Raaja Bavani 14 2 14857 “ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி உங்களுக்கு போய் சொல்றேன் பாருங்க, அந்த காலத்திலே என் தாத்தாகிட்ட சண்டை போட்டு சொத்து வாங்கிட்டு போனவங்க தானே நீங்க..?” “என்னடா சொல்லி காட்டுறியா..? என் அப்பா வீட்டு சொத்து நான் வாங்கிட்டு போனேன்..” “அப்போ சாரு பத்தி மட்டும் நீங்க ஏன் பேசுறீங்க..? அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே, அவளுக்கு செஞ்ச சில ஆயிரத்துக்கு இந்த பேச்சு பேசுறீங்க..?” “வைதேகி இதெல்லாம் சரியில்லை..” “ஆமா நானும் இது தான் சொல்றேன், இன்னும் என் வீட்ல உட்கார்ந்து நீங்க என்ன நாட்டாமை பண்றது..?” “எனக்கு ஒன்னும் ஆசையில்லை, என் தம்பிக்கு தான் பேச வந்தேன், இந்த வயசுல சொந்த அப்பா, அம்மாவை பிரிச்ச மகன்னா அது நீயா தான் இருப்ப, அங்க என் தம்பி உன்னை பெத்த பாவத்துக்கு தனியா கஷ்ட பட்டுட்டு இருக்கான்..” “ஏன் கஷ்டப்படணும்..? அதான் நீங்க இருக்கீங்களே, கூடவே இருந்து உங்க தம்பியை அருமை பெருமையா பார்த்துக்கோங்க..” “நான் என் தம்பிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவேன்..” “நான் அவரோட உங்களையும் ஜெயில்ல போடுவேன்..” “என்ன..?” “இந்த கம்பவுண்டக்குள்ள எந்த பொம்பிளை காலடியாவது பட்டுச்சு..” விரல் நீட்டி ஆக்ரோஷமாக கர்ஜித்தான். பேச்சி அவன் கோவத்தில் மிரண்டாலும், “பார்த்துகிறேன் உங்களை..” என்று சலம்பிவிட்டு சென்றார். தனா கோவம் குறையாமல் அம்மாவை முறைத்து பார்க்க, “போலாமாடா..?” மகனை மெல்ல கூப்பிட்டார் வைதேகி. அவன் அவரிடம் எதுவும் பேசாமல், முன்னே நடக்க, “டேய் அவருக்கு சாப்பாடு வைக்கணும்..” என்றார். குருமூர்த்திக்கு இவர்கள் தான் மூன்று வேளையும் உணவு, காபி, டீ கொடுத்து கொண்டிருக்கின்றனர். வைதேகி இதை சொன்ன போது தனா மறுக்கவில்லை. “கொடுங்கம்மா..” என்று தான் சொன்னவன், அவருக்கு துணி துவைக்க, வீடு சுத்தம் செய்ய என்று நம்பிக்கையான ஆளையும் நியமித்தான். அதற்கும் குருமூர்த்தி அவ்வளவு ஆட்டம், முதல் இரண்டு நாட்கள் இவர்கள் வைத்த உணவை தொட கூட செய்யாமல் வெளியே சாப்பிட்டு வயிற்றை கெடுத்து கொண்டு, அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தார். இப்போது வைதேகி கேட்டதுக்கு, “ஒன்னும் வேணாம் வாங்க..” என்று கூட்டி வந்தான். “என்ன வைதேகி என் தம்பிக்கு சாப்பாடு கொடுக்காம கிளம்பிட்ட..” வாசலில் நின்று தம்பியுடன் வீட்டில் நடந்ததை ஒன்றும் இரண்டுமாக சொல்லி கொண்டிருந்த பேச்சி இப்போதும் குறையாத அதிகாரத்துடன் கேட்டார். “அதான் நீங்க இருக்கீங்களே..? செஞ்சு கொடுக்க மாட்டீங்க..” தனா பல்லை கடித்து நக்கலாக கேட்டவன், “ஏறுங்கம்மா..” என்று வைதேகியுடன் கிளம்பிவிட்டான். “அவளை எங்க கூட்டி போறான்..?” குருமூர்த்தி கண் சுருக்கி பார்த்தார். இந்த ஒரு வாரமாக தன்னிடம் இருந்து வைதேகியை அடைகாத்த மகன் மேல் கழுத்து வரைக்கும் இருந்தார் தந்தை. தனாவோ யாரையும் கணக்கில் கொள்ளாமல், அவன் வேலையை திட்டமிட்டபடி செய்து கொண்டிருந்தான். இப்போதும் வைதேகியை வீட்டில் இருக்க விடாமல், கடைக்கு கூட்டி செல்கிறான். அவருக்கும் நாலு விஷயம் தெரிய வேண்டும் என்பதோடு குருமூர்த்தி அம்மாவை வருத்தவும் விட கூடாது என்று