இராஜ பவனி 10

என்னத்தை பேசுறீங்க..? இதுக்கும், அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..? இப்படி எல்லாம் வார்த்தைகளை விடாதீங்க..” குகன் கோபத்துடன் வைதேகியிடம் பேச, அவருக்கும் பேசிவிட்ட வார்த்தைகள் புரிந்தது

மகனை பார்க்க, அவன் மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தான். அண்ணனை அப்படி பார்த்த சாருவிற்கு அழுகை ஒருபக்கம், கோவம் ஒரு பக்கம் என்று வைதேகி, குகனை முறைத்தவள்

இப்போ சந்தோஷமா உங்களுக்கு..? இப்படி எல்லாம் பேசியே ஆகணுமா, நீ  வரவர  என் கல்யாணத்தை வச்சு நிறைய பேசுறம்மா, எனக்கு பிடிக்கல, யாரும் என்னை கட்டிக்கணும்ன்னு நான் தவம் நிக்கல, காலம் பூரா என் அண்ணா என்னை தங்கமா வச்சுக்கும், யாரோ என்னை வேணாம்ன்னு சொன்னதுக்காக எல்லாம் நீ என் அண்ணாவை பேசாத..” அம்மாவை பார்த்து வெடித்தாள் மகள்

அதில் குகன் தான் நொந்து போனான். “ம்ப்ச்.. சாரு.. பேசாத..” தனா தங்கையை கண்டித்தான்

நான் பேசுவேண்ணா, இவங்களுக்கும், இவங்க அண்ணா மகனுக்கும் நாம என்ன அவ்வளவு சீப்பா போயிட்டமோ..? இந்த துரை என்னை வேணாம்ன்னு சொல்வாராம், அதுக்கு அவங்க அத்தை உன்னை பேசுவாங்களாம், நல்லா இருக்கே கதை..” சாரு இருவரையும் பார்த்து கை வீசி பொரிந்தாள்.  

சாரு..” குகன் பேச வர

நீங்க பேசாதீங்க மாமா, நீங்க என்கிட்ட பேச எதுவுமில்லை..”  என்று கை நீட்டினாள் மாமன் மகள்

சாரு.. அவன்கிட்ட இப்படி பேச கூடாது..” தனா சொல்ல, சாரு முகம் திருப்பினாள். எங்கோ ஆரம்பித்த பேச்சு இப்படி முடிந்ததில் தனாவின்  தொண்டை குழி ஏறி இறங்கியது

அப்படி கூட நாங்க காதலிக்கலையே..” உள்ளுக்குள் என்னமோ மிகவும் தளர்ந்த உணர்வு

தனா.. அத்தை எதோ கோவத்துல பேசிட்டாங்க, நீ சாப்பிடுடா..” குகன் அவன் தோளை தட்டி ஊக்கினான். அவனுக்கு தான் தொண்டை இறுக்கி கொண்டிருக்கிறதே. எங்கு சாப்பிட..? 

தனா..”  குகன் மீண்டும் சொல்ல, தனா மறுப்பாக தலையாட்டினான். அவனால் பேச முடியவில்லை. ஏதோ அடைத்த தவிப்பு. இவர்கள் தானே அவனுக்கு. இவர்கள் மேல் வைத்த பாசம் நொடியில் கேள்வி குறியாகிவிட, தாங்க முடியவில்லை அவனுக்கு

அவனின் வாழ்க்கையின் பல முடிவுகள் குடும்பத்தை கொண்டே, அனுவை  கொண்டே  தான் எடுத்திருக்கிறான். எடுக்கிறான். ஊர் பற்று, குடும்ப பற்று, ம்ம்.. காதல் பற்றும் உள்ள சராசரி ஆண் தான் தனஞ்செயன். அவனுக்கு அழுகை வரும், உள்ளம் துடிக்கும். கோவம் வரும். சண்டையிடுவான். அடுத்த சில நிமிடங்களில் சமாதானமும் ஆகிவிடுவான்.   

