மனநல மருத்துவரிடம் ‘தன் காதலி கிடைத்துவிட்டாள்’ என ருஹானாவை மனதில் நிறுத்தி பேசிவிட்டு உள்ளே வந்த யாக்கூப் “என்னோட மாணவன் ஒருத்தன் வகுப்புக்காக பேசினான்” என்று ருஹானாவிடம் சொன்னான்.
ருஹானா தலையசைக்க, இவான் அருகே அமர்ந்தவன் “பாடம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க இவானும் தலையாட்டினான்.
“முதலில் ஒரு பாட்டுல இருந்து ஆரம்பிக்கலாம். அப்போ தான் சத்ததோட வேறுபாட்டை நீ புரிஞ்சிக்குவே!” என யாக்கூப் சொன்னதும், இவான் “அப்போ என் சித்தி பாடுவாங்க” என்று வேகமாக சொன்னான்.
“நான் பாடக்கூடாது அன்பே! நீ தான் பாடனும்”
“ஆனா சித்தி உங்க குரல் தான் அழகா இருக்கும்” என்று சொன்னவன் யாக்கூப்பிடம் திரும்பி “என் சித்தி எனக்காக நிறைய பாட்டு பாடுவாங்க” என்றான்.
புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை காட்டிய யாக்கூப் “அப்படின்னா நம்மை ஏமாற்றாமல் உன் சித்தி நமக்காக ஒரு பாட்டு இப்போ பாடுவாங்க” என்றான்.
“இல்ல.. முடியவே முடியாது” என ருஹானா மறுக்க “சித்தி! ப்ளீஸ்!” என இவான் வற்புறுத்த “இவானோட முதல் பாடத்துக்கு நீங்க ஆதரவு தரணும் இல்லயா!” என கேட்ட யாக்கூப் “அதோட உங்க இனிய குரல் கேட்க நானும் ஆசையா இருக்கேன்” என்றான்.
தந்தையின் அரவணைப்பில் கூட்டுக்கிளியாய் வளர்ந்த ருஹானாவிற்கு யாக்கூப்பின் தவறான எண்ணங்களை கண்டுகொள்ள முடியவில்லை. மற்றவர்களிடம் நல்லதை மட்டுமே காணும் அவளுக்கு, அவர்களின் உள்மன விகாரங்கள் கண்ணிற்கு தெரிவதில்லை.
ஆர்யன் முகம் சுருங்க, “வேற எதும் வேணுமா, சார்?” என ஜாஃபர் கேட்க ஆர்யன் இல்லையென தலையாட்ட, ஜாஃபர் சென்றுவிட்டான்.
பார்த்துக்கொண்டிருந்த அலுவலக கோப்பை பட்டென்று மூடியவன், காபி கோப்பையை கையில் எடுத்தான்.
அப்போது தேன்சொட்டும் குரலில் ருஹானா பாடும் குரல் கேட்க, கோப்பையை கீழே வைத்துவிட்டு பாட்டை கேட்டுக்கொண்டே மெல்ல கீழே இறங்கினான்.
ஓ.. பொன் அன்னமே !
என் கூடு செல்வாயோ !
இனிக்கும் சர்க்கரையிடம் கூறு
சிலுப்பிய பாலாடையிடம் கூறு
தித்திக்கும் தேனிடம் கூறு
என் சிறகுடைந்து போனதை
என் இறகு கனத்து போனதை
ஆர்யன் மாடிப்படி கீழே இறங்கி கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெய்மறந்து நிற்க, சமையலறை பக்கம் நின்ற சல்மா ருஹானாவின் இனிமையான பாடலையும், அதில் ஆர்யன் சொக்கி நிற்பதையும் கண்டு கடும் கோபத்தில் பொசுங்கி நின்றாள்.
அன்பே என் அன்பே !
யாரேனும் என்னை கேட்டால்
சந்தோசத்தை தொலைத்துவிட்டேன்
என் முகம் வெளுத்துவிட்டேன்
என்று சொல்லிவிடு என் அன்பே !
இவானுக்கு அந்த நாட்டுப்புறப் பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் சித்தியின் வசீகர குரலில் புன்னகையுடன் அவளை பார்த்தபடி இருக்க, யாக்கூப் அவள் பாடலுக்கேற்ப கிட்டாரை வாசித்துக்கொண்டே அகமகிழ்ந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
என் பொன் அன்னமே !