இந்த முடிவு. வைதேகிக்கும் இது புரிய, மகன் மேல் பாசம் என்பதை தாண்டி, பெருமை, நெகிழ்வு. அன்று, “நீ சுயநலமா தானே யோசிக்கிற..?” என்று மகனை கோவத்தில் கேட்டதை நினைத்து வருத்தம் கொண்டவர், பைக் ஓட்டி கொண்டிருந்த மகனை பார்த்தார். அவ்வளவு கம்பீரமாக, அவர் தலைக்கு மேல் ஓர் அடி வளர்ந்து, விரிந்த தோளுகளுடன், மனதுக்கும், கண்களுக்கும் அவ்வளவு நிறைவாக இருந்தான் மகன். அவரின் இத்தனை வருட கடுமையான தவத்தின் பலனாக மகன். அவனை அப்படியே அணைத்து கண்ணீர் விட, அவரின் உள்ள குமுறலை சொல்ல அவ்வளவு ஏக்கம். ஆனால் வளர்ந்துவிட்ட மகனிடம் என்னென்று சொல்வார்..? சொல்லவும் முடியுமா..? தெரியவில்லை. ஆனால் இந்த நொடி அவருக்கு எதுவும் வலிக்கவில்லை. வாழ்க்கை அவருக்கு இனியும் என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது போதும், என்னை தாங்க, என்னை கவனிக்க என் மகன். உருகி போன உள்ளத்துடன், குளிர்ந்த வயிறுடன் மகன் தோள் மேல் கை வைத்து, லேசாக அழுத்தம் கொடுத்தார். தனாவின் கோவ மனதுக்கு அது புரியவில்லை. உணரவும் இல்லை. அவனின் ஆதங்கம் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு அம்மா இப்படி பதில் பேசாம இருக்க முடியும், இவங்களை எல்லாம் அடிச்சு ஓட விட வேண்டாமா..? என்று தான் இருந்தது. இப்படியே கடை வர, தனா சென்று கடை திறந்தான். ஆட்கள் வந்திருக்க முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். தனா அம்மாவை வைத்து விளக்கு ஏற்றியவன், அவர் மறுக்க மறுக்க அவன் சீட்டில் உட்கார வைத்தான். “ம்மா.. எல்லாம் சரியா தான் நடக்கும், நீங்க மேற்பார்வை பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மாப்பிள்ளை வந்துடுவான், வராதன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன், ஆனா அவன் கேட்க மாட்டான், நான் மண்டிக்கு போறேன், சரக்கு வந்திருக்கும்..” அவரை விட்டு கிளம்பினான். “தனா என்னடா தனியா விட்டு போற..?” வைதேகி பதற, “ம்மா.. உனக்கு ஞாபகம் இருக்கா, நீ கூட இப்படி தான் என்னை முதல் நாள் ஸ்கூல் விட்டு போன, அன்னைக்கு நான் எப்படி அழுது கெஞ்சின..? விட்டியா என்னை, இல்லை தானே..?” கேலியாக சொல்லி கிளம்பியும் விட்டான். வைதேகிக்கு கொஞ்சம் படபடப்பாக இருக்க, குகன் வரவும் நிம்மதியானார். இங்கு தனா எப்போதும் போல மண்டி சென்று சரக்கு இறக்கி வைக்க, குருமூர்த்தி வந்தார். அவர் மகன் இனி மண்டி வர மாட்டான் என்று தான் நினைத்திருந்தார். ஆனால் மகன் எப்போதும் போல வந்து வேலைகள் பார்த்து செல்ல, அதற்கும் முதலில் குதித்தவர், பிறகு தானே அமைதியாகி போனார். மகனை அதிகமாக பகைத்து கொள்ள முடியவில்லை. அவரின் ஒற்றை வாரிசு ஆயிற்றே. தனாவிற்கோ அந்த வாரிசு எண்ணமெல்லாம் இல்லை. எங்கேயும் அவன் அது போல நினைத்ததும் இல்லை. அவனை பொறுத்தவரை, அவனின், சாருவின் உரிமை, கடமைகளை விட்டு கொடுக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவ்வளவு தான். அதன் பேரிலே அவன் திட்ட மிடல்கள், அன்றாட வேலைகள் இருந்தன. சாருவிற்கு திருமணமாகிவிட, அவளுக்கு செய்ய வேண்டும். என்னென்ன செய்ய, எப்படி செய்ய என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். குகன் எப்படியும் வாங்கமாட்டான். அவன் எப்போதும் போல