அவ படிக்கணும் ஆசைபடுறா, இருபது வயசிலே என்ன கல்யாணத்துக்கு அவசரம்..?”  தனா சொல்ல

டேய்.. வந்திருக்க வரன் ரொம்ப நல்ல மாதிரிடா, என்னோட பங்காளி தான், MNC வேலை, ஊர்லயும் தோட்டம், துரவு, ஒரே பிள்ளை, வசதியான குடும்பம், சாரு ரொம்ப சந்தோஷா இருப்பா..”  என்றான் குகன்

வசதி இருந்தா மட்டும் போதுமா..?”

மாப்பிள்ளை பையன் குணமும் நல்ல மாதிரிடா, எந்த கெட்ட பழக்கமும் இல்லை..”

என்னமோ நீ இருப்பத்தி நாலு மணி நேரமும் அவன்கூட இருக்கிற மாதிரி பேசுற, மத்தவங்க சொல்றதை வச்சு நாம முடிவு பண்ண கூடாது, நமக்கு உறுதியா தெரியணும், உன்னை போலன்னா சொல்லு..”  என்றான் தனா மெல்ல நூல் விட்டு

இப்போ என்ன உனக்கு அந்த பையன் மேல சந்தேகமா..? நான் நல்லா விசாரிக்குறேன்..” என்றான் குகன்

ஒன்னும் கிழிக்க வேணாம், போய் வேலையை பாரு போடா..”  தனா பொறுமை இழந்து விட்டான்

என்னடா..?”

போயிருடா..” தனா எச்சரிக்க, குகன் அவனை பார்த்தபடியே சென்றான்

என்னை சுத்தி எல்லாம் இம்சையாவே இருக்கு..  அம்மா அப்பாகிட்ட பேசுறதுக்கு முன்னாடியே இந்த பேச்சை நிறுத்தணும்..”  வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

சாரு அண்ணனை பார்த்ததும் சலுகையாக ஒட்டி கொண்டவள், அம்மாவை பார்த்து வெட்டினாள். “பெரிய சப்போர்ட் தான், அவனையே நான் தான் பெத்து வளர்த்துட்டு இருக்கேன்..” என்றார் வைதேகியோ

ம்மா.. அவ படிக்கட்டும், இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு செஞ்சுக்கலாம், நீ அப்பாகிட்ட பேசாத..” என்றான் மகன்

தனா.. உன் தங்கச்சி உருப்படியா படிச்சுட்டு ஏதாவது செய்ய போறான்னு சொல்லு, நான் விட்டுடுறேன்..” என்றார்  வைதேகி

இப்போ என்ன நான் கலெக்டருக்கா படிக்கணும் உனக்கு..?” சாரு எகிறினாள்

நீ படிச்சுட்டாலும்.. ஆகுற கதையை பேசுடி..” வைதேகி கிண்டலாக சொன்னார்

ம்மாமா..” மகள்  கத்த, “சாரு.. நீ போ, நான் பார்த்துகிறேன்..”  தங்கையை அனுப்பி வைத்தவன், “நீ எதுக்கு இப்போ இப்படி பண்றேன்னு எனக்கு தெரியும்மா..”   அம்மாவை தீர்க்கமாக பார்த்தான்

இல்லை தனா.. என் மகளுக்கு நான் செய்றதை  என் மகன் தடுக்க மாட்டான்னு எனக்கு தெரியும், இது உண்மையிலே நல்ல வரன், பையன் எனக்கும் நல்லா தெரிஞ்சவன், வீடும் பக்கத்துலே, ஆளுங்களும் ரொம்ப நல்ல மாதிரி..” வைதேகி சொல்ல

சரிம்மா.. அவங்க மட்டுமே வரன் இல்லை, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், இவ்வளவு சீக்கிரம் என்ன கல்யாணம்..? உன்னை மீறி நான் சாரு விஷயத்தில எதுவும் செய்ய மாட்டேன், போதுமா..? வரன் பேச்சை  விடு..” தனா உறுதியாக சொன்னான். அதுலயும் சாரு விஷயத்தில் என்று தன்னை காத்து கொண்டான் மகன்

வைதேகி மகனை ஒரு மாதிரி பார்த்தவர், “நீ என்னை மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு எனக்கு தெரியும் தனா, ஆனா என் மகன் எதிர்பார்த்து, ஆசை வச்சு  ஏமாந்து போயிட கூடாதுன்னு தான் சொல்றேன்..”   என்றவர் உள்ளே சென்றுவிட்டார்

