தூரத்தில் ஆடுபவர்கள் புள்ளியாக தெரிய சீக்கிரமே போர் அடித்தது. அந்த ட்ரம்ஸ் பார்ட்டி வேறு ஓவர் வழிசலாக இருக்க, அவனிடமும் பேச முடியவில்லை. முன் சீட்டில் இருந்த குட்டி வாண்டு ஒன்று அவ்வளவு விவரமாக ராகுலுடன் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது.
ராகுல் பையை எடுத்து நோண்ட, இவளைப் பற்றி தெரிந்தவனாக சிப்ஸ் பாக்கெட், பிஸ்கெட் என்று நொறுக்குத் தீனி வாங்கி வைத்திருந்தான். அதில் ஒன்றை எடுத்தவள், அங்கிருந்த திரையை பார்த்துக்கொண்டிருந்தாள். அம்பையர் டெசிஷனுக்காக காத்திருந்தார்கள்.
“என்னடா… யார் அவுட்…?”
“ஷ்ரேயாஸ் ஐயர். அனேகமா அவுட் இருக்காது.”, என்று ராகுல் ஆருடம் சொல்ல, “ டேய் அவனையாச்சம் பார்க்கலாம், கீழ போலாம்டா.”, என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.
“ஊஃப்… ஒன்னை பிடிச்சா பிடிச்ச பிடியிலேயே இரு… அவுட் ஆனா பார்க்கலாம்.”, என்று சொல்லவும் “நாட் அவுட்”, என்று ஸ்க்ரீன் முடிவை அறிவித்தது… ஓ என்ற ஆரவாரம் எழும்பி ஸ்ரீயின் புலம்பலை அழித்தது.
இனி பேசி புண்ணியமில்லை என்று எப்போதும் போல, அவனிடம் ,”நான் போகத்தான் போறேன்…”, என்று விட்டு முன்னே நடந்தாள்.
இவளோட…. என்று ஸ்ரீயை கூட்டி வந்த முட்டாள்தனத்தை நொந்தவாறு அவள் பின்னால் இறங்கினான். மெதுவாக முன்னேறி வேலியருகே சென்றனர். பவுன்ட்ரி அருகில் இருந்த நவீனின் முதுகுதான் தெரிந்தது.
“சே… புள்ள இந்த பக்கமே திரும்ப மாட்டேங்குதே…”, என்று முனகினாள். “டேய் எவனாச்சம் அவுட்டாகி இந்த பக்கமா வாங்கடா…”, என்று அடுத்த வேண்டுகோளை வைக்க, திடீரென்று சத்தம் குறைந்தது.
என்னவென்று நிமிர்ந்து பார்ப்பதற்குள், பந்து நவீனிடம் வந்து, அவன் கைகளில் நுழைந்து, நிற்காமல் தரையில் விழுந்து ஓடியது.
ஓ என்று மறுபடி இரைச்சல். “ டேய் வெண்ண…. லட்டு மாதிரி பால்.”, “இதை புடிக்க துப்பில்லையா.” , “இவனுக்குப்போய் அம்பது லட்சம் தண்டம்..”, என்று ஏக வசனத்தில் கமென்ட்கள் பறந்தது. நல்ல வேளையாக பந்து பவுண்ட்ரி லைனைத் தொட்டு மானத்தை இன்னும் வாங்கவில்லை. எடுத்து பந்தை போட்டவன், காப்டனை பார்க்க… அவன் வெறுப்பில் ‘என்னடா’, என்பது போல சைகை செய்தான். ஆட்டம் தொடர, ஷ்ரேயாஸ் ஐயருக்கு மறுபடி ஒரு லைஃப் என்று பேசிக்கொண்டனர்.
“நவீன்…. ஷ்ரேயாஸ் விக்கெட் உனக்குத்தான்… டோன்ட் கிவ் அப் மேன்…”, என்று கத்தினாள் ஸ்ரீ. உடன் நின்றிருந்தவர்கள் இதைக் கேட்டு நக்கலடிக்க, எல்லோரும் அவளைப் பார்க்க என்றிருக்க, ராகுலுக்குத்தான் ஐயோ என்றானது. நவீனுக்கும் கேட்டிருக்கும்போல. திரும்பி…லேசாக ஒரு புன்னகை உதிர்த்தான். யார் என்று தெரியாமல் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், ஒரு நிமிடம் உறைந்து, பின் சட்டென்று ராகுலில் சட்டையை பிடித்தாள்.
“என்னடி? ஏன் கத்தி ஊரை கூட்டி மானத்தை வாங்கற? சும்மா இரு.”, என்று கடிந்தவனை,
“டேய்…. வா எங்கூட…. “, தர தர வென்று ஒரு ஓரமாக இழுத்துச் சென்றாள்.
