இன்னும் வேகமாக, உற்சகமாக திருமணத்திற்கு தயாராகினான் மாப்பிள்ளை. வேலைகளும் முழு வீச்சில் சென்றது. “நீ கல்யாண வேலையை பாருடா மச்சான், நான் கடைய பார்த்துகிறேன்..” குகன் எப்போதும் போல தோள் கொடுத்தான்.

சாருவும் எங்க அண்ணனுக்கு நான் செய்வேன் என்று அம்மா வீட்டிலே அந்த இருபது நாளும் தங்கிவிட்டாள். வைதேகி என்ன நினைத்தாரோ அன்று கணவனிடம் பேசிய நாளில் இருந்து கீழே கணவரிடமே இருந்து கொண்டார். மகனும் கேட்டு கொள்ளவில்லை. அவனும் திருமண பேச்சு பேச, சாப்பிட என்று சென்று கொண்டு தான் இருந்தான்.

சாருவின் மகன் தாத்தாவை பிடித்து கொள்ள, அவரும் முன் போல ஒதுங்கி கொள்ளாமல் பேரனை தூக்கி கொண்டு சுற்றினார். இரண்டு போர்ஷன் கொஞ்ச கொஞ்சமாக பழையபடி ஒரே வீடாக மாறியது.

குருமூர்த்தியும்  திருமணத்தை  ஏற்று கொள்ளவே முயல்கிறார்.  எப்போது என்றாலும்  மகனின் மனைவி அனு தான். திருமணம் முடித்து இங்கு தான் வருவார்கள். அனுவையும் ஏற்று கொள்ள வேண்டும்.

முன் என்றால் சேர்த்து கொள்ள முடியாது, மகனை தனியே போடா என்றிருப்பார். ஆனால் இப்போது மூன்று வருடமாக தனிமையின் கொடுமையை பார்த்துவிட்டாரே. அதற்கு வாய்ப்பில்லை. வேறு வழி இல்லாமல் அனுவின் இருப்பை ஏற்க தன்னை தானே  தயார் செய்து கொண்டிருக்கிறார்.

என்ன இதை எல்லாம் வெளியே காட்டி கொள்ள அவரின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.  எப்போது போல விறைப்பாக காட்டி கொண்டாலும், அவரின் சிறு சிறு  மாற்றங்கள் குடும்பத்தினருக்கு புரியாமல் இருக்குமா..?

அதிலும் அவர்  மகனின் திருமண செலவுக்கு மனைவி மூலம் பணம் கொடுக்க, தனாவிற்கு மகிழ்ச்சி தான். ஆனால் அவன்  வாங்கவில்லை. “உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு எனக்கு தெரியும், பிடிக்காம கொடுக்காதீங்க, உங்களுக்கு எப்போ எங்களை முழு மனசா ஏத்துக்க முடியுதோ அப்போ கொடுங்க, வாங்கிக்கிறேன்..” அப்பாவிடம் நேரடியாக மறுத்துவிட்டான்.

தனாவிற்கு இப்போது  பணம் பிரச்சனையில்லை. கடை ஓரளவிற்கு செல்ல, வருமானம் வரத்தான் செய்தது. குறைவதற்கு தயங்காமல் குகனிடம் வாங்கி கொண்டான். கடன் போல தான். அதில் குகனுக்கு கோவம்.  “அடிக்கடி முறுக்கி  மாப்பிள்ளைன்னு காமிச்சு கொடுக்கிறடா..” தனா கிண்டல் போலே அவனை சமாளித்தான்.

 “சாரு கல்யாணத்துல  தான் குகன் எதையும் பெருசா செய்ய விடல, அவன் நிலைமையும் அப்போ அப்படி, உன் கல்யாணத்துலயாவது எல்லாம் குறையில்லாம் செய்யணும்.. நம்ம வீட்ல கடைசி கல்யாணம் வேற..”  என்று வைதேகி  சொல்ல,

“ம்மா.. நீ இன்னும் அதை விடலையா..? நீங்க எனக்கு செய்ய முடியாததுக்கும் சேர்த்து தான் பேரன் பிறந்த அப்போ ஊரை கூட்டி விருந்து  வச்சுங்களே அப்பறம் என்ன..? இப்போ அண்ணாவை பார்க்கலாம், உங்களுக்கு  என்ன ஆசையோ எல்லாம் செய்யலாம்..” என்று சாருவும் அம்மாவிற்கு கை கொடுத்தாள்.

