யாக்கூப் சுவரை பார்த்தபடி யோசித்துக்கொண்டு இருக்க, கிட்டாரை தட்டிக்கொண்டிருந்த இவான் “நான் செய்றது சரியா?” என கேட்டான்.

தலையாட்டிய யாக்கூப் “இப்போ இதையே மாத்தி செய்யணும்” என சொன்னவன் “அதுக்கு முன்னே நான் பாத்ரூம் போயிட்டு வரேன்” என்றான்.

“சரி மாஸ்டர்” என இவான் சொல்ல, எழுந்து கதவருகே வந்த யாக்கூப் “உன் சித்தி ரூம் எங்க இருக்கு? நான் அவங்க கிட்டே ஒன்னு கேட்கணும்” என்றான்.

“வலது பக்கம் இருக்கு” என இவான் காட்ட, வில்லங்கமாக சிரித்தபடி கதவை மூடிவிட்டு அவன் வெளியே செல்ல, இவான் பயிற்சியை தொடர்ந்தான்.

——-

“ஏன் நம்ப மாட்டீங்க? சரியான காரணம் இருக்கா உங்கட்ட? அவர் எல்லார்கிட்டயும் கனிவா நடந்துக்கறார். மரியாதையா பேசுறார்”

மறுபடியும் வில்லில் கவனம் சென்றது.

“உங்க இருண்ட உலகம் போல எல்லாரும் இருக்க மாட்டாங்க. கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க முயற்சி செய்ங்க”

“என் வாக்கை நிறைவேத்துறேன். அதுக்கு மேலே எதுவும் எதிர்பார்க்காதே. வீட்ல எல்லாரும் அவனை பாராட்டறாங்கன்னு என்னால அதை செய்ய முடியாது” என்று சொன்னவன் வில்லை வைத்துவிட்டு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.

———

மெல்ல ருஹானாவின் அறைக்கு வந்த யாக்கூப் பரவசமாக ஒவ்வொன்றாக சுற்றி பார்த்தான். அவள் அலமாரியை திறந்து சட்டை ஒன்றை எடுத்து மென்மையாக தடவினான்.

அவள் கட்டிலுக்கு வந்து அமர்ந்தவன் தலையணையை எடுத்து முகம் புதைத்தான். அவள் படுக்கும் படுக்கையையே ஆவலுடன் உற்று பார்த்துக்கொண்டு நின்றான்.

கோபமாக தடதடவென்று படிக்கட்டில் ஏறி வந்த ஆர்யன் அவன் அறைக்கு செல்ல போனவன், ருஹானாவின் அறை சரியாக மூடப்படாததை பார்த்து அங்கே வந்தான்.

கதவை திறந்து உள்ளே வந்தவன் சந்தேகமாக அறையை சுற்றி பார்த்தான். ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்த்தான். பின் கதவை இழுத்து மூடி வெளியே செல்ல, கதவுக்கு பின் மறைந்திருந்த யாக்கூப்க்கு உயிர் மீண்டது.

சிறிது இடைவெளி கொடுத்து மெல்ல கதவை திறந்து எட்டிபார்த்தவன் யாரும் இல்லையென உறுதி செய்துக்கொண்டு அடியெடுத்து வெளியே வந்தான்.

இரண்டு படிக்கட்டுகள் இறங்கிய ஆர்யன் செல்பேசியை எடுக்க மீண்டும் அவன் அறை நோக்கி வர, ருஹானாவின் அறை அருகே நடுங்கியபடி நின்ற யாக்கூப்பை பார்த்துவிட்டான்.

கண்கள் அனலை கக்க “இங்க என்ன செய்றே?” என கேட்டான்.

“பாத்ரூம் தேடி வந்தேன். வழி தவறிட்டேன்” என அவன் சொல்ல, கிட்டார் சரத்தை தட்டிக்கொண்டே இருக்கும் அவன் இருவிரல்களும் சரம் இல்லாமலும் ஆடிக்கொண்டிருப்பதை ஆர்யன் பார்த்தான்.

“விருந்தாளிகள் பாத்ரூம் கீழே ஹால் பக்கத்துல இருக்கு” என ஆர்யன் சொல்ல, அவனுக்கு நன்றி சொல்லி யாக்கூப் படிக்கட்டில் வேகமாக இறங்கினான்.

