அத்தியாயம் – 12

“இவர் டாக்டர் அர்ஜூன் கிஷோர், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்… நம்ம டாக்டர் செல்வராஜ் சீட்டுக்கு புதுசா வந்திருக்கார்… இவர் நார்த் இன்டியனா இருந்தாலும் தமிழ்நாட்டுல சில வருடங்கள் இருந்ததால நல்லாவே தமிழ் பேசுவார்… ஆல் தி பெஸ்ட் அர்ஜூன்…” சீப் டாக்டர் புதிதாய் வந்த டாக்டரை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவிட்டு தனக்கான நாற்காலியில் அமர அர்ஜூனுக்கு ஒரு பெண் பூங்கொத்தை கொடுத்து வரவேற்றாள்.

“வெல்கம் டாக்டர், நான் சியாமளா ரிஷப்சன்ல இருக்கேன்…”

“ஹலோ டாக்டர், நான் வேதிகா ஹெட் நர்ஸா இருக்கேன்…” ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள புன்னகை மாறாமல் தலையாட்டி ஏற்றுக் கொண்டான்.

எல்லாருக்கும் கடைசியாய் அதிர்ச்சி விலகாத முகத்துடன் குனிந்தபடி நின்றிருந்தாள் ரஞ்சனா. மனது அவனை எப்படி எதிர்கொள்ளுவது என்ற சங்கடத்தில் இருக்க, “கடவுளே…! இருக்கும் பிரச்சனை போதாதா…?” மனது கூக்குரலிட்டது.

“ரஞ்சனா…! சொல்லு, டாக்டர் வெயிட் பண்ணுறார்…” அவளை உலுக்கிய லாவண்யா காதில் மெல்லக் கிசுகிசுக்க எங்கோ நழுவிய நினைவுகளில் இருந்து நிகழ்வுக்கு மீண்டவள் சட்டென்று நிமிர, அர்ஜூன் அதே மாறாத சிரிப்புடன் அவளைப் பார்த்தபடி நின்றான்.

“நா..நான்…” இவள் சொல்லத் தந்தியடிக்க,

“நர்ஸ் ரஞ்சனா…” என்றான் அர்ஜூன்.

எல்லாரும் திகைக்க, “அவங்க நேம் பிளேட் சொல்லுது…” என்றான் புருவத்தை மேலேற்றி புன்னகையுடன்.

“வெ..வெல்கம், டாக்டர்…”

“தேங்க் யூ…” என்றவன் சீப் டாக்டரிடம் திரும்பினான்.

“டாக்டர்…! டெக்னீஷியன்ஸ், மத்த ஸ்டாப்ஸ் எல்லாரையும் அப்புறம் பார்த்துக்கலாம்… இப்ப வார்டுக்குப் போகலாமா…?” அவன் சொல்ல விட்டால் போதுமென்று முதல் ஆளாய் வெளியேறினாள் ரஞ்சனா.

அவளது அதிர்ந்த முகமும், பதறிய செயலும் கண்ட லாவண்யா விசாரித்தாள்.

“என்ன ரஞ்சனா…? ஏன் ஒரு மாதிரி இருக்க…?”

“………..”

“ஹஸ்பன்ட் நினைவு வந்திருச்சா…?”

“ம்ம்…”

“அவருக்கு உதவிக்கு யாரு இருக்காங்க…? அவங்க அம்மா வந்திருக்காங்களா…?”

“ப்ச்… இல்ல லாவண்யா, தனியா தான் இருக்கார்…”

“ஓ…! அவர் இருக்கிற சிச்சுவேஷன்ல துணைக்கு யாரும் இல்லன்னா எப்படி…? உனக்கும் வேலைக்கு வராம இருக்க முடியாது, அவரை ஏன் நீ கோவைல அவங்க அம்மா வீட்டுக்கே அனுப்பக் கூடாது… அங்கிருந்தா அவங்க பார்த்துப்பாங்க இல்லியா…?”

