அன்றிரவு குகனின் வீட்டில் வைதேகி தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி, மகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். இத்தனை நாள் சாரு திருமணம் நல்லபடியாக முடிந்தால் போதும் என்றிருந்தவருக்கு இப்போது கணவனை நினைத்து பயம்.
“எனக்கு போதும்மா..” சாரு மறுக்க, வைதேகி விடாமல், மூன்று இட்லிகளை ஊட்டி எழுந்தார்.
“ம்மா.. கிளம்புறீங்களா..? இங்கேயே இருங்கம்மா..” மகள் அம்மா கை பிடித்து கேட்டாள்.
அவர் பெருமூச்சுடன், “நாங்க நாளைக்கு வரோம் சாரு, நீ முகத்தை இப்படியே வச்சிருக்காத, அண்ணி, குகன் தான் இனி உனக்கு, புரிஞ்சு நடந்துக்கோ..” என்றார் அவள் தலையை தடவியபடி.
“எனக்கும் அது தெரியும்மா, நீ அங்க போகாத, இங்கேயே இரு..” என்றாள் மகள் விடாமல்.
“சாரு என்ன இது..?” வைதேகி அவளுக்கு எப்படி புரியவைக்க என்று தடுமாறினார்.
“அண்ணி நாம சாப்பிடலாமா..?” பரிமளம் ரூம் வந்தவர், இவர்களை கேள்வியாக பார்த்தார்.
“அம்மா, அண்ணாவை இங்கேயே இருக்க சொல்லுங்கத்தை, அங்க போக வேண்டாம், எனக்கு பயமா இருக்கு..” என்றாள் கலக்கத்துடன். வெளியே இருந்த தனா, குகன் காதிலும் இது விழுக, தனாவிற்கு அவ்வளவு வேதனை.
“இன்னைக்கு தான் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு, அந்த சந்தோஷத்தை கூட அவ அனுபவிக்க முடியாம, எங்களை நினைச்சு.. ச்சு.. என்ன வாழ்க்கை நாங்க வாழ்ந்திட்டிருக்கோம்..?” என்னமோ அந்த நொடி அவ்வளவு ஒரு விரக்தி. குகனுக்கு தெரியாமல் முகம் திருப்பி கொள்ள,
“சாரு சொல்றது சரி, நானும் இதை தான் தனாகிட்ட கேட்டுட்டு இருக்கேன்.. ம்மா.. நீங்க சொல்லுங்க, அப்போ தான் கேட்பாங்க..” என்றான் குகனும்.
வைதேகி விம்மியேவிட்டார். அவரின், அவரின் மகன் வீடு அல்லவா அது. அங்கு செல்லாதே என்று சொன்னால், அவர்கள் எங்கு செல்வார்கள்..? எங்கு செல்ல முடியும்..? நான் இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கை இது தானா..? யாரின் முகத்தையும் பார்க்க முடியவில்லை அவரால்.
“அண்ணி.. என்ன இது..? அவங்க சின்ன பசங்க, விடுங்க..” பரிமளம் அவரின் கண்களை துடைத்து, மகனை, மருமகளை கண்டிப்புடன் பார்த்தார். வாழ்க்கையின் எதார்த்தம் மிகவும் தெரிந்தவர், அடிபட்டவர் ஆயிற்றே. வைதேகி, தனாவின் உணர்வுகள் புரியாமல் இருக்குமா..?
“ம்மா.. அங்க போனா மாமா இவங்களை ரொம்ப படுத்துவார்ம்மா, அவர் சொல்லிட்டே இருந்தார் சாரு கல்யாணம் மட்டும் தான்னு, இப்போ இவங்களை வீட்டுக்குள்ள விடுவார்ன்னே தெரியாது..” குகன் சொல்ல, தனாவிற்கு விரக்தி மறைந்து, உடலும், மனமும் இறுக்கம் கொண்டது.
“நாங்க கிளம்புறோம், நீங்க ரெண்டு பேரும் எங்களை பத்தி யோசிக்காம சந்தோஷமா இருங்க, இது தான் எங்களுக்கு வேணும், மற்றதை நான் பார்த்துகிறேன்..” மறுத்து பேச முடியாத குரலில் சொன்னவன், “ம்மா.. போலாமா..?” என்றான்.
