Raaja Bavani 6 1 12678 இராஜ பவனி 6 “இந்த மாச கடைசில சித்திரை திருவிழா வருது இல்லை, அது முடியவும் வைகாசி முதல் வாரத்திலே கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்க..” அன்பழகன் வீட்டிற்கு வந்ததும் சொன்னார். “நல்லதுங்க.. நமக்கும் நேரம் கிடைக்குது, ஜவுளி, தாலி, கல்யாண பத்திரிக்கைக்கு நாள் சொன்னாங்களா..?” சுஜாதா கேட்டார். “அதையும் குறிச்சு கொடுத்துட்டாங்க சுஜா, இந்த வாரத்துலே ஆரம்பிச்சுடலாம், மண்டபம் நம்ம பொறுப்பு, நாளைக்கே புக் பண்ணனும்..” என, “ஏங்க.. எந்த மண்டபம், எத்தனை பேர் வருவாங்கன்னு சம்மந்திகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க..” என்றார் சுஜாதா. “கேட்டுட்டு தான் பண்ணுவேன், மண்டபம் புக் பண்ணும் போது அவரையும் கூட்டிட்டு போய் ஒரு முறை காட்டிட்டு தான் புக் பண்ணுவேன்.. கவலைப்படாத..” என்றார். “இல்லங்க.. எல்லாம் நல்ல படியா நடக்கணும்ன்னு டென்சன்..” “எனக்கும் இருக்கும்மா, நல்லபடியா நடக்கும்..” மனைவியின் தோள் தட்டினார் கணவர். ஹாலில் டிவி பார்த்தபடி எல்லாம் கேட்டு அமர்ந்திருந்த அனு அக்காவை குறும்பாக பார்த்தாள். சித்ரா தங்கை பார்வை புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் டிவி பார்த்திருக்க, அவளின் கைப்பிடிலே இருந்த மொபைல் வைப்ரேட் ஆனது. “பத்து நிமிஷம் ஆச்சே, இன்னும் போன் காணோமேன்னு பார்த்தேன்..” அனு கிண்டலாக சொன்னாள். “மெசேஜ் தாண்டி வந்திருக்கு..” சித்ரா சொல்ல, “அதுவும் கால் பண்ணவான்னு கேட்டு தானே வந்திருக்கும்..” என்றாள் தங்கை சரியாக. எப்படி இவ்வளவு சரியா சொல்றா.. சித்ரா தங்கையை பார்க்க, “இது தானே உங்களுக்கு உறுதியானதுல இருந்து நடந்திட்டு இருக்கு..” அனு சிரித்தாள். “ச்சு.. போடி..” சித்ரா எழுந்து ரூம் செல்ல, அனு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அவளின் அக்கா திருமணம், அதுவும் மிகவும் பிடித்தவனுடன்.. அவளின் மலர்ந்து விகசித்த முகம், எல்லோருக்கும் ஒரு நிறைவை கொடுத்தது. அவளை இப்படி பார்க்க ஏங்கியவர்கள் தானே..!! ம்ம்ம்.. அனு பெரு மூச்சும் விட்டு கொண்டாள். அவளுக்கும் இப்படி தனாவிடம் பேச ஆசை. எப்போதுமே உண்டு தான். இப்போது சித்ராவை பார்க்க பார்க்க இன்னும் கூடியது. விட்டால் இவளே அழைத்து பேசிவிடும் அளவிற்கு தேடினாள் அவனை. முக்கியமாக இரவுகளில் சித்ரா பெட் சீட் மூடி சஞ்சய்யிடம் பேசும் நேரத்தில் எல்லாம் இன்னும் இன்னும் நொந்து போவாள். ஆளே இல்லைன்னா வேற, இருந்தும் இப்படின்னா.. தனா மேல் எக்கச்சக்க கோவம். பார்க்கிறேன் எப்போ தான் என்கிட்ட பேசுறேன்னு.. மனதில் நொடித்து கொண்டாள். அந்த கோவத்திலே மறுநாள் விளக்கேற்ற கோவில் சென்ற போது தனா எதிரில் நின்றும் பார்க்காமல் முகம் திருப்பி கொண்டு போனாள். சித்ரா திருமணம் நல்ல படியாக முடியும் வரை விளக்கேற்ற வேண்டும் என்று ஏற்றி கொண்டிருக்கிறாள். உறுதியானாலே போதும் என்று சிலர் சொன்ன போதும், கல்யாணம் முடியட்டும் என்று வருகிறாள். இந்த விஷயம் சித்ராவிற்கும் தெரிந்துவிட, தங்கையை கட்டி தான் கொண்டாள் அக்கா. “இனி நானே ஏத்துறேன் அனு..” அவளுக்கும் அந்த நம்பிக்கை இருக்க, தினமும் அவளே தங்கையுடன் வந்து ஏற்றுகிறாள். இப்போதும் சித்ரா, அனு இருவரும் கோவிலில் இருக்க, ஆட்கள் திருவிழாவிற்கு கோவிலை தயார் செய்து