நீ காற்றில் பறந்து செல்வாயே
சிறகுடைந்த நான் இங்கு
சிறைப்பட்டு போனேனே
அன்பே என் அன்பே !
அவளின் குரல் ஆர்யனை ஈர்க்க அவளை நெருங்கி நடந்து வரலானான். அருகில் வந்ததும் யாக்கூப் கண்கள் போகும் திசை பார்த்து கோபம் விஷமென தலைக்கேற மூர்க்கமானான்.
அடைப்பட்ட நாட்கள் முடிந்தும்
விடுபட்ட நிம்மதி இல்லை
எங்கு செல்வேன் என்ன செய்வேன்?
மகிழும்படி கூறிட தன்னிலை இல்லை
அகிலத்தில் இருப்போர் எப்படி அறிவர்?
ஆர்யனை அருகே உணர்ந்த ருஹானா பாடுவதை நிறுத்தி திரும்பி அவனை பார்த்தாள். ஆர்யன் வந்ததைக் கூட பார்க்காத யாக்கூப் “அழகா பாடிட்டு இருந்தீங்க! ஏன் நிறுத்திட்டீங்க?” என ருஹானாவை கேட்டான்.
அதுவரையில் ருஹானாவை முறைத்துக்கொண்டிருந்த ஆர்யன், யாக்கூப் கேள்வி காதில் விழுந்ததும் அவனை பொசுக்கி விடுவதை போல பார்த்தவன் “இங்க இவானுக்கு மட்டும் தான் வகுப்பு நடக்குதுன்னு நின்னைக்கிறேன்” என்றான்.
“இல்ல.. அவனை உற்சாகப்படுத்தத்தான்….” என ருஹானா ஆர்யனின் கடுமையான முகம் பார்த்து சொற்களை விழுங்க, “நான் தான் சித்தியை முதல்ல பாட சொன்னேன், சித்தப்பா!” என இவான் சித்தப்பாவின் கோபத்தை புரிந்துகொண்டு முன்வந்து பேசினான்.
சூழ்நிலையை மாற்ற முயன்ற யாக்கூப் “சரி, இவான் இப்போ உன்னோட முறை. நீ பாடு” என்றான்.
“எனக்கு எதுவும் டக்ன்னு ஞாபகம் வர மாட்டேங்குதே”
“சரி, பரவாயில்ல.. யோசி” என யாக்கூப் சொன்னான்.
ஆர்யனின் கோப முகத்தை பார்த்து ருஹானா கவலையாக இருக்க, யாக்கூப் இருவரையும் கூர்ந்து நோக்கினான். சல்மாவும் ஆர்யனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நாம அன்னைக்கு இன்டர்நெட்ல ஒரு பாட்டு பார்த்தோமே, அது பாடு” என ருஹானா எடுத்துக் கொடுக்க, “ஒஹ்! அதுவா?” என இவான் யோசிக்கவும், ஆர்யன் திரும்பி மேலே சென்றுவிட்டான்.
——–
வெளி வராண்டாவில் அமர்ந்திருந்த சல்மாவிற்கு தேநீர் கொண்டுவந்து நீட்டிய நஸ்ரியா “நீங்க ருஹானா பாடினதை கேட்டீங்களா, சல்மா மேம்! என்ன ஒரு அற்புதமான குரல்!” என்றாள்.
கோப்பையை எடுக்க போன சல்மா “எனக்கு என்ன டீ கொண்டு வந்தே?” என கேட்டாள்.
“ஏலக்காய் டீ, மேம்”
“நான் உன்னை இஞ்சி டீ தானே கேட்டேன்?”
“இல்ல மேம்! நீங்க ஏலக்காய் டீ தான்….”
“நான் என்ன கேட்டேன்னு எனக்கு தெரியாதா? ஒழுங்கா காதுல வாங்கிட்டு வேலையை செய், நஸ்ரியா! எடுத்துட்டு போய் வேற எடுத்துட்டு வா. யார் என்ன செய்றாங்கன்னு காதை அங்க இங்க போடாம உன் வேலையை மட்டும் பாரு”
“ஸாரி மேம்! இதோ கொண்டு வரேன்” என நஸ்ரியா வருத்தமாக செல்ல, அங்கே கரீமா வந்தாள்.
“ஏன் சல்மா கத்திட்டு இருக்கே? எதுக்கு நஸ்ரியா மேலே கோபப்படுறே?”
