இராஜ பவனி 16

என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க

போய் வேலையை பாரு, போடா..”  அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள் ரோட்டையே பார்க்க, முகம் தாராளமாக மலர்ந்திருந்தது

சில நொடிகள் கடக்க, பொறுக்கவில்லை காதலனுக்கு, “இன்னும் என்ன பண்றா..?” நேரம் பார்த்தான். தூரத்தில் ஸ்கூட்டி ஹார்ன் கேட்க, “வந்துட்டா..” தனா ஆர்வத்துடன் எதிர்புறத்தை பார்க்க, அவள், அனு

புடவையில் கம்பீரமாக நேரே பார்த்து சென்று கொண்டிருந்தாள். இவன் பக்கம் திரும்ப கூட  இல்லை. “ரொம்ப தான்.. ஏன் பார்த்தா என்னவாம்..? டீச்சருக்கு பாடம் எடுக்கணும் போல..” தனா உதடு சுழித்து கொண்டான்

போடி..” இவன் உதடு அசைக்க, முன் கண்ணாடியில் இவனை பார்த்தாள் அனு. அவன் சிணுக்கம் முகத்தில் தெரிய, இவளுக்கு ஒரு ஆனந்தம்

வேணும்.. நேத்து ஈவினிங் என்னை பார்க்க  வரல இல்லை அப்பறம் என்ன..?” இவள் பிகு செய்து கொண்டே ஸ்கூல் சென்றாள். முன் சித்ரா வேலை பார்த்த தனியார் பள்ளியில்  தான் இவளும்  சேர்ந்திருந்தாள். மாஸ்டர் முடித்து, B. EDம் முடித்திருந்தாள்

ஆம்.. வருடங்கள் சிலது கடந்து தான் விட்டது. ஆயிற்று தனா சென்று அனுவை பெண் கேட்டு மூன்று வருடங்களுக்கு மேல். இன்னும் அன்பழகன் பக்கம் இருந்து எந்த தகவலும் இல்லை. தனாவும் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறான்

அனுவும்  மாஸ்டர் முடித்தவள், B. ED படிக்க ஊருக்கே வந்துவிட்டாள்அன்பழகன், சுஜாதா  எப்போதும் போல எதிர்த்தனர். “எத்தனை வருஷத்துக்கு அக்கா வீட்ல இருக்க முடியும்..?”  அனு இந்த முறை விடாமல் கேட்டு இங்குள்ள கல்லூரியிலே படித்தாள். அடுத்து வேலையும் இங்கு தான் செய்வேன் என்று இந்த வருடம் முதல் சென்று கொண்டிருக்கிறாள்.

ஆனால் இன்னும்   அன்பழகன் பக்கம் இருந்து சம்மதம் கிட்டவில்லை. இடையிடையே  மனம் தளர்ந்து போனாலும் நம்பிக்கையில் தான் நாட்கள் சென்று கொண்டிருக்கிறது இருவருக்கும்

என்ன பார்த்தாச்சா..?” கடைக்குள் வந்தவனிடம் குகன் கேட்டான்

ம்ம்..” பெருமூச்சு விட்டவன், தெளிந்து, “சரக்கு வந்துடுச்சா..?” ஸ்டூல் எடுத்து போட்டு அமர்ந்து கேட்டான். குகன் பதில் சொல்லாமல் முறைக்க, ஏன் என்றும் தெரிந்தும் தனா, “சொல்லுடா..” என்றான்

அதை இங்க உட்கார்ந்து கேளு, பதில் சொல்றேன்..” என்றான் குகன் அவனுடைய சேரை காட்டி

அவன் கோவத்தில் தனா சிரித்தவன், “அது முதலாளி சேர்டா, நீங்க தான் உட்காரனும்..” என்றான் சாதாரணமாக

குகனுக்கு தான் இன்னும் மனம் தெளியவில்லை. இப்படி சாரு, இவனுக்காக கடையே தூக்கி கொடுப்பான் என்று எதிர்பார்க்கவும் இல்லை. முன்பே தெரிந்திருந்தால் எப்படியாவது நிறுத்தியிருப்பான். ஆனால் தனா எல்லாம் ஏற்பாடு செய்து, ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு அவர்களை வர  வைத்து தான் இப்படி என்று சொல்லியிருந்தான்.  

