இராஜ பவனி 12

குகன்.. நீ எதுக்கு இங்க இருக்க..? வீட்டுக்கு போ..”  பந்தி  கவனித்து கொண்டிருந்தவனை  விரட்டினான் தனா

நீ தனியா என்ன பண்ணுவ..? நான் இங்க கவனிச்சுக்கிறேன், நீ வேற வேலையை பாரு..” குகன் சொன்னவன், யாரோ சாம்பார் கேட்கவும் பரிமாற சென்றான்

ம்ப்ச்.. குகன், என்னை கோவப்படுத்த கூடாது, நீ கிளம்பு, நான் இங்க பார்த்துகிறேன்..” அவனிடம் இருந்த சாம்பார் வாளியை வாங்கி பரிமாறும் ஆட்களிடம் கொடுத்தான்

தனா..”

ஷ்ஷ்.. எதுவும் பேசாத, விடியற்காலையிலே முகூர்த்தம், சீக்கிரம் எழுந்திருக்கணும், போய் தூங்கு போ.. டேய் மாப்பிள்ளையை வீட்ல கொண்டு போய் விட்டு வாங்கடா..”  மற்றவனிடம் அவனை ஒப்படைத்தான்

வாங்க மாப்பிள்ளை..” அவன் கிண்டலாக கூப்பிட

பிஞ்சிடும் ஓடிடு.. தனா நான் வேலை எதுவும் பார்க்கல, உன்கூட இருக்கேன், என்னை விடு..” என்றான் நகர மாட்டேன்  என்ற அடத்தோடு.   “இவனோட..” தனா சலிக்க,  

ண்ணா..  எனக்கு என்னமோ நம்ம வீட்டு மாப்பிள்ளை  உங்களுக்காக பார்க்கிற மாதிரி தெரியல..” சற்று தள்ளி அமர்ந்திருந்த சாருவை பார்த்து குகனை கலாய்த்தான் தனாவின் பங்காளி

“ஆமாமா.. உன் அழகு தங்கச்சியை பார்த்துட்டாலும், அங்க பாரு அவளை கட்டிக்க போற மாப்பிள்ளை இங்க இருக்கன்னு கூட இல்லாம என்ன பொள பொளந்துட்டுன்னு  இருக்கான்னு..” அவனின் பொருமல் நன்றாகவே தெரிய சொன்னான்

ஆஹ்.. இது நல்லா இருக்கே, அப்போ என் தங்கச்சி சாப்பிட கூட கூடாதா, இன்னும் கட்டியே குடுக்கலை, அதுக்குள்ள இப்படியா, பிரிடி பந்தலை, கூட்டுடா பஞ்சாயத்தை..” மற்றவன் குதித்தான்.

அடிங்க.. எட்டி குறுக்குலே மிதிச்சிடுவேன், நானே எப்போ உன் பெரியப்பன் ஏழரைய கூடுவாரோன்னு கிலில சுத்திட்டு இருக்கேன், நீ பந்தலை பிரின்னு சொல்ற..” சொன்னவன்  தலை முடி பிடித்து வலுவாக ஆட்டினான்

அந்த பயம் இருக்கு இல்லை, பாருங்க நாங்க எல்லாம் எவ்வளவு டெரர்ன்னு, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க மாப்பிள்ளை, இல்லை என் பெரியப்பாவை விட்டு தட்டி தூக்கிடுவோம், ஏதோ இப்போ சிங்கம் சாய்ஞ்சிருச்சுன்னு அசால்ட்டா நினைக்காதீங்க சொல்லிப்புட்டோம்..” மற்றவன் சட்டை காலரை தூக்கிவிட்டான்

டேய் உன் பெரியப்பாவை சிங்கம்ன்னு சொல்லி அதை ஏண்டா தற்கொலை பண்ண வைக்கிற..” குகன் அவனை கடுப்பாக பார்த்தான்

சரி.. காண்டா மிருகம் வச்சுக்குவோம், கொம்பிலே மேல தூக்கி போட்டு வாலிபால் விளையாடுவார் எங்க சித்தப்பா..” இன்னொருவன் மார்தட்டினான்

இதுவும் உங்களுக்கு பிடிக்கலைன்னா யானை வச்சுப்போம், கால்லே எட்டி உதைச்சு புட் பால் விளையாடுவார் எங்க சித்தப்பா..” இன்னொருவன் சொல்ல

