அத்தியாயம் – 2
ஸ்ரீநிதி , அவள் தோழிகளுடன் சென்னையின் ஒரு பெரிய மாலின் காபி ஷாப் ஒன்றில், நேற்று நடந்த போட்டி பற்றி கதையளந்து கொண்டே வாங்கி வைத்திருந்த காபி மோஷா வை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
 “டி… நான் வாஷ்ரூம்  போயிட்டு வரேன். அந்த சுஜிக்கு மெசஜைப் போடுங்க. கடலை போட்டது போறும் கிளம்பலாம்னு.”, தோழி ரேணுவிடம் உத்தரவைப் போட்டு, தன் கைப்பையை மாட்டிக்கொண்டு சென்றாள்.
போனில் ராக்குவிடம் மெசேஜ் மொக்கை போட்டவள் நிமிர்ந்து பார்க்காது வாஷ்ரூம் சென்றுவிட்டு கை கழுவத் திரும்பும்போதுதான் அங்கே இருந்த யூரினைல்களைப் பார்த்தாள்.
‘இதென்ன லேடீஸ் டாய்லெட்ல இது இருக்கு ? இருக்காதே…’, என்று முழிக்கையில் சட்டென்று கதவு திறந்து ஒரு ஆடவன் அவசரமாக உள்ளே வந்தான். கதவை சாற்றி லாக் செய்து திரும்பியவன் எதிரே ஒரு பெண் நிற்பதை பார்த்து முழித்து,
“ஐயோ…இது லேடீஸ் தா…”, என்று திரும்பவும்,
“இல்ல..இல்ல… நாந்தான் பார்க்காம வந்துட்டேன்.  சாரி… “, என்றாள் ஸ்ரீ.
“ஓஹ்… என்று கதவின்புறம் திரும்பியவன், மீண்டும் அவள் புறம் திரும்ப, இந்த முறை நன்றாகப் பார்த்தவள் நெஞ்சம் திக்கென்றானது.
“நீ…நீங்க….”, என்று அதிர்ச்சி மாறாமல் கேட்க,
“ஐயோ… நீங்களும் ஃபேனா ? கத்தாதீங்க ப்ளீஸ். வெளிய பொண்ணுங்க கும்பல் ஒன்னு துரத்திகிட்டு வருதுன்னுதான் இங்க வந்து ஒளிஞ்சேன். “, என்று மன்றாட, அதற்குள் சுதாரித்து இருந்தாள் ஸ்ரீ.
“ஓ… அதுக்கு ஏன் பயந்து ஒளியறீங்க. என்ன ஒரு செல்ஃபி, ஆட்டோகிராப்னு கேட்பாங்க. அவ்வளவுதான?”, என்றாள் கையை கழுவிக்கொண்டே.
“ம்க்கும்… இப்பல்லாம் பொண்ணுங்க ரொம்ப போல்ட். செல்ஃபின்னு நான் நிக்கவும், சட்டுனு கன்னத்துல ஒரு பொண்ணு கிஸ் பண்ணிருச்சு, இன்னொரு பொண்ணு இடுப்புல கை போடுதுங்க.  எங்கம்மா பார்த்தாங்கன்னா கைமாதான்.”, இன்னும் அதிர்ச்சி விலகாமல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.
அவன் பாவனையில் சிரிப்பு வந்தாலும், கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. ‘ஆறடி வளர்ந்து என்ன புண்ணியம்…இன்னும் அம்மாக்கு பயந்த புள்ளையா இருக்கு. மாமியாக்காரி டெரரா இருப்பாளோ?’, என்று ஓடிய சிந்தனையை பிடித்து நிறுத்தினாள். ‘இந்தா… அதான் ஒத்த ரோசா தெளிவா சொல்லிடுச்சே, பவானி பாட்டிக்கு மத்தவங்களைப் பத்திதான் விஷன் வரும்னு. அதனாலதான அப்படி ஒரு குடும்பத்துல சிக்கி சின்னாபின்னமாச்சு? ராக்கு சொன்ன மாதிரி ஜக்கி இந்த வாட்டி குல்லுதான் விட்டிருக்கும்.’
