திருமணத்தை சென்னையில் வைத்தே நடத்தலாம் என்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருந்தான் விஷ்ணு. ஏற்பாடுகள் அனைத்தும் அவன் பொறுப்பில் விடபட்டிருக்க, அதற்கான வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்று விஜயன் மறு நாள் காலையே செங்கல்பட்டு கிளம்பி சென்றுவிட்டான். சஞ்சளாவும் வைஷாலியும் தன்னுடன் இருக்கட்டும் என்று அவர் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டார் சாவித்ரி.

‘திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் நிறுத்தி வைத்த பாடங்களை முடிந்தவரை முடித்துவிட வேண்டும். திருமணத்திற்கு எடுக்கும் விடுமுறை இரண்டு நாட்களுக்கு மேலேயே ஆகலாம்’ என்ற எண்ணத்தில் வழக்கம் போலவே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவசரமாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள் வைதேகி.

கண்ணாடியை பார்த்து புடவையின் மடிப்பை சீர் செய்து கொண்டிருந்தவள் “தேவிம்மா” என்ற விளிப்பில் திரும்பி பார்த்தாள்.

“இன்னைக்கு நானே உன்ன டிராப் பண்றேன்” என்றவாறே குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டான் விஷ்ணு.

“இல்ல மாமா லேட் ஆகிருச்சு மலர் வறேன்னு சொல்லிருக்கா நா அவக்கூட போறேன் நீங்க சாப்ட்டு கிளம்புங்க. எல்லாத்தையும் டேபிள்ல எடுத்து வச்சுருக்கேன் வந்து பாப்பேன் மிச்சம் இருந்துச்சு நைட்டுக்கும் அதே தான்” என்று போலியாய் கண்களை உருட்டி மிரட்டி, கைப்பையை எடுத்து கொண்டு நகர முற்பட்டவளை பிடித்து நிறுத்தியவன்.

“ஒரு அஞ்சு நிமிஷம் கிளம்பிட்டேன் தேவிம்மா நானே கொண்டு போய் விடுறேனே..!”.

“ப்ளீஸ் விணு சிலபல்லஸ் முடிக்க வேண்டி இருக்கு ஸ்பெஷல் கிளாஸ்னு பசங்களை சீக்கிரமே வர சொல்லிட்டேன். நானே லேட்டா போனா நல்லா இருக்காது, எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. நா மலர் கூட போறேன் நீங்க நிதானமா கிளம்பி வேலைக்கு போங்க” என்று தீவிரமாக உரைத்தாலும், அதில் ஒளிந்திருந்த கெஞ்சலை உணர்ந்து கொண்டவன்.

“சரி போயிட்டு வா” என்றான் சுரத்தே இல்லாத சுணங்கிய குரலில்.

கண்களை சுருக்கி உதடு சுளித்தவள் “ப்ச், இப்டி முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு சொன்னா எப்டி விணு. கொஞ்சம் சிரிச்ச முகமா தான் சொல்லுங்களேன்” என்று அவன் கன்னம் பிடித்து ஆட்டி, இதமாய் கன்னத்தில் இதழ் பதித்து “போயிட்டு வறேன்” என புன்னகையுடன் கூறிவிட்டு செல்ல.

அவள் விட்டு சென்ற மிச்சபுன்னகை அவன் இதழை நிறைத்தது “கேடி” என்று செல்லமாய் முணுமுணுத்து கொண்டே கலர் உடையில் தன்னை புகுத்தி கொண்டவன். பெயருக்கு இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, பாத்திரங்களை சமையல் அறை மேடையில் வைத்துவிட்டு கதவை பூட்டி சாவியை எடுத்து கொண்டு கீழே வர, துவராகா வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து கொண்டிருந்தான் .

எதிரில் வருபவனை கண்டு குழம்பி போனான் துவாரகேஷ் ‘தன்னை வர சொல்லிவிட்டு தனக்கு முன்னே கிளம்பி வருகிறானே’ என சிந்தித்து கொண்டே அவன் அருகில் சென்றவன் “என்னடா பேசனும்னு கிளம்பி வர சொல்லிட்டு வெளிய எங்கயோ கிளம்பிட்ட?”.

“கமிஷ்னர் கால் பண்ணாரு துவாரகா ஏதோ பேசனுமாம் நீயும் வா என்ன ஏதுன்னு போய் கேட்டுட்டு வந்துறலாம்” என்றதும் சரியென்றவன் தன் வாகனத்தை உயிர்ப்பிக்க, விஷ்ணு பின்னால் அமர்ந்ததும் இருசக்கர வாகனம் கமிஷ்னர் அலுவலகத்தை நோக்கி வேகமெடுத்தது .

