“ஆமா அத்தை.. அனுபவப்பட்ட உங்க பேச்சை அம்மா கண்டிப்பா கேட்க தான் வேணும், அம்மா கேட்டுக்கவும் செய்வாங்க..” என்று வந்தான் தனா.
“வாப்பா தனா எப்படி இருக்க, ஆள் மெலிஞ்சு போயிட்டியே..” மிகவும் பாசமாக நலம் விசாரித்தார் அத்தை.
“உங்களை பார்க்காத ஏக்கம் தான் அத்தை..” என்றான் தனா கிண்டலாக.
“தனாக்கு எல்லாம் விளையாட்டு..” பேச்சி அசட்டு சிரிப்பை சிந்தினார்.
“விளையாண்டிட்டு இருந்தா நம்மளை கேனையாக்கிடுவாங்க அத்தை, அப்புறம் நீங்க சொல்லுங்க..” என்று அமர்ந்தான்.
“சும்மா உங்களை எல்லாம் பார்த்திட்டு போக தான் வந்தேன், எனக்கும் உங்களை விட்டா யார் இருக்கா..?” மூக்கை சிந்தினார்.
“என்னத்தை போன வாரம் உன்னை பெங்களூர் பஸ்ல பார்த்தேன், மக வீட்டுக்கு போன போல, ஆள் கருத்து போயிட்டியே அத்தை..” என்றான்.
“ஆமாஅந்த குறைய ஏன் கேட்கிற தனா, பேத்தியை சமாளிக்க முடியலன்னு மக போன் பண்ணி ஒரே அழுகை, அதான் போய் கொஞ்ச நாள் மகளுக்கு எல்லாம் செஞ்சுட்டு வந்தேன்..” என்றார்.
“என்னத்தை ஒரு பொண்ணை சமாளிக்க முடியலையா..?” தனா ஆச்சரியமாக கேட்டான்.
“என்ன பண்றது தனா பொண்ணை பூ மாதிரி வளர்த்துட்டேன், என் பேத்தியும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறதில்லை..”
“வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்க வேண்டியது தானேத்தை..”
“அதெல்லாம் முதல்லே வச்சாச்சு, மாப்பிள்ளை என் பொண்ணை கை மேல வச்சு தாங்குறார்.. போன வாரம் கூட பேத்தியை என்கிட்ட விட்டுட்டு ரெண்டு பேரும் டெல்லி போய்ட்டு வந்தாங்க..” என்றார் பெருமையாக.