“ரஞ்சு, எழுந்திருமா…! மணி ஏழாயிடுச்சு…” வெகு நேர முயற்சிக்குப் பின் கண்ணைத் திறந்தவள் அவசரமாய் கடிகாரத்தைப் பார்த்து வேகமாய எழ முயல தடுமாறினாள்.
“ஹேய்…! மெதுவா… என்னாச்சு, உடம்பு முடியலயா…?” அவன் பதைப்புடன் கேட்க சோர்வுடன் அவனை நோக்கியவள், “ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல பிரபா… டைம் ஆயிருச்சு, இதோ வந்துடறேன்…” என்றவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் திரும்பியவள், பெட் பானை மாற்றி அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய அருகே வர, “ரஞ்சு, உனக்கு என்ன பண்ணுது…” கேட்டவன் அவளது நெற்றி, கழுத்தில் கை வைத்துப் பார்க்க கணவனின் கரிசனத்தில் மனம் நெகிழ்ந்தாள் ரஞ்சனா.
“லைட்டா பீவர் தாங்க… காபி சாப்பிட்டு டாப்லட் போட்டா சரியாகிடும்…” சொன்னவள் தனது சோர்வைப் பொருட்படுத்தாமல் அவனுக்கு வேண்டியதை செய்து பல் விலக்க உதவிவிட்டு காபி கொண்டு வர சென்றாள்.
காபி குடித்ததும், “மாத்திரை போடு…” அவன் நினைவுபடுத்த போட்டுக் கொண்டாள்.
“முடியலேன்னா லீவு போட்டிரு ரஞ்சு…”
“இல்லங்க, இன்னிக்கு ஒரு முக்கியமான ஆப்பரேஷனுக்கு நான்தான் ஹெல்ப் பண்ண தியேட்டர்ல இருக்கணும்… பரவால்ல சமாளிச்சுப்பேன், சமையல் செய்ய தான் இனி நேரம் இல்லை… காலைல பிரட் டோஸ்ட் பண்ணிடறேன், மதியத்துக்கு ஹோட்டல்ல சாப்பாடு சொல்லிடுங்க…” அவள் கிளம்பத் தயாராக கவலையுடன் பார்த்தான்.
“உடம்புக்கு முடியாம நிச்சயம் நீ போகத்தான் வேணுமா…?” கேட்டவனின் நெற்றியில் சிகை விலக்கி நேசத்தோடு அவளிட்ட முத்தம் அலட்டிக் கொண்டிருந்த அவன் மனதுக்கும் பெரும் மருந்தாய் இருந்தது.
பேருந்துக்குக் காத்திராமல் ஆட்டோவிலேயே ஆசுபத்திரிக்கு வந்து விட்டாள் ரஞ்சனா. சிறிது ஓய்வெடுத்தால் தேவலை என்று உடல் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் பணத்தை ஆட்டோக்காரனுக்கு கொடுத்துவிட்டு மருத்துவமனைக் கட்டிடத்தை நோக்கி நடந்தவளுக்கு கால்கள் குழைந்து உடம்பெல்லாம் தளர்வது போலிருந்தது.
உலர்ந்திருந்த உதடுகளை நாவால் நனைத்துக் கொண்டு கட்டிடத்தை அடைந்தவள் அன்றைய பொதுவான பணிகளை முடித்துக் கொண்டு தனது இருக்கைக்கு வந்தாள். பனிரெண்டு மணி வரை ஆப்பரேஷன் தியேட்டரில் டாக்டருக்கு உதவி செய்துவிட்டு வெளியே வந்தவளுக்கு படுத்துக் கொண்டால் தேவலாம் என்றிருந்தது.
சோர்வுடன் நடந்தவள் மாடிப்படி இறங்கப் போகையில் முன்னில் படியேறி வந்து கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டதும் திகைத்தாள்.
“ஹேய் குலா…பி…! என்னை வரவேற்க முன்னாடியே வந்து நிக்கறியா…?” கேலியாய் கேட்டுக் கொண்டே படியேறியவன் அவள் சட்டென்று தலையைப் பிடித்தபடி ஒரு புறமாய் சாயவும் வேகமாய் வந்து தாங்கிக் கொண்டான்.
“சனா… என்னாச்சு மா…?” தன் நெஞ்சில் அவளை சாய்த்தபடி கேட்க, கண்ணைத் திறக்க முயன்றவள் கண்களில் அவனது முகம் அருகாமையில் தெரிய விலகி உதற நினைத்தாலும் முடியாமல் அவன் நெஞ்சிலேயே தொய்ந்து சாய்ந்தாள்.