சுதா நர்ஸிங் ஹோம் அதிக கூட்டம் இல்லையென்றாலும் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை என்ற நிலையில் பரபரப்புடன் இருந்தது. மருத்துவர் அறைக்கு அருகே கண்ணாடி தடுப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட காத்திருப்பு அறையில் இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடியபடி அயர்வுடன் அமர்ந்திருந்தாள் வைதேகி.

“மருந்து வாங்கிட்டேன் வைத்தி நெக்ஸ்ட் செக்கப் ஒன் மன்த் கழிச்சு வர சொல்லிருக்காங்க ப்பா” என்றவள் இமை மூடி அமர்ந்திருந்தவளின் முகம் காண சோர்வை பூசி இருந்தது.

“என்னாச்சு தலை சுத்துதா?” என்று வைதேகியின் தோளில் கைவைத்து கனிவான குரலில் மலர் கேட்க.

திடுக்கிட்டு கண்விழித்தவள் சுற்றி முற்றி பார்த்தபடி “இல்ல” என்று தலையாட்டினாள்.

“ரொம்ப டையர்டா இருக்கா நா வேணா போய் ஜூஸ் வாங்கிட்டு வரவா?”

“வேண்டாம்” என்று அதற்கும் தலையாட்டியவள் “கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போலமே ஒரு மாதிரி இருக்கு மலர்” என்று அயர்வுடன் கூறி தன் மொத்த பாரத்தையும் சுவரில் சாய்த்து கொண்டாள் வைதேகி.

“காலையில சாப்பிடாம வந்தா  மயக்கம் வராமா என்ன பண்ணும்? அதுவும் இந்த மாதிரியான நேரத்துல. என்ன அவசரம் உனக்கு. எல்லாம் சார சொல்லணும் சாப்ட்டாளா இல்லையான்னு பாக்கிறதே இல்ல போல”என்று கடுகடுத்தவள்,

“இரு நா போய் குடிக்க ஜூஸ் வாங்கிட்டு வறேன் கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்று கூறிவிட்டு வைதேகியின் மறுப்பையும் பொருட்படுத்தாது குளிர்பானம் வாங்கிவர சென்றாள் மலர்.

காலை உணவை தவிர்த்து விட்டு அவசரமாக பள்ளி கிளப்பி சென்றதன் பலன் வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே கண்கள் சொருகி தள்ளாடி மயங்கி சரிந்தாள் வைதேகி. என்னவோ ஏதோ என்று பயத்தில் அரண்டு போன மாணவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்க.

மாணவர்களின் சத்தம் கேட்டு வகுப்பிற்கு வந்த மலர். வைதேகி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து பதறி போனவள் தண்ணீர் கொண்டுவர சொல்லி முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய செய்தாள்.

கண்களை திறவ முடியாமல் மெல்ல திறந்து அமர்ந்த வைதேகி தலையை இடது கையால் தாங்கியபடி குனிந்து கொள்ள, அத்தனை பாரமாய் இருந்தது சிரம். எங்கே தானாக எழுந்து நின்றால் கிழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் மலரின் கையை இறுக பற்றி கொள்ள.

மாணவனில் ஒருவனை அழைத்து, பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கைதாங்களாக எழுப்பி ஆசிரியர்கள் அறைக்கு அழைத்து சென்று அமரவைத்தவள் “என்ன ப்பா என்னாச்சு?” என்று முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி கேட்டாள்.

“ப்ச் ஒன்னுமில்ல சாப்பிடாம வந்ததுல தலை சுத்தி மயக்கம் வந்துருச்சு” என்று சோர்வான குரலில் சொல்லும் போதே, கண்கள் இருட்டி கொண்டு வந்தது வைதேகிக்கு.

வியர்வை சுரப்பிகள் இன்னும் வேலை நிறுத்தம் செய்யாமல் நீர்துளிகளை பிறப்பித்து கொண்டிருக்க.நொடிகொரு தரம் தலையை உலுக்கி பார்வையை தெளிவாக்கியவள் கைப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து நிதானத்தை கொண்டு வர முயற்சி செய்தாள்.

“சரி வா ஹாஸ்பிடல் போலாம்”, மலர் அழைக்க.

“இதுக்கெல்லாமா ஹாஸ்பிடல்?. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும் நீ போ நா பாத்துகிறேன்” என்றவளை விடாப்பிடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர,அங்கே மருத்துவர் கூறிய செய்தியில் வைதேகி மட்டுமல்ல மலருக்குமே சொல்ல முடியாத உவகை தான்.