ஆர்யன் அவனை நம்பாமல் மேலே இருந்து எட்டி பார்த்தான். படிக்கட்டின் மறைவில் நின்று அவன் மூச்சிரைக்க, திரும்ப மருத்துவரின் அழைப்பு வந்துக்கொண்டே இருந்தது. அதை புறக்கணித்து செல்பேசியை பையில் போட்டுக்கொண்டவன் ஆழ மூச்செடுத்தான். 

——–

“இப்போ நான் வாசிக்க வாசிக்க அது என்ன சத்தம்னு நீ சொல்லணும்” என யாக்கூப் சொல்ல எதிரே இருந்த ருஹானா ஆவலோடு பார்க்க, இவான் சரியாக ராகம் பாடினான்.

“வெரிகுட்! மூணும் சரியா சொல்லிட்டே” என பாராட்டிய யாக்கூப் “இப்போ புக்ல இருந்து அடுத்ததை படிக்கலாம்” என்று சொல்லி தன் பையை எடுத்து தேடினான்.

“அடடா! புக்கை கீழே வச்சிட்டேன் போல”

“நான் போய் எடுத்துட்டு வரேன், மாஸ்டர்” என இவான் கீழே ஓடினான்.

“நான் உங்ககிட்டே ஒன்னு கேட்கலாமா, ருஹானா மேம்? நீங்க எதும் வருத்தமா இருக்கீங்களா? இவான் முன்னாடி அதை காட்டாம இருக்கீங்க”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லயே”

“ஆர்யன் சார் உங்களை திட்டினாரா?”

ருஹானா ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள்.

“அவருக்கு என்னை பிடிக்கல. தெளிவா தெரியுது. என்னால தான் நீங்க…”

“இல்லல்ல.. உங்களால இல்ல… நீங்க தப்பா புரிஞ்சிக்காதீங்க. அவர் இவானை பாதுகாப்பா வளர்க்கிறார். அதனால தான் அவனை சுற்றி நடக்கற எல்லா நிகழ்வுலயும் கவனமா இருக்கார்”

“அது தப்பு இல்ல. அவர் வீட்டு குழந்தையோட பாதுகாப்பு முக்கியம் தான். இருந்தாலும் அவனோட ஆசைகளும் நிறைவேறனும் இல்லயா? அவரோட வளர்ப்பு முறை வித்தியாசமா இருக்கு”

ருஹானா தலைகுனிந்து கொண்டாள்.

“நீங்களும் தான் இவானோட நல்லதை நாடுறீங்க. ஆனா நீங்க ரொம்ப நட்பா இருக்கீங்க. பரோபகாரமும், இரக்கமும் உங்களுக்கு நிறைய இருக்கு”

லேசாக சிரித்தவள் “அப்படி இருக்க தான் நான் நினைக்கிறேன். இவானுக்காக… அவன் என்னோட அக்காவோட வாரிசு. அவனோட சித்தப்பாவும் நானும் அவனுக்காக எதுவும் செய்வோம்” என்றாள்.

“இவானை பெத்தவங்க?”

“துரதிர்ஷ்டவசமாக அவங்களை நாங்க இழந்துட்டோம்”

“நான் வருத்தப்படுறேன், ஆனா நீங்க சித்தியா கிடைச்சது இவானோட  அதிர்ஷ்டம்”

செல்பேசி அடிக்க அவன் அதை எடுக்கவில்லை. “எடுத்து பேசுங்க” என ருஹானா சொல்லியும் “அது அவ்வளவு முக்கியம் இல்ல” என மறுத்து விட்டான்.

இவான் புத்தகத்தோடு வர பாடம் தொடர்ந்தது.

—— 

படிக்கட்டில் கூடவே இறங்கிய ருஹானா இசை ஆசிரியனுக்கு நன்றி சொல்ல, அவன் “எனக்கு தான் இதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்த வகுப்புக்கு சீக்கிரம் கூப்பிடுங்க” என்று உண்மையை சொன்னான்.