இதை எதிர்பார்க்காமல் மூவரும் ஆடி தான் போயினர். ஏன் வைதேகியும், “உன்னோட உழைப்பு இது தனா..  யோசிடா, நாம சாருக்கு வேற கூட கொடுப்போம்..” என்று தான் சொன்னார். சாருஎனக்கு வேண்டாம்ண்ணாநான் உன்னை எதுவும் கேட்கல.. ஏன் இப்படி..?” என்று அழுகவே செய்துவிட்டாள்

இவர்கள் இப்படி என்றால் குகன், இவனிடம் பேசவே இல்லை. வேகமாக அங்கிருந்து நடையை கட்ட, தனா தான் அவனை இழுத்து பிடித்தான். “விடுடா .. நான் முதல்லே உன்கிட்ட சொல்லியிருந்தேன் இல்லை, பணம், சொத்து போல  ஏதும் செய்ய கூடாதுன்னு, துரை  ஒரு படி மேல போய் கடையை கொடுக்கிற, என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..? கல்யாணதுக்கு முன்ன நான் சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டிட்டு இப்போ வந்து உன் வேலையை என்கிட்டேயே காட்டுற இல்லை நீ..” குதி குதி என்று குதித்தான்

தனா இவர்கள் எல்லாம் பேசும் வரையில் எதுவும் பேசாமல் அமைதி காத்தவன்இப்போ நான் பேசலாமா..?” என்று மூவரையும் அழுத்தமாக பார்த்தான்

நீ ஒன்னும் பேச தேவையில்லை, என்னை விடு, சாரு வா நாம போலாம்..” என்று கையை இழுக்க, தனா விட்டால் தானே

கொஞ்சம் பொறுடா மாப்பிள்ளை, ரொம்ப தான் முறுக்குற..” என்றவன், “இது ஒன்னும் என் தங்கச்சிக்கு நான் கொடுக்கிற வரதட்சணை  இல்லை, சீரும் இல்லைஅப்படி கொடுக்க முதல்ல எனக்கு உரிமையும் இல்லை, அவளும் இந்த சொத்துபத்துக்கு உடமைபட்டவ தான், அதை  தடுக்க இங்க யாருக்கும் அதிகாரம் இல்லை, உன்னையும், என்னையும் சேர்த்து தான் சொல்றேன்..”  என்றான்.  

என் பொண்டாட்டிக்கு என்ன வேணுமோ அதை நான் சம்பாதிச்சுப்பேன்..” என்றான் குகன் ரோஷமாக

சம்பாதி.. உன்னை யார் வேண்டாம்ன்னு சொன்னா, நான் சொல்றது அது வேற, இது வேறன்னு தான், அவளுக்கு வந்து சேர வேண்டியதை தடுக்காத குகன்..” என்றான்

தனா.. உன்னோட வார்த்தை ஜாலத்தை என்கிட்ட காட்டாதடா..” குகன் எரிச்சலாக சொன்னான்

ஓகே.. அண்ணனா எனக்குன்னு ஒரு காரணம் இருக்கு, என் தங்கச்சி யார் கையையும் எதிர்பார்க்காம, அவளுக்கான பினாஷியல் சப்போர்ட்ல  இருக்கணும் ஆசைப்படுறேன்.. அதுல என்ன தப்பு..?”