திருமண பட்டு, தாலி, உடை என்று எல்லாம் அவர்களே பார்த்து கொண்டனர். சித்ரா மூலமாக அனு குடும்பத்திடம் கலந்தோலசித்து செய்தனர். முகூர்த்த பட்டு எடுக்கவும்  சஞ்சய், குகன் தவிர ஆண்கள் பெரிதாக யாரும் இல்லை.

அனு போட்டோ வழியே தனாவிடம் கேட்டு பட்டு எடுத்தாள். அவளை நேரில் பார்க்க, போனில் பேச என்று தனாவிற்கு நேரம் ஒதுக்குவது சிரமமாக இருந்தது. இரு வீட்டாருக்கும் சேர்த்து அவன் தானே முன் எடுத்து செய்கிறான்.

ஓட்டமாக ஓடி எல்லாம் செய்து முடிக்க, கல்யாண நாளும் வந்துவிட்டது. பாட்டு, பந்தல், விருந்து என்று தனாவே எதிர்பார்க்காத அளவு கொண்டாட்டம். அவரவர் வீட்டின் சடங்குகள் முறையாக செய்யப்பட்டது.

அனு, தனாவிற்கு அவரவர் வீட்டில்  நலங்கு வைக்க பட்டு, கோவிலுக்கும் சென்று வந்தனர். இரவு விருந்து தனா வீட்டிலும், அன்பு வீட்டிலும் தனி தனியே நடந்தது. திருமண செலவுகள் பொது என்று அன்பழகன் முன்னமே சொல்லிவிட்டார்.

சாரு அண்ணனின் திருமணத்தில் ராட்டினமாக சுற்றினாள். தனா அவனுக்கு அண்ணனாக மட்டுமே நிற்கவில்லையே. அப்பாவாக அல்லவா நிற்கிறான். அவளும் அண்ணன் மேல் வைத்த பாசத்தில் குறைவில்லையே.

“ஏன் வேலையை இழுத்து போட்டு இப்படி ஸ்ட்ரைன் பண்ணிக்கிற சாரு, ரெஸ்ட் எடு..” தனாவே அவளை நிறுத்தி பார்த்தான்.

“அப்போ தானே நீ எனக்கு தங்கச்சி சீர்  தாராளாமா செய்வ..” என்றாள் சாரு  குறும்பாக.

தனாவிற்கு அவளின் குறும்பு புரிந்தாலும், “அதான் என் நண்பனையே சீரா  கொடுத்துட்டேன், இன்னும் என்கிட்ட சீறு இல்லை தாயி..” என்றான் குகனை வைத்து கொண்டே.

“அந்தளவு பலமான சீர் இல்லை தான், ஆனாலும் வச்சிக்கிறேன்..” என்று கணவனை கிண்டலாக சொல்லி சென்றாள்.

குகனுக்கு கடுப்பாக  மனைவி எப்போது தனியே சிக்குவாள் என்று பார்த்து பிடித்தவன், “ஏண்டி புருஷனை போய் வச்சுகிறேன் சொல்ற..” என்றான் காதை பிடித்து.

“இப்போ தான் நான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா..?” அவள் அவனுக்கு மேல் எகிறினாள்.

“ஏய் நேரம் எங்கடி இருந்துச்சு..” குகன் மனைவி இதழோடு, அவளையும் தாபத்துடன்  அணைத்து கொண்டான்.

சாருவும் அவனின் அணைப்பில் அடங்கியவள், “இப்போ மட்டும் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு..”  என்றாள் பிணக்காக.

“சத்தமாக பேசிடாதடி, யார் காதிலும் விழுந்துட போகுது, அப்புறம் பஞ்சாயத்து தான்..”  என்றான்.

“எதுக்கு பஞ்சாயத்து..?” சாரு கேட்க,

“பின்ன எங்க பொண்ணை கொஞ்ச கூட இல்லையான்னு வேஷ்டியை மடிச்சு  கிளம்பிடுவாங்க, ஏற்கனவே எதை வச்சு பிரச்சனை பண்ணலாம்ன்னு காத்திட்டிருக்கானுங்க..” என்றான் கிண்டலாக.

