Raaja Bavani 7 2 12700 தேர் ஊர் சுற்றி வரும் முன்னே விஷயம் ஊருக்குள் பரவிவிட, தனா, அனுவின் ரகசிய காதல் ஊரின் பேசும் பொருளானது. சிலர் ஆதரித்து, சிலர் எதிர்த்து, பெரியவர்கள் வியாக்கினம் பேச, இளையவர்கள் கொண்டாட.. என்று எங்கும் இவர்கள் காதல் கதை தான். குருமூர்த்திக்கு அங்கம் எல்லாம் கொதிக்க, தேரை இடம் சேர்த்து வீட்டிற்க்கு வந்தவர், எதிரில் வந்த மனையிடம் அவரின் ஆண்மையை காட்டினார். “டேய் தனா.. தேர் போயிடுச்சு, மாமா வீட்டுக்கு போவார்டா..” குகன் சொல்லவும், அதுவரை அனு வீட்டின் தெருவிலே நின்றிருந்த தனா என்ன நடக்கும் என்று புரிந்து அடித்து பிடித்து வருவதற்குள், வைதேகிக்கு சில பல அடிகள் பரிசானது. மகனின் காதலுக்கான பரிசு அம்மாவிற்கு சென்று சேர்ந்தது. தடுக்க வந்த சாருவிற்கும் ஒன்றிரண்டு அடி விழுந்ததோடு, “நீ எப்போ உன் அண்ணனாட்டம் என் மானத்தை வாங்க போற..?” என்று அவளையும் பேசினார் மனிதர். தனா அவரை இழுத்துவிட்டு தான் முன் நிற்க, “நடுத்தெருவில் வச்சு என் கழுத்தை அறுத்திட்ட இல்லை.. இதுக்கு தான் ஊர்லே சுத்திட்டு இருந்தியா நீ..? இந்த வயசுலே பொம்பிளை கேட்குதா உனக்கு..? உன்னை பிள்ளையாய் பெத்ததுக்கு இவளை தான் வெட்டி போடணும்..” வார்த்தைகளால் குடும்பத்தினரை வதம் செய்தார் நல்லவர். அவனின் காதல் விஷயம், அம்மா, மகளுக்கும் தெரிய வர, சாருவிற்கு அப்போதும் அது யார் என்ற ஆவல் தான். வைதேகிக்கோ இப்படி ஒரு அப்பாவை வச்சுக்கிட்டு இது உனக்கு தேவையா மகனே..? என்ற விரக்தி தான். திருவிழாவிற்கு வந்திருந்த அவரின் அக்கா, உறவுகள் எல்லாம் தடுப்பது போல், பேசி பேசி இன்னும் இழுத்துவிட்டனர். சொந்தங்களின் குணம் இந்நேரத்தில் நன்றாகவே வெளிப்பட, வைதேகிக்கு மொத்தமும் வெறுத்து போனது. தனா எதுவும் பேசாமல், அம்மா, தங்கையை தன் கைப்பிடியில் வைத்து நின்றான். இரவெல்லாம் ஆடி தீர்த்தார். நினைக்கும் நேரமெல்லாம் வைதேகியை அடிக்க ஓடி வந்தார். முன் நின்ற தனா மேல் தன் கோவத்தை இறக்கினார். குகன் அவரை பிடித்திழுக்கவே முடியாமல் திணறினான். தனா மிகவும் இறுகி போய் சிலையாகவே நின்றான். ஒரு வார்த்தை பேசவில்லை அவன். குருமூர்த்தியின் வார்த்தைகள் அவன் நெஞ்சில் இறங்கி கொண்டிருந்தது. அவனின் கவனம் எல்லாம் இங்கு இருக்க, மனம் முழுதும் அனு இடத்தில் தான். அவள் அங்கு என்ன நிலையில் இருப்பாள்..? அன்பழகன் என்ன செய்வார்..? எப்படி தாங்குவாள்..? இதனால் அவள் அக்கா கல்யாணம் ஏதும்..? உள்ளுக்குள் துடித்தான். பூமிகாவை கூடவே இருக்க சொல்லி சொல்லியிருக்கிறான் தான். ஆனாலும்..? தனா தவித்தபடி தான், அங்கு விஷயம் கேள்விப்பட்டு, சுஜாதா மகளை அடி வெளுத்துவிட்டார். சித்ரா, ஆதர்ஷ் தடுக்கவில்லை என்றால் அனு நிலை படு மோசமாக இருந்திருக்கும். அன்பழகன் மகளை கொண்டு வந்து வீட்டில் தள்ளிவிட்டு