“என்னங்க… நீங்களும் முறைச்சு பார்க்கறீங்க? “, கொஞ்சம் கலவரமாகக் கேட்கவும்,
“ஏன் நவீன்… இவ்வளவு பெரிசா இருக்கீங்க… நான் என்ன பண்ணிடப்போறேன் உங்களை? “, என்று சிரித்தவள், “ சரி… எப்ப வெளிய போவீங்க ? நான் போகணும். என் ஃப்ரெண்ட்ஸ் காத்துகிட்டு இருப்பாங்க.”, என்றாள் அவனைப் பார்த்து. மீண்டும் எதாவது விஷன் தெரியுமோ என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை.
“அந்த பொண்ணுங்க இருக்காங்களான்னு தெரியலையே… நீங்க வேணா கொஞ்சம் பார்த்து சொல்றீங்களா… ஒரு ஆறேழு பேர்.. எல்லாம் ஜீன்ஸ் போட்டிருக்கும்.”, நவீன் கேட்கவும், சரி என்று தலையசைத்து கதவை  லேசாகத் திறந்து, வெளியேறினாள். அங்கிருந்து சற்று தூரம் சென்று வலப்புறம் திரும்பினால் கடைகள் வந்துவிடும்.
திரும்பிய பத்தடி தூரத்திலேயே அவனைத் தேடி வந்த கும்பலை பார்த்துவிட்டாள். மேலும் சிலருக்கு சொல்லியிருப்பார்கள் போல, ஒரு பத்து பன்னிரெண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
“இங்கதான் ரித்து இருக்கணும். இந்த வழியில போனதைப் பார்த்தேன்.  ஒரு ஆப்ஷன் பாத்ரூம். இல்லை இந்த கடைங்கள்ல இருக்கணும். எதுக்கும் பாத்ரூமுக்குள்ள போவோமா?”, என்று ஒரு நெட்டைகொக்கு கேட்டுக்கொண்டிருக்க,
“ஏய்… அது வேணாம்… அப்பறம் செக்யூரிட்டிகிட்ட மாட்டினா வம்பாகிரும். எப்படியும் வெளிய வந்துதான ஆகணும். கடைங்கள்ல முதல்ல பார்க்கலாம். “, என்று வேறொருத்தி  சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவர்களைத் தாண்டிப் போக நினைத்தவள், வேகமாக திரும்பிச் சென்றாள். சற்று தொலைவில் பெண்கள் ஓய்வறை அருகே சுத்தம் செய்ய இருந்த வண்டியைப் பார்த்தவள், வேகமாக அதை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி, ‘சுத்தம் செய்யப்படுகிறது’, என்ற அறிவிப்புப் பலகையை நிறுத்திவிட்டு கதவை தட்டினாள்.
“ நாந்தான்… சீக்கிரம் திறங்க…”, எனவும், அடுத்த நொடி கதவு திறந்தது. உள்ளே வந்தவள், “ உங்க ஆளுங்க வெளியதான் இருக்காங்க என்று கண்டதையும் கேட்டதையும் சொன்னதும் தலையில் கைவைத்தான் நவீன்.
“மாட்டினேன்… இப்ப டீமுக்கு சொன்னா வம்பாகிரும். ப்ராக்டீஸ் முடிச்சிட்டு எல்லாரும் ஹோட்டலுக்கு போறதா இருந்துச்சு. அம்மாக்கு ஒரு புடவை வாங்கிடலாம்னு, நான் மட்டும் வந்தது தப்பாகிருச்சு. இவங்க எவ்வளவு நேரம் நிப்பாங்கன்னு தெரியலையே….”, அடர்ந்த தலைமுடியில் கைவிட்டு அழுத்தமாகக் கோதினான்.
“இடிச்சு தள்ளிட்டு போங்களேன்… எதுக்கு பயப்படுறீங்க ?”, என்று கேட்டவளை வினோதமாகப் பார்த்தான்.