“நீங்க கொஞ்சாம தான் பையன் வந்தனான்னு நீங்களும்  கேளுங்க, என்னமோ ரொம்ப பயந்தவர் போல தான்..”  சாரு கேலியாக சொல்ல,

“அதை கேட்க முடியாதேடி..” என்றான் அவன் பாவமாக.

“ஏனாம்..?”

“அப்புறம் ஏன் இன்னும் அடுத்த தம்பி,  தங்கச்சி வரலன்னு கேட்டுடுவாங்க, எதுக்கும் நாம ரெடி பண்ணிடலாம் என்ன சொல்ற..?” என்று குகன் மனைவியை சீண்ட,

“உதை விழும்.. ஒரு வருஷத்துக்கு அப்புறம் தான்..”  என்றாள் சாரு சூடேறிய கன்னத்தை கணவன் நெஞ்சில் தேய்த்து.

“வாய் சொல்றது வேற, செய்றது வேற.. அப்போ உனக்கும் ஆசை இருக்கு கள்ளி..” குகன் அவள் கன்னத்தில் கிள்ளினான்.

“போதும் போதும்,  எங்க அண்ணா தனியா கஷ்டப்படும், போய் வேலையை பாருங்க..” என்றாள் விலகி.

“இதுக்கு தான் சொந்தத்துல பொண்ணு எடுக்க கூடாதுனு சொல்றது, பாரு மாப்பிள்ளைங்கிற கொம்பு எனக்கு இல்லாமலே போயிடுச்சு..” என்றான் அவனோ.

“ஓஹ்.. துரை இதை மனசுல வச்சு தான் என்னை வேண்டாம்ன்னு சொன்னீங்களா..?” என்று ஓங்கி அவன் தலையில் கொட்டிவிட்டு சென்றாள் சாரு.

“ஆஹ்.. கொம்பு கேட்டதுக்கு குன்றை வளர்த்துவிட்டு போறாளே..” வீங்கிய தலையை தேய்த்து கொண்டு செல்ல, “என்னடா..” என்றான் தனா.

“ம்ம்.. உங்க வீட்டு மாடு முட்டிருச்சு..” குகன் நொடிப்பாக சொல்ல,

“யாரு எங்க பெரியப்பாவா..?” என்று குருமூர்த்தியை சீண்டியபடி வந்தனர் இளைஞர் பட்டாளம்.

“டேய்.. உங்களுக்கு உதை விழும், போதும் அவரை பேசினது, கொஞ்ச கொஞ்சமா திருந்துர மனுஷனையும்  பேசி பேசி உசுப்பேத்தி விட்டு போயிடாதீங்கடா..” என்றான் தனா கண்டிப்புடன்.

“எங்க அவர் தான் தோட்ட வீட்டுக்கு போயிட்டாரே..” அவர்கள் உதடு பிதுக்க,

“வருவார்டா.. போய் வேலையை பாருங்க..” என்று விரட்டிவிட்டான். ஆனாலும் அவனுக்குள்ளும் அவர் வர வேண்டும் என்று தான் இருந்தது.

“நான் கொஞ்ச நாள் தோட்ட வீட்ல இருக்கேன்..” என்று குருமூர்த்தி கிளம்பிவிட்டார். அவரால் இவ்வளவு சீக்கிரம் இதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. அதற்காக ஏற்று கொள்ளவே மாட்டார் என்றில்லை.

 அததற்கு அதற்கான நேரம் வர  வேண்டும் தானே..? சில விஷயங்களை  ஏற்கவுமே மனது வேண்டும். அதுவும் குருமூர்த்தி போன்ற ஆட்களுக்கு இதுவே ஒரு அதிசயம் தான். அது தனாவை விட யாருக்கும் புரியும்..?  அவரை நெருக்கவில்லை. தள்ளி நின்று கொண்டான்.

மகனின் திருமண விருந்து குகன் மூலம் தோட்டம் சென்றது. பேச்சி வந்தவர் தம்பியிடம் சென்றுவிட்டார். நிச்சயம் ஏற்றி விடுவார் என்று தெரியும். இனி குருமூர்த்தி கையில் தான். பெருமூச்சுடன் தனா மறுநாளுக்கான ஏற்பாட்டை பார்க்க சென்றான்.

திருமண நாள்  விடிந்தது. தனா.. அனு காதலிலும் விடியல்  தான்.