Raaja Bavani 19 1 16879 இராஜ பவனி 19 “குகன்.. எங்க தனா..? மருமக வர நேரமாச்சு..” என்று வந்தார் வைதேகி. “கோவில்ல இருப்பான்த்தை.. நான் போய் அவனை அனுப்பி வைக்கிறேன்..” என்ற குகன், கோவிலுக்கு சென்றான். அங்கு தனா பூஜைக்கான ஏற்பாட்டை பார்த்து கொண்டிருக்க, “அனு வர நேரம், நீ வீட்டுக்கு கிளம்பு..” என்றான் குகன். “சமையல் ஆச்சான்னு பார்க்கணும்..” தனா சொல்ல, “நான் பார்த்துகிறேன் நீ போ..” என, தனா வீட்டிற்கு கிளம்பினான். குகன் சமையல் நடக்கும் இடத்திற்கு சென்றவன், “முத்துண்ணா.. பந்தி போட்டுடலாமா..?” என்றான். “அட இருப்பா.. கேசரி கிண்டிக்கிறேன், இன்னும் பூஜையே ஆரம்பிக்கல, அதுக்குள்ள..” அவர் சலித்து கொண்டார். “என்னண்ணா நீ புரியாத பேசுற, இப்போ இருந்து பந்தி போட்டா தான் நைட்டுக்குள்ள முடிக்க முடியும், நம்ம ஊர்க்காரர் தானே நீங்க, கூட்டம் தெரியும் இல்லை..” என்றான். “அது தெரிஞ்சு தான் இன்னும் இரண்டு மூட்டை அரிசி ரெடியா வச்சிருக்கேன், பொங்கி பொங்கி இறங்கிற மாட்டேன்..” என்றார் அவர். “நல்லதுண்ணா.. கடைசி வரை எந்த ஐட்டமும் இல்லாம போக கூடாது பார்த்துக்கோங்க, அப்புறம் ஊர்க்காரனுங்க, என்ன பெரிய சாப்பாடு போட்டீங்கன்னு கேட்டுடுவாங்க, எல்லாம் ஏத்தம் பிடிச்சவனுங்க..” என்றான். “ஆமாமா என்ன சாப்பாடு பண்ணன்னு என்னையும் பேசுவாங்க..” அவர் வேகத்தை கூட்டினார். இன்று ஊரில் திருவிழா, அதோடு அனுவும் மூன்று மாத மகள் காவ்யாவுடன் கணவன் வீடு திரும்புகிறாள். கோவிலில் தனா சார்பில் ஊருக்கே அன்னதானமும் கொடுப்பதாக இருந்தது. தனா வீட்டிற்கு செல்ல, குருமூர்த்தி எதிரில் வந்தார். பழக்கம் போல வேஷ்டியை இறக்கிவிட, பார்க்காதது போல பார்த்து கொண்ட மனிதர், “நான் தோட்டத்துக்கு போறேன்.. வீட்ல சொல்லிடு..” என்றார். இன்னைக்குமா..? பார்வை பார்த்தான். “நான் மோட்டார் போட தான் போறேன், பாப்பா வரதுக்குள்ள வந்துடுவேன்..” குருமூர்த்தி அவன் பார்வை புரிந்து சொல்லி சென்றார். தனா எப்போதும் போல அவனின் மரியாதையில், கடமையில், உரிமையில் நிற்க, தந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து வருகிறார். “மருமகளும், பேத்தியும் கிளம்பிட்டாங்களாம் தனா..” என்றார் வைதேகி இவனை பார்க்கவும். “சரிம்மா.. உங்களுக்கு இங்க வேலை ஆச்சா..?” தனா கேட்க, “ஓரளவு, சாரு பார்த்துட்டிருக்கா, இந்த பூ மட்டும் சுத்தினா முடிஞ்சது..” வைதேகி தொட்டிலில் பூ சுற்ற, தனா இன்னும் கொஞ்சம் பூ எடுத்து கொடுத்தவன், “படுக்கையில பூ வேண்டாம்மா.. உள்ள பூச்சு எதாவது இருக்கும்..” என்றவன், துணிய எடுத்து உதறி போட்டான். “அண்ணி தான் இன்னும் வரல தனா..” பரிமளத்தை சொன்னார். “போன் பண்ணியிருந்தேன்ம்மா.. கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க..” என, “ம்மா.. ஆலம் கரைச்சுட்டேன்..” சாரு வர, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. வந்துட்டாங்க.. வாசலுக்கு நடந்தனர். அனு கையில் மூன்று மாத மகளுடன் காரில் இருந்து இறங்கி கொண்டிருந்தாள். தனா அவளை பார்க்க, அவள் இவன் பக்கமே திரும்பவில்லை. “இந்த செல்ல கோவத்தை மட்டும் விட மாட்டா..” தனா உள்ளுக்குள் மனைவியை கொஞ்சி கொண்டான். முன்னமே அனு மகளுக்கு பேர் வைக்க