும்மா இல்லை. அதுவும் எங்கம்மா அப்படியெல்லாம் படிக்காம இருக்க விடமாட்டாங்க.”, என்றான் ரோஷமாக.
“ஓஹ்… என்ன படிச்சிருக்க நவீன் ?”, என்றார் ரோஜா.
“பி.காம் முடிச்சிட்டு அப்பறம் எம்.பி.ஏ பண்ணேன் ஆன்ட்டி. அதுவும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல.”, என்று கடைசி தகவலை ஸ்ரீயிடம் கூறினான்.
“பத்தியா… கிரிக்கெட் ஆடினாலும், கருத்தா படிச்சிருக்கு. நீயும் இருக்கியே. “, என்று கிடைத்த இடைவெளியில் ரோஜா கிடா வெட்ட, புசு புசுவென்று கோபம் ஏறியது ஸ்ரீயிடம்.
“நீ என்ன படிக்கற…. ஓஹ்… உன் பேர் என்ன ? அதுகூட நான் தெரிஞ்சிக்கலை…. சாரி…”, என்று நவீன் கேட்கவும்,
“அட… அதுவே தெரியாதா. நல்ல பிள்ளை. அவ ஸ்ரீநிதி. என் ஒரே பொண்ணு. பி.ஏ சைக்காலஜி பண்ணிட்டு… இப்ப வேலை தேடிட்டு இருக்கறதா பேர் பண்ணிகிட்டு இருக்கா. நான் வனரோஜா.”, என்று அறிமுகம் செய்து வைத்தார்.
“இப்ப சொல்றது லேட்தான்… ஆனாலும் உன் ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் ஸ்ரீ.”, என்று உளமாற நவீன் கூறியதும், கோவம் சற்று குறைய,
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஃப்ரீயா விடுங்க.”, என்று எளிதாக பதிலளித்தவள், மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.
“சைக்கியாட்ரிஸ்ட் ஆகணும்னு சைக்காலஜி படிச்சியா ?”, என்று ஸ்ரீயிடம் ஆர்வமாகக் கேட்டான் நவீன்.
கண்ணை உருட்டியவள், “ஐயோ…. காதுல சத்தம் கேட்குது, எனக்குள்ள வேற ஆள் இருக்குன்னு, ஒவ்வொருத்தர் சோகக் கதை கேட்கறதெல்லாம் எனக்கு செட் ஆகாது. நான் அப்படியே பெரிய கார்ப்பரேட் கம்பனியா பார்த்து ஹெச் ஆர்ல சேர்ந்தா, அப்படி பஞ்சாயத்து பண்ணி பொழுது ஓட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன்.”
“அப்போ… சைக்காலஜி உன் எய்ம் இல்லையா?”
“ம்க்கும்…. ப்ளஸ் 2 ல இவ வாங்கின மார்க்குக்கு இவ அப்பா தெரிஞ்சவங்க கைல கால்ல விழுந்து இதுலதான் சீட் கிடைச்சுது.”, உள்ளேயிருந்து ரசம் சுட வைத்துக் கொண்டு வந்த ரோஜா, இருவருக்கும் பறிமாறிக்கொண்டே நொடித்தார்.
“மா… சும்மா என்னை டாமேஜ் பண்ணாதே. கணக்கு வரலைன்னா திரும்ப காமர்ஸ் க்ரூப் எடுக்க வெச்சு அக்கவுண்ட்ஸ் போட வெச்சீங்க. வரதுதான் வரும்.”, முறைத்தாள் ஸ்ரீ.
“கணேக்கே இல்லாத சைக்காலஜில மட்டும் மார்க் பிச்சிகிட்டு கொட்டுச்சா? போடி…”, என்று அவள் முறைப்பை தட்டிவிட்டார் ரோஜா.
வேடிக்கையாக இருந்த இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனை, “நீங்க எவ்வளவு மார்க் ப்ளஸ் 2ல ?”, என்றாள்.
