Raaja Bavani 4 2 14269 “இதுல நம்ப, நம்பாம போக என்ன இருக்கு, இங்க என்ன சம்மந்தமா பண்றாங்க, யார் சரக்குல பித்தலாட்டம் இருக்கோ அங்க தானே கேட்க முடியும்..” குருமூர்த்தி எகத்தாளமாக சொன்னார். “ப்பா..” தனா அவர் பக்கத்தில் சென்றவன், “என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரியாம கூட இருக்கலாம்.. பொறுமையா பேசலாம், இருங்க..” என்றான். “பொறுமையா பேச என்ன இருக்கு தனா, நம்ம மண்டிக்கு வந்து தான் அரசி போகுது, இவங்க எல்லாம் நம்மகிட்ட இருந்து சரக்கு எடுத்தவங்க, அவங்க நஷ்டம் நமக்கும் பாதிப்பு தான், கடனை வாங்கி முதல் போட்டு பாடுபடுற கூட்டம் நாம எல்லாம், இதுல இப்படி எல்லாம் ஏமாத்து வேலை செஞ்சா எப்படி, தொழில்ல ஒரு நாணயம் வேண்டாமா..? இப்படி எல்லாம் பொழைக்க சொல்லுதா மனுஷங்களை..” “போதும்.. இதுக்கு மேல பேசாதீங்க..” அன்பழன் கை காட்டி எச்சரிக்கையுடன் சொன்னார். “ஏன் பேசினா என்ன..? கை காட்டி நிறுத்து சொல்ற நீ..” ஒருமைக்கு தாவினார் குருமூர்த்தி. அவரின் குணம் இது தான் என்பது அவரை தெரிந்த எல்லோருக்கும் நன்றாக தெரியும் என்பதால், “உங்ககிட்ட இதை தான் எதிர்பார்க்க முடியும்..” என்றுவிட்டார் அன்பழகன். அதில் தனா தான் தலையிறக்கமாக உணர்ந்தான். “என்கிட்ட எதிர்பார்க்கிறது இருக்கட்டும், நீ முதல்ல இந்த அரசிக்கு பதில் சொல்லு..” குருமூர்த்தி தெனாவட்டாக கேட்டார். “சொல்றேன், சொல்லாம ஓடிட மாட்டேன்..” அன்பழகன் போன் எடுக்க, “ஓடவும் முடியாது.. இங்க எவனும் ஏமாந்துனு இல்லை..” என்றார் குருமூர்த்தி. தனாவிற்கு அவரிடம் நிறுத்து என்று சொல்ல முடியவில்லை. சொன்னால் இன்னும் இன்னும் பேசுவார் மனிதர். இறுகி போய் நின்றிருந்தான். அன்பழகன் இந்த வேலையை செய்திருக்க மாட்டார் என்று அவனுக்கு நன்கு தெரியும். அவனும் தொழிலில் இருக்கின்றானே, மனிதர்களின் தரம் புரியாமல் போய்விடுமா..? எப்படியும் அன்பழகன் எங்கு தவறு என்று நிரூபித்துவிடுவார். அவர் எப்போதும் பொறுமை, நிதானம் தான். குருமூர்த்தி போல் தாம் தூம் என்று குதிக்க மாட்டார். அதன் பிறகான நிலை தான் யோசிக்கவே பிடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்கள் மிகவும் கனமாக நகர்ந்தது அவனுக்கு. கை மீறி போக போகிறது என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை. குருமூர்த்தி இன்னும் அடங்காமல் ஏதேதோ பேசி கொண்டிருந்தார். வந்திருந்தவர்களில் சிலர் அவருக்கு ஜால்ரா தட்டி கொண்டிருந்தனர். அன்பழகன் போனில் மிகவும் தீவிரமாக பேசி கொண்டிருந்தார். அதை தொடர்ந்து இரண்டு கார் வந்து நின்றது. அன்பழகனின் தொழில் வட்டார நண்பர்கள், அவரின் பங்காளிகள் வந்தவர்கள் அவரிடம் நெருங்கி பேச, பின்னாலே வேறொரு பெரிய கார் வந்தது. அதில் அன்பழகன் அரிசி மில்லின் மேனேஜர், சூப்பர்வைசர், சரக்கு இறக்கும் ஆட்கள் என்று ஐவர் இருந்தனர். அவர்களை கிட்டத்தட்ட இழுத்து தான் வந்திருந்தனர். அன்பழகன் அவர்களை