புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 72

சங்கிலியிலிருந்து கூந்தலை விடுவித்தபின்னும் இருவரின் பார்வை வீச்சுகளும் விடுபடவில்லை.

ருஹானாவால் நெடுநேரம் ஆர்யனின் கண்களின் கூரியக் கணைகளை தாங்கமுடியாமல் தலை தாழ்த்த, அதன் பிறகே பச்சை கண்களின் காந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டான் ஆர்யன்.

வந்த வேலை நினைவு வர “சோசியல் சர்வீஸ் பேப்பர்ஸ்ல நீ ஓய்வா இருக்கும்போது கையெழுத்து போட்டு வச்சிடு” என்று சொல்ல, தலையாட்டிய ருஹானா அவனுக்கு நன்றியுரைத்தாள்.

கதவு வரை போன ஆர்யன் “மியூசிக் கிளாஸ் இவானுக்கு உற்சாகம் தருது. நீ வற்புறுத்தி சொன்னது நல்லதா அமைஞ்சது” என்றான்.

“நீங்க ஏத்துகிட்டது எனக்கும் மகிழ்ச்சி”

நகர போன ஆர்யன் மீண்டும் நின்று “சிலபேரை பத்தி நாம நினைக்கறது தவறா போகலாம். சிலசமயம் சரியா இருக்கலாம். காலப்போக்கில தான் உண்மை வெளிப்படும்னு நான் உறுதியா நம்புறேன்” என்று சொன்னவன் இரவு வணக்கம் சொல்லி சென்றான்.

‘அறிமுகமான யாக்கூப் மேல் உடனே நம்பிக்கை வைக்காதே. காலம் செல்ல செல்ல தான் ஒருவரின் உண்மை சுயரூபம் தெரியவரும்’ என ஆர்யன் கொடுத்த அறிவுரை ருஹானாவிற்கு புரிந்ததா?

கட்டிலில் அமர்ந்த ருஹானா கையில் சங்கிலியை வைத்துக்கொண்டு ஆர்யன் சொல்லி சென்றதை பற்றி யோசித்துக்கொண்டிருக்க, யாக்கூப் பல்லை கடித்துக்கொண்டு கத்தினான்.

“வேணாம்… அவனை பத்தி நினைக்காதே, டார்லிங். அவனை உன் மனசுல இருந்து தூக்கி போடு”

“அவன் பொறாமைப்படுறான். நம்மை பார்த்து பொறாமைப்படுறான். என்னை பார்த்து பொறாமைப்படுறான்”

நகத்தை கடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

“ஆனா அவனால நம்மை பிரிக்க முடியாது. நம்ம சந்தோசத்தை தடுக்க முடியாது. நான் அதை அனுமதிக்க மாட்டேன்”

குதித்து எழுந்து தடதடவென நடந்தான்.

“உன்னை அவன் கிட்டே விட்டு வைக்க மாட்டேன். நீ என்னுடையவள் ஷெனாஸ்! எனக்கு மட்டும் உரியவள்”

“என்கிட்டே இருந்து யாராலும் உன்னை எடுத்துக்க முடியாது. இல்ல…. இந்த முறை முடியாது. நாம ஆசைப்பட்ட மாதிரி தான் எல்லாம் நடக்கும்”

கணினி திரையை குனிந்து பார்த்து பேசினான்.

“நீ எனக்கானவள் ஷெனாஸ்! எனக்கானவள் மட்டும் தான்”

குரலெடுத்து கத்தியவன் ஒவ்வொரு சொல்லுக்கும் சுவரில் நெற்றியை விடாமல் மோதினான்.

இரத்தம் பொங்கி வழிய திருப்தி அடையாதவன் ஒரு சுத்தியை எடுத்துக்கொண்டு நெற்றியில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே இருந்தான்.

நிலை பிறழ செய்யும் 

உயிர்த்துணையின் இழப்பு

ஏற்றுக்கொள்ளாத மனம்….

மனநிலை மீண்டு வரும்முன் 

மாயதேவதை காதலியாய் தோன்ற

மீண்டும் கிட்டிய பெரும் பூரிப்பு..!

எட்டுவதற்கு தடையாய் பெருமலை..

முரண்டுகிறது மனம் இழக்க முடியாமல் 

துடிக்கும் நரம்புகள் காயம் செய்கிறது

தன்னையே தனக்குத் தானே…!

———

காலையில் வரவேற்பறையில் அமர்ந்து ஆர்யன் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் முன்னே அலுவலக கோப்புகள் குவியலாக கிடந்தன.