மகன் பேசவும், வைதேகியும் சுதாரித்து கொண்டார். குருமூர்த்தியுடன் இத்தனை வருடம் வாழ்ந்ததின் வரமாக கிடைத்த பொறுமையும், வருவதை எதிர்கொள்ளும் பக்குவமும் அவரை தன்னிலை மீள வைத்தது. புடவை தலைப்பில் முகம் துடைத்து கொண்டவர், மகனுடன் கிளம்ப ஆயத்தமானார்.
“டேய்.. வீட்டு மாப்பிள்ளையா போயிட்ட, முதல் நாளே மரியாதை இல்லாம பேச கூடாதுன்னு பார்க்கிறேன்.. ஒழுங்கா போயிடு..” தனா அடிக்குரலில் அவனை எச்சரிக்க, குகன் முணுமுணுத்து நின்றுவிட்டான்.
“சாரு.. திரும்ப ஆரம்பிக்காத.. போதும்..” தங்கையின் கண்ணீரை துடைத்து தோளோடு அணைத்தவன், சில நொடிகள் சென்று, “உனக்கு நான் எதுவும் சொல்ல போறதில்லை, எல்லாம் பார்த்து வளர்ந்த பிள்ளை தான் நீ, பார்த்துக்கோ..” என, சாரு அண்ணன் தோளிலே தலையசைத்தாள்.
அடுத்து பரிமளத்திடம் சென்றவன், “உங்களுக்கு நன்றி சொல்ல கூடாதுன்னு தான் நினைக்கிறேன் அத்தை முடியல, உங்களுக்கு அந்த மனுஷனை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் எங்களுக்காக ஒத்துக்கிட்டீங்க, நீங்க மட்டும் அன்னைக்கு நான் கேட்டதுக்கு சம்மந்தம் சொல்லலைன்னா இன்னைக்கு என் தங்கச்சி இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க முடியாது, எங்களுக்கும் இந்த நிம்மதி, சந்தோஷம் கிடைச்சிருக்காது.. ரொம்ப நன்றித்தை..” அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டான்.
“தனா.. என்ன இது..? எங்க வீட்டு பொண்ணு வைதேகி, உங்க மாமா இருந்திருந்தா இதை தான் செஞ்சிருப்பார், இன்னும் சொல்ல போனால் நீ கேட்கிற அளவு இல்லாமல் அவரே உரிமையாய் தங்கச்சி பொண்ணை கேட்டு கட்டியிருப்பார், எனக்கு அந்த உரிமை, வசதி இல்ல, ம்ம்..” பெருமூச்சுவிட்டவர், “இனி நீ சாருவை நினைச்சு கவலைப்படாத, உங்க அளவுக்கு வசதி இல்லைன்னாலும், கண்டிப்பா அவளை நல்லா பார்த்துப்போம்..” என்றார் உள்ளார்ந்து.
“அண்ணி என் பொண்ணுக்கு தேவை நிம்மதி, சந்தோஷம் மட்டும் தான், அதை நீங்க கொடுப்பீங்கன்னு தான் தனா எல்லார்கிட்டயும் சண்டை போட்டு அவன் தங்கச்சியை கொடுத்திருக்கான்..” என்றார் வைதேகி.
“அத்தை.. இனி நீங்க உங்க பொண்ணை விட்டுட்டு, மாப்பிள்ளையை தான் பார்க்கணும்.. என் நிலைமை தான் கவலைக்கிடம்..” என்றான் குகன் புது மனைவியை பார்த்து சீண்டலாக.
“ஆமாமாம்மா.. ஒரு காலத்துல அவர் ரொம்ப பரிதாபப்பட்ட அந்த தட் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ இப்போ இவர் தானே, பாவம், இவர் வாழ்க்கை எவ்வளவு அமோகமா இருக்கும்ன்னு நீங்க பார்க்க தான் வேணும்..” என்றாள் சாரு கோவமான நக்கலுடன்.
‘ஆத்தி.. இன்னும் இவ இதை மறைக்கலயா..?’ உள்ளுக்குள் நொந்து போன குகன், தனாவிடம், “எதுக்கும் நீ காலையில வந்து என்னை பார்த்திட்டு போடா, ஆஸ்பிடல் ஏதும் போக வேண்டியிருக்குமோ என்னமோ..?” என்றான்.
தனா சிரிப்புடன் அவன் தோளில் தட்டியவன், “கவலைப்படாத மாப்பிள்ளை.. அதுக்கு அவசியம் இருக்காது, என் தங்கச்சியே வைத்தியம் பார்த்துப்பா..” என,
“போட்டு கொடுத்ததும் இல்லாம நக்கல் வேற..” குகன் அவனை பார்த்து பல்லை கடித்தான்.
