Raaja Bavani 5 1 12852 இராஜ பவனி 5 இருவரும் கோவில் வாசலில் வைத்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, உடன் இருக்கும் பூமிகா, குகனுக்கு பதட்டம் ஆனது. “அனு.. கிளம்பலாம்.. யாராவது பார்த்தா பிரச்சனை..” பூமிகா தோழியின் கை பிடித்தாள். அனுவோ கலங்கிய கண்களுடன் தனாவை பார்த்து நின்றாள். இங்கு குகனும், “தனா.. நாம போலாம்.. அக்கம், பக்கம் ஆளுங்க இருக்காங்க..” என்றான் எச்சரிக்கையாக. தனாவோ எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை, அனுவின் கண்ணீர் முகம் மட்டுமே பார்த்தவன், இருவருக்கும் இடையில் இருக்கும் சில அடி தூரத்தை கடக்க ஆரம்பித்தான். “ம்ப்ச்.. தனா..” குகன் வலுவாக அவன் கை பிடித்து நிறுத்தியவன், “என்னடா பண்ணிட்டிருக்க..? இருக்கிறது பத்தாதுன்னு இன்னும் இழுத்துவிட போற, உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..” கோவமாக அதட்ட, அனுவிற்கு இருக்கும் இடம் உறைத்தது. அவளின் கண்கள் கலக்கத்துடன் அக்கம் பக்கம் பார்த்தது. அருகில் சென்றும் பேச முடியாமல் தனா திணறி போனவன் தலை கோதி கொள்ள, குகன் பூமிகாவிற்கு கண் காட்டினான். அதில் அவள் அனு கை பிடித்து இழுத்து கொண்டு செல்ல, அனுவும் மறுக்காமல் அவளுடன் சென்றாள். தனா செல்லும் அவளை பார்த்து நிற்க, “வா கோவில் உள்ள போவோம்.. இதுக்கே என்ன பரவ போகுது தெரியல..” குகன் அவனை இழுத்து சென்றவன், “பொறுமையா இருடா..” என்றான். தனாவிற்கு அவளிடம் பேச முடியாத வருத்தம். “உங்களுக்கு முன்னாடி சாரு, அனு அக்கா இருக்காங்க, பார்த்துக்கோ..” என்றான் குகன். தனா அமைதியாக கோவிலை சுற்றி வந்தவன் அனு ஏற்றி சென்றிருந்த விளக்கின் முன் நின்றான். அவன் கைகள் தன்னாலே துர்க்கை அம்மனை வணங்கி, விளக்கை கண்ணில் ஒற்றி கொண்டான். குகன் மெல்லிய சிரிப்புடன், “நீ என்ன வேண்டியிருப்பன்னு எனக்கு தெரியும்டா.. இது மட்டும் உன் தங்கச்சிக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்..” கிண்டலாக சொன்னான். “ச்சு.. சாரு கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம், அவ நினைக்கிற படி மாஸ்டர் படிக்கட்டும், அனு அக்காக்கு தான் வேண்டிக்கிட்டேன்..” என்றான் தனா. “எப்படியும் அவங்க கிளம்பினா நீ உன் ஆளை கிளப்பிற மாட்ட..” குகன் வேண்டுமென்றே சீண்ட, தனாவும் புரிந்து, “சாருவையும் கிளப்பணுமே.. அதுக்கு அப்புறம் தான் அவளை அங்கிருந்து கிளப்பி இங்க வைக்க முடியும்..” என்றான். “சாருவை கிளப்ப உங்க அப்பா ஒத்துக்கணுமே, எனக்கு இப்போவே உங்க வீட்டுக்கு வர போற மாப்பிள்ளையை நினைச்சா பரிதாபமா இருக்கு.. ஒருபக்கம் உங்க அப்பா, மறுபக்கம் உன் தங்கச்சி.. அமோகம் தான் அவன் வாழ்க்கை..” குகன் உச்சு கொட்டி வண்டியை எடுக்க, தனா முகத்தில் ஒரு மர்ம சிரிப்பு. “இதை அப்படியே சாருகிட்ட சொல்லணுமே..” என்றான் பின்னால் அமர்ந்து. “சொல்லிக்கோ, என் அத்தை மகளுக்கு ஒரு டெய்ரி மில்க் கொடுத்தா