“வீடியோ எடுத்து போட்டு என்னை மொத்தமா காலியாக்கிடுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு நிறைய க்ளாஸ் எடுத்திருக்காங்க மானேஜ்மென்ட்ல. இப்பதான் முதல் வாட்டி ஐ.பி.ல்க்கு செலக்ட் ஆகியிருக்கேன். “, என்றவன் “ஊஃப்…ஊஃப்”, என்று தன் ஆற்றாமையை ஊதிக் கொண்டிருந்தான்.
‘இப்படி டென்ஷன் பார்ட்டியா இருக்காரே…இதெல்லாம் செட் ஆகாதே நமக்கு’, என்று யோசித்தவள்,
“புடவையை வாங்கிட்டீங்களா? இருக்கா ?”, என்றாள்.
“”ஹ… அது இருக்கு. எதுக்கு? “, என்று தன் முதுகில் இருந்த ஷோல்டர் பையைக் காட்டினான்.
“அதை எடுத்து குடுங்க. சீக்கிரம்.”, என்று உத்தரவிட்டவள், போனை எடுத்து ரேணுவிற்கு அழைத்தாள்.
“யாரு… யாருக்கு போன்?”, என்று நவீன் பதற,
“உஷ்… இப்ப அவங்களை ஏமாத்திட்டு வெளிய போகணும் ரைட்? அப்ப கம்முனு புடவையை எடுத்துக் குடுங்க.”, ஒரு விரல் நீட்டி மிரட்டியவள், போனை எடுத்த ரேணுவிடம் குசுகுசுவென்று பேசினாள்.
‘இன்னும் வம்புல மாட்ட போறியாடா? அய்யோ… அம்மாக்கு புடவைய கோயம்பத்தூர்லயே எடுத்திருக்கலாமே… இப்படி வந்து மாட்டிருக்கியே…’, என்று யோசித்துக்கொண்டிருந்தாலும் அவன் வாங்கிய புடவையை அவளிடம் நீட்டினான் நவீன்.
வெளிர் நீலத்தில் அழகிய நூல் வேலைப்பாடுகள்  நிறைந்த ஜூட் சில்க் புடவையின் அழகில் ஒரு நிமிடம் மயங்கினாள். சற்று முன் ஜக்கி குல்லுவிட்டிருக்கும் என்ற சிந்தனையை மறந்து, ‘பரவாயில்லை… நல்ல டேஸ்ட்’,  என்ற மனதை அடக்கி, புடவையைப் பிரித்தாள்.
“ஹே… என்ன பண்ற ?”, நவீன் அவளிடமிருந்து புடவையைப் பறிக்க முற்பட்டான்.
“ம்ப்ச்… இதை நீங்க கட்டிகிட்டாத்தான்  வெளிய போக முடியும்.”, என்று நவீனை அதிர வைத்தாள்.
“வாட்… விளையாடாதே… அப்படியெல்லாம் போட்டோ வந்தா… என் மொத்த காரியருமே காலியாகிரும்.  நீ விடு. நான் இங்கயே இருக்கேன். “, என்றான் கோவமாக.
“இருந்தா? எப்ப வேணா ஆளுங்க வருவாங்க. உங்களைப் பார்த்தா கண்டிப்பா விஷயம் தெரிஞ்சிடும். “
“ நீ செக்யூரிட்டி கிட்ட சொல்லு. அவங்க வரட்டும்.  என்ன… எப்படியும் ந்யூஸ் ஆகும். பார்த்துக்கலாம்.”, தலையைத் தேய்த்தான்.