அதற்காக இப்படி ஒரு வார்த்தை, அதுவும் அவனின் அம்மாவே என்பது தான் அவனை மிகவும் பாதித்தது. ஏன் குருமூர்த்தி இதை விட அதிகம் பேசியிருக்கிறார், இன்னும் பேசி கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரை பற்றி தெரியும் என்பதால் வலித்தாலும் ஒதுக்க பழகியிருந்தான். இது முடியவில்லை. அம்மா முகம் பார்க்கவில்லை மகன்

“ண்ணா.. நீ சாப்பிடு, இவங்க தேவையில்லாம பேசினத்துக்கு நீ ஏன்  சாப்பிடாம இருக்கணும்..?” சாரு அண்ணனுக்கு புதிதாக சப்பாத்தி வைத்தாள்

வைதேகிக்கு மகள் வார்த்தையில் மீண்டும் கோவம் வர, “எதுடி தேவையில்லாத பேச்சு..? உன் வாழ்க்கைகாக தான் நான் பேசிட்டு இருக்கேன்..” மகளிடம் கோவப்பட்டார்

என் வாழ்க்கை பத்தின அக்கறை என் அண்ணாக்கும் இருக்கு, நீ தான்ம்மா உன் புருஷன் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிருக்க..” சாரு சொல்லிவிட, வைதேகிக்கு கண்கள் கலங்கிவிட்டது

சாரு..” குகன் அவளை அதட்ட

என்ன மாமா..? உன் அத்தையை சொன்னதும் வலிச்சிருச்சோ, இப்படி தான் என் அண்ணாக்கும் இருக்கும்..” என்றாள் அவள் நேராக

ச்சு.. சாரு பேசாதயேன், என்ன பேசிட்டிருக்கன்னு புரியுதா உனக்கு..?”  தனா குரலே ஓய்ந்து போய் வந்தது. சில நொடி கனத்த அமைதி. குகனுக்கு எல்லாம் தன்னால் தானோ என்று வருத்தம், சங்கடம்

தனா எழுந்து கொண்டவன், “நீ சொன்னது சரி தான்மா, நான் சுயநலமா யோசிச்சேன் தான், எனக்கு உண்மைக்கும் சாருவுக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்க பயம், யோசனை. எங்க அவன்  நூத்துல ஒரு பங்கா உங்க புருஷன் மாதிரி இருந்துட்டா என்ன பண்ணங்கிற சுயநலத்துல தான் நான் குகனை அவளுக்கு நினைச்சேன், இவன்னா கண்ணை மூடிட்டு கொடுக்கலாம், ரொம்ப நல்லவன், சாருவை நல்லா வச்சுப்பான்னு தான் கேட்டேன், என்னை பத்தி நான் யோசிக்கல..”  வைதேகி பார்க்காமல் சொன்னவன்

சாரிடா குகன்.. இது இப்படி ஆகும்ன்னு நினைக்கலை..” என்று அவனிடமும் சொன்னவன், ரூம் சென்றுவிட்டான். சாரு இருவரையும் முறைத்து செல்ல, குகனுக்கு ஒரு மாதிரியாகி போனது. அங்கேயே அமர்ந்து கொண்டான். வைதேகிக்கு கடைசியாக மகன் சொல்லி சென்ற வார்த்தைகள் உண்மை என்று புரிய, மனம் கலங்கி போனது.

மறுநாள் தனா நேரமே  வெளியே கிளம்ப, “எங்கடா போற..? நானும் வரேன் இரு..” குகன்  வந்தான்

இல்லை குகன், வசூல் பண்ண பணம் உள்ள இருக்கு பாரு, நீ கணக்கு பார்த்து அவர்கிட்ட கொடுத்துட்டு வா.. நான் கடைக்கு போறேன்..” என்றவன் கிளம்பிவிட்டான்

சாரு உள்ளே வந்த குகனை பார்த்து முகம் திருப்பி கொண்டு சென்றாள். “அண்ணனும், தங்கச்சியும் என் உயிரை வாங்குறாங்க..” குகன் உள்ளுக்குள் நொந்து போனான். அன்று மட்டுமில்லை அடுத்து வந்த நாட்களும் இப்படியே தான் சென்றது