நெருங்கி ஏதோ கேட்க, இருவர் அழுது மறுக்க, மற்ற மூவர் முகத்திலே தெரிந்தது அவர்கள் தான் செய்தது என்று. அன்பழனுக்கு பிரஷர் எகிற, அந்த மூவரையும் குருமூர்த்தி பக்கம் தள்ளிவிட்டார். அவர்களும், “நாங்க தான் இப்படி பண்ணோம்..” என்று ஒப்புதம் வாக்குமூலம் கொடுக்க, குருமூர்த்தியோ எள்ளல் சிரிப்புடன், “இப்படி ஆள் ஏற்பாடு பண்ண யாருக்கு தான் தெரியாது..” என்றுவிட்டார். “ப்பா..” தனா அவரை அடக்க, “குருமூர்த்தி வார்த்தையை அளந்து பேசுங்க, அன்பழகன் சொந்த பிரச்சனையால் மில் பக்கமே சரியா போகல, அதை வச்சு இவங்க மூணு பேர் வேலை பார்த்துட்டாங்க, அதுக்கு போய் இப்படி பேசுறீங்க..” அன்பழகனின் பங்காளி பேசினார். “முதலாளி பண்ணா என்ன தொழிலாளி பண்ணா என்ன பொறுப்பு இவர் தானே எடுத்துக்கணும்..” என்றார் குருமூர்த்தியோ. “அது எப்படிங்க முடியும்..? நம்ம பசங்கன்னு நம்பி கொஞ்ச நாள் தொழிலை விட்டா இவங்க இப்படி முதுகுல குத்துவானுங்கன்னு யாருக்கு தெரியும் நன்றி கெட்டவங்க..” அன்பழகனின் நண்பர் அந்த சூப்பர்வைசரின் முதுகிலே ஒன்று போட்டார். “மாட்டினதுக்கு அப்பறம் எல்லாம் பேசுறது தான் இது.. இதை எப்படி ஏத்துக்க முடியும்..” குருமூர்த்தி விடாமல் பேச, அன்பழகன் ஆட்களுக்கும் கோவம் வர, அவர்களும் பேச, சிறிது நேரம் அங்கு எக்கச்சக்க சத்தம். “இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க குருமூர்த்தி..?” அன்பழகன் அவரிடம் நேருக்கு நேராக கேட்டார். “வேறென்ன எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும், சங்கத்துலயும் செஞ்ச தப்புக்கு அபராதம் கட்டணும்..” என்றார் குருமூர்த்தி சர்வ சாதாரணமாக. “முடியாது..” என்றார் ஒற்றை வார்த்தையில் அன்பழகன். “தப்பு செஞ்சவங்க இங்க நிக்கிறாங்க, இவங்களை போலீஸ்ல ஒப்படைப்பேன், என்னாலான நஷ்டத்துக்கு ஈடு கொடுப்பேன், இவ்வளவு தான் செய்ய முடியும்..” என்றார் மிகவும் உறுதியாக. “இது தான் உங்க முடிவுன்னா இனி உங்களோட தொழில் பண்ண மாட்டோம்..” குருமூர்த்தி மிரட்ட, “நீங்க என்ன சொல்றது..? நானே அந்த முடிவுல தான் இருக்கேன், என்னை நம்பாத உங்களோட தொழில் பண்ண எனக்கு விருப்பமில்லை..” என்றுவிட்டார் அன்பழகன். “எங்களோட தொழில் பண்ணாம தலையில துண்டை போட்டு போக போறீங்க போல..” குருமூர்த்தி கேலியாக சொல்ல, “அது என் இஷ்டம், அதை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..” என்றார் அன்பழகன். “அதெப்படி..” குருமூர்த்தி மேலும் பேச ஆரம்பிக்க, “ப்பா..” மிகவும் கடினமான குரலுடன் அவரை நிறுத்திய தனா, “இங்க நடந்தது ஒன்னும் தொழில்ல புதுசு இல்லை, நம்மகிட்ட வேலை பார்க்கிற எல்லாம் நமக்கு நம்பிக்கையா இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது, இன்னைக்கு இவருக்குன்னா, நாளை நமக்கு, ஒரே தொழில்ல இருந்துட்டு இப்படி பேச முடியாது, அதான் யார் தப்பு பண்ணான்னு தெரிஞ்சிருச்சு இல்லை, சார் சொன்ன