சோபாவில் விழுந்தவர் தான், ஒரு வார்த்தை பேசவில்லை. அவரின் தசைகள் குருமூர்த்தி கேட்ட ஒத்தை கேள்வியில் துடித்து கொண்டிருந்தது. அவருக்கு தாங்கவே முடியவில்லை. குருமூர்த்தி போன்ற ஆட்களுடன் தொழிலே வேண்டாம் என்று ஒதுக்கினால், மகள் வாழ்க்கையையே முடிபோட துணிந்திருக்கிறாளே..? மனமே ஆறவில்லை அவருக்கு. “ஏண்டி உன் அக்கா இத்தனை வயசாகியும் ஒழுக்கமா இருக்கா, உனக்கென்னடி அதுக்குள்ள அவசரம்..? ஏன் நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க மாட்டோமா..? நீயே தேடிக்கணுமா..?” சுஜாதா மகளின் முதுகில் அடித்து அழுக, அனுவிற்கு இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் கொடுமையாக தாக்கியது. கண்ணீர்.. கண்ணீர் மட்டும் தான். அப்படி ஒரு அழுகை. “ஏய் உண்மையை சொல்லுடி, அந்த பையனை பார்க்க தானே உன் அக்கா பேரை சொல்லி விளக்கு ஏத்த போனியா..?” சுஜாதா கேட்டுவிட, “இ.. இல்ல.. இல்லம்மா..” அனு இதற்கு மட்டும் வாய் திறந்து கதறிவிட்டாள். சித்ரா தங்கையை தன்னோடு சேர்த்து கொள்ள, “இல்லைக்கா.. நான் உனக்காக மட்டும் தான் போனேன்க்கா..” என்றாள் அவளிடம். “எனக்கு உன்னை தெரியும் அனு, அம்மா கோவத்தில பேசுறாங்க, அழுகாதடி..” சித்ரா சொல்ல, அனுவிற்கு என்னமோ இன்னும் அழுகை தான். அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள், சுஜாதா, அன்பழகனை சமாதானம் செய்ய, அனு அக்காவுடன் ஒன்றி கொண்டாள். ஆதர்ஷ்க்கு காதல் எல்லாம் இப்போது சகஜம் என்றாலும், தங்கை எனும் போது கொஞ்சம் கோவம் தான். சுஜாதா அடியில் இருந்து அவளை பாதுகாத்தான் தான், ஆனாலும் அண்ணனாக வருத்தம். அப்பா பக்கத்தில் சென்று நின்று கொண்டான். “அன்பழகா.. இடிஞ்சு போகதப்பா, என்ன செய்றதுன்னு பார்க்கலாம்..” உறவுகள் சொல்ல, அனுவை பார்த்த தந்தை, “இப்படி ஒரு பொண்ணா இவ இருப்பான்னு தெரிஞ்சிருந்தா கருவிலே அழிச்சிருப்பேன்..” என்றுவிட்டார். அவ்வளவு தான் அனு. இவ்வளவு வருடங்கள் செல்லம் கொடுத்து கொண்டாடிய அப்பா, அம்மா பேச்சு, அண்ணனின் ஒதுக்கம் என்று ஒரே நாளில் எல்லாம் மாறிப்போனது. சித்ரா மட்டும் அவளுக்கு ஆதரவாக, உறவாக நின்றாள். அவள் மட்டுமே அவளுக்கு என்றானது. வீட்டிலே அடைபட்டாள். திருவிழா தேர் தான் தெருவிற்கு வந்தது என்றால், இவர்கள் காதலும் வந்தது. “எனக்கு அந்த பையன் எந்த ஆளுன்னு எல்லாம் பெருசு இல்லப்பா.. அந்த குருமூர்த்தி மகனை போய் இவ..” அன்பழகன் சொல்லி சொல்லி கொதித்து போனார். இங்கு குருமூர்த்தி, “என் இனத்துல இப்படி பண்ணாலே எதிர்க்கிறவன் நான், என் மகன் இப்படி என் கழுத்தை அறுத்துட்டானே, வேற ஆளுங்க பொண்ணு கேட்குதா உன் மகனுக்கு, அதுவும் போயும் போயும் பிடிச்சிருக்கான் பாரு அந்த அன்பழகன் பொண்ணை.. அவன் என்கூட தொழில் செய்ய மாட்டேன்னு திமிரா போனவன், அவன் பொண்ணு தான் வேணுமா