“லிசன். ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்கறேன். புடவையை சுத்திக்கோங்க. என் கர்ச்சீஃப் தரேன், தும்மல் அடக்கற மாதிரி  பொத்திக்கோங்க. உங்க தாடி மீசை கவராகிடும். இரண்டு நிமிஷம்,  அந்த பக்கம் கார்னர்ல செர்வீஸ் லிஃப்ட் இருக்கு. என் ஃப்ரெண்ட் ஹோல்ட் பண்ணுவா. இன்னொருத்தி கரெக்டா உங்களை எதிர் பக்கம் பார்த்ததா அந்த  அராத்து கும்பல்கிட்ட சொல்லி கிளப்புவா. டக்குனு கிளம்பிடலாம். லிஃப்ட் நேரா பார்க்கிங்தான் போகும்.  என் ஸ்கூட்டி இருக்கு. பறந்துடலாம்.”, என்று வேகமாக சொல்லிக்கொண்டே புடவையைப் பிரித்து அவன் கார்கோ பேன்ட் இடுக்கில் சொருகினாள்.
என்ன ஏது என்று யோசிப்பதற்குள், புடவையை  கட்டி, முந்தானையை தோள் மேல் போட்டிருந்தாள் ஸ்ரீ. போனை எடுத்து, “ஓகே… நாங்க ரெடி. நீ ஆரம்பி., என்று காதில் ப்ளூ டூத்தை பொருத்தியவள், தன் கைக்குட்டையை பையிலிருந்து அவனிடம் கொடுத்தாள்.
அங்கே ரேணு ‘ஹே…நவீன் யா… அந்தப் பக்கம்.’, என்று கத்துவதும் பின்னோடே இரைச்சலும் கேட்க, அவன் கையைப் பற்றியவள் கதவினை திறக்க, ஒரு எட்டு வைத்த  நவீன் தடுமாறி, கதவின் நிலைப்படியை பிடித்து நின்றான்.
“இன்னொரு கையால புடவைய லேசா தூக்கி பிடிங்க. கமான்… சின்ன சின்ன ஸ்டெப்ஸ்… சீக்கிரம்.”, அவனை அவசரப்படுத்தினாள் ஸ்ரீ.
புடவை முந்தானை நழுவுவதை பிடிப்பதா, முகத்தை கைக்குட்டையால் மூடுவதா, தடுக்கி விழாமல் நடப்பதா என்று புரிவதற்குள் ஒரு மாதிரி அவனை நகர்த்திக் கொண்டு வந்திருந்தாள் ஸ்ரீ.
ஓரிவர் மட்டுமே இருந்த அந்தப் பாதையில் வந்து, படிகள் இருக்கும் கதவு பக்கம் திறந்து, அதில் பக்கவாட்டில் இருந்த இன்னொரு கதவை திறக்கவும், சுஜி, லிஃப்ட்டைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
“சீக்கிரம்… லிஃப்ட் கத்த ஆரம்பிச்சிடும்…”, என்று துரிதப்படுத்தியவளிடம், “யா… யா… அப்பறம் கால் பண்றேன்…. ரேணுவை காப்பாத்தி கூட்டிட்டு போ…”, என்று கத்த, நவீன் லிஃப்ட் கதவை மூடும் பொத்தானை அழுத்திக்கொண்டிருந்தான்.
கதவு மூடவும் ,‘B2 ப்ரெஸ் பண்ணுங்க.”, என்றாள். முகத்தை மூடியிருந்த கைக்குட்டையை விலக்காமல் அவள் சொன்னதை செய்தான் நவீன்.
அவன் புடவையை பிடித்து இழுத்தாள். “க்விக்.. கழட்டுங்க. இங்க காமிரா கிடையாது.”, என்று சொல்லவும், மேல் கூரையை ஒரு முறை பார்த்து உறுதி செய்தவன், சட்டென்று புடவையை உருவி அவளிடம் கொடுத்தான்.
அதை சுருட்டியவள், “சீக்கிரம் பையில போடுங்க. லிஃப்ட் நின்னுட போகுது.”, என்று அவசரப் படுத்தினாள். ஆனால் வேறு தளத்தில் நிற்காமல் B2 வந்து இறங்கியது.