“டேய்… அவன்… அவனைப் பார்த்தேன்ல ? “, அவள் முகம் சற்று கலவரமாக இருக்கவும், “யாரு… யாரை பார்த்த ?”, என்றான் ராகுல்.
“அதாண்டா… நவீன்…. அப்ப ஒரு விஷன் வந்துச்சு…. “
“ஓ… என்ன பார்த்த…. இப்படி கலவரமா இருக்க?”, அசட்டையாகக் கேட்டான் ராகுல், மைதானத்தில் ஒரு கண் வைத்தபடி.
“கல்யாண மேடையில நானும் நவீனும் மாலையும் கழுத்துமா பார்த்தேண்டா….”, கண்கள் விரிய சொல்லும் ஸ்ரீயைப் பார்த்தவன், ஒரு நொடி திகைத்து, பின் சிரித்தான்.
“ஓ… இப்ப நீ ஆசைப்படறதெல்லாம் விஷனா பார்க்க ஆரம்பிச்சிட்டியா… போடி லூசு…”, என்றான் ராகுல்.
“தோ பாரு ஜக்கி… என்னாதான் உன் ஜக்கம்மா அப்பப்ப குறி சொன்னாலும், இதுவரைக்கும் உன்னை வெச்சு… உன்னபத்தி எதுவும் சொன்னதில்லை… இப்ப மட்டும் எப்படி?…. சும்மா… உன் பிரம்மை … விடுடி…”, என்றான்.
அவன் சொல்வதும் உண்மைதான். சிறு வயது முதலே எப்பவாவது இதுபோல அவளுக்கு நடக்கப்போவது புகைப்பட காட்சி போலத் தோன்றும். அதை சில முறை சொல்லி பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கிறாள். சிலர், உனக்கு கரு நாக்கு அதான் அப்படியே பலிச்சிருச்சு என்று சபித்தும் இருக்கிறார்கள்.
வளர வளர நாசூக்காக சொல்லக் கற்றுக் கொண்டாள், சிலது பாதிப்பு இல்லையென்றால் சொல்லாமலும் தவிர்த்திருக்கிறாள். கெட்டதுதான் என்றில்லை, நல்ல விஷயங்கள் கூட சில சமயம் அப்படி காட்சியாகத் தோன்றும்.
ஆனால் இத்தனை ஆண்டுகளில், ஒரு முறைகூட அவளைப் பற்றி எதுவும் கண்டதில்லை. கணக்கு பரீட்சையில் தேருவாளா என்று கணிதப் புத்தகத்தை ஆனமட்டும் முறைத்திருக்கிறாள். ஒன்றும் தெரிந்ததில்லை. இப்போது இப்படி ஒரு காட்சி. ராக்கு சொல்வது போல பிரம்மையோ ?
இன்னும் யோசனையாக இருப்பவளை, “ ஜக்கி… உன்னை யாருன்னு கூட அவனுக்கு தெரியாது. தோ.. இந்த மாட்ச் முடிஞ்சு கிளம்பினா அடுத்து வேற ஊருக்கு போவாங்க… இதுல எங்க எப்படி நீ பார்ப்ப? இம்பாசிபிள். விடு… வா போலாம்.”, என்று கூட்டிச் சென்றான்.
அதற்கு பிறகு அமைதியாக மேட்சை பார்த்திருந்தாள். பவர் ப்ளே முடிந்து, நவீன் கைக்கு பந்து வந்தது. மீடியம் பேஸ் ஸ்பின் , இரு கைகளாலும் போடக் கூடியவன் என்று அவனின் திறமையை பேசிக் கொண்டிருந்தார்கள் அருகிலிருப்பவர்கள்.
முதலிரண்டு பந்துகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அடுத்த பந்து, ஷ்ரேயாஸ் ஐயருக்கு போட வந்தான். நவீனிடமிருந்து அவருக்கான முதல் பந்து. ஒரு நொடி அமைதிக்குப் பின் “ஓ…” என்று ஆரவாரம்… மிடில் ஸ்டம்ப் எகிறியிருந்தது மட்டும் புரிந்தது.
“ஹே… “, ராகுல் அவள் புறம் திரும்பி… “இதையும் பார்த்தியாடி… நீ சொன்ன மாதிரியே ஆச்சு ?”, என்று சந்தோஷமாகக் கேட்க… தோளைக் குலுக்கினாள் ஸ்ரீ.
“இல்லை… அது சும்மா எல்லாரும் அவரை கலாய்க்கவும்… பாவமேன்னு மோடிவேட் பண்ணேன்….”