“பார்த்துடா.. என் தங்கச்சிக்கும் இரண்டு பல் வை..” மேலும் வாரியவன், அந்த மனநிலையிலே உணவை மறுத்து, எல்லோருக்கும் சொல்லி கொண்டு, அம்மாவுடன் கிளம்பிவிட்டான்.
இரவு மணி எட்டாகி இருந்தது. நிச்சயமாக வீட்டில் தான் இருப்பார். எப்போது இவர்கள் வருவார்கள் குதறலாம் என்று காத்திருப்பார். தனா உதட்டில் கசப்பான சிரிப்பு. அவனுக்கு அவர் இனி எப்படி நடந்து கொள்வார், பேசுவார் என்றெல்லாம் கவலை இல்லை. அவனுடைய மிக பெரிய பொறுப்பு, சாருவை நல்ல இடத்தில் கட்டி கொடுப்பதே.
ஆசைப்பட்டது போல கட்டி கொடுத்தாகிவிட்டது. அதுவும் சாதாரணமாக நடக்கவில்லை. மிகப்பெரிய போராட்டம் தான். அன்று வீட்டில் வைத்து அந்தளவு இறங்கி பேசியபிறகு தான் மனிதர் விட்டார். இவன் காதலில் அல்லவா கத்தி வைத்தார் மனிதர்.
“நான் இந்த கல்யாணத்துக்கு ஒதுக்கணும்ன்னா இந்த பையன் நான் சொல்ற பொண்ணை தான் கட்டணும்..” குருமூர்த்தி சொல்ல, தனா ஒரு நொடி அதிர்ந்து தான் போய்விட்டான். ஆனால் அவரை பற்றி நன்கு தெரிந்திருந்ததால் சட்டென்று தெளிந்துவிட்டவன்,
“என் கல்யாணத்தோட, சாரு கல்யாணத்தை முடிச்சு போட கூடாது..” என்றான் அழுத்தமாக.
“ஏன்.. ஏன்..?” குருமூர்த்தி பாய்ந்து வர,
“நான் பேசணும், அவரை பொறுக்க சொல்லுங்க..” தனா அவர் குரலை விட தன் குரலை உயர்த்தினான். எப்போதும் அவர் குரலுக்கு அடங்கி பேசும் மகன் இன்று குரல் உயர்த்த, கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய கோபத்துடன் அவனை பார்த்தார்.
நெஞ்சை நிமிர்த்து அவர் தலைக்கு மேல் அவரை தாண்டி வளர்ந்து அவரை எல்லாவற்றிலும் சின்னதாக்கி நின்றிருந்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு அழுத்தமான தோரணை.
“இது என் தங்கச்சி வாழ்க்கை, அதுல இவர் போல பகடியாட என்னால முடியாது.. இவர் பேருக்கு அப்பாவா இருக்கலாம், நான் அப்படி இல்லை..” என்றுவிட்டான்.
“என்னடா சொன்ன..?” குருமூர்த்தி அடங்காமல் மகன் மேல் ஏற, சிறிதும் அசையாமல் நேர் கொண்டு நின்றவன்,
“ஏன் நான் சொன்னதில என்ன தப்பு..? ஒரு பொண்ணுக்கு அப்பாவா இவர் எதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கணும், பார்த்திருக்கிற மாப்பிள்ளை நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படிபட்டது, பொண்ணை நல்லா வச்சிருப்பானா இல்லையான்னு தானே..?”
“இதே குகன் இடத்துல வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்து அவன் கெட்டவனா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பார்..? அப்போவும் இதே போல தான் என்னை மிரட்டியிருப்பாரா..?”
“அதை பத்தி நான் ஏண்டா கவலைப்படணும்..? இவன் என் பொண்ணை நல்லா வச்சுக்காம போயிடுவானா..? இவங்க தகுதி, தராதரத்துக்கு என் பொண்ணை உள்ளங்கையில வச்சு தாங்கணும்..” குகனை கீழிறக்கி மிரட்டலாக பேசினார். குகனுக்கு அவர் பேச்சில், மிரட்டலில் அப்படி ஒரு கோவம். தனாவிற்காக பொறுத்து முகம் திருப்பி கொண்டான்.
“போதும் தாத்தா இவரை நிறுத்த சொல்லுங்க, எந்த தகுதி, தராதரத்தை பத்தி இவர் பேசுறார், அதுக்கான தகுதி முதல்ல இவர் கிட்ட இருக்கா..?” தனா கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் சீறினான்.