“அவ மேலே இல்ல. அந்த குப்பைக்காரி ருஹானா எல்லார் முன்னாடியும் அவ திறமையெல்லாம் காட்டி மயக்குறா. எல்லாரையும் அவ கைக்குள்ள போட்டுக்க பார்க்கறா”
“ஓ! ருஹானா டீச்சர் கிட்டே பாடிக் காட்டினாளா? அது நல்ல விஷயம் தானே!”
சல்மா எரிச்சலாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“சல்மா! யாக்கூப் அவளை உத்து உத்து பார்க்கறதை கவனிச்சியா நீ? ஒருவேளை ரெண்டு பேருக்கும் பிடிச்சி போச்சினா… இன்னும் அவன் அவளை நெருங்கினா நமக்கு நல்லது. நாம நெருங்க வைப்போம்” என்று கரீமா சொல்ல, சல்மா ஆர்வமானாள்.
“மிஷால் ஒரு உதவாக்கரை. அவனை நம்பி ஒரு பயனும் இல்ல. இவன் வேகமா இருக்கான். இன்னும் ருஹானா கிட்டே இவனை உருக விடுவோம்”
“போக்கா நீ வேற! டீச்சரை விட ஆர்யன் தான் அவள் பாட்டுக்கு அதிகமா உருகுறான். வாயை திறந்துக்கிட்டு அவ பாட்டை கேட்டுக்கிட்டு அப்படியே அசையாம நின்னான்”
கரீமா தங்கையின் பொறாமையை புரிந்து கொண்டாள்.
“டீச்சர் அவளை பார்க்கும்போதுலாம் ஆர்யனுக்கு தான் உச்சந்தலையில வெடிக்குது”
“நீ அதை பத்தி யோசிக்காதே! இந்த நிலமைய நமக்கு எப்படி சாதகமா மாத்தலாம்னு பார்க்கலாம்”
சல்மா யோசிக்க “இவங்க ரெண்டு பேரும் இன்னும் நெருங்கினால் ஆர்யன் தன்னால ருஹானாவை வெறுத்துடுவான்” என கரீமா திட்டம் போட்டாள்.
——–
நஸ்ரியா யாக்கூப்க்கு உணவு எடுத்து வைத்து சிரித்தபடி அருகில் நிற்க, ஆர்யன் “நஸ்ரியா! போய் தண்ணீ எடுத்துவா!” என அவளை உள்ளே அனுப்ப பார்த்தான்.
அவனின் கடுமையான குரலில் சுதாரித்த நஸ்ரியா “இதோ கொண்டு வரேன், சார்!” என்று வேகமாக உள்ளே சென்றாள்.
ருஹானாவை மட்டும் அல்ல, அவன் வீட்டுப் பெண்களையும் தீமையில் இருந்து பாதுகாக்க விழைகிறான் ஆர்யன்.
ருஹானா நடப்பதை பார்த்திருக்க, ஆர்யனின் கோபத்தை உணர்ந்து கொண்டாள்.
கரீமா “ருஹானா டியர்! நீ இத்தனை அழகா பாடுவே ன்னு எனக்கு இதுவரை தெரியாதே! யாக்கூப் மூலமா தான் உன் திறமை வெளிய வந்திருக்கு. அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும். நீ ரகசியமாவே வச்சிருக்க” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேச, யாக்கூப் மகிழ்ந்து போனான்.
ருஹானா தர்மசங்கடமாக புன்னகைக்க, ஆர்யன் முகம் இருண்டது. சல்மா ஆனந்தமாக சிரித்தாள்.
“இவானோட இசை அறிவு அவனோட சித்தி கிட்டே இருந்து தான் வந்திருக்கு” என யாக்கூப் ருஹானாவை புகழ்ந்துக்கொண்டே போக, ஆர்யன் கையிலிருந்த முள்கரண்டியையும் கத்தியையும் பீங்கான் தட்டில் வேகமாக போட, அது கணீர் என ஒலியெழுப்பியது.
ருஹானா ஆர்யனை வெறித்து நோக்க, அவன் தண்ணீரை எடுத்து குடித்தான்.
உணவு மேசையில் அமைதி நிலவ, சகோதரிகள் இருவரும் சிரித்துக்கொண்டனர்.