கொண்டிருந்தனர். ஊர் கவுண்டர் குருமூர்த்தி எனும் வகையில் தனா தான் எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறான். அதை வைத்து இப்போதும் உள்ளே சென்றவன் கோவிலை சுற்றி வந்தான். துர்க்கை அம்மன் சந்நிதியில் சித்ரா குனிந்து விளக்கேற்றி கொண்டிருக்க, இவன் அனுவை பார்த்தான். அவள் உதடு சுழித்து கழுத்தை வெட்டினாள். “அடிக்கடி மூஞ்சை தூக்கிக்கிறா..” தனா உள்ளுக்குள் கொஞ்சி கொண்டவன், என்ன என்று அவளை பார்த்து புருவம் தூக்கினான். “இவருக்கு தெரியாதாக்கும்..” சிணுங்கி முகம் திருப்பினாள். “பார்றா..” தனா சிரித்தபடி அவளை கடந்தான். அவளின் கோவம் எதனால் என்று அவனுக்கு அனுமானம் உண்டு தான். ஆனால் அதை களைய பயமே அவனுக்கு. ஆம் பயம் தான். தனாவிற்கு அனுவிடம் பேசுவதிலோ, காதலை சொல்வதிலோ ஒன்றும் இல்லை. ஆனால் அதன்பிறகு. இதுவே தினம் தினம் தொடர் கதையாகி விடாதா..? பேசும் ஆசை பார்க்கவும் வைக்கும். இப்போதும் பார்க்கிறார்கள் தான், ஆனால் தள்ளி நின்று. இந்த இடைவெளி யாருக்கும் பாதகமில்லை அவர்களை தவிர. இதுவே அந்த இடைவெளி குறைந்து நெருங்கும் போது இவர்களுக்கு இனிக்கும். குடும்பத்தினருக்கு, சுற்றத்தார்க்கு..? அதுவும் அவளின் அக்கா, இவனின் தங்கை. இவர்களால் அவர்கள் வாழ்க்கை. இன்னும் சில மாதங்கள், எல்லாம் நல்ல படியாக முடியட்டும், அதன் பிறகான போராட்டங்களை சேர்ந்தே எதிர்கொள்வோம் பெண்ணே..!!! நீ இல்லாமல் என்னால் தனியாக என்ன செய்துவிட முடியும்..??? இவன் தான், இவள் தான் எனும் உறுதி தானே எங்களை சேர்த்து வைக்கும். இரு இனங்களின் கட்டுப்பாடுகளை உடைக்கும் தைரியம் அவள் தானே எனக்கு கொடுக்க வேண்டும். அவளின் அந்த கை தானே என்னை சேர்த்து பிடிக்க வேண்டும். இப்போது தள்ளி இருப்பதால் என்ன..? காலத்துக்கும் சேர்ந்திருக்க தானே போராட வேண்டும். அனுவை பார்த்தபடி தள்ளி நின்று கொண்டான். அவனின் ஒவ்வொரு அணுவும் அவனின் அனுவை தான் பார்த்திருந்தது. எதிர்பார்த்திருக்கிறது என்று அவனிடம் நிரந்தரமாக சேர்வாள் என்று. அவனின் மௌன தவம் அதற்கு தானே, இந்த சிற்றின்பம் எனக்கு வேண்டாம், அவளுடம் வாழும் பேரின்பம் தான் எனக்கு வேண்டும்.. இதற்கு அனுவின் தயவு தான் அவனுக்கு வேண்டும். அவள் புரிந்து ஒத்துழைக்க வேண்டும். கோவப்பட்டாலோ, அவனை நெருங்கி விட்டாலோ அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியாது. அவனின் காதல் கட்டுப்படும் இடமே அவள் தான். அவளே அதை உடைத்தால்..? “உடைச்சுடாதடி..” அனுவை பார்த்தான். அவனையே பாராமல் பார்த்து கொண்டிருந்த அனுவிற்கு அவன் பார்வை புருவம் சுருக்க வைத்தது. எதுக்கு இப்படி பார்க்கிறார்..? கேள்வியுடன் அவனை பார்த்தாள். சித்ரா தங்கை கை தட்டி ஏதோ கேட்க, இவன் முகம் திருப்பினான். பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தான். அக்கா, தங்கை இருவரும் சில நிமிடங்களில் கிளம்பினர். தனா மேலும் நேரம் சென்று கிளம்பினான். திருவிழா வேலைகள், மண்டி, சூப்பர் மார்க்கெட் என்று ஓடினாலும், அனுவை பார்க்க வந்துவிடுவான். குகன் தான் துணை நின்று சமாளிக்கிறான். இன்னும் சில நாட்கள் இப்படி தான் போகும். திருவிழா முடியும் வரை. தனா நேரே மண்டி சென்றான். குருமூர்த்தி லோட் இறக்கும் ஆட்களிடம் கத்தி கொண்டிருந்தார். “எங்கடா போன..? லோட் இறக்கும் போது உன்னை நம்பி தானே விடறேன்..” மகனை