அவளை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டவன் முன்னே நடக்க, ரஞ்சனா மயங்கி விழுவதைக் கண்ட ஊழியர்கள் சிலரும் உதவ ஓடி வந்தனர். அவளை கட்டிலில் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க உணர்வுக்கு மீண்டு விட்டாள் ரஞ்சனா. அவளது மேனியிலிருந்த சூடு காரணத்தை சொல்ல, பரிசோதித்தவன் வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கும்படி கூற விடுப்பு சொல்லிக் கிளம்பியவளை தானே வீட்டில் விடுவதாய் சொல்ல ரஞ்சனா மறுத்தும் அவன் விடுவதாயில்லை.
காரை எடுத்து வந்தவன் முன் பக்கக் கதவைத் திறந்துவிட தயக்கத்துடன் அமர்ந்து கொண்டாள். புதிதாய் வந்த அழகான டாக்டரின் கவனம் அடிக்கடி ரஞ்சனா மீது படிவதை சில பல வன்மக் கண்கள் கவனித்தே வந்தன. இப்போது அவனது காரிலேயே அழைத்துக் கொண்டு கிளம்புவதைக் கண்டு மனதுக்குள் இருந்த புகைக்கு கண் காது வைக்கத் தொடங்கினர்.
“என்னதான், மும்பைல ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்திருந்தாலும் தனக்குக் கீழே வேலை செய்யற நர்ஸு மேல அர்ஜூன் டாக்டர் கொஞ்சம் அதிகமா தான் கவனம் எடுத்துக்கிறார்… இது வெறும் அக்கறை மட்டும் தானா…?” என்று வெறும் வாயை மெல்லத் தொடங்கியது.
காரில் அமைதியாய் அமர்ந்திருந்தவளை அடிக்கடி திரும்பிப் பார்த்த அர்ஜூனின் மனமும் வேதனையில் துடித்தது.
“அமைதியாய் விதியின் போக்கில் சென்று கொண்டிருந்தவளின் வாழ்வில் நான் தேவையில்லாமல் கல்லெறிந்து விட்டேனோ… என்னால் தான் மன அமைதி குறைந்து முகம் வாடி உடல் நலிந்து போகிறாளோ…?” யோசிக்கும்போது அவன் மீதே கோபம் வந்தது.
“சனா…!”
“ம்ம்…” குனிந்தபடியே கூறினாள்.
“நான் மறுபடி உன் வாழ்க்கைல வந்து உன்னைக் குழப்பி டிஸ்டர்ப் பண்ணிட்டனா…?”
“ப்ச்… நான் தெளிவா தானே இருக்கேன்…” அவளது நிதானமான பதில் அவனது இதழில் மென்னகை கூட்டியது.
“உனக்கு என் மேல நிறைய கோபம் இருக்கும்… எதுக்கு இப்படி என் வாழ்க்கைல மறுபடி என்ட்ரி கொடுத்து இம்சை பண்ணுறான்னு கேள்வி இருக்கும்…?”
“கோபம் இல்லை, வருத்தம் இருக்கு… உங்க வாழ்க்கையை வாழாம எதுக்கு என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னு…” அவன் திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
“என்ன பார்க்கறீங்க…? நிச்சயம் உங்களால எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க முடியாதுன்னு தெரியும்…” அவள் சொல்ல கசப்பாய் சிரித்தான் அர்ஜூன்.
“என்னை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கிற சனா…”
“ம்ம்…” என்றவள் அமைதியாக அவன் தொடர்ந்தான்.
“ஆனா நான் உன்னைத் தேடி வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு…” என்றவன் காரணத்தைச் சொன்னபோது அவள் முகம் திகைப்பிலும், நன்றி உணர்ச்சியிலும் சிவந்திருந்தது.
அபார்ட்மென்ட் வாசலோடு விட்டுச் செல்லாமல் வீட்டில் விட்ட பிறகே செல்வேனென்று அவள் மறுத்தும் கேட்காமல் உடன் வந்தான் அர்ஜூன்.
லிப்டில் உயர்ந்து அவர்கள் தளத்தில் இறங்கி வீட்டுக்கு செல்ல கதவு திறந்திருக்க பேச்சுக் குரல் கேட்டது.