“ம்ம்… அதைப் பத்தி டாக்டர் கிட்ட பேசினேன், குறைஞ்சது ரெண்டு மாசம் ஆகாம ரொம்ப தூரத்துக்கு பயணம் கூடாதுன்னு சொன்னார், அதோட இங்க நம்ம மிலிட்டரி கோட்டால சிகிச்சைக்குப் பணம் கம்மியாப் போதும்… அங்கே பிரைவேட் ஹாஸ்பிடல்ல காட்டினா தாங்காது… அப்புறம் அவர் இல்லாம நான் இங்கே தனியா, கஷ்டம்…”

“ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான், இங்கன்னா நீயே வாரவாரம் செக்கப்புக்கு அவரை அழைச்சிட்டு வந்திடலாம், அங்க அவர் அப்பாவுக்கும் முடியாம இருக்கும்போது அம்மாவே எல்லாம் பார்க்கிறதும் கஷ்டம் தான்…”

“ம்ம்…”

“சரி, டாக்டர் மாடில ரவுண்ட்ஸ் முடிச்சு வரதுக்குள்ள நாம பேசன்ட் ஹிஸ்டரி ரெடி பண்ணி வச்சிடலாம்…”

“ம்ம்…”

லாவண்யா நகர ரஞ்சனா வார்டில் இருந்த பேஷண்டுகளின் பிபி லெவல் பரிசோதித்து கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த குறிப்பேட்டில் எழுதி வைத்தாள். மனம் நிலையில்லாமல் அர்ஜூன் வரவை எண்ணித் தவித்துக் கொண்டிருக்க சட்டென்று “அச்சோ, வந்து இவ்ளோ நேரமாகியும் பிரபாவுக்கு கால் பண்ணலயே…” தவிப்புடன் அலைபேசியை எடுத்து கணவனுக்கு அழைத்தாள். சிறிது நேரம் ரிங்கான பிறகு பிரபஞ்சனின் குரல் கேட்டது. வேலைக்கு நடுவேயும் தன்னை நினைத்து அழைக்கிறாள் என்பது ஆறுதலைக் கொடுத்தாலும் அவளுக்கு தான் ஒரு சுமையாய் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது மனதை உறுத்த படுத்தபடி அழைப்பை காதுக்குக் கொடுத்தான்.

“ம்ம்…”

“பிரபா… என்ன பண்ணறீங்க…?”

“என் நிலமைக்கு புட்பால் கிரவுண்டுல விளையாடிட்டா இருப்பேன், படுத்திட்டு தான் இருக்கேன்…” முதன்முறை கடுப்பில் கடினமாய் வெளிவந்த அவனது வார்த்தைகள் அவளை சுட திகைத்துப் போனாள்.

“ஏ…ஏன் இப்படிப் பேசறீங்க…?”

“ப்ச்… வேலைக்குப் போனா அங்க பார்க்காம எதுக்கு எனக்கு கால் பண்ணிட்டு இருக்க…?”

“………….”

அவன் கடுகடுப்பும், முன்னமே இருந்த மனநிலையும் சேர்ந்து அவளை வருத்த சட்டென்று கண்ணில் கண்ணீர் நிறைய உள்ளே இழுத்துக் கொண்டாள்.

“சரி, நீங்க தூங்குங்க… ஈவனிங் சீக்கிரம் வந்திடறேன்…”

“ம்ம்…” என்றவனுக்கு அடிவயிறு மிகவும் வேதனித்தது. அவளிடம் அதிகம் பேசினால் தாங்க முடியாமல் வேதனையை சொல்லி விட்டால் அவள் உடனே கிளம்பி ஓடி வருவாளே…” என்ற கவலையிலேயே அவன் வேகமாய் பேச்சை முடித்திருந்தான்.

படுக்கையில் கிடந்தவனுக்கு அசைய முடியாமல் முதுகும், இடுப்பும் வலிக்க கட்டிலில் ரஞ்சனா வைத்துக் சென்ற பெயின் கில்லர் மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணியை கவனமாய் ஊற்றிக் கொண்டான். அசையாமல் கிடந்ததில் உடம்பெல்லாம் மரத்துப் போயிருந்தது. தனிமையும், வேதனைகளும் மனதை தளர்த்தியிருக்க வெறுப்புடன் கண்ணை மூடிக் கொண்டான்.

மனதுக்குள் தன்னைக் கட்டிலில் தள்ளிய கோர சம்பவம் நினைவில் மீண்டும் ரீவைன்ட் ஆனது.

எத்தனை ஆசையோடு மனைவியைக் காணும் ஆவலில் ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸியில் கிளம்பினான். அவனுடைய விதியோ, மற்றவர்கள் உயிர் கெட்டியாய் இருந்ததாலோ அவன் மட்டும் மெஷினில் சிக்கிய கரும்பைப் போல் சக்கையாய் கிடக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது விதி.