அமைதியாகிடுவா..” என்றான் அவன். “அப்படிங்கற.. செக் பண்ணிடுவோம்..” வீடு பக்கத்தில் இருக்க நொடிகளில் வந்துவிட, தனா சாருவுடம் வத்தியும் வைத்தான். “மாமா.. அப்படியா சொன்னிங்க..?” அவள் இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்கினாள். “அது சும்மா சாரு..” குகன் நண்பனை முறைத்தான். “எது சும்மா என்னை கட்டிக்க போறவரு பரிதாபம்ங்கிறதா..? அவ்வளவு டார்ச்சரா நான்..?” சாரு முகம் சுருங்கி போனது. “தனா.. நான் கிண்டலுக்கு தானே சொன்னேன், சொல்லேண்டா..” குகன் அவனிடம் கேட்க, தனாவோ, “எனக்கென்ன தெரியும்..?” தோள் குலுக்கி கிட்சன் சென்றவன், “ம்மா.. காபி..” கேட்டபடி மேடையில் சாய்ந்து நின்றான். “என்ன ஆச்சு தனா..?” வைதேகி மகனின் வாடிய முகம் பார்க்க, “ஒன்னுமில்லைம்மா..” என்றான் அவன். “உன் முகத்தை பார்த்தாலே தெரியுது ஏதோ இருக்குன்னு, என்ன சொல்லு, அப்பா ஏதாவது..” அவர் நிறுத்த, “ம்ம்.. ரைஸ் மில் வச்சிருக்காரே அன்பழகன் அவரோட பஞ்சாயத்து.. ரொம்ப பேசிட்டார்ம்மா..” என்றான். “அவர் அப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம்டா, அந்த நிலம் விஷயத்தை மனசில வச்சியே பேசியிருப்பார்..” என்றார் வைதேகி கசந்த சிரிப்புடன். “அந்த சின்ன விஷயத்துக்கேவா..? இது எல்லாம் ரொம்ப அதிகம்மா..” “தனா அவரை பொறுத்தவரை அவருக்கு நடக்கிறது எல்லாம் பெரிய விஷயம் தான், அதுலயும் அன்பழகன்ண்ணா இவர் வாங்க போன இடத்தை கூட பணம் கொடுத்து வாங்கிட்டா பெரிய கொலை குத்தம் ஆகிடும், தான் தான்னு நினைக்கிற மனுஷன்கிட்ட யார் என்ன பேச முடியும்..?” “அதுக்காக தான் நீங்க பேசறதே இல்லையாம்மா..?” மகன் அம்மாவை கூர்மையாக பார்த்தான். “பேசி என்ன ஆக போகுது தனா..? அவர் செய்றது தான் சரி, மத்தவங்க எல்லாம் தப்புன்னும் போது பேசி மட்டும் என்ன பிரயோஜனம்..? அவரோட போராடி என் தாவு தீர்ந்தது தான் மிச்சம். போராட முடியல, விட்டுட்டேன், நீ காபி குடி..” மகன் கையில் கொடுத்தார். “சரிதான்ம்மா.. அதுக்காக நாம சொல்லாமலும் இருக்க முடியாதேம்மா, அப்புறம் அவர் பேசுறது, செய்றது தான் சரின்னே இருப்பார்..” “சரி, தப்புன்னு நீ சொல்லலைன்னா அவருக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா..?” “அதுவும் சரி தான்ம்மா.. தெரிஞ்சாலும் அவர் அப்படி தான், ஆனாலும் இன்னைக்கு என்னால பொறுக்க முடியல, நீங்க பேசினது தப்புன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..” என்றவன் காபி குடிக்க ஆரம்பித்தான். வெளியே சாரு இன்னும் பேசி கொண்டிருக்க, எட்டி ஹாலை பார்த்த தனா முகத்தில் சிரிப்பு. “உன் அண்ணன் மகன் முழிக்கிறான் பாவம்..” என்றான் வைதேகியிடம். “நீ நினைக்கிறது நடக்காது தனா..” என்றார் அவரோ. “ம்மா..” “எனக்கு தெரியும் தனா, உன் ஆசையை விட்டுடு..” வைதேகி முகம் இறுக சொன்னார். “அப்பாக்காக சொல்ற மாதிரி தெரியலையேம்மா.. நீங்களே வேண்டாம் நினைக்கிறீங்க போல..” மகன் அம்மாவிடம் கூர்மையாக