என்று முறையாக கணவன் வீடு வந்து சென்றிருந்தாள். குருமூர்த்தியும் வந்தவர், பக்கத்தில் எல்லாம் செல்லவில்லை. தள்ளி நின்று கொண்டார். “சாரு ஆலம் எடும்மா.. தனா சேர்ந்து நில்லுப்பா..” வீட்டின் பெரிய மனுஷி சொல்ல, தனா மனைவி, மகளிடம் சென்றான். அனு கையில் சிரித்து கொண்டிருந்த மகளை உள்ளுக்குள் பொங்கிய பரவசத்துடன் பார்த்தவன், சாரு ஆலம் சுற்றி முடிக்கவும், குடும்பமாக வீட்டிற்குள் நுழைந்தான். மகளை அழைத்து கொண்டு சுஜாதா, சித்ரா குடும்பம், இன்னும் சில பெரியவர்கள், உறவினர்கள் வந்திருந்தனர். தனா வீட்டு ஆட்கள் சம்மந்தக்காரர்களை வரவேற்று உபசரிக்க, தனா மனைவி மகளுடன் பூஜை ரூம் சென்று வந்தான். “தொட்டில்ல போட்டுடலாமா..?” விருந்தினர்கள் பார்க்க, மகளை தொட்டிலில் படுக்க வைத்தனர். அனு பக்கத்திலே நின்று கொள்ள, “நான் போன் பண்றேன், பூஜைக்கு வந்துடுங்க..” தனா பொதுவாக சொல்லி கோவில் கிளம்பினான். “நானும் வரேன்..” சஞ்சய் சொல்ல, இருவரும் கோவில் சென்றனர். கோவிலில் அன்பழகன், ஆதர்ஷ், அவனின் மனைவி, உறவினர்கள் என்று சிலர் ஓரிடத்தில் இருக்க, தனா நேரே மாமனாரிடம் சென்று நின்றான். சஞ்சய் அங்கு செல்ல பிடிக்காமல், குகனை தேடி கொண்டு சென்றுவிட்டான். “என்னப்பா.. இன்னைக்கு உன்னது தான் சாப்பாடாம், கேள்விப்பட்டேன்..” அன்பழகனின் பங்காளி ஒருவர் கேட்டார். “ஆமா..” சுருக்கமாக முடித்து கொண்ட தனா, ஆதரஷ்ஷை பார்த்தான். அவன் இவனிடம் வரவும், “வீட்டுக்கு வரலையா..?” கேட்டான். “இல்லை மாமா.. நான் அப்புறம் வரேன்..” என்றான் மனைவி குடும்பத்தை பார்த்து. அவர்களுக்கு மருமகன் தனா வீட்டினருடன் பழகுவது பிடிக்கவில்லை. ஆதர்ஷ் முதலில் அவர்கள் பேச்சு கேட்டாலும், இப்போது எரிச்சலாக வந்தது. என்ன இருந்தாலும் அனு அவனின் தங்கை. அவளுக்கு அண்ணனாக எதுவும் செய்ய கூடாது என்றால், இவர்கள் என்ன சொல்வது என்ற கடுப்பு தான். இப்போது மனைவி கரு தாங்கி இருப்பதால் பேசவும் முடியவில்லை. குழந்தை பிறக்கட்டும்.. என்று காத்திருந்தான். ஆதர்ஷ் மனைவியும் கொஞ்சம் புரிதல் உள்ள பெண் தான். புரிந்த தனா, சரி என்று விட்டவன், அன்பழகனிடம், “தேர் முடியவும் மில்லுக்கு வரேன் மாமா..” என்று பூஜை ஏற்பாட்டை பார்க்க சென்றான். “என்னப்பா அன்பு.. உன் மருமகன் தான் அடுத்த ஊர் கவுண்டரா..?” பங்காளி ஒருவர் கேட்டார். வம்புக்காகவே கேட்கிறார்கள், தனா விஷயத்தில் இன்னும் அவர்கள் அடங்கவில்லை. அன்புவை நோண்டி கொண்டே தான் இருந்தனர். அன்பு எப்போதும் கொஞ்சம் முகதாட்சனை பார்க்கும் ஆள் என்பதால் கூட இருக்கலாம். அவர் ஒன்றும் குருமூர்த்தி இல்லையே. அன்புவின் முகம் சுருங்கி விரிய, “எனக்கு சரியா தெரியல சித்தப்பா, அதோ அங்கு தனா அப்பாவே வரார் பாருங்க, போய் கேட்டு தெருஞ்சுக்கோங்க..” என்றுவிட்டார். குருமூர்த்தி கத்தை மீசையை நீவிட்டபடி வந்து கொண்டிருக்க, அவரின் அரக்க தோரணையிலே, “அது எதுக்குப்பா நமக்கு, நாம பூஜைக்கு போலாம்..” என்று நகர்ந்து விட்டார் மனிதர். அன்பு சிரித்தபடி காத்திருக்க, தனா வீட்டு பெண்கள், சுஜாதா, சித்ரா எல்லாம் வந்தனர். வைதேகி, சாரு இருவரும் அன்பு, ஆதேஷ், அவனின் மனைவியிடம் நலம் விசாரித்தனர். உள்ளே பூஜைக்கு மணி அடிக்க, தனா