Raaja Bavani 16 2 14370 “என் உழைப்புக்கு சம்பளம் கொடுக்கட்டும், அதோடு இவருக்கு நான் ஏன் சும்மா உழைக்க வேண்டும்..?” என்ற கோவமும் உள்ளுக்குள். இவ்வளவு என்று கேட்டே வாங்கினான். ஆனாலும் உள்ளுக்குள் அடுத்து என்ன என்று ஓட தான் செய்தது. குருமூர்த்தியிடமே இருக்கும் எண்ணமில்லை. சில காலம் பொறுத்தவன், கையில் கொஞ்சம் பணம் சேர்த்து, வைதேகியின் நகை, கூட லோன் என்று அடுத்த தொழிலை ஆரம்பித்தான். லோனுக்கு முன்பு குருமூர்த்தி கையெழுத்து போட்டார். இப்போது குகன், சாரு தான் கேரண்டி கையெழுத்திட்டனர். இத்தனை வருடங்களில் தொழில், குடும்பம் எல்லாவற்றையும் ஓர் அளவிற்கு கொண்டு வந்துவிட்டான். ஆனால் காதல் மட்டும் இன்னமும் ஆரம்பித்த இடத்தில தான் நிற்கிறது. சில மாதங்களோ, சில வருடங்களோ இல்லை, அவன் அனுவை பார்க்க ஆரம்பித்து பத்து வருடங்கள் கிட்டே ஆகும். ஆனாலும் இன்னும் பார்வை, வெகு சில வார்த்தைகள் மட்டுமே தான் அவன் அனுபவித்த காதல். “எனக்கு காதல் ராசியே இல்லை போல..” உள்ளுக்குள் அடிக்கடி விரக்தி வேறு வீறு கொண்டு எழும். ஆனால் வெளிக்காட்டி கொள்ள மாட்டான். இவன் சோர்ந்தால் அனு, அவள் என்ன செய்வாள்..? அவளுக்கும் வயது கூடுகிறதே, வீட்டில் எவ்வளவு அழுத்தம் கொடுப்பார்கள் அவளுக்கு, இருந்தும் உறுதியாக தானே நிற்கிறாளே..? “நானாவது பரவாயில்லை, இவர் ஒருவரை தவிர பெரிய நச்சு இல்லை. அவளுக்கு ஒரு குடும்பமே இருக்கிறது. எவ்வளவு மனதைரியத்தோட இருக்கா, உனக்கென்னடா..?” என்று தன்னை தானே திட்டியும் கொள்வான் காதலன். அந்த நேரங்களில் எல்லாம் தான் அனு மேல் இன்னும் இன்னும் காதல் ஊற்று பொங்கும். அவளை பார்ப்பது மட்டுமே அவனுக்கு போதாமல் இருந்த போதும், அவள் அவனுக்கென்று கிடைக்கும் வரை இந்த கட்டுப்பாட்டை எல்லாம் காப்பாற்றி ஆக வேண்டிய கட்டாயம். இல்லை அன்பழகன் பிரண்டு கொள்வார் என்ற முன்னெச்சரிக்கை. ஏக்கத்துடன் பெரு மூச்சு விட்டு கொண்டான். “என்னடா பெருமூச்சு பலமா இருக்கு..” குகன் கவனித்து கேட்டான். “ஒன்னுமில்லைடா..” என்றான். “தெரியுது, இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படி கண்களால் கைது செய்..? ரீலிஸ் ஆகுற எண்ணமே இல்லையா உங்களுக்கு..?” கேட்டான். “அனு அப்பா தான் ரீலிஸ் பண்ணனும்..” தனா சொல்ல, “அவர்கிட்ட சாவி கொடுத்தது உன் தப்பு, சொன்னா கோவம் வரும், இதை எல்லாம் விட்டு ஒரு முடிவெடுடான்னா ஏதேதோ சொல்லிட்டு உட்கார்ந்திருக்க, அங்க அனு அண்ணா ஆதர்ஷ் பிரச்சனை பண்ணிட்டிருக்கான், தெரியுமா..?” கேட்டான். தனா