காலைவணக்கம் சொல்லி அங்கே வந்த சல்மா “நான் எனக்கு காபி போட்டுட்டு இருந்தேன். நீங்க வேலை செய்றதை பார்த்துட்டு உங்களுக்கும் சேர்த்து போட்டேன்” என்றாள்.

எழுதிக்கொண்டிருந்த ஆர்யன் நிமிர்ந்து அவளை பார்த்தவன், அவள் கையில் இருந்த ட்ரேவிலிருந்து காபி கோப்பையை எடுத்து மேசையில் வைத்துக்கொண்டான். திரும்ப எழுத ஆரம்பித்தான்.

“நிறைய வேலை இருக்கா?” என கேட்டப்படியே சல்மா அவன் அமர்ந்திருந்த சோபாவில் தானும் அமர்ந்தாள்.

”ம்” ஒற்றை சொல் பதில்.

“நான் எதாவது உங்களுக்கு உதவி செய்ய முடியுமா? ஆபீஸ் வேலை எனக்கும் தெரியும் தானே”

“இல்ல.. பரவாயில்லை” எழுதிக்கொண்டே தலை நிமிராமல் பதில்.

“நான் இப்போ சும்மா தான் இருக்கேன். ஃபைலை பிரிச்சி அடுக்கி தரவா?”

அவள் பேசுவது அவன் காதில் விழவில்லை போல.

“நாம ரெண்டுபேரும் சேர்ந்து வேலை செய்ததே இல்ல. இது போல சந்தர்ப்பங்கள்ல நானும் உங்ககிட்ட இருந்து கத்துப்பேன்”

செல்பேசி அடித்தது மட்டும் நன்றாக காதில் விழுந்தது அவனுக்கு.

“ஹலோ ரஷீத்! ஃபைல்லாம் படிச்சி பார்த்து கையெழுத்து போட்டுடறேன். நீ வந்து எடுத்துக்கோ… சரி.. வா!”

போனை வைத்தபின்னும் அவனையே பார்த்திருந்த சல்மாவை ஆர்யன் கவனிக்கவில்லை.

“சரி, நீங்க பிசியா இருக்கீங்க. நான் அப்புறம் வரேன்”

“சரி!” அந்த சரியும் கோப்புகளில் பார்வையை வைத்தவண்ணமே வந்தது.

மிகுந்த ஏமாற்றமான சல்மா அவளது காபி கோப்பை இருந்த ட்ரேவை தூக்கிக்கொண்டு, முகத்தையும் தூக்கி வைத்துக்கொண்டு உள்ளே போனாள்.

——-

சமையலறையில் சிறிய மேசையில் அமர்ந்து ருஹானா இவானுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள்.

“குட்மார்னிங் லிட்டில் சார்” என்றபடி அங்கே ஜாஃபர் வர “குட்மார்னிங் ஜாஃபர் அங்கிள்!” என்றான் இவான்.

ருஹானா ஜாஃபரிடம் “என் சங்கிலியை சரிபார்த்து தந்ததுக்கு நன்றி ஜாஃபர் அண்ணா!” என்றாள்.

“எந்த சங்கிலி, மேம்? ஏதோ தவறா புரிஞ்சிக்கிட்டீங்களா?” என ஜாஃபர் கேட்க, ருஹானாவிற்கு குழப்பம்.

அவள் யோசிக்கவும், “கடைக்கு போறேன் மளிகை சாமான் வாங்க, உங்களுக்கு எதுவும் வேணுமா?” என அவன் கேட்க, அந்த குழப்பத்துடனே இல்லை என தலையாட்டினாள்.

ஜாஃபர் செல்லவும், ருஹானா சரிசெய்த சங்கிலியை கொடுத்து ஆர்யன் என்ன சொன்னான் என நினைவு கூர்ந்தாள்.

‘சங்கிலி சரிசெய்யப்பட்டது’ என்று சொன்னானே தவிர யார் செய்தது என சொல்லவில்லையே!

“என்ன சித்தி! யார் சரிபார்த்தது? கண்டுபிடிச்சிட்டீங்களா?” என இவான் ஆர்வமாக கேட்க, “கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் அன்பே!” என குறுநகையுடன் சொன்னாள்.

———

இன்னமுமே அதே இடத்தில் அமர்ந்து ஆர்யன் வேலையில் மூழ்கி இருக்க, ருஹானாவும் காபி ட்ரேவுடன் வந்தாள்.

