இங்கு அன்பழகனுக்காக எல்லாம் காத்திருக்க, “அவர் இது போல செய்ய வாய்ப்பில்லை குகன்..” தனா தள்ளி நின்று சொன்னான்.
“அன்பழகன் சாரை பத்தி நமக்கு தெரிஞ்ச அளவு கூட இவங்களுக்கு தெரியல பாரேன் தனா, இத்தனை வருஷம் அவர் கூட தொழில் பண்றாங்க, அவர் இப்படி செய்வாரா மாட்டாரான்னு யோசிக்க மாட்டாங்களா..?” குகன் ஆச்சரியமாக கேட்டான்.
“அதெல்லாம் யோசிச்சா இங்க ஏன் வர போறாங்க, எனக்கு இப்போ பிரச்சனையே இதை வச்சு எங்க அப்பா அனு அப்பாவை என்னென்ன பேச போறார்ங்கிறது தான்..” நெற்றியை நீவி கொண்டான்.
“நீ எதுக்கும் அவரை கூப்பிட்டு பேசி பாரேன், அவர் அந்த லேண்ட் பிரச்சனையே மனசில வச்சிட்டு எக்குத்தப்பா பேசுவார்..” குகன் சொல்ல,
“அது தான் நானும் யோசிக்கிறேன், எனக்கு வேற வழியும் இல்லை..” தனா சொன்னவன், குருமூர்த்தி தனியே கூட்டி வந்தான்.
“என்ன தனா..” அவர் கேட்க,
“ப்பா.. இது.. அவர் செஞ்சிருப்பார்ன்னு எனக்கு தோணல, நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க, இல்லை விடுங்க, வந்தவங்களே பேசிக்கட்டும்..” என்றான்.
“என்ன பேசுற நீ..? அவன் எவ்வளவு பெரிய பித்தலாட்ட வேலை செஞ்சிருக்கான், பொறுமையா பேச சொல்ற, அவனை நேர்ல பார்த்து நாலு வார்த்தை கேட்காம விடமாட்டேன்..” குருமூர்த்தி சொன்னவர் நிற்காமல் அவர் இடம் சென்றுவிட, தனாவிற்கு தலையிடியாக இருந்தது.
“விடுடா.. அவரை பத்தி தெரிஞ்சது தானே..?” குகன் அருகில் வந்தான்.
“நீ வாசலுக்கு போய் அனு அப்பாவை கூட்டிட்டு வாடா, வந்துடுவார்..” தனா சொல்ல, குகன் வாசலுக்கு வந்தான். சில நொடிகளில் கார் வந்து நிற்க, அன்பழகன் இறங்கி வந்தார்.