டேய்.. டேய்.. பார்த்தியாடா, நம்ம   பெரியப்பா எல்லா மிருகத்தோடவும் எப்படி மேட்ச் ஆகுறார்ன்னு..” இன்னொருவன் கத்தினான்

அதான்டா குருமூர்த்தி..” இன்னொருவன் கிண்டலாக சொல்ல, அங்கு அப்படி ஒரு சிரிப்பு

தனா விலகி பந்தியை கவனித்து கொண்டிருந்தாலும் இந்த பேச்சுக்கள் காதில் விழ, அவன் முகம் இறுகி தான் போனது. அப்பவாயிற்றே. அவரின் மரியாதையை காப்பாற்ற தான் நினைத்தான்

அவரே கெடுத்து கொள்ள, மகன் பெருமூச்சுடன் தங்கையிடம் சென்றான். சாரு இவனை பார்த்ததும் முகம் திருப்பி கொள்ள, அவள் தலை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “எவ்வளவு நேரம் சாப்பிடுவ..? மத்தவங்களுக்கும் வேணும், கிளம்பு..” என்றான் கிண்டலாக. 

சாரு அண்ணனை முறைத்தவள், “என் கல்யாணம் நான் சாப்பிடுவேன், எனக்கு மிஞ்சி தான் மத்தவங்களுக்கு..” என்றாள் உர்ரென்று. அதில் தனா சிரித்துவிட, பார்த்த வைதேகிக்கு கண்கள் கலங்கி தான் போனது.  எவ்வளவு பிரச்சனை, பேச்சுகளுக்கு இடையில் இந்த கல்யாணம் நாளை நடக்கவிருக்கிறது. 

போதும் போதும் எனுமளவு குருமூர்த்தி ஆடி, மகன் அவரை கிட்டத்தட்ட அடக்கி தான் இந்த திருமணம். அதுவும் மிகவும் குறுகிய நேரத்தில். இரண்டு வாரத்திலே முகூர்த்தம் வைத்தாகிவிட்டது. தனா தான் அதில் உறுதியாக இருந்தான். ஒரு மாசமாவது போகட்டும்.. வைதேகி மகனிடம் கேட்டு பார்த்தார். ம்ஹூம்.. தனா ஏற்கவில்லை. 

“என்கிட்ட இப்போ கல்யாணம் பண்ற அளவு பணம் இல்லைடா..”  குகன் எப்போதும் போல தயங்காமல் தன் நிலைய நண்பனிடம் சொன்னான். 

“உன்கிட்ட எவ்வளவு இருக்கோ, அவ்வளவு செலவு பண்ணா போதும்..” என்றுவிட்டான் தனாவும். 

“அப்போ கல்யாணம் கோவில்ல  சிம்பிளா தான் வைக்க முடியும், தாலி, முகூர்த்த புடவை, பத்திரிக்கை, சாப்பாடுன்னு இதுக்கே லட்சம் கிட்ட ஆகிடும்.. உனக்கு தெரியும் இல்லை கல்யாண செலவு நாங்க தான்னு, நீ பணம் ஏதும் கொடுக்கிறேன்னு சொல்ல மாட்ட தானே..?” குகன் நண்பனை உறுத்து பார்த்து கேட்டான். 

“பார்றா.. நான் ஏண்டா உனக்கு கொடுக்கணும்..? நிச்சயம் மட்டும் தான் எங்களுது, கல்யாணம் நீங்க தான், என்ன பொண்ணு வீட்ல இருந்து பணம் கறக்கலாம்ன்னு பார்க்கிறீங்களா..?”  தனா அவனை கிண்டலடித்தான். 

“அப்போ நீங்க மாப்பிள்ளைக்கு சீரா எதுவும் கொடுக்க மாட்டிங்களாடா..?  ச்சே.. இது தெரியாம வந்து மாட்டிகிட்டேனே..”  குகன் சிரிப்புடன் சலித்தான். 

“உனக்கு என்ன வேணுமோ எல்லாம் என் தங்கச்சி கொடுப்பா, வாங்கிக்கோங்க மாப்பிள்ளை..”  தனா திருப்பி கொடுக்க, அந்த நேரமே கல்யாண வேலை, கலாட்டா ஆரம்பமாகின.  