“உங்களுக்கு காபி கொண்டு வந்தேன்” என சொல்ல, ஆர்யன் நிமிர்ந்து அவளை பார்க்க, அவன் முன்னே இருந்த காபி கோப்பையை கண்டவள் “ஏற்கனவே இருக்கே!” என்று கொடுக்காமல் நின்றாள்.

“அது ஆறி போச்சி. நான் குடிக்கவே இல்ல” என ஆர்யன் சொன்னதும், அவள் நீட்ட எடுத்துக்கொண்டவன் நன்றி சொன்னான்.

அவன் குடித்துக்கொண்டு இருக்கும்போது, ருஹானா “சங்கிலிக்கு நன்றி சொல்லத்தான் காபியோட வந்தேன்.” என்றாள்.

“அதான் ஏற்கனவே சொல்லிட்டியே!” என்றான் அவளை பார்த்தபடி.

“ஆமா சொல்லிட்டேன் தான். ஆனா இந்த முறை உரியவருக்கு என் நன்றி போய் சேரனும்னு நினைச்சேன்”

ஜாஃபர் அந்த பக்கமாக செல்வதை பார்த்த ஆர்யன் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டவன் “சின்ன விஷயம் இது” என சொல்லி காபி குடித்துக்கொண்டே கோப்புகள் பக்கம் கண் வைத்தான்.

அவன் வேலையை கெடுக்க விரும்பாத ருஹானா “நஸ்ரியாவை இவானுக்கு ஊட்ட சொல்லிட்டு வந்தேன். நான் போய் பார்க்கறேன்” என நகர, அவளை நிறுத்த விழைந்த ஆர்யன் “பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டுட்டியா?” என அவசரமாக கேட்டான்.

“இன்னும் இல்ல. காலைல போடலாம்னு எடுத்தேன். இவான் வேகமாக ஓடிவந்தான்” சின்ன சிரிப்போடு சொல்ல தொடங்கினாள்.

அந்த சிரிப்பு ஆர்யனையும் தொற்றி கொள்ள, அழகாக சிரித்தவன் “ஏனாம்?” என கேட்டான்.

“அவனுக்கு அப்போ தான் அவனோட வீட்டுப்பாடம் ஞாபகம் வந்திருக்கு. இரவு செய்யாம தூங்கிட்டானே”

“அப்புறம்? செய்து முடித்தானா?” ஆர்யன் சம்பாஷணையை முடிக்க விடாமல் தொடர்ந்தான். கண்கள் பளிச்சிட வசீகர சிரிப்பும் முகத்தில் நிலைத்திருந்தது.

“இல்லயே! அவனுக்கு வாசிக்கிற இடம் பிரச்சனை ஆகிடுச்சி. முதல்ல அவன் ரூம்ல வாசித்து பார்க்கறேன்னு சொன்னான். அப்புறம் தோட்டத்துக்கு போகலாம்னு கூப்பிட்டான்” அவளும் இவானின் குறும்புத்தனத்தை சிரிப்புடன் விளக்கினாள்.

“தோட்டத்துக்கா? அங்க எதுக்கு?” ஆர்யனின் புன்முறுவலும் விரிந்தது.

“அம்ஜத் பெரியப்பாக்கு அவன் வாசிக்கறதை காட்டணுமாம்”

“ஓஹோ! ஆடியன்ஸ் வேணுமா, அவனுக்கு?”

ஆர்யன் வேலையெல்லாம் விட்டுவிட்டு மலர்ந்த முகத்துடன் ரசித்து கேட்க, அப்போது படிகளில் இறங்கி பின்னால் நின்று பார்த்த சல்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்?

“ஆமா! ஒரே குஷியாகிட்டான். ஒருவழியா வீட்டுப் பாடத்தை முடித்தான்” என ருஹானா சொல்லி முடிக்க, ஆர்யன் அவள் அழகுமுகத்தை இன்னமும் பார்த்து முடிக்கவில்லை.

அங்கே நிலவிய அமைதியை மாற்ற ருஹானா “ஸாரி! உங்க வேலையை நான் கெடுக்க விரும்பல” என சொல்ல, அவன் புன்னகை மாறாமலேயே தலையசைத்தான்.

காபியை குடித்தபடியே அவன் செல்லும் அவளையே பார்க்க, தான் கொடுத்த காபி தீண்டப்படாமல் இருப்பதை பார்த்த சல்மா சீண்டப்பட்ட நாகமானாள்.

——-