கேட்டான். “ஆமா..” வைதேகி சொல்ல, “ஏன்ம்மா.. குகனுக்கு என்ன..?” தனாவிடம் மெல்லிய கோவம். “என் அண்ணன் மகனுக்கு என்ன..?” என்றார் அவரோ. “அப்போ குகனுக்கு சாரு வேண்டாம் சொல்றீங்களா..?” கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டான். “உங்க அப்பாக்கு குகன் மருமகனா வேண்டாம் நினைக்கிறன்..” என்றுவிட்டார். தனா பேச வர, “ம்மா..” என்று வந்தாள் சாரு. “உன் அண்ணா மகன் என்னை என்ன சொல்லியிருக்காங்க பாரு..” அவரிடம் கம்பளைண்ட் செய்தாள். “அத்தை அது நான் சும்மா தான் சொன்னேன்..” குகனும் பின்னால் வர, “சாரு..” மகளை அதட்டிய வைதேகி, “போதும் விளையாட்டு, போய் துணி துவைக்க போடு போ, குகன் உனக்கும் காபி போடவா..” கேட்டு போட்டு கொடுக்க, தனா அம்மாவையே பார்த்து குழம்பி நின்றான். ****************** “சித்ரா.. சாப்பிட வா..” சுஜாதா பெரிய மகளுக்கு குரல் கொடுக்க, சத்தமே இல்லை. “அனு.. ரூம்க்கு போனவ சத்தமே இல்லை என்னன்னு பாரு..” டிவி பார்த்து கொண்டிருந்தவளிடம் சொன்னார். “பார்க்கிறேன்ம்மா..” அனு வெறுமனே மூடியிருந்த அவர்களின் ரூம் கதவு திறந்து செல்ல சித்ரா தலையை பிடித்து அமர்ந்திருந்தாள். “க்கா.. என்ன ஆச்சு..? தலை வலிக்குதா..?” அனு அவள் தோள் தட்டி கேட்டாள். “ம்ப்ச்.. ஆமா அனு, ஒரு காபி போட்டுட்டு வாயேன் ப்ளீஸ்..” என, அனு அக்காவை பார்த்து கொண்டே கிட்சன் சென்று காபியுடன் வந்தாள். “இங்க இருக்கேன் அனு..” சித்ரா குரல் வர, மாடிக்கு சென்றாள். சித்ரா காபி குடிக்கும் வரை அமைதியாக இருந்த அனு, “என்னக்கா..” என்றாள் கேள்வியாக. “அவர் வந்திருந்தார்..” என்றாள் சித்ரா. எவர்..? அனுவிற்கு சட்டென்று புரியவில்லை. “அவர் தான்டி.. அன்னைக்கு வந்திருந்தார் இல்லை, சஞ்சய்..” சித்ரா சொல்ல, அனு முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி. “வந்துட்டாரா..? எப்போ வந்தார், என்ன சொன்னார், ஏன் இத்தனை நாள் வரலயாம்..?” அனு கேள்விகளை அடுக்கிவிட்டாள். “ஹேய்.. எவ்வளவு கேள்விடி..?” “க்கா.. நீ பதிலை சொல்லு முதல்ல, என்ன சொன்னார்..?” “அவரோட அம்மாவை சமாதானம் செஞ்சுட்டாராம், கல்யாணத்துக்கு சம்மதமா கேட்டார்..” “சூப்பர்க்கா..” “என்ன சூப்பர் அனு, நான் அவ்வளவு மோசமவா போயிட்டேன்டி, செவ்வாய் தோஷம் என் குத்தமா, இல்லை என் வயசு ஏறினது என் குத்தமா..? அன்னைக்கு எப்படி பேசிட்டாங்க..?” சித்ராவிடம் அவ்வளவு வருத்தம் “க்கா.. அவங்க நம் கண் முன்னாடி பேசினதால நமக்கு இது தெரிஞ்சது, இல்லன்னா எப்படி தெரியும், அவங்க ஒன்னும் மத்தவங்களை மாதிரி பின்னாடி போய் எதுவும் பேசலையே, கொஞ்சம் படபடன்னு பேசுறாங்க அவ்வளவு தான்..” என்றாள் அனு சமாதானமாக. “நீ என்னடி பெரிய மனுஷி மாதிரி எனக்கே சொல்ற..?” “க்கா.. உனக்கே இது தெரியும், என்ன கோவத்துல அதை மறைக்கிற..? இது நீ பொறுமையா யோசிக்க வேண்டிய நேரம்க்கா, சஞ்சய் உனக்கு பெஸ்ட் பேர்..” “என்னடி அவர் பேர் சொல்ற..?” அக்கா கோவித்து கொண்டாள்.