கேள்வியாக பார்க்க, “அவனுக்கு கல்யாணம் பண்ணனுமாம், அவங்க அத்தை பொண்ணுக்கும் இவனுக்கும் முதல்லே பேசி வச்சிருக்கும் போல, இரண்டு பேருக்கும் வயசாக பிரஷர், அனு அப்பாக்கு மகளுக்கு பண்ணாம எப்படி மகனுக்கு பண்ணன்னு யோசனை.. அது மட்டுமில்லை அந்த பொண்ணு வீட்டுக்காரங்க, அனுவை உனக்கு கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க போல..” என்றான். “ஓஹ்..” தனா முகம் யோசனையை காட்டியது. அனுவிற்கு இன்னும் பிரஷர் கூடுமே கவலை கொண்டான். உண்மை தான், ஆதர்ஷ் தங்கை மேல் பாய்ந்து கொண்டே தான் இருந்தான். அனு அவனை சட்டை செய்யவில்லை என்றாலும், விடமால், நாங்க சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சுக்கோ என்று அதிகாரம் வேறு. அனுவிற்கோ தனா தான் நினைவு வந்தான். அவரும் ஒரு அண்ணா தான், இவனும் ஒரு அண்ணா தான், எவ்வளவு வித்தியாசம்..? ஆத்ரஷ்ஷை தூசியாய் தட்டி செல்ல, சுஜாதா வேறு மறுபக்கம் பொருமினார். “உன்னை நான் தான் பெத்தேன்னா கூட எனக்கு சந்தேகமா இருக்குடி, இந்த வயசுக்கு எம்புட்டு அழுத்தம், அப்படியென்ன அந்த பையன் தான் வேணும்ன்னு, அவ்வளவு துணிஞ்சு நிக்கிறவ, நீயே பேசாம போய் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே, எங்களை செஞ்சு வைக்க சொல்லி ஏன் உயிரை வாங்குறீங்க, நம்ம ஆளுங்ககிட்ட இது நடக்கிற காரியமா சொல்லு..” என்றுவிட்டார். இவரே மூன்று வருடங்களுக்கு முன்பு வேறாக அல்லவா இருந்தார். இப்போது நேரமும், மகளின் உறுதியும் அவரை படுத்தி எடுத்தது. அவர்களும் என்ன தான் செய்வர்..? ஒரு கூட்டமே அவர்களை நெருக்கி கொண்டிருத்தது. மகளோ, “ஏன் எனக்கு செய்ய வேண்டிய சீர், நகை எல்லாம் அடிச்சிடலாம் பார்க்கிறயா..? ஓடிப்போனவ பேர் எனக்கு ஒன்னும் வேணாம், நீங்களே செஞ்சு வைங்க..” என்றுவிட்டு போனாள். இதில் எல்லோரையும் விட, அன்பழகன் தான் மிகவும் நொந்து போனார். இன்றும் கூட்டம் சேர்ந்தது. ஆதர்ஷ், அவனுக்கு பேசியிருந்த பொண்ணு குடும்பம், பங்காளிகள் என்று. “என்னப்பா முடிவு எடுத்திருக்க..? நாங்களும் இத்தனை வருஷமா சொல்லிட்டு இருக்கோம், பொம்பிளை பிள்ளை வேணாம் சொல்லுதுன்னு நாம கேட்டுகிட்டு இருக்க முடியுமா..? எவனையாவது பிடிச்சு கொடுக்காம, பாரு இப்போ பையனுக்கு கல்யாணம் செய்ய முடியல.. ஒன்னு தொட்டு ஒன்னு முடிச்சிட்டு நிக்குதேப்பா..” என்றனர். “நாம ஆதர்ஷ்க்கு பண்ணலாம்..” என்றார் அன்பழகன் வேறு வழி இல்லாமல். “அது முடியாதுப்பா, அனுவை முதல்ல கட்டி கொடுங்க, தங்கச்சியை