மாதிரி அவங்களை போலீஸ்ல ஒப்பைடைச்சுட்டு அவங்கவங்க வேலையை பார்க்கலாம்..” என்றான் தெளிவாக. “ஆமா குருமூர்த்தி உன் மகன் சொல்றது தான் சரி, இதை இங்கேயே விட்டுட்டு ஆகுற வேலையை பார்க்கலாம், அன்பழகா என்னப்பா நான் சொல்றது..?” என்றார் மற்றவர். “இனி சொல்றதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை.. என் முடிவு இது தான்..” என்றார் அவர். “சார்.. இப்படி சொல்லிட்டா எப்படி, எங்களை போல கடைக்காரங்க என்ன செய்வோம்..?” தனா நேரடியாக அன்பழகனிடம் கேட்டான். “முடிஞ்சது முடிஞ்சது தான் தம்பி, இவ்வளவு ஆனதுக்கு அப்புறம் இங்க இருக்க யாரோடையும் நான் தொழில் செய்ய மாட்டேன்..” அவர் உறுதியாக சொன்னவர், “உங்க நஷ்டம் ஆன பணம் இன்னைக்குள்ள கைக்கும் வந்துடும்..” தொழில் உறவை முறித்து கொண்டு கிளம்பிவிட்டார் அன்பழகன். மற்றவர்களும் கிளம்பிவிட, “பாரேன் அவனுக்கு எவ்வளவு இருக்கு..” குருமூர்த்தி கிடந்து குதித்தார். தனா பொறுக்க முடியாமல், “ப்பா.. போதும், ஏன் இப்படி இருக்கீங்க..? நிறைய பேசிட்டிங்க, நம்ம ஊர்காரர்கிட்டேயே நம்மளால தொழில் செய்ய முடியல, எத்தனை வருஷம் அவரை நாம பார்க்கிறோம், அவர் இப்படி செய்வாரான்னு யோசிக்காம வார்த்தைகளை விட்டா எப்படி..? நம்மால அவர் இல்லை, அவரால நாம இல்லை, இது தொழில், இங்க பேச்சுக்கு வரைமுறை இருக்கு, இப்படியா பேசுறது..?” கேட்டவன், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். நடந்த விஷயம் அனுவிற்கும் அன்றிரவு போல தெரியவர, கோவம், அழுகை. எங்க அப்பாவை எப்படி இப்படி கூப்பிட்டு வச்சு பேசலாம்.. மகளாய் கோவம் பொங்கிய அதே நேரம், இனி அவர்களின் உறவு பற்றிய அழுகையும் வெடித்தது. மறுநாள் விளக்கேற்ற செல்ல, தனா வழியில் எங்கும் இல்லை. எப்படி இருப்பார்..? மனதில் புழுங்கி கொண்டே சென்றாள். “அனு.. பொறுமையா போடி..” அவளுக்கு பின்னால் இருந்த பூமிகா சொல்லவும் தான் கோவத்தில் முறுக்கிய வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டினாள். “என்னடி தனா அண்ணா மேல கோவமா..?” பூமிகா கோவில் வரவும் இறங்கி கொண்டு கேட்டாள். “யார் மேல கோவம் இருந்து என்ன பண்ண..? விடுடி.. முதல்ல அக்காக்கு கல்யாணம் நல்ல படியா முடியணும். என் தலையெழுத்து என்னன்னு அப்புறம் பார்ப்போம்..” என்றுவிட்டவள், மனதார வேண்டி துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வெளியே வர, தனா கோவில் வாசலில் நின்றிருந்தான். அவனை பார்த்த நேரம் அனு முகத்தில் கோவம் தெரிய, தனா அவளை சமாதானமாக பார்த்தான். அனு கண்களோ சட்டென கலங்கி போக, அதற்கு என்ன பதில் சொல்ல முடியும் அவனால்..? “தனா உள்ளே போ, பக்கத்து நிலத்துல வேலை பார்க்கிறவங்க இங்க தான் பார்க்கிறாங்க..” குகன் அவனை உந்தினான். தனாவிற்கோ அவளை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. இதுவரை பேசாதது எதுவும் தெரியவில்லை. இப்போது அவளிடம் பேசாமல் அவனால் முடியவில்லை.