ஏர்போர்ட்டில் இருந்து வரும் வழியில் அந்த டாக்ஸிக்காரன் பொதுவாய் இவனுடன் பேசிக் கொண்டு வர அவனது அம்மா போன் செய்து உடம்புக்கு முடியாத அப்பாவுக்கு ஏதோ மருந்து வேண்டுமென்று சொல்ல வழியில் ஒரு மெடிக்கல் ஷாப்பைக் கண்டதும் நிறுத்த இவனிடம் பர்மிஷன் கேட்டவனிடம், பிரபஞ்சனாலும் மறுக்க முடியவில்லை.  காரை நிறுத்தி மருந்துக் கடைக்கு சென்ற டாக்ஸி டிரைவர், டாக்டர் சீட்டைக் கொடுத்துவிட்டு மருந்துக்காய் காத்திருக்க டம்மென்ற பெரும் சத்தத்தில் அதிர்ந்து திரும்பினான்.

சரக்கு ஏற்றுவதற்காய் சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி ஒன்று நிறுத்தி இருந்த காரின் பின்புறமாய் வந்து மோதி இருக்க ஹான்ட் பிரேக்கிட்டு நிறுத்தியிருந்த கார் சில அடிகள் உருண்டு நின்றது. அதைக் கண்டு அலறியபடி அந்த டிரைவர் ஓடி வர காரின் பின்புறம் ஒருபக்கம் அப்பளமாய் நொறுங்கி இருக்க சீட்டில் அமர்ந்திருந்த பிரபஞ்சன் ரத்த வெள்ளத்தில் துடித்தபடி மயங்கிக் கொண்டிருந்தான்.

டாங்கர் லாரி பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்திருக்க எதிரில் வந்த டூரிஸ்ட் வேன் ஒன்றின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காய் டிரைவர் வண்டியை இடது பக்கம் ஒடிக்க அங்கே நின்று கொண்டிருந்த காரின் பின்பக்கத்தில் மோதியதை பிரபாவின் விதியின்றி என்ன சொல்ல…

சம்பவத்தைக் கண்டு வேகமாய் கூட்டம் கூட பொதுமக்களின் அடிக்கு பயந்து அந்த லாரிக்காரன் இறங்கி ஓடிவிட்டான். சற்றுத் தள்ளி சிக்னலில் இருந்த போலீசாருக்கு தகவல் செல்ல ஆம்புலன்ஸும், போலீஸ் ஜீப்பும் சடுதியில் வந்து சேர்ந்தது. என்ன நடந்தது என்று கண்டவர்கள் சொல்ல வேகமாய் ஜிஎச்சுக்கு கொண்டு சேர்த்தனர். ஆக்சிடன்ட் கேஸ் என்பதால் போலீஸ் கேஸ் எடுத்திருந்தனர். இன்சூரன்ஸ் ஆபிஸிற்கு தகவல் சொல்ல கார் இன்சூரன்ஸ், டிரக் இன்சூரன்ஸில் தேர்டு பார்ட்டிக்கு கிடைக்க வேண்டிய காப்பீடு தொகைக்கு வேண்டிய பார்மாலிட்டிகளை செய்திருந்தனர்.

அதற்கான பிராசஸிங் நடந்து கொண்டிருக்க பிரபஞ்சன் ஆசுபத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் LIC யில் இருந்த நண்பர் ஒருவர் அவனது விபத்து காப்பீடு திட்டத்துக்கான பாலிஸியில் வேண்டிய டாக்குமெண்டை இணைத்து LIC அலுவலகத்தில்ற்கு அனுப்பி வைத்தார்.

அவனது சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவானது தெரியுமாதலால் ரஞ்சனாவுக்கு இந்தப் பணம் கிடைத்தால் உதவியாய் இருக்கட்டுமென்று படுக்கையில் இருந்தபடியே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான்.

நடந்ததை அசைபோட்டபடி படுத்திருந்த பிரபஞ்சன் மீண்டும் அலைபேசி ரிங் ஆக கடுப்புடன் கட்டாகும் தருவாயில் எடுத்துப் பார்க்க அந்த LIC நண்பர் தான் லைனில் இருந்தார்.

“ஹலோ…”

“பிரபஞ்சன் சார் எப்படி இருக்கீங்க, உடம்பு பரவால்லியா…?”

“ம்ம்… என்னாச்சு செந்தில், விசாரிச்சிங்களா…?”

“ம்ம்… விசாரிச்சேன், இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கான பணம் வந்திரும்னு நினைக்கறேன்…”

“எவ்ளோ வரும்…?”