வீட்ல வச்சுக்கிட்டு நான் எப்படி செய்வேன்..?” என்றான் அவன். “ம்ப்ச்..” அவரால் ஒரேடியாக யாரையும் எதிர்க்க முடியவில்லை. இவர்களை விட்டால் இன்றே அனுவிற்கு மாப்பிள்ளை பார்த்துவிடுவர், ஆனால் தனா நடக்க விட வேண்டுமே, எந்த எல்லைக்கும் செல்வான் அவன். அவன் மட்டுமா அவரின் மகள், கை கால் கட்டி திருமணம் செய்து வைத்தாலும், தயவு தாட்சனை பார்க்காமல் தாலியை கழட்டி வீசிவிடுவாள். அவளை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்..? அவரின் இன்னொரு பெரிய அச்சம். எங்கு இதை வைத்து இரு பக்க ஆட்களும் அடித்து கொள்வார்களோ என்பதே. தனா மேல் இவர்கள் யாரும் கை வைத்துவிட்டால், குருமூர்த்தி ஒருவரே போதும், அரக்க மனிதர் அவர். அவருக்கே இவ்வளவு நடந்தும் ஒற்றை வாரிசு என்று தான் இன்னும் மகனை விட்டு வைத்திருக்கிறார் அவர். மகளை வைத்து இவ்வளுவும் தேவையே இல்லை என்பது தான் அவரின் எண்ணம். “சரி என்ன செய்யலாம் சொல்லுங்க..” வந்திருந்தவர்களிடமே கேட்டார். “அனுவுக்கு கல்யாணம் தான்..” என்றனர் ஒரே குரலில். “அந்த பையன் விட மாட்டான்..” சொல்ல, “அதெப்படி விடாம போயிடுவான், தட்டி தூக்கிடலாம்..” என்றனர். “ஆகுற கதையை பேசுங்க, நம்மளை விட அவங்க கூட்டம் ஜாஸ்தி, இது எனக்கு மட்டுமில்லை, உங்க எல்லோருக்கும் வினையா வந்து முடியும்..” என்றார். “அப்போ என்ன செய்யலாம், அந்த பையனுக்கே நம்ம பொண்ணை கொடுத்துடலாமா..?” கேலியாக கேட்டு எல்லாம் சிரிக்க, அன்பழகன் சிரிக்கவில்லை. “கொடுத்துடலாம்..” என்றார். என்ன..? எல்லோரும் அதிர்ந்து தான் போனார்கள். அடுத்து குதிக்கவும் ஆரம்பித்தனர். “என் பொண்ணு வாழ்க்கை இது..” அன்பு சொல்ல, “அப்போ உங்க குடும்பத்தை தள்ளி வைக்க வேண்டியது தான், உன் மகனுக்கும் பேசி வச்ச பொண்ணு கிடைக்காது, பார்த்துக்கோ, போயும் போயும் அந்த குருமூர்த்தி வீட்ல பொண்ணு கொடுக்கிறேன்னு சொல்ற, அவன் நம்ம சாதியை எவ்வளவு பேசியிருப்பான், அதுவும் அவன் இன்னும் வீடேறி வந்து கூட உன் பொண்ணை கேட்கலை, அதுக்குள்ள நீயே கொடுக்கிறேன் சொல்ற..” எல்லாம் திட்டி எழுந்து செல்ல, அன்பழகன் முகம் தீவிர சிந்தனையில். அன்று முழுதும் மிகவும் யோசித்து, மாலை போல தனாவை மில்லுக்கு வர சொன்னார். தகவல் வரவும், தனாவிற்கு இது கனவு என்று தான் இருந்தது. “உண்மையாவா..?” குகனை ஓராயிரம் முறை கேட்டுவிட்டான். இத்தனை வருடங்கள் சென்று கூப்பிடுகிறார் என்றால் சம்மதம் சொல்ல போகிறார்.. அப்படியே மிதந்தான். அனுவிற்கு அழைக்க கைகள் பரபரத்தது. உறுதியாக