எதிர்பார்க்கவில்லை முன்பின் நாட்கள் மாறும் என்று அலட்சியமாய் இருந்தவள் எத்தனை நாட்கள் என்று அப்போது தான் கணக்கிட்டாள் இரு வாரங்களுக்கும் மேலேயே கடந்திருந்தது.

மலர் வருவதற்குள் கணவனிடம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணங்கள் பரபரக்க வேகமாக கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து கணவனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டவளின் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தவளுக்கு முதல் முறை போலவே அழைப்பு துண்டிக்க பட்டதும் முகம் அனிச்சமாய் வாடி போனது.

‘தவறிய அழைப்பை பார்த்து மீண்டும் அழைப்பார்’ என்று மனதை சமாதானம் செய்தவள் அலைபேசியை கைப்பைக்குள் வைத்துவிட்டு வாசலில் ஒரு காதும் கைப்பையில் ஒரு காதும் வைத்து கொண்டு காத்திருந்தாள் வைதேகி.

சற்று நேரத்தில் குடிக்க பானம் வாங்கி வந்த மலர் அவளின் முக வாட்டம் கண்டு “இந்தா வைத்தி டேட்ஸ் ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கும் சுகர் கம்மியா தான் போட சொன்னேன்” என்று கண்ணாடி டம்ளரை கையில் திணிக்க.

மிடறு மிடறாக பருகியவளுக்கு பேரீச்சம்பழத்துடன் வாழைப்பழம் பால் சர்க்கரை சில ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைக்கப்பட்ட பானம் தொண்டையை தாண்டி செல்லும் போதே குளிரை பரப்பி கொண்டே வயிற்றில் தஞ்சம் அடைந்தது. பசியில் இருந்தவளுக்கு அமிர்தமாய் உள்ளே இறங்கியது. ஆழ்ந்து மூச்சை வெளியிட்டவள்”நீ ஸ்கூலுக்கு போ மலர் நா ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்க்கிறேன்” என்று சொல்ல.

“நா பிரின்சிக்கிட்ட பேசிட்டேன் அரை நாள் லீவ் எடுத்துக்க சொல்லிட்டாரு நானே உன்ன வீட்டுல கொண்டுபோய் விட்டுடுறேன் சார்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு” என்றதும், எதற்காக என்று புரிந்து கொண்ட வைதேகி.

“சார் வீட்டுல இல்லையே” என்று சிரித்து கொண்டே இயம்பினாள்.

“பரவாயில்ல வெய்ட் பண்ணி பாத்து பேசிட்டே போறேன்” என்று பிடிவதமாய் உரைத்தவள் காலியான டம்ளரை வாங்கி கொண்ட மலர் “போலாமா” என கேட்க. சரியென்றவள் கைப்பையை எடுத்துக்கொள்ள, இருவரும் இல்லம் கிளம்பினர்.

எப்போதும் போல கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பாகவே இருந்தது.

“ஓகே சார் நாங்க கிளம்புறோம் அண்ட் ரொம்ப தங்க்ஸ் சார் என்னோட நேம் சஜஸ்ட் பண்ணதுக்கு”, புன்னகை முகமாய் கூறினான் விஷ்ணு.

“இட்ஸ் ஓகே விஷ்ணு இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் உனக்கு அவார்ட் அனௌன்ஸ் பண்ணலை மதுரையில நீ பண்ண காரியத்துக்காகவும் உன்னோட நேர்மைக்காகவும் தான் இந்த அவார்ட் கிடைக்க போகுது. நியாயமா உனக்கு சேர வேண்டியது தான்” என்று பெருமையாய் உரைத்தார் சடகோபன்.

“ஓகே சார்” என்று புன்னகை மாறாமல் சடகோபனின் கூற்றை ஏற்று கொண்ட விஷ்ணு “சார் நம்ம துவாரகாவுக்கு வர்ற மண்டே மேரேஜ் நீங்க கண்டிப்பா பேமிலியோட வரணும்” என்றவன் துவாரகாவிடம் அழைப்பிதழை எடுத்து வருமாறு பணிக்க.

வேகமாக சென்று எடுத்து வந்தவன் “கண்டிப்பா வரணும் சார் உங்கள ரொம்ப எதிர்பார்ப்பேன்” என்று அழைப்பிதழை நீட்டினான் துவாரகேஷ்.

இருக்கையில் இருந்து எழுந்து வாங்கி கொண்டவர் அழைப்பிதழின் உள்ளே ஒரு சுற்று பார்வையை பதியவைத்துவிட்டு”வாழ்த்துக்கள் துவாரகா கண்டிப்பா வறேன்” என்று வாக்குறைத்தவரிடம் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திவிட்டு இருவரும் வெளியே வர.