“சாரா மேம்! அருமையான சாப்பாடு தந்தீங்க. நான் இது போல ஒரு உணவு உண்டு பல வருஷமாகிடுச்சி. அதிலும் சூப் மிகவும் ருசி” என யாக்கூப் பாராட்ட “இனிய உணவு சார்! சூப் ருஹானா மேம் செய்தது” என சாரா சொன்னார்.
“அப்படியா! மிக அருமை!” என பக்கத்தில் இருந்த ருஹானா புறம் திரும்பி சொன்ன யாக்கூப் “இசை போல சமையலும் உங்களுக்கு கை வந்த கலை போல” என மேலும் சொல்ல, சங்கடமாக ருஹானா நன்றி என்றாள்.
அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யன் “நீங்க சாப்பிடுங்க!” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான்.
கரீமா “ஆர்யனுக்கு நிறைய வேலைகள். நீங்க சாப்பிடுங்க யாக்கூப். உங்களுக்கு எங்க உணவு பிடித்ததில் எனக்கு சந்தோசம். நீங்க எப்போனாலும் எங்களோட சாப்பிட வரலாம்” என மிக அன்போடு அழைப்பு விடுக்க, யாக்கூப் அவளுக்கு நன்றி சொன்னான்.
ஏற்கனவே நல்ல எண்ணம் இல்லாமல் இருந்த அம்ஜத்துக்கும் தம்பி சாப்பிடாமல் எழுந்து போனதில் ஆசிரியனை இன்னும் பிடிக்கவில்லை. ஆர்யன் நல்ல மனநிலையில் இல்லை என புரிந்துகொண்ட ருஹானா முகத்தில் சிரிப்பு இல்லை.
—–
“பாடத்தை பார்ப்போமா இவான்?” என கேட்ட யாக்கூப், ருஹானாவிடம் திரும்பி கேட்டான்.
“இப்படி ஹால்ல பாடம் எடுக்கறதை விட இவான் ரூம்ல சொல்லி கொடுத்தால் அவன் கவனம் சிதறாது, இல்லயா? இங்க யாராவது நடந்துட்டே இருக்காங்க. அவங்களுக்கும் நாங்க இருக்கறது இடைஞ்சல்”
“அதும் சரி தான்” என்றவள் “இவான்! நீ மாஸ்டரை உன் ரூமுக்கு கூட்டி போ. நான் பின்னாடியே வரேன்” என சொன்னதும், இவான் யாக்கூப்பை மேலே அழைத்து சென்றான்.
சிரித்தபடி ருஹானாவை பார்த்தவாறே யாக்கூப் செல்ல, பொறுப்பாக அழைத்து செல்லும் இவானை பெருமிதமாக பார்த்து நின்ற ருஹானா ஆசிரியனை கவனிக்கவில்லை.
அவர்கள் மேலே சென்றதும் அவள் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கே வந்த ஜாஃபர் “நீங்க ஆர்யன் சாரை தேடுறீங்கன்னா, அவர் முன்பக்க தோட்டத்துல இருக்கார்” என்றான்.
‘தான் அவரை தேடுவதை இந்த அண்ணா எப்படி கண்டுகொண்டார்?’ என மனதில் வியந்தவள், அதற்கும் மேற்பட்ட பிரச்சனைகள் இருப்பதால் அதை பற்றி மேற்கொண்டு எதும் நினைக்காமல் ஆர்யனை நாடி சென்றாள்.
நட்டநடு வெயிலில் அம்பு விட்டுக்கொண்டிருப்பவனை பார்த்தவளுக்கு அவன் பழைய ஆர்யனாக தெரிந்தான்.
அவள் அருகில் வந்து நின்றதை உணர்ந்தும் ஆர்யன் அவளை திரும்பி பார்க்கவில்லை. அடுத்த நாணை வில்லில் ஏற்றினான்.
“இப்படி சந்திக்கறவங்க எல்லாரையும் நம்பிக்கை இல்லாம பார்க்கறது சரியா?”
அம்பு பறந்து சென்று இலக்கில் பாய்ந்தது.
“மிஸ்டர் யாக்கூப் கெட்டவர் இல்ல. ஏனோ உங்களுக்கு அவரை பிடிக்கல. ஆனா இவானுக்கு இசை வகுப்பு நல்லது. அது அவனுக்கு உற்சாகம் தரும்”
அடுத்த அம்பும் பறந்தது.
“இவானுக்கு அவரை பிடிக்குது. ஆர்வமா ஒத்துழைக்கிறான். நீங்களே பார்த்திருப்பீங்க”