சாரு அவள் இஷ்டப்படி மாஸ்டர் சேர முடிவானது. குருமூர்த்தியிடமும் பேசிவிட்டான். அட்மிஷன் பிரச்சனையில்லை. அவள் முன் படித்த கல்லூரி தான். “தேங்க்ஸ்ண்ணா..” சாரு அண்ணன் கை பிடித்து குதித்தாள்

போதும்.. வந்து திருவிழா வேலைக்கு உதவி பண்ணு..” வைதேகி கேலியாக சொன்னார். “உனக்கு பொறாமை..” மகள் நொடித்து செல்ல, வீட்டில் திருவிழா மகிழ்ச்சி தொற்றி கொண்டது

அங்கு சித்ரா திருமணம் கூடி வந்ததில் அன்பழகன் வீட்டிலும் மிகவும் மகிழ்வுடனே திருவிழாவை கொண்டாடினர். இரண்டு நாட்கள் விழா. முதல் நாள் அம்மனுக்கு கூழ் ஊற்ற, அடுத்த நாள் தேரோட்டம். தனா அவன் வயது இளைஞர்களுடன் விழா வேலைகளை பார்த்தான். உறவினர்கள் ஒவ்வொரு வீட்டிலும் குவிந்தனர்

முதல் நாள் இரவு பாட்டு கச்சேரி, வானவேடிக்கை, தெருக்கூத்து என்று ஊரே விழித்திருந்தது. தனா வீட்டிலும், அனு வீட்டிலும் கச்சேரிக்கு   வந்தனர். தனா வேலைகள் நடுவில்  அனுவை தேடி பார்த்துக்கொண்டான்

ஆண்களில் வயது வித்தியாசம் இல்லாமல் முக்கால் பாகம் மது பிரியர்களாக இருக்க, அவர்களை கட்டுப்படுத்துவதே பெரிய வேலையாக இருந்தது. நேரம் ஆக ஆக பாட்டு கச்சேரியில் பாடல் மாற, தனா குகனிடம் சொல்லி சாரு, வைதேகி அவன் உறவு பெண்களை கிளப்பினான்

இங்கு  கூட்டத்தில் இருந்த அனுவை பார்த்து கண் காட்ட, அவளுக்கு இருக்க விருப்பம் இருந்தாலும் இனி என்ன நடக்கும் என்று புரிந்து அவளின் குடும்பத்துடன் கிளம்பிவிட்டாள். மற்ற பெண்களையும் மெல்ல மெல்ல கிளப்பிவிட, ஆட்டம் ஆரம்பித்தது. மேடையில் இருக்கும் பெண்களை மட்டும் பாதுகாத்தபடி தனாவின் திருவிழா கமிட்டி ஒதுங்கி கொண்டது

நள்ளிரவிற்கு மேல் தான் கச்சேரி முடிய, இங்கு ஆட்டம் அடங்கவில்லை. அவர்கள் அப்படி தான் என்பதால், தனாவும் விட்டுவிட்டான். இதே குருமூர்த்தி இருந்தால் பிரச்சனை தான். விடமாட்டார். இவர்களும் போதையில் அவர் பேச்சை கேட்க மாட்டார்கள். எனவே தனா அவரை முன்னமே அனுப்பிவிட்டான்.

இப்படியே முதல் நாள் முடிய, அடுத்த நாள்  தேரோட்டம். காலையிலே  குடும்பம் குடும்பமாக கோவில் செல்ல, தனாவும் தன் குடும்பம் வரும் போது இணைந்து கொண்டான். அவர்கள் சந்நிதிக்கு சென்ற நேரம் அன்பழகன் குடும்பம் பூஜைக்கு நின்றிருந்தனர்

வாவ்.. அசத்துறாளே..”   அனுவை புடவையில் பார்த்து உள்ளுக்குள் விசிலடித்து கொண்டான் காதலன். வேஷ்டி சட்டையில் முன் உச்சி முடி பறக்க  வந்தவனை அனுவும் ரசித்து பார்த்தவள், அவன் பார்வையில் காதோரம் சூடாக நின்றாள்

ம்மா.. இந்த பக்கம் நிக்காலம்..” அனு பக்கம் நிற்கும் படி பார்த்து கொண்டான். அன்பழகனும், குருமூர்த்தியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டாலும் எந்த பிரதிபலிப்பும் இல்லை. பூஜைக்கு எல்லாம் கொடுக்க, கூட்டத்தில்  தனா மெல்ல நகர்ந்து அனு பின் நின்றான்