“கண்டிப்பா! நான் போன் செய்றேன். சாரா அக்கா வீட்டுக்கு எடுத்துட்டு போக உங்களுக்கு உணவு எடுத்து வச்சாங்க. நான் அதை போய் எடுத்துட்டு வரேன்” என்று அவள் உள்ளே செல்ல, அவன் செல்பேசி இசைத்தது.

யாரும் சுற்றி இருக்கிறார்களா என பார்த்துக்கொண்டு போனை எடுத்தவன் பல்லை கடித்துக்கொண்டு பேசினான்.

“எத்தனை முறை சொல்றது, எனக்கு போன் செய்யாதீங்கன்னு”

“யாக்கூப்! இது மிகவும் அபாயமான நேரம். சிகிச்சையையும், மாத்திரை எடுத்துக்கறதையும் நீங்க நிறுத்தினீங்கன்னா விளைவுகள் விபரீதமா போகும். ஒரு டாக்டரா நான் சொல்றதை கேளுங்க. தெரபி தொடர்ந்து எடுத்துக்கங்க. இன்னும் நீங்க என்னோட பொறுப்புல தான் இருக்கீங்க”

“உங்களுக்கு இன்னும் புரியலயா? எனக்கு இனிமே எந்த சிகிச்சையும் வேணா. மருந்தும் வேணா. டாக்டரும் தேவையில்ல. என் தெரபி எனக்கு கிடைச்சாச்சி. நான் சொன்னேன்ல என்னோட ஷெனாஸ் இன்னொரு உடல் எடுத்து என்கிட்டே வந்துட்டா” 

ஆர்யன் மாடிப்படி வளைவில் வந்து நின்றான்.

“என்னை இனியும் தொந்தரவு தராதீங்க. போதும். அதையே திரும்ப திரும்ப கேட்க எனக்கு பொறுமை இல்ல. என்னை விட்டுடுங்க. என் வேலையில தலையிடாதீங்க. எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்காதீங்க” 

அனைவரிடமும் கனிவாக பேசுபவன் போனில் கடுமையாக பேசுவதை கண்ட ஆர்யன் இன்னும் சந்தேகம் கொண்டான்.

ருஹானா உணவு டப்பாவை கொடுக்க யாக்கூப் நன்றி சொல்ல, ஆர்யன் முறைப்பாக மேலே நிற்பதை ருஹானா பார்த்தாள். அவளை பார்த்ததும் அவன் நகர்ந்து செல்ல, அவள் ஆசிரியனுக்கு கதவு திறந்து வெளியே அனுப்பி வைத்தாள்.

——–   

“அவனை பற்றி இன்னும் ஆழமா விசாரி ரஷீத்! சின்ன சந்தேகம் இருந்தாலும் விட்டுடாதே. எங்க பிறந்தான்? எங்க வளர்ந்தான்? எங்க படிச்சான்? எங்க வேலை பார்த்தான்? கல்யாணம் ஆனவனா? எல்லாம் கண்டுபிடி” ஆர்யன் போனில் உத்தரவிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு பார்வையில் யாக்கூப் சரியில்லை என புரிந்துக்கொண்டவன், இன்னமும் கரீமாவையும் சல்மாவையும் எப்படி தான் அறிந்து கொள்ளாமல் இருக்கிறானோ?

ஆரம்ப காலங்களில் தாங்கள் கஷ்டப்படும்போதிலிருந்து கூடவே இருப்பவள் கரீமா என்ற காரணமா? பெற்றோரை பிரிந்த சோகத்தை தாங்க இயலாத அண்ணனை அவள் நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்ற நம்பிக்கையாலா?

ஆர்யன் கண்களில் மண்ணை தூவும் அளவிற்கு கரீமா புத்திசாலியாக இருப்பதாலா? 

ஏதேதோ காரணங்கள்!! ஆனால் உண்மை எப்படியும் ஒரு நாள் வெளியே வரத்தான் செய்யும். அதுவரையில் சகோதரிகள் செய்யும் அனர்த்தங்கள்? கடவுளுக்கே வெளிச்சம்!!

“சரி ஆர்யன்! நான் இப்பவே அதிக ஆட்களை அனுப்புறேன். விவரமா தேட சொல்றேன்”

ரஷீத் என்ன தான் விசாரித்தாலும் எதுவும் கரீமாவிடம் நெருங்குவதே இல்லை. ரஷீத்தை விட கரீமாவின் ஆள் திறமையானவன் போல.