உன் மகனுக்கு..” மகனை பார்த்து மனைவியை வறுத்தார். அன்று மட்டுமில்லை அடுத்தடுத்த நாட்களிலும் இது தொடர்ந்தது. வாரங்கள் செல்ல செல்ல வீரியம் குறைந்தது தவிர முடியவில்லை. அனு வீட்டை விட்டு வெளியே வரும் தைரியம் இல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கினாள். சித்ரா திருமணம் வேறு நெருங்கி வர, பக்கத்து ஊர்லே இருக்கும் மாப்பிள்ளை வீட்டினருக்கும் இப்படி என்று தகவல் சென்றது. சஞ்சய் அது எல்லாம் பிரச்சனையில்லை.. என்று தொடக்கத்திலே முடித்துவிட்டான். அவனுக்கு முன்னமே சித்ரா சொல்லிவிட்டாளே. அதுவே போதும் அவனுக்கு. பெரிதாக்காமல் விட்டுவிட்டான். அதிலே அன்பழகன் வீட்டில் சஞ்சய் இன்னும் உயர்ந்து போனான். சித்ரா, சஞ்சய் திருமணம் ஒருவித சஞ்சலத்துடன் என்றாலும் நன்றாகவே நடந்து முடிந்தது. அனு எதிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இப்படி இருக்க வேண்டும், அப்படி உடை அணிய வேண்டும், இப்படி கலாட்டா செய்ய வேண்டும் என்று அக்கா கல்யாணத்தில் அவள் கொண்டிருந்த ஆசைகள் எல்லாம் நிராசை ஆகிப்போனது. சுஜாதா மகளை மிகவும் தள்ளி வைத்தார். சில நேரம் வார்த்தைகளில் குத்தினார். ஆதர்ஷ் பேசினான். ஆனால் அந்த ஓட்டுதல் இல்லை, வரவில்லை அவனுக்கு. படித்தவன், வெளியே வேலை பார்க்கிறான் தான், ஆனாலும்..? எதோ ஏற்று கொள்ள முடியவில்லை அவனால். “எனக்கும் அந்த ரத்தம் இருக்கும் போல..” அவனுக்கு அவனே சுய பரிசோதனை செய்து கொண்டான். அன்பழகன் சுத்தமாகவே இளைய மகளை ஒதுக்கி வைத்து விட்டார். அனுவின் அழுகை,வேதனை அக்கா திருமணத்தை பாதிக்காத அளவு தன்னை ஒடுக்கி கொண்டாள். அப்படியும் உறவினர்கள் எனும் சில அரக்கர்கள் அவளை பார்த்து, சீண்டி, ஜாடை பேசி என்று வதைத்தனர் . சில நல்ல உள்ளங்கள் இது எல்லாம் சகஜம், காலம் மாறி போச்சு, பத்துல அஞ்சு காதல் கல்யாணம் தான்.. என்று ஆறுதலும் கொடுத்தனர். அந்த நேரங்களில் எல்லாம் சித்ரா மட்டுமே அவளுக்கு. அவளும் இல்லையென்றால் என்ன ஆகி இருப்போம் எனும் அளவுக்கு சித்ரா தங்கையை பார்த்து கொண்டாள். அவளுக்கும் சஞ்சயுடன் திருமணம் முடிந்து புகுந்த வீடு கிளம்பினாள். அதுவரை கட்டு படுத்தி வைத்திருந்த மொத்த அழுகையையும் அக்காவை கட்டி பிடித்து கதறி தீர்த்து விட்டாள். மொத்த சொந்தமும் அந்த நொடி அனு மேல் இரக்கம் கொண்டது உண்மை. அன்பழகன், சுஜாதா, ஆதர்ஷ் என்று அவளை பார்த்தும் கண்ணீர் வடித்தனர். அனுவின் கதறல் தனாவின் காதுகளையும் எட்ட, அவன் கண்களிலும் அன்று கண்ணீர் நிறைந்தது. இமைகளில் கனவுகளை விதைத்தேனே..!!! ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே..!!! இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்.. உன் கையோடு கை சேரத்தான்..!! உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்..!!!