அவனின் சட்டை அவளின் முதுகை மெல்ல உரச, அனுவின் உள்ளங்கை வேர்த்தது. அவளின் பூ சூடிய தலை அவனின் நெஞ்சுக்கு வர, தனாவிற்கும் அவளின் நெருக்கம் உவகையை கொடுத்தது

பூஜைக்கு மணி அடிக்க, இருவரும் தங்களின் காதலுக்கான வேண்டுதலை ஒன்றாக வைத்தனர். பூ, குங்குமம் கொடுக்க, அனு வாங்கி நகர, தனா அவளை கடந்து செல்லும் போது அவளின் கை பிடித்து பூ கொடுத்து சென்றான். கூட்டத்தில் தெரியாத போதும், அனுவிற்கு வேர்த்து தான் விட்டது

யாரும் கவனிக்கவில்லை என்று புரிந்து ஆசையாக அந்த பூவை வைத்து கொண்டாள். தனா சற்று தள்ளி நின்று பார்த்து கொண்டவன், சாருவை கூட்டி கொண்டு கடைத்தெரு சென்றான்

மாமா.. எங்களுக்கு..” அவனின் மாமா, அத்தை பெண்கள் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். அனுவும், சித்ரா, சுஜாதாவுடன் கடைத்தெரு வந்தவள், இதை பார்த்துவிட்டாள்

வளையல் அங்க நல்லா இருக்கு அனு..” சித்ரா பக்கத்து கடை காட்ட, “இங்கேயே பார்க்கிறேன்க்கா..”  தனா இருந்த பக்கத்து கடையிலே நின்று கொண்டாள்

தனா அவளை கவனிக்காமல், “உங்களுக்கு நான் ஏன் வாங்கி கொடுக்கணும்..? எல்லாம் உன் அப்பாகிட்ட காசு வாங்கிட்டு வாங்க, ஒடுங்க..” என்று விரட்டி கொண்டிருந்தான்

என்ன மாமா இப்படி இருக்க..? உன் மாமா வீட்டு காசை நீதானே மீத்தனும்..” என்று அவர்கள் கேலி பேச

எங்க அண்ணா ஏன் மீத்தனும்..?” என்று சாரு வரிந்து கட்டி கொண்டு வர, அங்கு சில நிமிடங்கள் சிரிப்பும் சண்டையுமாக தான் இருந்தது. தனா திரும்பி நின்று அவர்களிடம் வம்பு வளர்த்து கொண்டிருந்ததால் பின்னால் நின்றிருந்த அனுவை கவனிக்காமல் விட்டான்

மாமா.. இப்போ என்ன எங்களுக்கு எதுவும் வாங்கி கொடுக்க மாட்டிங்களா..?” அவர்கள் கேட்க

போனா போகுதுன்னு வாங்கி தரேன், ஓசில கிடைக்குதுன்னு நிறைய விலைல எடுக்க கூடாது சொல்லிட்டேன்..” என்றவன், திரும்ப அனுவை பார்த்துவிட்டான். அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள்

தனா அவள் கோவம் புரியாமல் அவளை ரசித்து பார்க்க, “மாமா.. இந்த வளையல் நல்லா இருக்கு இல்லை.. நான் எடுத்துக்கிட்டேன்..” என்றாள் ஒருவள்

தனா,  “எடுத்துக்கோ..” என்று சாதாரணமாக சொல்ல, அனுவிற்கு பொசுங்கிவிட்டதுஎனக்கு இந்த ஸ்டிக்கர், கிளிப், வாட்ச் என்று ஆளாளுக்கு எடுத்து செல்ல, தனா மொத்தமாக பணம் கொடுத்தான்

எல்லாம் என் அண்ணா காசுல மங்களம் பாடிட்டீங்க..” சாரு நொடித்து கொள்ள

பார்த்து பேசம்மா.. நாளைக்கு எங்கள்ல யாராவது அண்ணியா வந்தா என்ன பண்ணுவியாம்..?  அதுலையும் மாமாக்கு இரண்டு பொண்டாட்டி யோகம் இருந்தா உனக்கு இரண்டு அண்ணி பார்த்துக்கோ..” என்றனர் சிரிப்புடன்

அனு கேட்டு மூக்கு விடைக்க  இவனை  முறைக்க, பார்த்த தனாவிற்கு அவளின் கோவம் உற்சாகத்தை தர, எப்போதும் போல இப்போதும், “ஆமா ஆமா, வள்ளி, தெய்வானை மாதிரி.. பாமா ருக்குமணி கூட இருக்கலாம்..” என்றான்

அனுபமா என்ற அவளின் பெயர் வைத்து அவன் அழுத்தி சொல்ல, இங்கு அனுவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. அவளின் கோவத்தை எதிர்பார்த்து சீண்டியவனுக்கு அவளின் கலங்கிய கண்கள் வருத்தத்தை  கொடுத்தது. 