நெஞ்சில் கைவைத்தவன்…. “என்னாது …. அவரா….. முடிவே பண்ணிட்டியா? அவன் ஸ்போர்ட்ஸ் மேன்… உனக்கும் ஸ்போர்ட்ஸ்க்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. மனுஷன் இன்னா ஹைட் தெரியுமா?… ஆறடி. குள்ள கத்திரிக்கா ஹீல் போட்டு ஏமாத்தினாலும் அஞ்சடி நாலு இன்ச் தேறமாட்ட…. அவன் இருக்க பெர்ஸ்னாலிட்டிக்கு இன்னேரம் நாலு கேர்ள் ஃப்ரெண்டு வெச்சிருப்பான். ஜக்கம்மா இந்த தடவை குல்லுவிட்டுருச்சு… நீ அதை நம்பி ஏமாறாதடி…. சைட்டினியா அதோட விடு….”, அக்கறையான நண்பனாக ராகுல் அவளை தேற்றினான்.
அவன் கூற்றில் இருந்த உண்மை புரிய… ‘அம்மாகிட்ட கேட்கணும்… பவானி பாட்டிக்கு இப்படி எதாவது நடந்திருக்கான்னு.’, என்று நினைத்துக்கொண்டாள். ரோஜாவின் அத்தை பவானி. அவருக்குத்தான் இப்படி காட்சிகள் தெரிந்தது என்பார் வனரோஜா. அதற்கு பின் ஸ்ரீ. எங்கே மகளை காட்சிப் பொருளாக எல்லோரும் பார்ப்பார்களோ என்று இதுவே வனரோஜாவிற்கு ஒரு பெரும் கவலை. முடிந்த வரை யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். ஸ்ரீயிடமும் சொல்லி வைத்திருந்தார். ராகுலுக்கு மட்டும்தான் தெரியும். எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் நட்பு, ஜக்கி என்று அவளுக்கு பெயர் வைத்து கலாய்த்தாலும், அவளை எப்போதும் பாதுகாக்கும் தோழன் ராகுல்.
இவர்கள் இப்படி அமர்ந்திருக்க, ஒரு பிரம்மாணடமான திரையில், மகாபலிபுரம் ரிசார்ட்டில் அமர்ந்து பணக்கார கும்பல் ஒன்றும் இதே போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை அரை சதம் அடிப்பார் என்று கட்டியிருந்த இரண்டு லட்சம் கண் முன்னே காலாவதியானதில் நவீனின் பிறப்பை சந்தேகித்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
“டேய்… விட்றா… இன்னும் மேன் ஆஃப் தி மாட்ச் இருக்கேடா. அதுல போட்டதை எடுத்துடலாம்.”, சித்தார்த்தின் நண்பன் பார்த்தி தேற்றிக்கொண்டிருந்தான்.
“சே… இன்னும் பத்து ரன் மச்சி…. மூணரை லட்சம் வந்துடும்னு நினைச்சேன். இப்படி காட்ச் விட்ட பரதேசி கரம் வெச்சி தூக்குவான்னு நினைக்கலைடா.”, என்று வெறுப்பை உமிழ்ந்தான்.
ஐ.பி.ல் போட்டிகளின் ஆட்டங்களில் நடக்கப்படும் பெட்டிங்தான் இவர்களும் ஆடுவது. குறைந்த பட்சமே லட்ச ரூபாய் கட்டும் அளவிற்கு தகுதியானவர்கள் மட்டுமே சேர முடியும். இதை நடத்துவது யாரோ. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு போன் நம்பரும் ஒரு ஆளும். அவனிடம் இவர்களது பந்தயம் யார் மேல், எதற்கு , எவ்வளவு என்பதை சொல்லிவிட்டால் போறும். வெற்றி தோல்வி பொறுத்து அன்று இரவு பணப் பரிவர்த்தனை நடக்கும், கொடுப்பதோ, அல்லது வாங்கிச் செல்வதோ.
சித்தார்த்துக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதைப்பு. இதுவரை மூன்று ஆட்டங்களில் கிட்டத்தட்ட பத்து லட்சம் போனது. அவன் தந்தை, மனைவிக்குத் தெரிந்தால் அறிவுரை என்று படுத்தியெடுப்பார்கள். அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய பணமில்லை. ஆனாலும் இவனின் திறமையை குறைத்து பேசியே கடுப்பாக்குவார்கள். அந்த நினைப்பிலேயே இன்னும் ஒரு கோப்பை மதுவை காலி செய்தான்.
சட்டென்று ஏற்பட்ட ஆரவாரத்தில் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்தான். மற்றொருவன், அவன் கட்டியிருந்த பந்தயத்தில் வெற்றி கண்டிருந்தான். “சே… அதிர்ஷ்ட தேவதை அவன் பக்கம் இருக்கு. தேவதை என் பக்கம் வந்தா தேவலாம்.”, கடுப்பில் வைத்த கோரிக்கை கடவுளுக்குக் கேட்டதோ?