“ரெண்டு லட்சம் பக்கம் வரும் சார்…”

“ஓ…! உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும், ரொம்பப் பெரிய உதவி பண்ணிருக்கீங்க…”

“எனக்கெதுக்கு நன்றி சொல்லறீங்க, கடவுள் ஒரு பெரிய கஷ்டத்தைக் கொடுத்தாலும் இப்படியும் ஒரு நல்லது பண்ணிருக்கார்னு நினைச்சுக்கங்க… நல்ல வேளையா நீங்க ஜெயிப்பூர்ல இருக்கும் போது நான் கால் பண்ணேன்… என்கிட்ட விபத்து காப்பீடு திட்டத்துல சேர்ந்து மூணு டியூ கட்டின பிறகு அடுத்து நீங்க அடைக்கலயேன்னு தான் கால் பண்ணி விசாரிச்சேன்… நீங்க என்னையே கட்ட சொல்லி, வந்ததும் தரேன்னு சொன்னிங்க, அதும் ஒரு வகைல நல்லதாப் போயிருச்சு…”

“ம்ம்… அந்தப் பணத்தை நீங்க இன்னும் வாங்கிக்கலை…”

“இருக்கட்டும் சார், எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து பிழைச்சு வந்திருக்கீங்க, சீக்கிரமே பழைய போல திரும்பி வாங்க, அதுக்கான வட்டியும் சேர்ந்து வாங்கிக்கறேன்… சரி, உடம்பைப் பார்த்துக்கங்க, நான் அப்புறமா பேசறேன்…” சொன்னவர் அழைப்பைத் துண்டிக்க, பெருமூச்சுடன் கண்ணை மூடிக் கொண்டான் பிரபஞ்சன்.

தனக்காக ரஞ்சனா துடித்த துடிப்பும், பணத்துக்கு பட்ட பாடும் அவனிடம் சொல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியாதா என்ன…? சீக்கிரம் பணம் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. மனதுக்குள் ஓயாமல் ஒரு வேதனை அலையாய் அடித்துக் கொண்டிருந்தது. இடுப்புக்குக் கீழே அடிக்கடி சுர்ரென்று தோன்றும் வலி முதுகெலும்பில் பாய்ந்து மண்டைக்குள் ஏறுவது போல் உணர்ந்தான்.

எத்தனை அழகாய் தெளிவான நீரோடை போல் சென்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம்… மனதும், உடலும் சோர்ந்து போக வெறுப்புடன் கண்ணை மூடிக் கொண்டான்.

அங்கே பிரபஞ்சன் பேசியதை நினைத்து கவலையுடன் அழைப்பைத் துண்டித்த ரஞ்சனா, ஒருத்தர் ரத்தம் பீறிடும் மனைவியின் கையைத் தூக்கியபடி ஓடி வரவும் பதட்டமாய் அவர்களிடம் சென்றாள்.

“சிஸ்டர், மிக்ஸி ஜார்ல விரல் சிக்கி கிழிஞ்சிருச்சு…”

“வாங்க…” என்றவள் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விரலை ஆராய்ந்து முதலுதவியாய் பீறிடும் ரத்தத்தை நிறுத்த காட்டனை சுற்றி விட்டாள்.

“கையைக் கீழ இறக்காம மேல தூக்கிப் பிடிச்சுக்கங்க, டாக்டரை அழைச்சிட்டு வரேன்…” சொன்னவள் டியூட்டி டாக்டரிடம் சென்று விஷயத்தை சொல்ல அந்தப் பெண்ணை அழைத்து வரும்படி கூறினார். காயம் ஆழமாய் இருக்கவே பரிசோதித்து தையல் போட்டு கட்டி விட்டனர்.

அடுத்தடுத்து ஒவ்வொருத்தராய் வந்து கொண்டிருக்க ரஞ்சனா பிஸியாகி விட்டாள். ஆனாலும் மனதுக்குள் அவ்வப்போது அர்ஜுன் வந்து கலவரப்படுத்திக் கொண்டு தான் இருந்தான்.

“ரஞ்சனா, சாப்பிட வரலியா…?” மதிய உணவுக்காய் ஸ்டாப் ரூமுக்கு கிளம்பிய லாவண்யா கேட்கும் போது தான் டைம் பார்த்தாள்.

“நீ போ லாவண்யா, வந்துடறேன்…” சொன்னவள் சரிதாவின் எண்ணுக்கு அழைத்து விசாரித்தாள்.

“அக்கா, சார் வந்துட்டாரா, பிரபாவைப் பார்க்கப் போனாரா…?