இங்கு பெண்கள் விளையாட்டாக பேசி கொண்டிருக்க, அனுவிற்கோ  அங்கு நிற்கவே முடியவில்லை. சித்ராவிடம் சென்றுவிட்டாள்அவளை சமாதானம் செய்ய பார்க்க, அங்கிருக்கும் வரையிலும் அனு அவனை பார்க்கவே இல்லை. வீட்டிற்கும் கிளம்பிவிட்டாள்

இவனுக்கும் தேரோட்ட வேலை ஆரம்பித்தது. மாலை போல தேர் ஊர் சுற்றி வர ஆரம்பித்தது. செண்டு மேளம், டிரம்ஸ், ஆட்டம் என்று களைகட்டியது. பெண்கள் எல்லாம் நகை, பூ, புது துணி என்று அலங்கரித்து நின்றனர். தனா அதனுடனே செல்ல, பின் மாலை போல தேர் ஊரின் நடு தெருவில் நின்றது

டிரம்ஸ் உச்சத்தில் அடிக்க, ஆட்டம் சூடு பிடித்தது. பூமி அதிர அதிர ஆடி கொண்டிருந்தனர். மிகப்பெரிய ஊர். எங்கும் கூட்டம். தனா மேடையில் நின்று பார்த்து கொண்டிருந்தவன், அனு, பூமிகாவுடன் நிற்பதை பார்த்துவிட்டான்

அவளும் அவனை தான் பார்த்திருந்தாள். காலையில் இருந்த அதே புடவையில், முகம் வாடி போய் நின்றிருந்தாள். அவனை பார்த்த  பார்வையில் அவ்வளவு கோவம், அழுகை. அவளை அப்படி பார்க்க தனாவிற்கு முடியவில்லை. சும்மா விளையாட்டு பேச்சுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுகிறா..?  

பூமிகா அவளிடம் எதோ சொல்வது தெரிந்தது. அனு மறுத்து அவள் வீடு பக்கம் சென்றாள். தனா யோசிக்காமல் மேடையில் இருந்து இறங்கி அவள் பின் சென்றான். எங்க போறான்..? குகனும் இவனை பார்த்து பின் செல்ல, தனா வேக நடையில் அனு முன் நின்றான்

எல்லாம் தோராட்டத்தில் இருக்க, தெருவில் ஆட்கள் இல்லாததால், தனா அவளை வழி மறைத்து, அவன் கட்டுப்பாட்டை அவனே உடைத்துவிட்டான்.

இவனை எதிர்பார்க்காமல் அனு தடுமாறி பின் சென்றாள். தனா அவள் கை பிடிக்க, பூமிகா, குகனுக்கு வேர்த்து போனது

அனு  கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, “இது தேவையாடி..”  அவளின் கண்ணீர் காட்டி கேட்டான்

அவன் அவளிடம் நேருக்குநேர்  பேசிவிட்டதில் அனுவிற்கு இன்னும் இன்னும் தான் அழுகை வந்தது. விசும்ப ஆரம்பித்தாள் பெண்

ஏய்.. என்னடி..”  தனா அவளின் கண்ணீரில் திணறி போனான். இவ்வளுவா என்னை எதிர்பார்த்திருந்தாள். அவளின் கையை அழுத்தமாக பிடிக்க

தனா யாரோ வராங்கடா..” குகன் அரவம் கேட்டு வேகமாக அவனுக்கு அருகில் வந்தான். இங்கு அனுவின் அழுகை நிற்காமல் இருக்க, தனா அவளை தவிப்புடன் பார்த்து தயங்கிய நேரம்

இங்க தான் தேர் போறது கஷ்டம்..”   என்ற குரலை தொடர்ந்து, நான்கைந்து ஆட்கள் பக்கத்து சந்தில் இருந்து வந்துவிட்டனர்அதில் குருமூர்த்தி, அன்பழகன் அடக்கம். தனா, அனு கோர்த்திருந்த கைகள் எல்லார் கண்களுக்கும் பளிச்சென்று தெரிந்தது.