“எதுக்கும் கர்சீஃபை வெச்சு மறைச்சுக்கோங்க. என் ஸ்கூட்டி  அந்தப் பக்கம்.”, என்று ஸ்ரீ முன்னால் நடக்க, சுற்றிலும் பார்வையை ஓட்டியபடியே பின்னால் தொடர்ந்தான் நவீன்.
தலை கவசத்தை எடுத்து மாட்டியவள், “பின்னாடி உட்காருங்க. “, என்று அடுத்த கட்டளையை பிறப்பித்தாள்.
ஸ்கூட்டியை சந்தேகமாகப் பார்த்தான் நவீன். “டபுள்ஸ் ஓட்டுவீங்களா இல்லை… நான் வேணா…”, என்று இழுத்தான்.
“ஹலோ… எங்கிட்ட மட்டும்தான் ஹெல்மெட் இருக்கு. இது உங்களுக்கு பத்தாது. நீங்க ஹெல்மெட் இல்லாம ஓட்டினா சிக்னல்ல மாமா புடிப்பாரு… பரவாயில்லையா?”, என்றாள் ஒற்றை புருவம் தூக்கி.
அவள் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்து, “சரி… பக்கத்துல இருக்கற ஆட்டோ கிட்ட விட்டுடுங்க. போறும்.”, என்று பின்னால் அமர்ந்தான்.  ஒரு வழியாக பார்க்கிங்கை விட்டு வெளிய வந்த போதுதான் அது மதிய நேரம், ஆட்டோ எதுவும் அருகில் இல்லை என்பது புரிந்தது.
“இங்க இருக்க வேணாம்… எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க. அங்கிருந்து ஓலா வரவழைச்சுக்கலாம்.”, என்ற ஸ்ரீ, வண்டியைக் கிளப்பினாள்.
“இல்ல…இல்ல… உங்களுக்கு எதுக்கு சிரமம். பக்கத்துல எங்கயாச்சம் நிறுத்துங்க. நான் பார்த்துக்கறேன்.”, என்று மறுத்தான் நவீன்.
“நிறுத்தினா, மறுபடியும் வேற பொண்ணுங்க வந்து சுத்திக்க மாட்டாங்களா? வாங்க ப்ளேயர். வீட்ல எங்க அம்மா இருப்பாங்க. உங்களுக்கு எந்த பங்கமும் வராது.”, என்று நக்கலாகக் கூறி வார்த்தையால் நவீனை பங்கம் செய்தாள் ஸ்ரீ.
அவள் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் பல்லைக் கடித்தவன், “ திடீர்னு என்னை கூட்டிட்டு போனா உங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களா?”, என்று அடுத்த சந்தேகத்தை கிளப்பினான்.
“அதெல்லாம் சொல்ல மாட்டாங்க… அப்பப்ப நான் யாரையாச்சம் கூட்டிட்டு போற வழக்கம்தான்.”, என்று அவன் வாயை அடைத்தாள். நவீனுக்குப் புரியவில்லை, ‘அடிக்கடி யாரையாச்சம் கூட்டிட்டு போவாள்னா ?’, என்று யோசிக்கும் வேளை, மெயின் ரோட்டிலிருந்து  கிளை சாலைக்கு மாறியிருந்தாள்.
“ஓஹ்… உங்க வீடு இவ்வளவு பக்கமா?”
“இல்லை… இது குறுக்கு வழி, இந்த காலனி தாண்டி அடுத்தது. மெயின் ரோட்ல இரண்டு சிக்னல்ல மாட்டணும்.”, வழியில் ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் வர அதில் ஏறியிறங்கியதில், நவீன் அவள் தோள்களை அனிச்சையாகப் பிடித்தான். உடனே விட்டு, “சாரி… “, என்று சொல்லவும்,
‘பசங்கதான் ஸ்பீட் ப்ரேக்கர்ல ஏத்தணுமா என்ன?’, என்று உள்ளுக்குள் சிரித்தவள், தோளை மட்டும் குலுக்கிவிட்டு அவனுக்கு பதில் சொல்லாமல் வண்டியில் கவனமானாள்.