கடைக்கு வந்து செல்ல, தனா தனியே அதற்கான ஏற்பாட்டில் இருந்தான். இப்படியே இவனுக்கு நாட்கள் செல்ல, அங்கு அனு கொதித்து கொண்டிருந்தாள். “மறுநாள் அனுவை கூட்டி கொண்டு ஊர் வந்து சேருங்கள்..” என்ற தகவல் கட்டளையோடு சித்ராவிற்கு வந்து சேர்ந்தது. இது நிச்சயதார்த்தம். அடுத்த ஒரு மாதத்தில் திருமணம். எல்லாம் முடிவாகிவிட்டது. முன் போல இல்லாமல் இந்த முறை அன்பழகன் மிக மிக ரகசியமாக, பொறுமையாக அவளுக்கான மாப்பிள்ளையை பார்த்திருந்தார். எங்கும் அனுவை பெண் பார்க்க வைக்க, கேட்க என்று எதுவும் இல்லாமல், அவரே பேசி, உறுதியும் செய்யும் நிலையில் நின்றிருந்தார். அன்று கோவிலில் வைத்து தனா பார்த்த பார்வை. அது சொல்லும் செய்தி அவருக்கு உவப்பானதாக இல்லை. “அந்த பையன் விட மாட்டான் மாப்பிள்ளை, நாம முந்திக்கணும். முன்ன நீங்க சொன்னதை நான் கேட்டேன், இப்போ அனுவுக்காக அப்படி எதுவும் கேட்காதீங்க, உங்க மேல நிறைய மரியாதை, பாசம் வச்சிருக்கேன், என்னை சங்கடப்படுத்தாதீங்க..” சஞ்சய் போனில் கேட்ட போது இதை தான் சொல்லியிருந்தார் அன்பழகன். அவன் அதற்கு மேல் எப்படி பேச..? அனுவிடம் கைவிரித்து விட்டான். “மாப்பிள்ளை பையனுக்கு எல்லாம் தெரியும், அவன்கிட்ட பேச நினைக்காத..” சுஜாதா அனுவிடம் இதை தான் முதலில் சொன்னார். அனுவிற்கு முன் போல் அழுகை வரவில்லை. கோவம் தான் வந்தது. இனியும் நான் என்ன போராட..? கொதித்தவள் இரவு நேரம் பார்க்காமல் தனாவிற்கு போன் செய்துவிட்டாள். சித்ராவிற்கு தங்கை காதலில் பிரச்சனையில்லை. அப்பா, அம்மாவை நினைத்து பயந்தாள். “நைட் மட்டும் தான் இருக்கு அனு, காலையிலே கிளம்பனும், பார்த்துக்கோ..” மகனுடன் ரூம் சென்றுவிட்டாள். பதினோரு மணி. தனா அப்போது தான் தூங்க ஆரம்பித்திருக்க, போன் விடாமல் அடித்தது. இந்த நேரத்தில யார்..? தனா பார்க்க, அனு. பரவசம் கொண்டவன், வேகமாக போன் எடுக்க, “நல்லா நிம்மதியா தூங்கிட்டு இருக்கீங்க போல..” அனு எடுத்தவுடன் பொரிந்தாள். தனாவிற்கு அவளின் கோவம் சில நொடிகள் சென்று புரிய, “என்ன ஆச்சு..?” என்றான். “பெருசா ஒன்னும் ஆகல, நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம், வந்து சாப்பிட்டு போங்கன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்..” என்றாள் அவள் குத்தலாக. “என்னடி சொல்ற..?” தனா தூக்கம் எங்கோ ஓடி போக கேட்டான். இவ்வளவு ரகசியமாக அன்பழகன் காய் நகர்த்துவார் என்று தனா எதிர்பார்க்கவில்லை. “சாரு கல்யாணம் முடிச்சுட்டு வரேன்னு அன்னைக்கு போன்ல கேட்ட ஆள் எங்கேயோ மாயமா மறைஞ்சு போயிட்டார் போல..” அனு சீறலாக கேட்டாள் “உன் ஸ்டடிஸ் இன்னும் இருக்கேடி.. அதான் வெய்ட் பண்ணேன்..” தனா பாவமாக சொன்னான். “ஆமா நான் படிச்சு நாட்டை ஆள போறேன், பாருங்க..” அனு வெடிக்க, “நாட்டை ஆள நிறைய பேர் இருக்காங்க, நீ என்னை ஆண்டா போதும்டி..” தனா காத்திருந்த காதலுடன் சொன்னான். “அதுக்கு தான் பொண்ணு கேட்டு கல்யாண தேதி குறிச்சுட்டீங்க பாருங்க..? நிம்மதியா தூங்கிட்டு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” அனு நொடிக்க,, “தேதியும் குறிப்பேன், உன்னோட பவனியும் வருவேன்டி..” தனா உறுதியாக சொன்னவன், மறுநாள் அனுவை பெண் கேட்டு அன்பழகன் முன் நின்றான்.