“ரஞ்சனா…! பிரபா எனக்கு தம்பி மாதிரி, நீ கவலைப்படாத… என் தம்பிக்கு என்ன பண்ணணுமோ, அதைப் பண்ணுவேன்… அவர் வந்ததும் முதல் வேலையா பிரபாவைப் பார்க்க தான் அனுப்பினேன்… பாத்ரூம் போக வச்சு படுக்க வச்சிட்டு வந்தார், இப்போ நான் சாதம் கொடுத்துட்டு வந்தேன்… ஸ்பூன்ல ஊட்டி விடறேன்னு சொன்னா மறுத்துட்டார்… கொஞ்சம் சாய்வா உக்கார்ந்து ஒரு கையால மெதுவா சாப்பிட்டுக்கறேன்னு சொன்னார்… கொடுத்திட்டு வந்தேன், அவர் பிரபா பக்கத்துல இருக்கார்… நீ பயப்படாம இரு…!”

“ம்ம்… ரொம்ப நன்றிக்கா…!”

“ஹேய்…! என்ன ரஞ்சனா இது… எங்களது லவ் மேரேஜ்னால டெலிவரி சமயத்துல உதவிக்கு யாருமில்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா… அப்ப இங்க வந்த பிரபாவோட அம்மாதான் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணாங்க, அதெல்லாம் நான் மறக்கலை மா…”

“ம்ம்… நீங்க இருக்கிற நம்பிக்கைல தான் அவரைத் தனியா விட்டுட்டு வந்தேன்க்கா… ஈவனிங் சீக்கிரம் வந்துடறேன், வச்சிடறேன்க்கா…” சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள்.

தனக்கான அந்தரங்க காரியங்களுக்கு பிறரை சார்ந்திருப்பது எத்தனை கொடுமை. பிரபஞ்சனின் மனம் எத்தனை வேதனையை அனுபவிக்கும் என ரஞ்சனாவுக்குப் புரிந்தது. நான் அவனுக்கு வேண்டியதை செய்யும்போதே தன்னை பாரமாய் நினைப்பவன் அடுத்த மனிதர்கள் முன்னில் எப்படி யோசிக்கிறானோ, என்ற கவலையும் வந்தது.

சாப்பிடக் கூடத் தோன்றாமல் கணவனுக்கு அழைக்கலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தவளைப் பின்னிலிருந்து கேட்ட குரல் உலுக்கியது.

“ஹாய் குலாபி, கைசே ஹே தும்…?” அர்ஜூனின் குரலில் சட்டென்று எழுந்து நின்றவளின் பதட்டம் கண்டவன் இதமாய் புன்னகைத்தான்.

“என்ன சனா, எதுவும் பதில் சொல்ல மாட்டிங்கற… எப்பவும் என் கேள்விக்கு மௌனத்தையே பதிலா கொடுத்துட்டு கடந்துடலாம்னு நினைக்கறியா…?”

“…………….”

“இட்ஸ் ஓகே, ஹவ் ஈஸ் யுவர் ஹஸ்பன்ட்…? ஏதோ ஆக்சிடன்ட்ல முடியாம இருக்கார்னு கேள்விப்பட்டேன்…”

“ம்ம்… இப்ப கொஞ்ச..ம் பரவால்ல…” தொண்டையை விட்டு வார்த்தைகள் வெளியே விழுவேனா என அடம் பிடித்தது.

“குட்..! அவரைப் பார்க்கணும், நெக்ஸ்ட் செக்கப் எப்போ..?”

“நெ..நெக்ஸ்ட் வீக் டாக்டர்…”

“ஹேய்..! எதுக்கு இவ்ளோ பதட்டம், கூல்… மை டியர் குலாபி…!” என்றவன் கண்ணடித்து அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் திகைப்புடன் அப்படியே நின்று கொண்டிருக்க அந்த நீளமான வராண்டாவின் முடிவுக்கு சென்று திரும்பியவன் அவளை நோக்கி ஒரு புன்னகையை சிந்திவிட்டு நடந்தான்.

ரஞ்சனா அப்படியே நின்று கொண்டிருக்க, “ஏய் ரஞ்சனா…! நீ வருவேன்னு எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்ணறது, நான் சாப்பிட்டே முடிச்சாச்சு…” என்றபடி வந்தாள் லாவண்யா.

“ஹூம், பரவால்ல, எனக்குப் பசிக்கல… நா..நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்…” என்றவள் நகர்ந்தாள்.

மணல்மேடென

மனம் சரிந்து

விழுகையில்

தாங்கிக் கொள்ள

உன் தோள்கள்

இருந்தால் துயரமும்

தூரம் தான் எனக்கு…