கமிஷ்னர் அலுவலகம் என்றும் பாராமல் தூக்கிவிட்டான் நண்பனை “டேய் என்னடா பண்ற பக்கி இறக்கிவிடு எல்லாரும் ஒருமாதிரி பாக்குறாங்க இறக்கிவிடுடா” என்று சுற்றி இருந்தவர்களை பார்வையிட்டவாறே கத்தினான் விஷ்ணு.

மெல்ல இறக்கிவிட்டவன் மூச்சு வாங்கியபடி சந்தோஷத்தில் “கன்கிராட்ஸ்டா எதிர்பார்க்கவே இல்ல சிஎம் கையால அவார்ட் வாங்க போற ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் துள்ளலுடன்.

அங்கிருந்த ஒரு சில காவலர்கள் காரணம் புரியாமல் சிரித்து கொண்டே கடந்து செல்ல “போதும்டா எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை. அவார்ட் தானே வாங்க போறேன் என்னமோ ஆஸ்கார் விருது வாங்க போறது மாதிரி பில்டப் கொடுக்குற” என்று சட்டை பையில் இருந்த கூலிங் கிளாஸை எடுத்து சட்டையின் ஓரத்தில் வைத்து துடைத்து கொண்டே சாதாரணமாய் உரைக்க.

“போடா..! அவார்ட் வாங்குறதுன்னா சும்மாவா இதுவே ஆஸ்காருக்கு சமம் தான். நீ சாதிச்சிட்ட விஷ்ணு எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? சாதாரணமா சொல்ற. வீட்டுல சொன்னா எல்லாரும் எவ்ளோ சந்தோஷபடுவாங்க முக்கியமா அப்பாவும் அம்மாவும் எவ்ளோ சந்தோஷ படுவாங்க அதை நினைச்சு பாருடா” என்றவனின் பேச்சில் விஷ்ணுவின் மனம் ‘தந்தையின் பாராட்டு கிடைக்குமா?’ என்று ஏக்கம் கொண்டது.

ஏக்கம் பெருமூச்சாய் வெளிவர “சரி சரி போதும் புகழ்ந்தது கிளம்பலாம் டைம் ஆச்சு” என்றவன் அலைபேசியில் மணியை பார்க்க இரண்டு ஒன்றுகளை தொட ஐந்து நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது கடிகார முள்.

தவறிய அழைப்பில் சேர்ந்திருந்த ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை பார்த்தபோது தான், வைதேகி அழைத்தது அவன் நினைவுக்கு எட்டியது. அவசரமாக எண்களை தடவி காதில் வைத்தவனுக்கு, சுவிட்ச் ஆப் என்று கணினியில் பதிவு செய்யப்பட்ட குரல் மூன்று மொழிகளில் உரைத்துவிட்டு பீப் ஒலியுடன் நின்று போக, யோசனையுடன் அலைபேசியை வெறித்தான் விஷ்ணு.

“யருக்குடா கால் பண்ற?”, துவாரகேஷ் கேட்க.

“தேவிம்மாக்கு தான் உள்ள சார்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கால் பண்ணா.. ப்ச் அப்போ கட் பண்ணிடேன் இப்போ கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்ன்னு வருது”.

“மறுபடியும் கால் பண்ணி பாரு”, அவசரமாக வந்து விழுந்த வார்த்தையில் நாக்கை கடித்து கொண்டவன் “சாரி சுவிட்ச் ஆஃப்ல” என்று அசடு வழிய.

அவனை போலவே அசடு வழிந்து பழிப்பு காட்டியவன் “பக்கி வண்டிய ஸ்டார்ட் பண்ணு கேஸ் விஷயமா ஒரு இடத்துக்கு விசாரிக்க போகணும்” என்று, செல்ல வேண்டிய இடத்தை கூறியதும் வாகனம் வேகம் பெற்றது சந்து பொந்துகள் நிறைந்த ஏரியாவிற்கு.

வாழைமரத்தின் அடியில் துளிர்க்கும் இளங்குறுத்தாய் உதரத்தில் ஓர் ஜீவன் ஜனிக்கும் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.தாயிடமோ மற்ற எவரிடமோ உரைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும்.  கணவனிடம் கூறிய பின் தான் மற்றவர்களிடம் கூறவேண்டும் என்ற ஆசை அவள் மனமெங்கும் வியாபித்திருக்க. எப்போது வருவான் வருவான் என்று வாசலில் விழி வைத்து காத்திருந்தாள் வைதேகி .