வழக்கம்போல தாமதமாக எழுந்த ஸ்ரீநிதி அதற்காக பதட்டப்படாமல் கிளம்பிக்கொண்டிருந்தாள். ‘ம்ப்ச்… ராக்குதானே… வந்தா இரண்டு குதி குதிப்பான்… ஆஃப் பண்ணிக்கலாம் ‘, என்கிற அலட்சியம்.
காது வளையங்களை மாட்டி, இந்தப்புறம் அந்தப் புறம் என்று தன் அழகை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படி ஒன்றும் பேரழகியெல்லாம் இல்லை. இருபத்தி இரண்டு வயது பருவ மங்கைக்கு பருவத்திற்கே உரிய செழுமை. துறு துறு என்று பார்க்கும் கண்கள் , சிரிக்கும்போது குழி விழும் கன்னம் என்று அவளுக்கும் கல்லூரியில் ரசிகர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
நிதானமாக படியிறங்கி போட்டிருக்கும் நீளப் பாவாடை படியைப் பிரட்ட, அவளது வாசனை திரவியம் முன்னே வர அவள் பின்னே வந்தாள்.
“என்னமோ காலையில ஒன்பதுக்கெல்லாம் கிளம்பணும்னு சொன்ன… இப்பவே ஒன்பதாச்சு… சாப்பிடப் போறியா இல்லையா?”, தோசைக் கல்லை அடுப்பில் போட்டுக்கொண்டே அவளை வரவேற்றார் ஸ்ரீ நிதியின் தாய் வனரோஜா.
“மை டியர் ஒத்த ரோசா… நமக்கு சாப்பாடுதான் முக்கியம். வந்தா ராக்குவை வளைச்சு போட்டு அவனுக்கும் குடு. இப்ப எனக்கு தா… மத்ததெல்லாம் அப்பறம் பார்க்கலாம்.”, தட்டை எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு நகர்ந்தாள்.
“ம்ம்… பேசுவடி… சைக்காலஜி முடிச்சா அப்படியே வேலை க்யூல நிக்கறமாதிரி பேசின… இப்ப இத்தனை மாசமா ஒன்னுத்தையும் காணோம். இதுவே பையனா இருந்தா என்ன பேச்சு வரும்?”
“இந்தா… பையன் பொண்ணுன்னு பிரிச்செல்லாம் பார்க்க வேணாம். பொண்ணுன்னு எனக்கு எந்த அட்வான்டேஜும் வேணாம்… நீ பேசு ரோசா…. என்னா பேச்சு வரும் ?”, என்றாள் நக்கலாக.
தோசையை திருப்பிப் போட்டவர், “ம்ம்ம்…. தண்டச் சோறு திங்கறன்னு பேசுவாங்க…”, என்றார் ரோஜா. நாற்பத்தி மூன்று வயதில் ஸ்ரீ நிதி எப்படி இருப்பாள் என்பது வனரோஜாவைப் பார்த்தால் தெரிந்துவிடும். ஸ்ரீ அப்படி உரித்து வைத்திருந்தாள் அவள் அன்னையை .
“ஓஹ்… தண்டச்சோறு ? மீ ? … ம்ம்ம்… சரி…. அப்ப சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு… அப்பா காசுல தண்டச்சோறு சாப்பிடறதுக்கு பதிலா புருஷன் காசுல சாப்பிடறேன்.”, கல்லில்லிருந்த தோசையை தன் தட்டில் நேராக வாங்கிக்கொண்டவள்,
“இதுல கொஞ்சம் நெய் விட்டா என்ன ? உங்க அப்பா வீட்டு காசா குறையும் ? எங்க அப்பாதுதானே… ஏம்மா இப்படி ஓரவஞ்சனை உனக்கு ?”, என்று நொடித்தாள்.
“அடிங்க…. கொழுப்புதான் ஏற்கனவே இவ்வளவு இருக்கே? இன்னும் நான் அதை நெய் ஊத்தி வளர்க்கணுமா? வாய்தாண்டி உனக்கு. ஒரு வேலை தேடிக்க துப்பில்லை. அப்பா எதாவது பார்க்கறேன்னு சொன்னாலும், தன்மான சிங்கம் சிலிர்த்துக்கும் . “, ரோஜாவின் அர்ச்சனை தொடர, அதை தடுக்கும் விதமாக காலிங் பெல் அடித்தது.
“நண்பேண்டா….”, என்று முணுமுணுத்தவள், இதுதான் சாக்கென்று கதவை திறக்க சென்றாள்.
“வாடா ராக்கு…”, என்று அழைக்க, வெட வெட வென்று ஒல்லியாக உயரமாக இருந்த அவள் வயதையொத்த ராகுல், “தெரியுமே… இன்னும் கிளம்பலையா? சீக்கிரம் கொட்டிக்கோ… லேட் ஆயிருச்சு இப்பவே.”, என்று அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.