எதுவும் தெரியாமல், அவளிடம் என்ன என்று சொல்ல..? “பேசிட்டு நேர்லே போவோம், சர்ப்ரைஸா சொல்வோம், என்ன பண்ணுவா..? என்னை மாதிரி குதிப்பாளா..?” “ஓடி வந்து கட்டி பிடிச்சுகிட்டா இன்னும் ஜோரா இருக்கும்.. ம்ம்ம்ம்..” கற்பனைகளில் மிதந்தவன், நேரத்துக்கு மில்லுக்கு சென்றுவிட்டான். குகன் வெளியே நின்றுவிட, இவனும், அவரும் மட்டும். இன்றும் தனா அமராமல் அவரை எதிர்பார்ப்புடன் பார்த்து நின்றான். “க்கும்.. எனக்கு, இது.. நீங்க கேட்டதுக்கு சம்மதம்..” என்றார். ஹேய்.. உள்ளுக்குள் தனா குதிக்கவே செய்தான். “ரொம்ப ரொம்ப நன்றி சார்..” குரல் ஆர்பரிப்போடு வர, அன்பழகனோ, “எனக்கு ஒரே கண்டிஷன் மட்டும் இருக்கு..” என்றார். அவரின் முகத்தில் தெரிந்த பாவனை, என்ன கண்டிஷன் என்று கேள்வியாக பார்க்க, “உங்க அப்பா முறையா பொண்ணு கேட்டு என் வீட்டுக்கு வரணும்..” என்றார் அலுங்காமல், குலுங்காமல். மிதந்தவன் அப்படியே பொத்தென்று கீழே விழுந்தான். இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. “நான் இவ்வளவு இறங்கி வந்து என் பொண்ணையே உங்க வீட்டுக்கு வாழ அனுப்பும் போது, அவர் ஒருநாள் பொண்ணு கேட்டு என் வீட்டுக்கு வரது தப்பில்லையே தம்பி, அது தானே முறையும் கூட, எனக்கான மரியாதையை நான் பார்க்கணும் தானே..?” என்றார். அவரின் பக்கம் அவர் மிகச்சரியே. ஆனால் தனா..? மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவன் பெண் கேட்டான் என்று தெரிந்ததற்கே குருமூர்த்தி ஆட்களை வரவைத்து, பஞ்சாயத்து வைத்து, தோட்ட வீட்டில் தங்கிவிட்டார். ஒரு மாதம் சென்று அப்படி இப்படி என்று பங்காளிகள் சமாதானம் செய்து தான் மறுபடி வீட்டுக்கே வந்தார். இதில் அவர் எப்படி பெண் கேட்பார்..? ஒரு புள்ளி சதவீதம் கூட வாய்ப்பில்லாத விஷயத்தை கண்டிஷனாக போட்டால்..? இதுக்கு இந்த மனுஷன் எனக்கு பொண்ணு இல்லைன்னே சொல்லியிருக்கலாம்..? கனவில் அவனை கட்டி பிடிக்க ஓடி வந்த அனு அதே வேகத்தில் பின்னால் சென்று கொண்டிருந்தாள். “போறாளே..???” இவன் கைகள் இங்கு காற்றில் தான் மிதந்தது. கடைசில படத்துல வரது போல ஆகி போச்சே என் நிலைமை..??? கனவுல தானா எல்லாம். சைவ முத்தம் கூட இல்லாம செத்துடுவேன் போல.. “அடியேய் அனு.. கைக்கு கிட்ட வந்து நழுவுறயே.. ம்ஹ்ஹ்ம்..” உள்ளுக்குள் மிகவும் நொந்து கொண்டவன், அன்பழகனை பரிதாபமாக பார்த்து வைத்தான். அவர் அவனுக்கு மேல் பாவமாக நொந்து போய் இருக்க, “போங்கய்யா.. நீங்களும் உங்க கல்யாணமும்..” என்று கடுப்பாகி கிளம்பிவிட்டான்.