நான் வேலைக்கு போறேன்ண்ணா..”  என்றாள் சாரு  வேகமாக

எது அந்த ஒரு டிகிரி வச்சா..? என்னால தான் நீ மாஸ்டர் கூட படிக்க முடியாம போச்சு..” என்றான் தனா வருத்தத்துடன்

இப்போ என்ன உன் தங்கச்சிக்கு வருமானம் வேணும் அதானே, நான் பார்த்துகிறேன்..” என்றான் குகன் வீம்பாக

ஏன் அதை நான் பார்த்தா ஆகாதா..? உனக்கு கட்டி கொடுத்துட்டா  அவ மேல எல்லா உரிமையும் உனக்கேன்னு இல்லை, அன்னைக்கு நீ கல்யாணத்துக்கு எதுவும் செய்ய கூடாதுன்னு சொன்னப்போ நான் இதை எல்லாம் மனசுல வச்சு தான் அமைதியா இருந்தேன், சும்மா ஒரு நாளுக்காக பத்து, இருபது லட்சம் செலவு பண்றதை விட, அந்த பணத்துல அவளுக்கு, தங்கம், இடம் போல செய்ய தான் நினைச்சேன்..”  என்றான்

குகனுக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “நினைச்சேன்டா, நீ என்னைக்காவது உன் வேலையை காட்டுவேன்னு..” பாய்ச்சலாக சொன்னான்

குகன்.. நீ இந்த கோவத்தை விட்டு என் இடத்துல இருந்து பொறுமையா யோசிச்சு பாரு, ஒரு காலத்துல என் அம்மா இந்த பைனான்ஷியல் சப்போர்ட் இல்லாம என்னென்ன கஷ்ட பட்டாங்கன்னு உனக்கு தெரியாது, ஏன் எனக்குமே இப்போ இப்போ தான் தெரியுது, அப்படி என் தங்கச்சியும் ஒரு நாள், ஒரு நேரம் கூட நினைச்சுட கூடாது..”

அப்போ நான் அவளை நல்லா பார்த்துக்க மாட்டேன்னு சொல்ற, உன் அப்பா போல நானும் செய்வேன்னு நினைக்கிற..”

எனக்கு அப்படி ஒரு பர்சன்ட் தோணியிருந்தா கூட  நான் ஏன் சாருவை உனக்கு கொடுக்க போறேன்..? அதுவும் நானே கேட்டு தான் கட்டி கொடுத்திருக்கேன், மறந்துடாத..”

அதையே நீயும் சொல்லனுமா..? ஏற்கனவே உன் தங்கச்சி அதை தான் சொல்லி காமிச்சிட்டு இருக்கா..?”

கேட்கிறாளா..? கேட்கட்டும்.. நல்லா கேளு சாரு, உன்னை கட்டிக்க எவ்வளவு பந்தா பண்ணான்..” என்றான் தங்கையிடம் நொடிப்பாக

“தனா.. இப்போ இது  அவசியமா..? என் நிலைமையில இருந்து யோசிச்சு பாரேன், என்னமோ சொத்துக்காக நான் சாருவை கட்டிகிட்ட மாதிரியோசிடா..”  குகன் அவன் கை பிடித்து பொறுமையாக சொன்னான்

குகன் உனக்கு உண்மையிலே புரியலயாடா, அவளுக்கு உரிமையானதை நாம மறுக்கிறது கூட அவளுக்கு நாம செய்ற அநியாயம்ன்னு, சரி உனக்கு வேண்டவே வேண்டாம்ன்னா விடு, என் மருமக பிள்ளைகளுக்கு பாட்டி வீட்டு சொத்து போய் சேரட்டும், அதுக்கும் நீ தடை போடாத, ப்ளீஸ்..” என்றவன்

வைதேகியிடம், “ம்மா.. நாம இப்போ சாருக்கு கொடுக்கிறது என் பேர்ல இருக்கிற இடமும், கடையும் தான், அதுக்கு அவர் கையெழுத்து தேவைப்படாது, விசாரிச்சுட்டேன், உன்னோட நகை, அவளுக்குன்னு எடுத்து வச்ச நகை எல்லாம் சாரு  பேர்ல் லாக்கர்ல வச்சாச்சு, ஓகே தானே..” கேட்க, வைதேகி ஆமோதிப்பாக தலை ஆட்டினார்

அவருக்கு மகன் சொல்லியிருந்த, அவரின் நிலை வேறெதையும் யோசிக்க விடவில்லை. என் மகளும் என்னை போல இருக்க கூடாது குறைந்த பட்சம் பண விஷயத்துலயாவது.. நினைத்து கொண்டவர் முழு மனதுடன் கையெழுத்திட்டார்