“ஆனா ஆர்யன் இவ்வளவு சந்தேகம் இருந்தால் அவனை எதுக்கு வேலைக்கு வைக்கணும். வெளியே அனுப்ப வேண்டியது தானே?”

“இல்ல.. இப்போ இல்ல.. நீ விசாரி” 

இசையாசிரியனை என்ன சொல்லி வெளியே அனுப்புவது? அப்புறம் ருஹானாவை எப்படி சமாளிப்பது? ஆர்யன் தலைவேதனை அவனுக்கு தான் தெரியும். அதை எப்படி ரஷீத்திடம் சொல்வது? ஒரு பெண்ணிடம் தன் பாஸ் பயப்படுகிறானே என அவன் நினைத்துவிட்டால்?

போனை தூக்கி மேசையில் போட்டவன் கதவு தட்டப்படும் ஓசையில் திரும்பினான்.

வேகமாக உள்ளே வந்த ருஹானா “நேத்து நாம ஒரு பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனா இன்னைக்கு நீங்க அதுக்கு எதிரா நடந்துக்கிட்டீங்க” என்று பொரிந்தாள்.

பதில் சொல்லமுடியாமல் ஆர்யன் அவளை பார்க்க “இது சரி வராது. இதை வேற விதமா தான் நடத்தனும்” என சொன்னவள் மேசையில் இருந்த நோட்டில் எழுத ஆரம்பித்தாள்.

“என்ன செய்றே?” என அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் எழுத, இத்தனை நேரம் உடலும் மனமும் இறுக்கமாக இருந்தவனின் உடல் மொழியும், குரலும் இதமாக மாறியது. 

அவள் எழுதுவதை அவளை நெருங்கி அவன் படிக்க “இந்த சண்டை, போராட்டம், பதட்டம், உளைச்சல்… எல்லாம் போதும். எனக்கு வேற வழி தெரியல. இதுக்கெல்லாம் இதான் முடிவு. நம்ம ஒப்பந்தத்தை எழுதி வச்சிக்குவோம்” என தொடர்ந்து எழுதினாள்.

இன்னும் அருகில் வந்தவன் எழுதும் அவள் கையை பேனாவோடு பிடித்துக்கொண்டு “ஓகே! நீ சொல்றது தான் சரி. இனி சண்டை இல்ல. கோபம் இல்ல. என் சத்தியத்தை நான் காப்பாத்துறேன்” என்றான், மனம் இளகி.

ருஹானா கையில் இருந்து பேனாவை நழுவ விட்டவள், கையை மெதுவாக அவன் கையிலிருந்து உருவிக் கொண்டாள். தன் கையை எடுத்துக்கொண்டவன் அவள் அருகாமை விட்டு அகலவில்லை.

“மிஸ்டர் யாக்கூப் பற்றி நீங்க வீணா கவலைப்படாதீங்க. அவர் நல்லவர்” என அவள் சொன்னதும் இளகியது இறுக முகமும் கடுத்தது.

“குட்நைட்!’ என அவள் சொல்லவும், விலகி அவள் செல்ல வழி விட்டான்.

———–

தேநீரை பருகியபடி தன் அறையில் கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த  சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த ருஹானாவால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஏதோ சஞ்சல உணர்வு தோன்ற நிமிர்ந்து அமர்ந்தாள். பின் முயன்று படிப்பதில் கவனத்தை திருப்பினாள்.

———

யாக்கூப் தன் வீட்டில் மடிக்கணினி முன் அமர்ந்து அங்குமிங்கும் திரும்பாமல் முகத்தில் புத்தொளியுடன் திரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஷெனாஸ்! நான் இப்பவே உன்னை அதிகமா மிஸ் செய்றேன்!” என பெருமூச்சு விட்டபடி அவன் பார்த்துக்கொண்டிருந்தது, அர்ஸ்லான் மாளிகையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த ருஹானாவைத்தான்.

அவள் மேசையில் அவன் மறைவாக வைத்துவிட்டு வந்த பேனா தனக்கு எதிரே இருப்பதை அவனுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

(தொடரும்)