பார்த்ததும் குதித்தார் மனிதர். “என்ன ஆச்சு..?” தனா பார்க்க, “பருப்பு மூட்டை பிரிஞ்சிடுச்சு தம்பி..” என்றார் ஒருவர். “ரொம்ப சாதாரணமா சொல்ற..? என்ன உன் அப்பன் வீட்ல இருந்து வருதா..? தர்மத்துக்கு வியாபாரம் நடக்குதா இங்க..? உளுத்தம் பருப்பு என்ன கம்மியான விலை விக்குதா..? ஆளை பாரு, ஒரு பருப்பு விடாம எடுக்கணும் சொல்லிட்டேன்..” குருமூர்த்தி மீண்டும் பேச, “ண்ணா.. மொத்தமா வாரி சலிச்சிடுங்க.. ப்பா.. நீங்க போங்க, நான் பார்த்துகிறேன்..” என்றான். “என்னத்த பார்க்கிற..? வேலை நேரத்தில இங்க இல்லை, இப்போ வந்து பார்த்துகிறானாம்..” குருமூர்த்தி மகனை திட்டி கொண்டே சென்றார். தனாவிற்கு அவரின் கோவம் புதிது இல்லையே. கோவம் வந்துவிட்டால் எதிரில் யார் என்று எல்லாம் பார்க்க மாட்டார். அவரின் குணம் அப்படி. ஆனால் வேலை செய்பவர்களுக்கு அவரின் அந்த குணம் எப்போதும் ஒவ்வாது. “ஏதோ ஒரு நாள் தப்பு நடந்ததுக்கு இவ்வளவு பேச்சு தேவையா..?” முணுமுணுத்து கொண்டனர். “நம்மளை பேசுனது கூட பரவாயில்லை, தனா தம்பிய எப்படி தான் பேசுறாரோ..? தம்பியை விட பிள்ளையா..? என்ன மனுஷனோ இந்த ஆள்..? சரியான காட்டு மிராண்டி..” தங்களுக்குள் பேசி கொண்டே வேலையை முடிக்க, தனா எதையும் கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் அவர்களுக்கு சாப்பிட பணம் கொடுத்து அனுப்பி வைத்தான். “சாப்பிடலாமாப்பா..?” இவன் ரூம் செல்ல, ம்ம்.. என்றார் மூர்த்தி. தனா அவருக்கு கொடுத்து, இவனும் சாப்பிட்டு முடிக்க, “திருவிழா வேலை எல்லாம் எப்படி போகுது, அதையாவது ஒழுங்கா பண்ணுவீங்களா, இல்லை விட்டுட்டு எங்கேயாவது போய்டுவீங்களா..?” நக்கலாக கேட்டார். தனா மூச்சை இழுத்து விட்டவன், “நான் எங்க போயிடுவேன்ப்பா, போகணும்ன்னா எப்போவவோ போயிருப்பேன், யார் சொல்ல எனக்கு, நீங்க பாருங்க, நான் கடைக்கு போறேன்..” மேலும் பேச விடாமல் கிளம்பிவிட்டான். “என்ன ஆச்சுடா..?” கடையில் இருந்த குகன் நண்பன் முகம் பார்த்து கேட்டான். “ம்ப்ச்.. மண்டி போனேன்..” என்றான். “க்கும்.. உன் அருமை அப்பாவா..? விட்டுட்டு வேலையை பாருடா..” குகன் தோள் தட்டி செல்ல, கண் மூடி அவன் சீட்டில் அமர்ந்துவிட்டான். போன் ஒலிக்க பார்த்தால் சாரு. எடுத்து பேச, அவளோ வைதேகி மேல் புகார் வாசித்தாள். “நான் வந்து பேசுறேன், நீ டென்ஸன் ஆகாத..” போனை வைத்தவனுக்கு தலை வலித்தது. டீ வாசனை வர, கண் திறந்தால் குகன். “உனக்கு பிடிச்ச ஏலக்காய் டீ. அடி..” என்றான். தனா நிறைந்த சிரிப்புடன் எடுத்து கொண்டான். இவனை போய் விடுவேனா..? குகனையே பார்த்து டீ குடித்த தனா மனதில் உறுதி எடுத்து கொண்டான். “என்னடா..?” குகன் கேட்க, “உங்க அத்தை ரொம்ப டென்சன் பண்றாங்க..” என்றான். “என்ன அம்மா பிள்ளை திடீர்ன்னு இப்படி பேசுது..” குகன் கேலியாக சொன்னான். “பேசாம அப்பா பிள்ளையா மாறிடலாம் இருக்கேன்..” தனா சொல்ல, “மாறிக்கோ, எங்களுக்கு நஷ்டம் இல்லை, உனக்கு தான் தினம் பூமாரி பொழிஞ்சிட்டே இருக்கும்..” என்றான் குகன். “அது எல்லாம் எங்களுக்கு பழக்கமாயிடுச்சு மாப்பிள்ளை, உங்க அத்தை தான் இப்போ தேவையில்லாத வேலை பார்க்கிறாங்க..” என்றான். “எது சாருக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா..? இது நல்ல விஷயம் தானே, எதுக்கு நீயும், உன் தங்கச்சியும் இப்படி முட்டு கட்டை போடுறீங்கன்னு தெரியல..” என்றான் அவன்.