தனா வைதேகியிடம் முன் போல  பேசவில்லை. சாரு குகனை பார்த்தாலே முகம் திருப்பி கொண்டு சென்றாள். வைதேகிக்கு மகன் விலகல் வருத்தத்தை கொடுத்தாலும்குகன் விஷயத்தில் அதே நிலையில் தான் இருந்தார். வீட்டில் முன் போல கலகலப்பு இல்லை

தனா காதல் பிரச்சனையில் கொஞ்சம் அடங்கிய வீடு இப்போது மொத்தமாக அடங்கி போனது. ஆளுக்கொரு இடமாக இருந்தனர். யாரும் யாரையும் நெருங்க வில்லை. குருமூர்த்தி கூட கவனித்து மனைவியிடம் கேட்கும் அளவு தான் இருந்தனர்

இந்நிலையில் திருவிழா வேறு நெருங்க, தனா முன் போல தந்தைக்கு உதவ என்று கோவில் சென்றான். அங்கு செல்லவும் அனு தான். நேரே துர்க்கை அம்மன் முன் நின்றான். வேண்டினான். மனமுருக  வேண்டுதல் வைத்தான்.

குருமூர்த்தி விஷயம் கேள்விபட்டு, வீட்டிற்கு வந்தவர், “முன்ன நீ செஞ்ச உதவியே போதும், இனியும் அறுக்க என்கிட்ட கழுத்து இல்லை, ஏற்கனவே நடுத்தெருவுல வச்சு அறுத்திட்ட, ஊர் விஷயத்தை எனக்கு பார்த்துக்க தெரியும்..”   எப்போதும் போல கடும் வார்த்தையில் மகனை வாட்டி சென்றார்

“தனா நீ வா நாம கடைக்கு போலாம்..” இறுகி போய் நின்றவனை குகன் கூப்பிட, தனாவோ குகனை ஒரு பார்வை பார்த்து தனியே கிளம்பி சென்றான்

முன்போல் இல்லாமல் ஓர் வட்டத்துக்குள் தன்னை தள்ளி வைக்கும் தனா மேல் குகனுக்கு எக்கச்சக்க கோவம்சாருவும் அவனிடம் மாமா என்று உரிமையாய் பழகாமல், தள்ளி நிற்க, பொறுக்க முடியாமல் ஓர் நாள் காலை

உங்க பிள்ளைங்க என்னை ரொம்ப படுத்துறாங்கத்தை, ஒழுங்கா முன்ன போல இருக்க சொல்லுங்க, வேணும்ன்னே என் உயிரை வாங்குறாங்க..”  வைதேகியிடம் பேச,  

உங்க உயிரை வாங்க எங்களுக்கு என்ன  என்ன அவசியம்..?” சாரு கேட்டு சண்டைக்கு நின்றாள். தனா அப்போதும் அமைதியாக இருந்தான்

அப்பறம்  ஏன் முன்ன மாதிரி பேசாம எங்களை இப்படி படுத்துறீங்க நீயும், உன் அண்ணனும்..?”  குகனும் கோவப்பட்டு கேட்டான்

ஏன் பேசணும்..? பேச முடியாது.. நானும், என் அண்ணாவும் தான் பொல்லாதவங்க ஆச்சே..”  என்றாள் சாரு

ஏய் நாங்க எப்போடி அப்படி சொன்னோம்..?” குகன் கேட்க

உங்க அத்தை அப்படி தான் பேசினாங்க, நீங்களும் என்னை வேண்டாம்ன்னு தானே  சொல்லிட்டீங்க, அப்போ அப்படி தானே..?” என்றாள் சாரு

இவ இதை விட மாட்டாளா..? குகன் அவளை முறைக்க, சாரு ஏன் விடணும் என்று புருவம் தூக்கினாள்

தனா.. என்னடா இதெல்லாம்..?” குகன் அவன் முன் நின்றான்

அவ சும்மா பேசிட்டு இருக்காடா, நீ விடு..” அவன் அமைதியாக சொல்லி சென்றுவிட, வைதேகிக்கோ மகள் மனதில் குகன் மேல் ஏதும் எண்ணம் இருக்குமோ என்ற யோசனை. இரவு கணவர் வருமுன், மகளும், மகனும் ஹாலில் இருக்கும் போது மகன் முன் வைத்து மகளிடம்  இதை நேரடியாக கேட்கவும் செய்தார்