“மா.. ராக்குக்கும் தோசை….”, அவள் தோசையை மீண்டும் சாப்பிடும் போதே ஆர்டர் பறந்தது. அடுத்த தோசையை எடுத்து வந்த ரோஜா…
“ஏண்டா ராகுல், உன் பேரை இப்படி மாத்தி கூப்பிட்றாளே… எதுக்கு அலோவ் பண்ற? எதோ ஸ்கூல கூப்பிட்டா சரி… இப்ப இந்த வருஷம் முடிஞ்சா எஞ்சினீயர் ஆகப் போற, இப்பவாவது மாத்தலாமில்லை?”, என்று நண்பர்களுக்குள் மூட்டி விடும் பணியை செய்தபடியே , இன்னொரு தட்டில் போட்டு அவனுக்குக் கொடுத்தார்.
“அய்ய…. கொளுத்திப் போடறியா மம்மி? அவனை நிறுத்தச் சொல்…. நான் நிறுத்துகிறேன்.”, என்று டயலாக் பேசியவள், “ இவன் என்ன ஜக்கின்னு கூப்பிட்டா அவன் எனக்கு ராக்குதான்… காம்பஸ் இன்டெர்வ்யூல இவரு சுந்தர் பிச்சைக்கு எடுப்பா போனாலும் ராக்குமுத்து ராக்குதான்.”
“என்னது… எடுப்பா ?”, ரோஜா சந்தேகம் கேட்க…
“அசிஸ்டென்ட்ங்கறதைத்தான் உங்க பொண்ணு அவ்ளோ உயர்வா சொல்றா.”, அடுத்த தோசையை வேண்டுமென்றே அவளுக்கு போட விடாது தான் வாங்கிக்கொண்டான்.
“மா… உன் பொண்ணு நான்மா… “, தோசை போன காண்டில் ஸ்ரீ கத்த,
“அந்தக் கொடுமையை மாத்த முடியாமத்தாண்டி இன்னும் முழிக்கறேன்.”, என்று வராத கண்ணீரை துடைத்து ரோஜா செல்ல, ராகுல் கொக்கரித்தான்.
“டேய்… அடங்கு… இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடியெல்லாம் இல்லை…. பொண்ணுன்னு கொஞ்சமாச்சம் பாசம் இருக்கா ? சே…“, ஸ்ரீ தான் பட்ட அவமானத்தை சட்டினியை நக்கி துடைக்க,
“ம்ம்.. அந்த பாசத்துலதான் உன்னை பரத நாட்டியம் கிளாஸ்ல சேர்த்தாங்க ஆன்ட்டி… நீ என்ன பண்ண ?”, ராகுல் எடுத்துக்கொடுத்தான்.
“என் மானத்தை வாங்கினா. எழு வயசுடா அப்ப. இவ என்ன செஞ்சிருந்தா அந்த மிஸ் வாங்கின ஃபீசை திருப்பி கொடுத்து, உங்க பொண்ணுக்கு கலையெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. நிறுத்திடுங்கன்னு சொல்லுவாங்க.”, வருடங்களாகியும் மாறாத வடுவாக இருந்த சோகத்தை மறுபடியும் ராகுலிடம் சொல்லி ஆற்றிக்கொண்டார் ரோஜா.
“ஒழுங்கா எனக்கு என்ன வேணும்னு கேட்டு சேர்த்திருக்கணும். நீ பாட்டு கொண்டு போய் சின்ன புள்ளையை இப்படி சேர்த்துவிட்டா… கூட, என் மேல தப்பில்லை. அந்த மிஸ்க்கு மாமியார் மேல காண்டு போல, எண்ணைய எடுத்துட்டு வரும்போது கொஞ்சம் கொட்டிடுச்சு. நான் பார்த்தேன். பின்னாடியே அவங்க மாமியார் காபியோட வந்தாங்க, வழுக்கி விழுந்தாங்க. நான் பார்த்ததை சொன்னேன். அவ்வளவுதான்.“, தோளை குலுக்கினாள்.
“டான்ஸ் ஆடறதை விட்டுட்டு நீ ஏண்டி இதையெல்லாம் நோட்டம் விட்டுட்டு இருந்த ? பெரிய சண்டையாகி, இன்னமும் மாமியார் மருமக பேசிக்கறதில்லை. உன்ன கேட்டு, தோ இவன் போறானேன்னு கராத்தே க்ளாஸ் அனுப்பினேன். அதையாவது முடிச்சியா?”, ரோஜா தோசையை இருவருக்குமாக போட்டபடியே வம்புக்கிழுத்தார்.
“மா… ஒரு மாசம் ஆ ஊன்னு கத்திகிட்டு காத்துல குத்துன வரைக்கும் போனேன். இதுல அடி விழும்னு ஏன் யாரும் எங்கிட்ட சொல்லலை? அது உங்க தப்பு. தோ இந்த ராக்குவோட தப்பு.”