“கடைசி ஒரு மாசம் விளையாட விடல அம்மா. அதுல படிச்சதுதான் ஆனாலும் ஒரு எய்ட்டி டூ பெர்சண்ட் வந்துச்சு.”, என்றான் புன்னகையுடன். ‘அய்யய்ய…சரியான படிப்ஸ் போல ..’, என்று ஓடியது ஸ்ரீயின் எண்ணம்.
“ஒரு வருஷம் பூரா படிச்சு, ட்யூஷன் போயும் …”, என்று ரோஜா சொல்ல வர,
“போறும்… உன்னை கேட்டாங்களா நான் எவ்வளவு மார்க்னு? டிகிரி முடிச்சிட்டேன். அதோட நிறுத்திக்குவோம்.”, என்று இடை மறித்தாள்.
அவள் முகம் சின்னதாகிவிட்டதைப் பார்த்த நவீன், “சாப்பாடு ரொம்ப நல்லாருந்துச்சு ஆன்ட்டி. தாங்க்யூ சோ மச்.”, என்று பேச்சை மாற்றினான்.
ஒரு வழியாக உண்டு, ஓலா புக் செய்து என்று கிளம்ப இருந்தவன், “ஸ்ரீ… உன் போன் நம்பர் தர முடியுமா?”, என்று கேட்டான்.
‘அட… நம்பர் கேட்கற அளவு தைரியம் இருக்கு பாரேன்.’, என்று உள்ளுக்குள் வியந்தாலும், “ம்ம்… எதுக்கு?”, என்று கேட்டு வைத்தாள்.
“ நாளைக்கும் ப்ராக்டீஸ் வருவோம். இரண்டு டீமும். உனக்கு மத்த ப்ளேயர்ஸ் பார்க்கணும்னு இருந்தா, பாஸ் அரேஞ்ச் பண்ணலாம்னு. ஒரு சின்ன தாங்க்ஸ் உன் ஹெல்ப்க்கு.”, என்று நவீன் சொல்லவும், ஒரு பெரிய புன்னகையுடன் கைபேசி எண்ணை தெரிவித்தாள்.
அவள் சம்மதமாக தலையசைக்கவும், வீட்டு வாசலில் நின்றிருந்த ரோஜாவிடம் கையசைத்து விடை பெற்று, ஸ்ரீயிடம் “பாய்…. “, என்றதோடு காரில் ஏறி பறந்துவிட்டான்.
‘ஜக்கி… நீ நெசமாத்தான் இவனோட என்னை கோர்த்துவிடப் போறியா? இவன் ஸ்போர்ட்ஸ் ஆடறவன்.. எக்சர்சைஸ் எல்லாம் செய்வான். படிப்புல வேற கெட்டி, பத்தாததுக்கு அம்மா கோண்டு. எந்த வகையிலயுமே எனக்கு செட் ஆக மாட்டானே…’ என்று மனதுக்குள் புலம்பிய அதே நேரம்,”ஆனா பார்க்க செம ஹாண்ட்சமா இருக்கான். சினிமால வர மாதிரி, என்னையும் தூக்கிட்டு சுத்த சொன்னாலும் ஈசியா செய்வான்.”, என்று மனது நவீனுக்கு ஆதரவாகவும் பாயிண்ட்டுகளை அடுக்கியது. கூடவே, ‘இவன் இருக்க அழகுக்கு பொண்ணுங்க மொய்ப்பாளுங்க. இவளுங்க அளவுக்கு இல்லைன்னாலும் நாமளும் என்னேரமும் மினுக்கிட்டு திரியணுமே, இதெல்லாம் ஆகற காரியமா ?’, என்று யோசனை வந்து கண்ணைக் கட்டியது.
“எங்கே செல்லும் இந்தப் பாதை…. யாரோ யாரோ அறிவார்…”, என்று முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் ஸ்ரீ.