சாருவிற்கு அண்ணனின் செயலில் அப்படி ஒரு அழுகை. அப்பா அவளுக்கு சரியில்லை, அந்த குறை தெரியாமல் அண்ணா இருப்பது அவளுக்கு பெரும் நெகிழ்வை கொடுத்தது. “ம்ப்ச்.. இப்போ எதுக்கு அழுகை சாரு, கண்ணை துடை..” என்று சமாதானம் சொன்னபடி, தனியே வந்தவன், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும் சாரு..” என்றான்

தங்கை கேள்வியாக பார்க்க, “இந்த கடை என்னோடதுன்னு எப்போவும் குகன்கிட்ட பிரிச்சு பேசிடாத, நியாயப்படி அவனும் இதுக்கு உழைச்சிருக்கான்..” என

நான் அப்படி பேச மாட்டேன்ண்ணா..” என்றாள்

இல்லைடா கோவத்துல வரும், அதுக்கு தான் சொல்றேன், உனக்கு உரிமையில வந்ததுன்னா, அவனுக்கு உழைப்புல வந்தது, இதை எப்போவும் மறக்காத..” மிகவும் அழுத்தமாக சொல்ல, சாரு கேட்டு கொண்டாள்

விஷயம் கேள்விப்பட்டு, குருமூர்த்திக்கு  அவ்வளவு கோவம். “யாராவது பொண்ணுக்கு இப்படி தொழிலை தூக்கி கொடுப்பாங்களா..? அது போக மெயின் இடத்துல பிளாட் வேற, பாதுகாப்பா இருக்கட்டும்ன்னு இவன் பேர்ல எழுதி வைச்சதுக்கு வேலை காட்டிட்டான், எல்லாம்  எந்த மாதிரியான இடம், கடை, அதை போய் அந்த குடும்பத்துக்கு வாரி கொடுத்திருக்கான், புத்தி கெட்டு போச்சு இவனுக்கு, செய்றது எல்லாம் ஆகாத வேலை தான்..” என்று ஆடி தீர்த்துவிட்டார்.

இங்கு  குகன் இப்போது வரையிலும் முறுக்கி கொண்டு தான் இருக்கிறான். தனாவுடைய  இடத்திலும்  உட்கார மாட்டான். சாரு வந்தால் அமர்வாள். இப்போது அவளுக்கும் குழந்தை இருப்பதால் முன் போல கடைக்கு வர முடிவதில்லை.

தனாவிற்கு அவன் கோவம் புரிந்தாலும் இந்த விஷயத்தில் சமாதானம் செய்ய மாட்டான். அவனுக்கு தெரியும் குருமூர்த்தி எந்த காலத்திலும் சாருவுக்கு எதுவும் செய்ய மாட்டார் என்று. அவர் பேச்சை கேட்டு திருமணம் செய்திருந்தாலே நகை, சீர் மட்டும் தான், அப்போதும் சொத்தெல்லாம் வாய்ப்பில்லை

குகனுக்கு கொடுத்த பின், எதையும் எதிர்பார்க்க முடியாது. அதனாலே அவன் பேரில் இருக்கும் இடங்களை, தொழிலை கொடுத்துவிட்டவன், அவனுக்காக இப்போது தான் ஹார்ட்வேர்ஸ் கடை ஒன்றை திறந்திருந்தான். அதுவரை குருமூர்த்தி மண்டியில் தான் அவன் வேலை. சம்பளம் போல கேட்டு வாங்கி கொண்டான்

முதலாளியா இருந்துகிட்டு பிசுக்கோத்து சம்பளம் கேட்டு வாங்கிறதை பாரு..” என்று அதற்கும் குருமூர்த்தி பேச தான் செய்தார். அவனுக்கு தினப்படி செலவிற்கு பணம் வேண்டுமே. ஜம்பமாக அம்மாவை கூட்டி கொண்டு வந்த பின், அன்றாட செலவுக்கு திரும்ப இவரிடமே போய் நிற்க வேண்டுமா..?