“எவ்ளோ நேரம் தான் டீவியே பார்த்திட்டு இருப்பீங்க, உங்களுக்காக தான் இந்த புக்ஸ் எல்லாம் லைப்ரரிக்குப் போயி எடுத்திட்டு வந்தேன் ரஞ்சு…” சொன்ன தியா கையிலிருந்த புத்தகங்களை பிரபாவிடம் நீட்ட வாசலில் நிழலாடியதைக் கண்டு இருவரும் நிமிர்ந்தனர்.
“ரஞ்சு, லீவ் போட்டு வந்துட்டியா…” பிரபஞ்சன் கவலையுடன் கேட்க ஆமென்று தலையசைத்தாள்.
“ஓ… நன்றி டாக்டர்…” என்றவனின் பார்வை மனைவியை நோக்க, “சாப்பிட்டீங்களா பிரபா…?” என்றாள் பரிவுடன்.
“இன்னும் இல்ல மா…”
“நான்தான் அவரை ஆர்டர் பண்ண வேண்டாம், இன்னிக்கு லஞ்ச் எங்க வீட்டுல இருந்து தர்றேன்னு சொன்னேன்… சரிதா ஆன்ட்டி கொடுத்தா மட்டும் தான் சாப்பிடுவீங்களா…? அவங்க ஊருக்குப் போன கேப்புலயாச்சும் நாங்களும் சேவை செய்யறோமே… மம்மி லஞ்ச் ரெடி பண்ணிட்டு இருக்காங்க…”
“ஓ… உனக்கு சேவை செய்ய அவ்ளோ பிடிக்கும்னா சனாவுக்கு கொஞ்சம் கஞ்சி காச்சிக் கொடுத்துடறியா…?” அர்ஜூன் கேட்க திகைத்தவள், “அது..வந்து எனக்கு சமையல் செய்யத் தெரியாது… ஒருநாள் சாதம் வைக்க சொல்லி ரொம்ப குழைஞ்சு போயிருச்சு, அதை மம்மி சாதம் வைக்க சொன்னா கஞ்சி பண்ணி வச்சிருக்கேன்னு திட்டினாங்க, அதை வச்சு அதான் கஞ்சின்னு தெரிஞ்சுகிட்டேன்… நான் வேணும்னா மம்மிகிட்ட சொல்லட்டுமா…?” என்றாள்.
“பாவம்…! ஆன்ட்டிக்கு எதுக்கு சிரமம் தியா, கஞ்சி தானே… நான் ஹெல்ப் பண்ணறேன்…” என்ற அர்ஜூன்,
“உங்க கிட்சன் யூஸ் பண்ணிக்கலாம் தானே பிரபா…?” எனக் கேட்க தன்னால் முடியாததை அவர்கள் தங்களுக்காய் செய்து உதவ வரும்போது இவனால் மறுக்கவா முடியும். தலையாட்டினான்.
“நான் கொஞ்சம் படுக்கறேன்…” ரஞ்சனா அறைக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் அரிசி எங்கே என்று கண்டுபிடித்து ஏதேதோ பேசியபடி கஞ்சி தயாரிக்க, பிரபஞ்சன் தியா கொடுத்த புத்தகங்களில் பார்வையைப் பதித்திருந்தான். ஆனாலும் கவனம் அடிக்கடி அர்ஜூனிடம் சென்று வந்தது.
ஸ்மார்ட்டாய் இருந்தவன் இயல்பாய் தியாவிடம் அவளது அண்ணனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். தியாவிடம் அவளது அண்ணனும் இவனைப் பற்றி முன்பே சொல்லியிருக்க வேண்டும். அவளும் நன்றாகப் பேசினாள்.
ஒரு டாக்டர் இங்கே வந்து இத்தனை உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன… ரஞ்சுவிற்கும், இவனுக்கும் நடுவில் இருப்பது வெறும் நட்புதானா…?” யோசனையுடன் புத்தகத்தை விரித்தவன் விழிகளில் அந்த வரிகள் விழுந்தன. அது அவனுக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது.
காதலுக்கும் நட்புக்கும் நடுவில் மிகச்சிறு இடைவெளியே…
நட்பு, நேசம், காதல் என்று உங்களுக்கு ஏற்றாற்போல எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள். என் தேவையெல்லாம் பிடித்தவற்றை, ரசித்தவற்றை சட்டென பகிர்ந்திடக் கூடியதொரு புரிதலான உறவு மட்டுமே… உறவுக்கான பெயர்கள் அல்ல…!
“எத்தனை அழகான வரிகள்…! இவர்கள் இருவருக்கு நடுவிலும் இப்படிப்பட்ட உறவுதானோ…” யோசித்தவன் மனதில் ஒரு தெளிவு வந்திருந்தது.