சரியாக அனு பக்கத்தில் வந்து நின்றான். கூட்டம் சேரவும், மகளை அணைவாக பிடித்து கொண்டான். குடும்பமாக நின்று இந்த வாழ்க்கைக்கு மனதார நன்றி சொன்னனர். பூஜை முடியவும், பிரசாதம் கொடுக்க, அனு, தனாவிற்கு பழைய நினைவுகள். தனா இந்த முறை உரிமையாக அவளுக்கு பூ, குங்குமம் கொடுத்து சென்றான். அடுத்து அன்னதானம் ஆரம்பிக்க, இவர்களும் ஓரிடத்தில் அமர்ந்தனர். ஊர் இளவட்டங்கள், தனா, ஆதர்ஷ், குகன், சஞ்சய் என்று எல்லோரும் பரிமாற, கூட்டம் அலைமோதியது. “நீங்க வீட்டுக்கு போங்க..” தனா அவனின் குடும்பத்திடம் சொன்னான். சரி என்று மற்றவர்கள் நடக்க, “எனக்கு கடைக்கு போகணும்..” என்றாள் அனு மட்டும் நின்று. சுற்றி நிற்க கூட இடம் இல்லாமல் கூட்டம் நெருக்க, அவளை கொஞ்சம் ஒட்டி நின்றவன், “இப்போ முடியாதுடி, பாப்பா பாவம், நசுக்கிடுவாங்க..” என்றான். “ம்ஹூம்.. எனக்கு போகணும்..” அனு அடமாகவே சொன்னாள். “ம்ப்ச்.. அனு என்ன இது..?” தனா புருவம் சுருக்க, அதுவே அனுவிற்கு கோவத்தை கொடுத்தது. “ஏன் உங்க மாமா, அத்தை பொண்ணுங்க கூட்டத்துக்கு மட்டும் ஒவ்வொரு திருவிழாவுலயும் வாங்கி தர தெரியுது, எனக்கு முடியாதா..?” என்றாள். “இவ அப்போவும் இப்படி கோவபட்டு தானே அந்த வருஷ திருவிழா தேரோட எங்க காதலும் எல்லோருக்கும் தெரிஞ்சது, அப்படியும் இதை விடுறாளா பாரேன்..” தனாவிற்கு அவளின் கோவத்தில் சிரிப்பு வந்தது. “கூட்டம் கொஞ்சம் குறையட்டும், நான் போன் பண்றேன், அப்போ வா, பாப்பா பாவம் இல்லை..” என, அனு அவனை உர்ரென்று பார்த்து சென்றாள். அவளுக்கு தெரியும் அவன் போன் செய்ய மாட்டான் என்று. அது போல தான் ஆயிற்று. தேர் ஆரம்பிக்க, தனா அதன் வேலையில் மூழ்கி போனான். வைதேகி, அனு சிறிது நேரம் தேர் பார்த்து வீட்டிற்கு வந்துவிட்டனர். சுஜாதா, சித்ரா, பரிமளம், சாரு எல்லாம் பூஜை முடியவும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். அவர்களுக்கும் திருவிழா வேலைகள் இருக்குமே. பேச்சி மாலை போல வர, “எப்படி இருக்கீங்க பெரியம்மா..” அனு தண்ணீர் கொடுத்து நலம் விசாரித்தாள். “ம்ம்..” என்றவர், வைதேகி பரிமாற உணவை முடித்தார். “பெரியம்மா ஸ்வீட்..” அனு கொடுக்க, “எனக்கு வேண்டாம்..” என்றார் அவர். அனு சரி என்று எடுத்து சென்றுவிட்டாள். மேலே எதுவும் பேசி கொள்ளவில்லை. தனா முதலிலே, “மரியாதைக்காக பேசு, கவனி, ஓர் அளவுக்கு மேல யார்கிட்டேயும் இறங்காத, எனக்காகன்னு எல்லாம் பார்க்காத..” என்றுவிட்டான். அனுவும் கணவனின் உறவு என்று இணக்கமாக நடக்க தான் நினைத்தாள். ஆனால் எதார்த்தம் என்பது வேறு தானே. முதலில் அப்போது தான் அவர்களின் கிரீடம் ஏறும், இரண்டு நமக்கும் அந்தளவு பொறுமை வேண்டும். இரண்டும் அளவு மீறி சென்றால் வம்பு தான். அதற்கே முதலிலே இப்படி என்று கோடு போட்டு வைத்து விட்டான் தனா. அவனுக்கு தான் தெரியுமே அவனின் உறவுகளை. அனுவிற்கும் இப்போது புரிந்தது. “எங்க என் தம்பி..? நான் கிளம்பணும்..” பேச்சி அதிகாரமாக கேட்க, “தேர்ல இருப்பார்ண்ணி.. நான் ஆளை விட்டு கூட்டி வர சொல்றேன்..” வைதேகி சொன்னவர், கணவரை வரவைத்தார். குருமூர்த்தி அக்காவை பார்த்து நலம் விசாரித்து, வீட்டு பெண்ணாக அவருக்கு புடவை, பணம் சீராக தந்து அனுப்பி வைத்தனர்.