“ஒரே ஒரு அடி வாங்கனுதுக்கே ஓடி வந்துட்ட… “, ராகுலும் கேலி செய்தான்.
“டேய்… நீ மட்டும் யோக்கியமா? என்னமோ அப்படியே ப்ளாக் பெல்ட் சாம்பியன் மாதிரி … உன்னை விட எனக்கு அறிவு ஜாஸ்தி… அதான் ஒரு அடியிலேயே இது ஆகாதுன்னு வந்துட்டேன். உனக்கு இன்னும் இரண்டு மாசம் எல்லார்கிட்டயும் தர்ம அடி வாங்கின அப்பறம்தான் புத்தி வந்துச்சு.”, என்று அவனை வாயடைத்தாள்.
“ஹே… ச்சே… நேராமாயிருச்சு பாரு… இருந்திருந்து எனக்கு கிடைச்ச டிக்கெட்டை ஞானசூனியம் உங்கூட போலாம்னு நினைச்சேன் பாரு… என்னை சொல்லணும். கிளம்பு கிளம்பு… “, என்று அடுத்த ஐந்து நிமிடத்தில் ராகுல் பைக்கில் பறந்துவிட்டார்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் நிரம்பி வழிந்திருந்தது. வெகு நாள் கழித்து ஐ.பி.ல் மாட்ச் சென்னையில். வார நாளாக இருந்தாலும் திருவிழாக் கூட்டம் போல இருந்தது. விட்டால் காணாமல் போய்விடுவாள் என்று உஷாராக அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான் ராகுல். வழக்கம்போல பராக்கு பார்த்துக்கொண்டு வந்தாள் ஸ்ரீ.
ஒரு வழியாக அவர்கள் சீட்டை கண்டு பிடித்து அமரவும், “டேய்… இந்த 4, 6 அடிச்சா காட்றதுக்கு எனக்கும் தட்டியெல்லாம் வேணும். ஏற்பாடு பண்ணு.”, என்று ஆர்டர் போட்டாள்.
“அதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன? வர வழியிலேயே வெச்சிருந்தான். வாங்கியிருப்பேன். இப்ப திரும்ப போகணும்.”, ராகுல் முறைப்பை சட்டை செய்யாதவள்,
“நீயெல்லாம் என்னா ஃபான்… இதெல்லாம் நான் சொல்லணுமா? எதாவது டகால்டி வேலை பண்ணி, வித்தியாசமா இருந்தாதான டீ.வில காமிப்பான். நீ எதுவும் கொண்டு வரலை. அங்க பாரு ட்ரம்ஸ் எடுத்துகிட்டு வந்திருக்காங்க.”, என்று கைகாட்டினாள்.
“நான் மாட்ச் பார்க்க வந்திருக்கேன்… ஷோ காட்ட வரலை.”, மூக்கு கண்ணாடியை மேலே ஏற்றி ஆன மட்டும் முறைத்து வைத்தான்.
“நான் ஷோ பார்க்கதான் வந்தேன். நீ அந்த ஃபாரீன் பொண்ணுங்க டான்ஸ் ஆடறதைப் பாக்கத்தான வந்த… எங்கிட்டயேவா? நிஜமா கிரிக்கெட் பார்க்கணும்னா, டீ.வி. முன்னாடி உட்கார்ந்திருக்கணும். நாலு அங்கிள்ல காட்டுவான், பத்து எக்ஸ்பெர்ட் ஒபீனியன் சொல்லுவான். போடா டேய்…” , நக்கலடிப்பவளை ஒன்றும் சொல்ல முடியாது,
“ம்க்கும்… ஒத்த ரோசா முள்ளா குத்தியிருக்கும். சரி சரி… நீ வந்த வேலையை நீ பாரு.. நான் அப்படி யார் நல்லாருக்கான்னு நோட்டம் விடறேன்… அங்க ட்ரம்ஸ் பார்ட்டிகிட்ட கடலை போடுட்டு இருப்பேன்… தேடாத… அப்பதான் டீ.வில காமிப்பான். நான் அதுக்குதான் வந்தேன் பா.”, ஸ்ரீ சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
தலையில் அடித்துக்கொண்டவன், “கலரைப் பார்த்து கூட தெரியலையா உனக்கு. இது கே.கே.ஆர், ராஜஸ்தான் மாட்ச். நாளைக்குத்தான் சி.எஸ்.கே வெர்சஸ் டெல்லி”, என்று விளங்க வைத்தான்.
“இதுக்குத்தான் டீ.வி. வேணுங்கறது. பார், இங்க இருந்துகிட்டு ஒன்னும் தெரியலை. சரி வா… அவங்களை மாதிரி முன்னாடி கூட்டிட்டு போ. அங்க லைன்ல நிக்கற ப்ளேயரைப் பார்க்கலாம். பேரு புதுசா இருக்கு?”, என்று கை காட்டினாள்.