இரண்டு வாரம் மின்னலாக ஓடி மறைய,  இதோ இன்று மாப்பிள்ளை, பெண்ணை மனையில் உட்கார வைத்து,  தனா வீட்டிலே நிச்சய பத்திரிக்கை வசித்து,  பந்தி நடந்து கொண்டிருக்கிறது. நாளை விடியற்காலையில் கோவிலில் வைத்து திருமணம். 

எந்தளவு சிம்பிளாக செய்ய நினைத்தாலும், குகனின் பக்க உறவுகள், தனா உறவுகள், வைதேகி உறவுகள் என்று கூட்டம் அலைமோத தான் செய்தது. உணவிற்கு வரை தனா கணக்கு பார்க்க கூடாது, மற்றதில் குறைத்து கொள்ளலாம் என்றுவிட்டான். அதுவும் இருவீட்டிலும்  முதல் திருமணம் ஆயிற்றே. போதாதற்கு மாப்பிள்ளை, பெண் உள்ளூர் வேறு. 

ஊரே இங்கு தான் இருந்தது. அன்பழகன் குடும்பம்,  குருமூர்த்தி, அவரின் அக்கா பேச்சி தவிர. அதிலும் அன்பழகனுக்கு தனா நேரே அவரின் மில்லுக்கு சென்று பத்திரிக்கை வைத்தான். வீட்டிற்கு செல்லும் நேரம் வரும். இப்போது மில்லுக்கு தான் சென்றான். 

அவர் இவனை எதிர்பார்க்காமல் முகம் திருப்பினாலும், ஊர்காரனாய் வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டார். தனாவும் அந்த நேரத்தில் எதுவும் பேசாமல், “எல்லாம் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க..” என்ற அழைப்புடன் வந்துவிட்டான். அவர் வரவில்லை. வரமாட்டார் என்று தெரியுமே..? 

ஆனாலும் தனாவிற்கு அனுவை நினைத்து ஏக்கம் தான். அண்ணியா அவ இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் என்று  நினைத்து  ஏங்கி தான் போனான். ஆனால் சூழ்நிலை அவளை நினைத்து ஏங்கி கொண்டிருக்க விடவில்லை. சூழ்நிலை என்பதை விட குருமூர்த்தி விடவில்லை எனலாம். 

ஒரே மகளின் நிச்சய பத்திரிக்கை வாசிக்க ஊரே அவரின் வீட்டில் திரண்டிருக்க, அவரோ சரியாக அந்த நேரம் அக்கா பேச்சியுடன்  தோட்ட வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அவருக்கு  மகன் வந்து அவரிடம் கெஞ்ச வேண்டும் என்ற வெறி. அவர் மகள் தான் சாரு, அவளின் திருமணம் தான் இது  என்று நினைக்கும் நிலையில் எல்லாம் அவர் இல்லை. 

அவருக்கு தேவை தனா மட்டும் தான். அவனின் சரணாகதி தான். அன்று வீட்டில் வைத்து மகன் பேசிய பேச்சு.. அவரையே அடங்கி  நிற்க வைத்துவிட்டானே.  நான் தான் இந்த வீட்ல, எனக்கு பொறந்தவன் என்னை ஓரக்கட்டுவானா, விடுவேனா.. ஆங்காரத்துடன் தோட்ட வீட்டில் மகன் வந்து காலில் விழ காத்திருந்தார். 

“வருவான்க்கா.. நான் இல்லாம நடந்திடுமா, வந்து என் கால்ல விழுவான் பாருங்க..”  பேச்சியிடம் கொக்கரித்து கொண்டிருந்தார் நல்லவர். 

அதற்கேற்றாற் போல, அங்கு வீட்டில், பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி, தனாவிடம்,  “என்ன இருந்தாலும் அவர் தான் பொண்ணுக்கு அப்பா, அவர்  இல்லாமல் எப்படி..? தனா நீ ஒரு வார்த்தை உங்க அப்பாவை கூப்பிடுப்பா.. அவர் குணம் தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே..”

“மகன் நீ தான் விட்டு கொடுத்து போகணும், அப்பா ஸ்தானத்துல இருந்து தங்கச்சி கல்யாணத்தை எடுத்து நடத்துற, இதுல என்ன ஆகிட போகுது, உன்னை பெத்தவன் தானே, அந்த மரியாதையை கொடுப்பா, போப்பா.. போய் கூப்பிட்டு வாப்பா.. போ தனா..”  என்று ஆளாளுக்கு அவனை நெருக்கினர்.