இருந்தா என்ன செய்யலாம் இருக்கீங்கமா..?” மகள் மறுகேள்வி கேட்டாள்

ம்ப்ச்.. சாரு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி..” வைதேகி அதட்ட

அப்படி எல்லாம் உன் அண்ணா மகன் ஒன்னும் ஆணழகன் இல்லை, இங்க யாரும் அவன் மேல் ஏங்கி போயும் இல்லை..” என்றாள் அவள்

அப்புறம் எதுக்குடி காலைல அதை பேசின..? இதெல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா..? உன் அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சது அவ்வளவு தான்..”  அன்னையாக  கண்டித்தார்

ம்மா.. நீ முதல்ல அண்ணாகிட்ட அப்படி பேசினது தப்பு, உன் அண்ணன் மகன் அப்பாவுக்காக என்னை வேணாம்ன்னு சொன்னதும் தப்பு, இது தான் அண்ணாக்கு உங்க மேல கஷ்டம், எனக்கு கோவம், நான் பேசினேன்..” என்றாள் மகள்

சாரு நீ ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை, உன் அப்பாவை பத்தி உனக்கு நல்லா தெரியும், முதல்ல குகன் அவருக்கு மருமகனா வரதையே அவர்  விரும்பமாட்டார், நிறைய பிரச்சனை பண்ணுவார், அப்படியே உன் அண்ணா  இதை செஞ்சுட்டாலும், குகன் நம்ம வீட்ல ஒரு வாய் சாப்பாடு கூட மாப்பிள்ளையா மரியாதையா சாப்பிட முடியாது.. புரிஞ்சுக்கோங்க, நம்மால அவன் ஏன் கஷ்டப்படணும் சொல்லுங்க..” வைதேகி மகனுக்கு புரிய வைக்க முயன்றார்

மகனோ, “அப்படி நான் விட்டுடுவேனாம்மா..?” என்று அம்மாவை நேராக பார்த்து கேட்டான். “சொல்லுங்கம்மா.. என் மச்சானை அப்படி அவர் நடத்த நான் விடுவேனா, அவனுக்கான மரியாதையை நான் பார்த்துக்க மாட்டேனா, இவ்வளவு தான் உங்களுக்கும், அவனுக்கும்  என் மேல நம்பிக்கையா..?” தனா அழுத்தமாக கேட்க, வைதேகி என்ன பதில் சொல்வார்..? 

“ஆனாலும் இதுக்கு எல்லாம் என்ன அவசியம் தனா, குகனை விட நல்ல மாப்பிள்ளையா சாருக்கு நாம பார்க்க மாட்டோமா சொல்லு..” மகனிடம் கேட்டார்

ம்மா.. இதையே தான் நானும் கேட்கிறேன், கையில நல்ல மாப்பிள்ளையை வச்சுக்கிட்டு நான் ஏன் வெளியே என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கணும்..? அந்த ஒரு மனுஷருக்காக நாம எத்தனை தான் விட்டுக்கொடுக்க, தள்ளி வைக்க, இது என் தங்கச்சி வாழ்க்கை, இதுல அவர் வெட்டி வீராப்பை பார்க்க முடியாது..”  தனா தீவிரமாக சொல்ல, வைதேகிக்கு கிலி பிடித்தது

தனா என்ன பேசுற நீ..? ஏற்கனவே உன் விஷயத்துல என்ன ஆகுமோன்னு நான் தினமும் பயந்துட்டு இருக்கேன், இதுல சாருவுக்கும் இப்படின்னா எப்படிடா..?”

ம்மா.. என் விஷயத்தை விடுங்க, என் தலையெழுத்து எப்படியோ அப்படி நடக்கட்டும், சாருக்கு மட்டும் பாருங்க நீங்க..” என்றான் மகன்.

“இதுக்கு முதல்ல சாருக்கு, குகனுக்கு  சம்மதம் இருக்கனும் இல்லை..”